டிசம்பர் 3, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

மகிழன் (சிறுகதை)

சந்திரன்

Oct 16, 2021

siragu magizhan1

மீன்கள் துள்ளி விளையாடியதை நேரில் கண்டதால் வகுடபதியின் அரியணை அவனைத் தேடிவந்தது. அரியணையில் அமர்ந்ததும் அவனை சுற்றியிருந்தவர்கள் அவனை மங்கலப்புருடன் வாழ்க! வாழ்க! என்று கோசமெழுப்பி உற்சாகப்படுத்தினர். அந்த கோசம் அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது. மனம் மகிழ்ந்தான்.

மங்கலப்புருடன் என்ற பெயர் அவனுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்ததில் வியப்பில்லை. ஆனால் அவனுடைய இயற்பெயர் அதுவன்று. மாங்காமடையன் என்ற இயற்பெயரைச் சுருக்கி மடையன் என்று சொல்லித்தான் ஊர்மக்கள் அவனை அழைப்பார்கள். “அன்புடன் அழைப்பார்கள்” என்று இணைத்து வாசித்துக்கொள்ளவும்.

“தன்னுடைய இயற்பெயர் என்ன? என்ற கேள்வியை இனி யாரும் கேட்டுவிடக் கூடாது!” என்று அவன் நினைத்தான். அதனால் நாட்டில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் அப்படிப்பட்ட கேள்வி கேட்காமல் இருக்க வேண்டும் என்று இரகசியமான உத்தரவைப் பிறப்பித்தான். அத்துடன் திருப்தி கொள்ளாமல், “தன்னுடைய அந்த உத்தரவு கடைப்பிடிக்கப்படுகிறதா?” என்று கண்காணிக்க ஒரு குழுவையும் அமைத்தான். அத்துடன் கூட அவனது மனம் நிம்மதியடைந்து விடவில்லை. மந்திரி சபையில் தனக்கு நெருக்கமானவர்களுடன் இரவில் இரகசிய ஆலோசனையில் ஈடுபட்டான்.

இரண்டு உணவு இடைவேளை இடையிடையே கணக்கற்ற தேநீர் இடைவேளை என்று நீடித்த அந்தக் கூட்டத்தில் கடைசியாக, “அரசன் இரகசியமாகப் பிறபித்த உத்தரவைக் கண்காணிக்கும் குழுவைக் கண்காணிக்கும் மூவர் குழு ஒன்றை ஏற்பாடு செய்வதென்றும், அந்தக் குழுவிற்கு மன்னனே தலைவராக இருந்து நேரடியாகக் கண்கானிப்பார்” என்றும் அவன் முன்மொழிய மற்ற மந்திரிகளும் வழிமொழியத் தீர்மானம் ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட செய்தி மறுநாள் காலைச் சுடச்சுட டீ ஆறுவதற்குள் மக்களால் படித்துமுடிக்கப்பட்டது. படிக்கப்படாமல் எஞ்சிய ஆயிரத்து இருநூற்று முப்பத்து நான்கு செய்தித் தாள்கள் தேநீர்க்கடை வழியாக நேராக எடுத்துச் செல்லப்பட்டுப் போண்டா மற்றும் பஜ்ஜியிலிருந்த எண்ணெய்யை வடிக்கட்டப் பயன்படுத்தப்பட்டன.

இரண்டாயிரம் பக்கங்களைக் கொண்ட அரச சாசனத்தில் நூற்று முப்பத்து மூன்றாவது பக்கத்திலிருந்த பத்து வரிகளில் தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த அரசனின் அரியணை பற்றிய இரகசியம் அதன்பிறகு யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்று திடமாக முடிவெடுக்கப்பட்டது.
மன்னனாக முடிசூட்டிய உடனே அவனுடைய அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசனுக்குரிய தகுதிகள் என்று இருந்த பத்தில் ஒன்றாவது அவனுக்குப் பொருந்துமா? என்ற வினாவை யாரும் அப்போது எழுப்பத் தயாராக இல்லை. மக்கள் அவரவர், அவரவர் வேலையில் மும்முரமாக இருந்தனர்.

தன்னுடைய முன்னோர்கள் கொடுத்த தீப்பந்தத்தை மக்கள் கையில் வைத்து விளையாடுவதற்கான நேரம் அப்போது வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. பொதுவாக அறுபது மாதங்களுக்கு ஒருமுறை கொண்டாடப்படுவதுதான் வழக்கம்.

“தீப்பந்தத் திருவிழா அறுபதாவது மாதத்தில் நடத்தப்படவேண்டும்” என்றுதான் மகுட பதியின் சாசனத்திலும் அவர்களது முன்னோர்களால் தெளிவாக எழுதிவைக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்த விதிமுறை அதற்கு முன்னர் பலமுறை மீறப்பட்டுள்ளது. மகுட பதியின் அரியணையின் மீது அமர்ந்தவர்கள் திடீரெனக் காணாமல் போனாலோ! அல்லது அவர்களை யாராவது எதிர்பாராதவிதமாகக் கீழே தள்ளிவிட்டாலோ! உடனடியாக அத்திருவிழாவிற்கான கவுண்டவுன் தொடங்கிவிடும்.

மகிழன் தீப்பந்தத் திருவிழாவிற்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தான். அதுதான் அவன் கலந்துகொள்ள இருந்த முதலாவது தீப்பந்தத் திருவிழா. அவனுக்குத் தெரிந்து அதற்கு முன்னர் நான்கைந்து திருவிழாக்கள் நடைபெற்றிருந்தன. என்றாலும், அப்போதெல்லாம் அவனுக்கு மீசை முளைத்திருக்கவில்லை அதனால் அதில் கலந்துகொள்ள அவனுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

அன்று குளிக்கும் போது குளியலறையில் இருந்த சிறிய கண்ணாடியைத் திரும்பத் திரும்பப் பார்த்தான். அவனது உள்ளத்தில் உண்டான மகிழ்ச்சியைக் கண்ணாடி அழகாய்ப் பிரதிபலித்தது. மகிழ்ச்சி தாங்கவில்லை. காற்றில் மிதப்பது போல் உணர்ந்தான். அவனுடைய கையில் அப்போதே தீப்பந்தம் எரிந்துகொண்டிருப்பதாகக் கற்பனையே செய்து விட்டான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். உண்மையில் அவனுக்குள் அவ்வளவு அவசரம் ஏற்பட்டதற்குக் காரணம் அவனது அப்பா.

ராமசாமி போகலாமா! என்ற முனியப்பனின் கரடுமுரடான குரல் மகிழனின் காதிலும் விழுந்தது.

“இதோ கிளம்பிட்டேன்” என்று அவசர அவசரமாக இஸ்திரி போடாத சட்டையில் ஒன்றை எடுத்துப்போட்டுக்கொண்டு தன்னுடைய மனைவியை அழைத்து கொண்டு அவசரகதியில் புறப்பட்டார் ராமசாமி. அந்தச் சமயத்தில் “நானும் வருவேன்” என்று அடம்பிடித்த மகழனின் கையில் பொறி உருண்டைகள் சில தஞ்சம் அடைந்தன. அதை அவனது கைகள் விரைந்து சென்று வாங்கின. பொரி உருண்டையின் சுவை அவனது விருப்பத்தைத் தற்காலிகமாக மறைத்தாலும் தன்னை மட்டும் தனியாக விட்டுவிட்டு அப்பாவும் அம்மாவும் திருவிழாவிற்குப் போனதால் உண்டான மெல்லிய கோடு அவனது மனதில் வடுவாய் மாறியது. அந்த வடு இன்னும் சில நாட்களில் மறையப்போவதை எண்ணித்தான் அவன் அவ்வாறு மகிழ்ந்தான்.

என்றாலும், அவனுக்குத் தெரியும் இன்னும் அதற்கான நேரம் வரவில்லை. இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்று. இருந்தாலும் ஆர்வத்தால் அப்படி நினைத்தான். அதற்குக் காரணம் அவனுக்கு இப்போது மீசை நன்றாக வளர்ந்திருந்தது.

இரவெல்லாம் கொட்டித்தீர்த்த மழை நின்றிருந்தது. இடம் இல்லாததால் வீட்டிற்கு வெளியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தன்னுடைய இருசக்கர வாகனம் மழையில் நன்கு நனைந்திருந்ததை அதிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்த அழுக்குக் காட்டிக்கொடுத்தது. ஒரு வாரகாலமாக ஓயாமல் தெருத்தெருவாய்ச் சுற்றிய களைப்பை வண்டியின் பளபளப்பு போக்கியிருந்தது. அதைப் பார்த்த அவனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்த மகிழ்ச்சியுடன்தான் திருவிழாவில் கலந்துகொண்டான். அதுதான் அவன் கலந்துகொண்ட முதலும் கடைசியுமான திருவிழா. இல்லை தீப்பந்தத் திருவிழா.

அதன்பிறகு தீப்பந்த திருவிழா என்றாலே அவனுக்கு நகைப்புதான் வரும். என்றாலும், அந்தச் சிரிப்பிற்குள் ஒளிந்துகொண்டிருக்கும் இருள் குறித்தும் யோசித்துக்கொண்டுதான் இருந்தான்.

ஊரின் நடுவில் தான் ஏற்றப்போகும் தீப்பந்தம் ஊருக்கே வெளிச்சத்தைத் தரப்போகிறது! என்று அவன் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தான். ஆனால் அவனது நம்பிக்கை சுக்குநூறாய்ச் சிதறிப்போனது.

அவனால் இன்னும் நம்பத்தான் இயலவில்லை…..

“உண்மையை நம்பித்தானே ஆகவேண்டும். உண்மை சுட்டாலும் உண்மை உண்மைதானே!” என்ற நண்பனின் நம்பிக்கை அவனது மனதைத் திடப்படுத்தியது என்றாலும், உள்ளத்தின் உறைந்துபோன வேதனை தின்றுகொழுத்து பூதாகரமாய் வளர்ந்து நின்றது.

இரவு உறங்கப் போகும்போது அந்த நினைவு வந்துவிட்டால் அன்றைய இரவுப்பொழுது விடிவதற்குள் மிக நீண்டதாக மாறிவிடும்.

அப்படித்தான் ஒரு நாள்…..

நீண்டு கொண்டே போன இரவில் மெல்லக் கண்ணயர்ந்தான். அவனது கொஞ்சநேர உறக்கத்தையும் ஒரு கெட்ட கனவு வந்து கெடுத்தது.
திடுக்கிட்டுக் கண்விழித்தான்.

“அடித்துப் போட்ட மாதிரியான ஒரு வலியை உணர்ந்தான். மெல்ல எழுந்து கண்ணைத் துடைத்துக்கொண்டு நின்றான். கனவில் கண்ட எதுவும் அவனது நினைவுக்கு வரவில்லை. என்றாலும், ஏதோ இனம்புரியாத பயத்தை அது கொடுத்தது. அந்தப் பயம் தொடர்ந்தது.

வீட்டில் நடுப்பகுதியில் தொங்கிக்கொண்டிருந்த புகைப்படத்தைப் பார்த்தான். கம்பீரமாய் இருந்தாலும் புன்னகை சிந்திய கறுத்த உருவம் அவனது மனதிற்குச் சற்று ஆறுதலைக் கொடுத்தது.

வழக்கமாகக் காலை விழித்தெழுந்தவுடன் இஞ்சிச் சாறுதான் பருகுவான். ஆனால் இன்று காலாற நடந்துசெல்ல வேண்டும் போல் தோன்றியதால் நடக்க ஆரம்பித்தான். கனவைப் பற்றி நினைத்தவாறே நடக்க ஆரம்பித்தவன் அப்படியே டீ கடை வரை சென்றுவிட்டான்….
தாத்தா… “டீ குடுங்க” என்ற அவனது வார்த்தையைக் கேட்டு டீ கடை பெரியவர் உதிர்த்த புன்னகை அவனுக்கு ஏதோ ஓர் இனம் புரியாத மகிழ்ச்சியைத் தந்து.

“டீ கடை பெரியவர் அவ்வளவு பரபரப்பிலும் தன்னை மட்டும் ஏன் எப்போதும் தனியாகக் கவனிக்கிறார்?” என்ற கேள்வி இன்றும் எழுந்தது. ஆனால் ஏனோ அவரிடம் வழக்கம் போல இன்றும் ஏனென்று கேட்கவில்லை.

பெரியவர் போட்டுத் தந்த தேநீரைக் கையில் வைத்துக்கொண்டு அன்றைய நாளிதழைப் புரட்டினான். வேண்டா… வெறுப்பாக….

முதல் பக்கத்தை முழுமையாக நிறைத்திருந்தது ஒரு பிரபலமான நகைக்கடையின் விளம்பரம். அதை வேகமாகத் திருப்பியவனின் பார்வையில் கொட்டை எழுத்திலிருந்த ‘பெண் குழந்தைகள் வைத்துள்ள பெற்றோர்களுக்கு அதிர்ச்சி’ என்ற செய்தி தென்பட்டது. அதன் கீழ் தங்கம் விலை கிடு உயர்வு” என்ற வாக்கியம் இடம்பெற்றிருந்தது. நமட்டுச் சிரிப்புடன் அடுத்தச் செய்தியை அவனது கண்கள் தேட ஆரம்பித்தன.

“மன்னனின் அதிரடி முடிவு. ஐந்நூறு ஆண்டுகளாய் இழுத்துக் கொண்டிருந்த பிரச்சனைக்கு நிரந்தத் தீர்வு” என்ற கொட்டை எழுத்துக்களிலிருந்த செய்தியை வாசிக்க ஆரம்பித்தான்.

“சங்கிபுரம் 2020 ஜனவரி 5 ஆம் நாள் பாதாம்பூருக்கு நான்கு கல் தொலைவில் அமைந்துள்ள வானாபுரம் என்ற அரண்மனை யாருக்குச் சொந்தம்“ என்ற வழக்கு சங்கிபுர மன்றின் தலைமையிலான ஐவர் குழுவால் விசாரிக்கப்பட்டு வந்தது அனைவரும் அறிந்த ஒன்று. சுமார் ஐம்பதாண்டுகளாகத் தொடர்ந்து நடந்துவரும் அதன் விசாரணை 2019 ஆண்டு டிசம்பர் 6 ஆம் நாளுடன் முடிவுக்கு வந்தது. “வழக்கின் தீர்ப்பு பின்னர் வெளியிடப்படும் என்று தேதி குறிப்பிடப்பாமல் ஒத்தி வைக்கப்பட்டது”. அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் தீர்ப்பு நேற்று இரவு சரியாகப் பன்னிரண்டு மணிக்குத் திடீரென வழங்கப்பட்டது.

“வானாபுர அரண்மனை முழுவதையும் இடித்துத் தரைமட்டம் ஆக்குவது என்ற முடிவை ஐந்து நீதிமான்களும் ஒருமித்து எடுத்திருந்தனர். ஆனால், அதே வேளை அந்த மாளிகையின் நடுவில் இருக்கும் மூன்று தூண்கள் மட்டும் இடிக்கப்படாமல் விடப்படவேண்டும். அத்துடன், அந்தத் தூண்களுக்கு எந்தவித சேதாரமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டியது காவலர்கள் கடமை” என்று அந்தத் தீர்ப்பில் தெளிவாகச் சுட்டப்பட்டிருந்தது.

ஆயிரத்து முந்நூற்று ஐம்பத்து ஒன்பது பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பின் நகல் நாளை வெளியாகும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதை வாசித்து முடித்த மகிழனை அடுத்தப் பக்கத்திலிருந்த கேலிச்சித்திரம் சுண்டி இழுத்தது.

ஏதோ ஒரு மிருகத்தின் வாலில் ஒரு குழந்தை தொங்கிக் கொண்டிருப்பது போல் இருந்த அந்த கேலிச்சித்திரத்தைக் கூர்ந்து பார்த்தான்.

அவனுக்கு அந்த உருவம் குரங்கு போல் தோன்றியது. குரங்கா! இருக்காதே! என்று சந்தேகத்துடன் தலையைச் சொரிந்துகொண்டு தாளைச் சற்றுத் திருப்பிப் பார்த்தவனுக்கு அது மாடு போல் தெரிந்தது.

மீண்டும் தாளை இடப்பக்கம் சாய்த்துப் பார்த்தான் மீண்டும் குரங்கு போல் தெரிந்தது. அவனுக்குச் சிரிப்புதான் வந்தது.

என்ன ஒரு நேர்த்தி! ஒரு புறம் பார்த்தால் குரங்கு. இன்னொரு புறம் பார்த்தால் மாடு. அந்தக் கார்ட்டூன் கலைஞனின் ஆற்றலைப் பார்த்து வியந்துபோனான். அதனடியில் எழுதப்பட்டிருந்த கார்டூனிஸ்ட் பெயரை அவன் நன்கு அறிவான். அதனால் அதன் அர்த்தம் அவனுக்குத் தெளிவாக விளங்கியது.

அடுத்தப் பக்கங்களை திருப்புவதற்குள் தேநீரைக் குடித்து முடித்ததால் கிளாசை பைலர் அருகில் வைத்தான். எஞ்சிய பக்கங்களை வேக வேகமாகப் பார்த்துவிட்டு தேநீருக்கு உரியப் பணத்தைப் பெரியவரிடம் கொடுத்துவிட்டு, “வர்றேன் தாத்தா!” என்று சொல்லிவிட்டு புறப்பட்டான்.

பெரியவர் முகத்தில் மீண்டும் அதே புன்னகை வெளிப்பட்டது. அப்போதும் கடையில் கூட்டம் அலை மோதியது.

கிளம்பலாம்! என்று நினைத்து எழுந்தவனுக்கு விடியற்காலையில் கண்ட கனவின் காட்சிகள் ஒவ்வொன்றாய் மெல்ல மெல்ல நினைவுக்குவர ஆரம்பித்தன.

“பிரகாசமான ஒளி தன்னை நோக்கி வருவதை அவன் அதிசயமாகப் பார்க்கிறான். அவனது கண்கள் கூசியதால் கைகளால் கண்களை மறைக்க முயல்கிறான். வானிலிருந்து வந்த ஒரு விசித்திரமான அதுவரை ஆலிவுட் திரைப்படங்களில் கூட காட்டப்படாத ஒரு வாகனம் அவனுக்கு நூறடித் தள்ளித் தரை இறங்குகிறது.

நம்பமுடியாத வியப்பில் ஆழ்ந்து போகிறான். தான் காண்பது கனவா? அல்லது நனவா? என்ற குழப்பத்துடன் வாய்பிளந்து நிற்கும் அவன் முன்னர் ஒருத்தன் வேகமாக வருகிறான்.

அவ்வாறு வந்தவன் என்னுடைய பெயர் கருணாஸ் என்று அறிமுகம் செய்து கொள்கிறான். தான் எதிர்காலத்திலிருந்து வருவதாகவும், தற்போது தாங்கள் வசிக்கும் காலம் இரண்டாயிரத்து ஐந்நூற்று ஐம்பத்து மூன்றாம் ஆண்டு என்றும் அவன் கூறிய போது மகிழனுக்கு மயக்கமே வந்து விடும் போல் இருந்தது.

எதிர்காலத்திலிருந்து வந்தவன்: ஒரு சுவரொட்டியைக் காட்டி இதில் இடம்பெற்றுள்ள ஊர் எங்கிருக்கிறது என்று நீங்கள் எனக்குக் காட்ட முடியுமா? என்றான்.

மகிழன்: ஏன் எதற்கு? அதே ஆச்சரியத்துடன்….

எதிர்காலத்திலிருந்து வந்தவன்: எங்கள் ஊரில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடுகின்றது.

மகிழன்: அதற்கு…..

எதிர்காலத்திலிருந்து வந்தவன்: இங்கே நற்றாய் என்று ஒருத்தர் இருந்தாராம். அவர் நெடுங்காலமாய் வெளியூர்களுக்குச் சென்று தண்ணீர் கொண்டுவந்து வாழ்ந்து கொண்டிருந்த மாயகிரி மக்களின் நீண்ட நாள் துயரை ஒரே நாளில் போக்கினாராம். அவருடைய பெருமுயற்சியால் அந்த ஊர்மக்கள் தங்களது ஊரிலே தண்ணீர் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்களாம். அதுதான் அவர்கள் தண்ணீரை எங்கிருந்து எப்படிப் பெற்றார்கள் என்ற விவரம் அந்தச் சுவரொட்டியில் தெளிவாக எழுதப்பட்டிருந்தது. அந்த மாயகிரி மக்களுக்குத் தண்ணீர் வழங்கிய நற்றாயைத் தரிசனம் செய்து நாங்கள் வாழும் காலத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ளலாம்” என்று தொடர்ந்தான்……..

…… கனவில் வந்தவன் அடுத்து என்ன சொன்னான் என்ற குழப்பம் ஒரு புறமிருக்க, அவன் கையிலிருந்த சுவரொட்டியின் காட்சிகளும் மகிழனுக்குத் தெளிவாக நினைவுக்கு வரவில்லை….

முடிவு தெரியாத கனவின் காட்சிகளைப் பற்றி யோசித்தவாறே நடக்க ஆரம்பித்தான் மகிழன்.

சாலையில் போகும் போதே கண்ணுக்குத் தெரியும் உயரத்திலிருந்த ஆலயத்தின் ஒளி விளக்கில் மிதமான வெளிச்சத்தில் அவள் தினமும் பாடம் படித்தாள். பகல் வேளையில் இலந்தைப் பழம், கொய்யாக் கனி இவற்றோடு இளநீர் போன்றவற்றை விற்பனை செய்வாள். பெரும்பாலும் அவள் தள்ளுவண்டியில் தான் அவற்றைத் தெருத்தெருவாய் சென்று விற்பது வழக்கம். என்றாலும் பள்ளிக்கூடத்தின் அருகிலும், நகரின் உயரமான கட்டிடங்கள் நிறைந்த தெருக்களிலும் வியாபாரம் அதிகமாகும். எனவே விற்பனை செய்யப்போவதற்கு அந்தப் பகுதிகளுக்குத்தான் அவள் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பாள். அந்தப் பணத்தில்தான் அவளது படிப்புத் தொடர்ந்தது. யாருமற்ற அனாதையான அவள் அந்தக் காலத்தின் மொழியில் “அடிமைப்பெண்” என்று அழைக்கப்பட்டாள். அவளது அந்தப் பெயர் அதிக நாட்கள் நிலைபெறவில்லை. அதற்குக் காரணம் அவள் திடீரென்று ஒரு நாள் வகுடபதியின் அரசியானாள். அந்த நாட்டின் மன்னன் திடீரென்று மாண்டுபோக யாரும் எதிர்பாராத அந்த அதிசயம் அப்போது அங்கு அரங்கேறியது. அன்று முதல் அவள் நற்றாய் என்று அன்புடன் அழைக்கப்பட்டாள்.

மகிழன் அறிந்த நற்றாய் அவள்தான். ஆனால் அவளது இயற்பெயர் செவிலித்தாய் ஆயிற்றே? ஆனால் எதிர்காலத்திலிருந்து வந்தவன் சொன்ன நற்றாய் யார்? ……

நெற்றியைத் தனது வலது கையால் தடவிவிட்டவாறு மெல்ல வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். கொஞ்சநேரம் நடந்தவனின் முகம் பிரகாசமாக மாறியது. கண்ணிமைகள் விரிந்தன. கதை எழுதத் தெரியாதவன் என்ற பெயர் பெற்ற எழுத்தாளன் ரொம்ப நாளாய் முடிக்கமுடியாமல் பாதியில் நிறுத்தியிருந்த கதையைத் திடீரென்று கடகடவென எழுதிமுடிக்கும்போது ஏற்படும் ஆனந்தத்தை அவனது கண்கள் வெளிப்படுத்தின. நடை வேகமெடுத்தது.

அதற்கான காரணம் ……. சத்தியமாக எனக்கும் தெரியாது. யாருக்காவது தெரிந்தால் தயவு செய்து உடனடியாக www.asdfg@gmail.com என்ற மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கவும்.

மிக்க நன்றி.

மீண்டும் சந்திப்போம்!…


சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மகிழன் (சிறுகதை)”

அதிகம் படித்தது