டிசம்பர் 7, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

மங்கல மரபினரான மருத்துவர் குலமும் அவர்களது மாட்சியும் வீழ்ச்சியும்

தேமொழி

Oct 27, 2018

நூலும் நூலாசிரியரும்:

siragu mangala samugaththaar1

இன்று பெரும்பாலோர் தங்கள் குலப்பெருமையைப் பேசுவதையும், அனைவருமே தாங்கள் “ஆண்ட குலத்தின் வாரிசுகள்” எனத் தயக்கமின்றிச் சொல்வதையும், அவர்கள் தங்கள் பெருமையை வீதியோர சுவரொட்டி, மேடைப்பேச்சு முழக்கங்கள் முதற்கொண்டு இணையத்தின் வலைப்பூக்கள், முகப்புத்தகம் போன்ற சமூக வலைத்தளங்கள் வரை விட்டு வைக்காமல் பரப்புரை செய்வதையும் எதிர்கொள்வது நம்மில் பலருக்கு அன்றாட வாழ்வாகிவிட்டது. தங்கள் சமூக நிலையை உயர்த்த உருவாக்கப்பட்ட நூல்கள் சிலவற்றை பேராசிரியர் நா. வானமாமலை அவர்கள் ஆய்வு செய்து “தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்” என்ற நூலில் வெளியிட்டுள்ளதைக் குறித்து நாமும் முன்பொரு நூலறிமுகக் கட்டுரையில் பார்த்த நினைவிருக்கலாம். (தமிழகத்துச் சாதி சமத்துவப் போராட்டங்கள் – http://siragu.com/தமிழகத்துச்-சாதி-சமத்துவ/). அவ்வாறாக, நா. வானமாமலை அவர்கள் குறிப்பிடும் நூல்களின் வரிசையில் தோன்றிய மற்றொரு நூலாக, திரு. தங்கம் விசுவநாதன் அவர்கள் எழுதி நந்தினி பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்ட “மங்கல சமூகத்தார் மாண்புமிகு வரலாறு” என்ற நூலையும் நாம் கருதலாம். நந்தர் என்ற புனைபெயரில் தங்கம் விசுவநாதன் அவர்கள் மங்கல சமூகத்தார் குறித்து ஆய்வு செய்து வெளியிட்ட நூல்கள் இரண்டு தொகுதிகளாக வெளியாகியுள்ளன (எனக்குப் படிக்கக் கிடைத்த நூல், “ஆய்வுநூல்-2″ தொகுதி மட்டுமே என்பதை இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகிறேன்).

திரு. தங்கம் விசுவநாதன் நாமக்கல்லைச் சேர்ந்தவர். இவருக்கு “நந்தர்” என்ற பெயரை அன்புடன் சூட்டியவர் தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன். அந்தப் பெயரிலேயே எழுத்துப்பணியாற்றி வரும் விசுவநாதன் அவர்கள் சிறந்த ஆய்வாளர். இவரது மற்றொரு ஆய்வுநூலான “கொங்கு பெருமகன் வல்வில் ஓரி” என்ற ஆய்வு நூல் தமிழக அரசால் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கி பாராட்டு பெற்றுள்ளது. காவல் துறையில் 30 ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் தொல்லியல் துறையில் ஆர்வம் காட்டி ஆய்வுகள் செய்து வருபவர் நந்தர். இவர் எழுதிய மற்றும் சில நூல்கள் அரைய நாட்டு வரலாறு, அதிகார நந்திசர் ஆகியன. ‘மாணிக்கவாசகர் மகாசபையின்’ மாநிலத் தலைவராகவும், ‘நாமக்கல் மாவட்ட வரலாற்று ஆய்வுக் கழகத்தின்’ அமைப்புச் செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ளவர் இந்த நூலின் ஆசிரியரான நாமக்கல் நந்தர். கல்வெட்டுச் சான்றுகள் நிரம்பிய இந்நூலுக்கு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் முன்னாள் உதவி இயக்குநரும் தொல்லியல் அறிஞருமான முனைவர் இரா. பூங்குன்றன் அவர்களும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டு-தொல்லியல் துறையின் முன்னாள் தலைவர், முனைவர் புலவர் செ. இராசு அவர்களும் அணிந்துரை வழங்கிச் சிறப்பித்துப் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மங்கல சமூகத்தார் குலமாண்பும்; வரலாற்றில் அவர்கள் வஞ்சிக்கப்பட்ட நிலையும்:

மங்கலகரமான தொழில் செய்த காரணத்தினால் “மங்கலன்” என்னும் பெயர் பெற்ற மருத்துவக் குலத்தினர், மன்னர்களால் வழங்கப்பட்ட ‘மங்கல’ என்ற மங்கலகரமான சொல்லினை தங்கள் பெயரோடு இணைத்துக் கொண்டனர் என ஆய்வாளர் நந்தர் கூறுகிறார். மேலும்; மங்கல சமூகத்தார், சமண சமயத்தைச்சார்ந்த அசோக மன்னரின் நந்த வம்சாவளியில் வந்தவர்கள் என்றும், அவர்கள் மங்கல(வன்), மங்கலை, நாவிதர், சவர்ணன், வைத்தியர், அங்கவைத்தியர், மருத்துவர், மருத்துவச்சி, பட்டர், அம்பட்டர், ஆமாத்தியர், மாமாத்தியர், மகாமாத்திரர், மாமாத்திரர், பெருமஞ்சிகர், பிராணோபகாரி, பிரயோகத்தரையன், ஆசவராயர், சல்லியராயர், குடிமக்கள், ஆசிமக்கள், பண்டிதர், பிராமணர், வேலக்கட்டழவர், வேலக்கட்டழநாயர் என்று பலவகைகளிலும் அழைக்கப்பட்டதைச் சான்றுகளுடன் ஆவணப்படுத்தியுள்ளார் நந்தர். ‘மங்கல’ என்பது திருவள்ளுவரின் வாக்குப்படி தூய தமிழ்ச்சொல் மட்டுமல்ல, வரலாற்றுச் சான்றுகளின்படி அச்சொல் மருத்துவக் குலத்தினரையும் குறிப்பதாகும் என்று கருதும் ஆய்வாளர், சான்றுகளின் மூலம் அதை நிறுவும் முயற்சி இந்த ஆய்வு நூலாக உருவாகியுள்ளது.

சேக்கிழாரின் பெரியபுராண – சிறுத்தொண்டர் புராணத்தின் “ஆயுள் வேதக்கலையும்” (செய்யுள் – 3) என்ற பாடல் வரிகளின் மூலம் சிறுத்தொண்டரின் மருத்துவக் குலப் பின்னணியைக் காட்டுகிறார். மேலும், மாணிக்கவாசகரின் குலமான ‘ஆமாத்திய அந்தணர் குலம்’ என்பது மங்கல சமூகம் அல்லது மங்கல அந்தணர்கள் குலம் என்பது நந்தரின் ஆய்வு முடிவு. அம்+பட்டர், அழகிய பட்டர் என்ற பெயரில் மருத்துவத் தொழில் செய்தோர் அம்பட்டர் என்ற அந்தண குலத்தினர். அந்தணர்கள் ‘பட்டர்’ என அழைக்கப்படுவது வழக்கம். “அம்பட்டன் வேதத்துக்குரிய ஆறங்கங்களையும் அறிந்த தலைவன்” என்பதைக் காட்டும் “அம்பட்டன் கோன் சடங்கவி” என்ற ஒரு குறிப்பு தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டிலும் (SII Vol. II, Parts iii, iv & v No. 66. Inscription of Rajaraja) காணப்படுகிறது.  முன்னர் மதிப்புடன் வாழ்ந்தவர் இந்த மருத்துவக் குலத்தினர். மங்கல மரபினர் என்றும் போற்றப்படும் உயர்ந்த நிலையில் வாழ்ந்தவர்கள். ஆனால், காலப்போக்கில் வரலாற்றின் இடைக்காலத்தில் அம்பட்டன் என்ற சொல் மருவி அம்பட்டையன் என்ற இழிசொல் நிலைக்கு ஆளாகியுள்ளதுடன், தீண்டாமை நிலைக்கும் இலக்காகியுள்ளனர்.

கல்வெட்டுச் சான்றுகள்:

இரண்டாம் தொகுதி ஆய்வுநூலில், முதல்தொகுதியின் ஆய்வை ‘ஆய்வுரை’ என்ற தலைப்பின் கீழ் தொகுத்து வழங்கியுள்ள முறையானது, ஆய்வுநூலின் இரண்டாம் தொகுதியை மட்டும் படிப்போருக்கு ஆய்வு குறித்த சிறந்த அறிமுகத்தைத் தருவதுடன் தொடர்ச்சிக்கும் உதவும் வகையில் அமைந்துள்ளது. ஆய்வுரையைத் தொடர்ந்து வரும் நான்கு பகுதிகள் யாவும் ஆய்வின் சான்றுகளுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள பகுதிகள். பகுதி – 1; 63 கல்வெட்டுச் சான்றுகளைத் தருகிறது. மூல ஆவணங்களில் இருந்து கல்வெட்டு வரிகளையும், அவ்வரிகளுக்கான விளக்கங்களையும் குறிப்புகளையும் முதல் பகுதி வழங்குகின்றது (பக்கங்கள் 32 – 186). நூலின் பெரும்பகுதியாக, 155 பக்கங்களில் விரிவாகத் தகவல் தரும் இப்பகுதி மங்கல சமூகத்தார் கொண்டிருந்த பெயர்களை, அவர்களது சமூக நிலையை, அவர்கள் வழங்கிய கொடைகளை கல்வெட்டுச் சான்றுகளுடன் கொடுக்கிறது. கல்வெட்டு ஆர்வலர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தரக்கூடியது சான்றுகளை இணைக்கும் நூலின் இப்பகுதி என்றால் மிகையன்று.

பட்டயச்செய்திகள்:

தொடர்ந்து வரும் பகுதி -2; மங்கல சமூகத்தார் குறித்து இரு பட்டய/சாசனச் சான்றுகளைக் காட்டுகிறது. ‘ஏழுவகைத் தேவ அம்பலக்காரர் தர்ம சாசனப் பட்டயத்தில்’, கர்ணன் சொர்ணதானம் பண்ணினதேயல்லாமல் அன்னதானம் செய்யவில்லை என்றும், சொர்ணதானம் செய்ததால் பெற்றதன் பலனைக் கைலாசத்தில் அனுபவித்த கர்ணன், அன்னதானம் செய்தால் கிடைக்கும் புண்ணியத்தைப் பெறவிழைந்து மீண்டும் புவியில் சிறுத்தொண்டராகப் பிறந்தான். பின்னர் சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்து ஈசனின் திருவருள் பெற்றார் சிறுத்தொண்டர். மருத்துவம் செய்யும் மங்கல சமூகத்தவர் கர்ண பரம்பரையினர் என்ற செவிவழிச் செய்தியை இப்பட்டயமும் கூறுகிறது என்கிறார் ஆய்வாளர். அன்னதான செயலுக்காக எழுதப்பட்ட இந்த மிக நீண்ட பட்டயச் செய்தி தற்காலத்தது என்பதனை, அதன் 98 ஆம் வரியில் “மடத்தின் ரிபேர் செலவுக்காகக் கொடுப்பதாய் ஒப்புக்கொண்ட படியினாலே” என்ற ஆங்கிலம் கலந்த வரியினால் அறிய முடிகிறது. பட்டயத்தின் காலம் எதுவென்று அறிய முடியவில்லை.

மற்றொரு பட்டயமான ‘ஜெயமுத்திரி கொலை மானியப் பட்டயம்’ என்ற சாசனம் திருமலை நாயக்கர் காலச் செய்தி ஒன்றைக் காட்டுகிறது. இப்பட்டயம் மருத்துவக்குடி பரம்பரையினர் வசம் இருப்பது. உத்தப்பநாயக்கனூர் ஜமீன்தாரான சப்பாணித்துரை என்பவர் தனது மகள் வெங்கிட்டம்மாவை மணமுடிக்க விரும்பிய திருமலைநாயக்கருக்கு, அவளை மகட்கொடையாகக் கொடுக்க மறுத்துவிடுகிறார். பெண்ணைத் தூக்கிப்போவேன் என்று கூறிய மன்னரை வெட்டுவேன் என்றும் சப்பாணித்துரை சவுர்தம் (சபதம்) செய்கிறார். சினம் கொண்ட திருமலைநாயக்கர் சப்பாணித்துரை நேரே போருக்கு வரட்டும் அவர் சினத்தைப் பார்ப்போம் என்று பதில் சவால் விடுகிறார். நேரில் போர்தொடுத்தால் உயிர் இருக்காது என்று உறுதியாக நம்பிய சப்பாணித்துரை, தன்னைப்போல உருவ ஒற்றுமை கொண்ட வடுகநாதன் என்ற மருத்துவக்குடி மகனை தன்னைப்போல அலங்கரித்து போருக்கு அனுப்புகிறார். வடுகநாதன் தலை போனால், அவன் கொலை செய்யப்படு உயிரிழந்தால் மானியம் வழங்குவதாகக் கூறி பட்டயம் எழுதிக் கொடுக்கிறார். இந்தக் கொலை மானியத்தை அழகிரிநாதன் என்பவர் பெற்றுக் கொள்கிறார். வடுகநாதனுக்கும் அவர் உயிருக்குக் கொடுக்கப்பட்ட மானியத்தைப் பெற்றுக் கொண்ட அழகிரிநாதனுக்கும் உள்ள உறவு குறித்த தகவல் எதுவும் இதில் இல்லை.

இலக்கியச் சான்றுகள்:

நூலின் மூன்றாம் பகுதி இலக்கியச் சான்றுகள் பகுதி. இதில் இலக்கியங்களில் வரும் மங்கல சமூகத்தார் குறித்த குறிப்புகளும், அவர்களது பல்வேறு பெயர்களில் மருத்துவர், நாவிதர் இன்னபிற தொழிற் குறிப்புகள் கொண்ட செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது. இராமாயணத்தில் இராவணனுடன் போர் புரிந்திருக்க வேண்டிய யாகதீட்சை பெற்ற வீரம் நிறைந்த மருத்துவ அரசனின் புராணக் கதையில் காணப்படும் குறிப்பில் துவங்கி, சங்கப் புலவர் மருத்துவன் தாமோதரனார் எனத் தொடர்ந்து, சிலப்பதிகார மதுரையின் மருத்துவர் வீதி, அந்நூல் தரும் ஐம்பெருங்குழு-எண்பேராயிரம் சபைகளில் மருத்துவர்கள் இடம்பெற்றிருந்த குறிப்பு, திருமங்கை ஆழ்வாரின் மனைவியான மருத்துவக் குடியில் பிறந்த குமுதவல்லி (மருத்துவ குல பிராம்மணி), புறநானூறு காட்டும் மருத்துவ மகளிர் (பாடல் 281), திருவாசகத்தில் மருத்துவ குல மாணிக்கவாசகர் அளிக்கும் மருத்துவச் செய்திகள், உலகநீதி, பெருங்கதை குறிப்பிடும் உதயகுமரனுக்கும் வாசவதத்தைக்கும் மங்கல மரபினரான நாவிதர் ஆற்றும் மங்கலச் சிறப்பு கொண்ட பணிகளும் அதற்காக அவர்களுக்குச் சபையில் அளிக்கப்பட்ட மதிப்பும், சீவகசிந்தாமணி நூலில் மஞ்சிகர், பெருமஞ்சிகர் என அழைக்கப்பட்ட நாவிதர் செய்த மங்கல சடங்குகள், ஆகியவற்றுடன் இறுதியாகக் கொங்கு திருமணங்களில் மங்கலவாழ்த்து பாடும் சடங்கு செய்யும் மங்கல மரபினர் வரை மங்கல சமூகத்தார் குறித்த இலக்கியச் சான்றுகள் இடம் பெறுகின்றன.

 

களஆய்வுச் சான்றுகள்:

லின் இறுதியில் அமைந்துள்ள களஆய்வுச் சான்றுகள் பகுதியில் ஆய்வாளர் சேகரித்த களஆய்வுச் செய்திகள் மருத்துவக்குல மக்கள் சிலரின் வாழ்க்கை குறித்த செய்திகளைக் கொடுக்கிறது. இவற்றின் மூலம் அறிவியல் அடிப்படை கொண்ட நவீன மருத்துவம் இந்தியாவில் அறிமுகம் ஆகும் முன்னர் நாவிதர்கள் அறுவைசிகிச்சையையும் தொழிலின் ஒரு பகுதியாக மேற்கொண்டதை அறிய முடிகிறது. நரம்புச்சிலந்தி புழுக்களை நீக்குதல், மகப்பேறு சிக்கலாகும் பொழுது ஆயுதம் கொண்டு கீறி குழந்தையைப் பிறக்கச் செய்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றுதல் போன்றவற்றில் நாவிதர்களின் பங்களிப்பை களஆய்வுத் தகவல்கள் காட்டுகிறது. இதற்குச் சான்றாக “The Mangala Title in Padiya Inscriptions” என்ற கட்டுரையில் எஸ். இராஜ கோபால் அவர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் இருந்து, “Until recently the Barbers were also rural doctors. The ladies of Barber community were used to be midwives in villages. Naturally, it was a respectable community” என்ற மேற்கோளைக் கொடுத்து மங்கல சமூகத்தார் மாண்புமிகு வரலாற்று நூலை நிறைவு செய்கிறார் ஆய்வாளர் நந்தர் என்ற தங்கம் விசுவநாதன் .

“சாதுர் வைத்யா” (நான்கு வேதங்களையும் அறிந்த வைத்தியரான பெருமஞ்சிகர்) என்று உத்திரமேரூர்க் கல்வெட்டில் (SII VOL VI, No. 356, A.R. No. 72 of 1898) குறிப்பிடப்படுவோர் மங்கல சமூகத்தார் என்பதையும் நூலில் ஆய்வாளர் காட்டியுள்ளார். பண்டைய இந்தியாவில் அறிவியல் என்றால் அது “மருத்துவ அறிவியல்” என்பதை மட்டுமே கூறப்படுவது என்று பேராசிரியர் தேவு பிரசாத் சட்டோபாத்யாயா அவர்களின் வரிகளை மேற்கோளாகத் தனது அணிந்துரையில் அளித்துச் செல்லும் முனைவர் இரா. பூங்குன்றன் வரிகளும் இங்கு நினைவுகூரத்தக்கது.

முடிவுரை:

இணையத்தேடலில் இந்நூல் குறித்த ஒரு தேடலில், இந்நூலைப் படித்துக் கருத்துரை பகிர்ந்தோர் எண்ணிக்கையை ஒரு கைவிரல்களுக்குள் அடக்கிவிடலாம் என அறிய முடிகிறது. தங்களது குலமேன்மை குறித்துப் பேசுவோர் பலரும், இந்நூலின் ஆய்வாளர் நந்தர் அவர்கள் கைக்கொண்ட ஆய்வுநெறியைப் பின்பற்றி, இந்த நூல் காட்டுவது போன்று கல்வெட்டுகள், பட்டயங்கள், இலக்கியக் குறிப்புகள், களஆய்வுகள் என்ற வழியில் தங்கள் குலத்தின் வரலாறு குறித்த ஆய்வுகளைச் சேகரித்து ஆய்வுநூலாக வெளியிடலாம். அவ்வாறு செய்தால் தமிழர்கள் தங்கள் வரலாற்றைச் சான்றுகளுடன் அறிந்து கொள்வது மட்டுமின்றி, எவ்வாறு சாதிப்பிரிவுகள் என்ற நடைமுறை வழக்கு சமூகத்தின் சில பிரிவினரின் வாழ்க்கைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் மனிதநேயமற்ற செயலாக அமைந்திருந்தது என்ற உண்மையையும் அறிந்து கொள்ளலாம். அந்த வகையில் இந்த ஆய்வு நூல் ஒரு முன்மாதிரியாகப் பின்பற்றப்படவேண்டிய நூல்.

“இத்தொகுப்பைச் சாதி பற்றியதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தமிழக சமுதாய வரலாற்றின் ஒரு கூறாகவே இவ்வாறான நூல்களை நோக்க வேண்டும். இவை போன்று ஒவ்வொரு சமுதாயத்தின் ஆவணங்களும் தொகுக்கப் பெறுதல் இன்றியமையாததாகும்” என்று அணிந்துரையில் கல்வெட்டு-தொல்லியல் துறை அறிஞர் புலவர் செ. இராசு கூறும் சிறந்த அறிவுரையைக் கவனத்திற்கொள்வதும், நம் வரலாறு அறிவதில் ஆர்வம் கொண்டிருப்பதும் தமிழரின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

_______________________________________________________________

துணை நின்றவை:

மாணிக்கவாசகரின் குருமூர்த்தி எழுந்தருளிய திருப்பெருந்துறை (சோழநாட்டுத் தலம்), பிப்ரவரி 21, 2014, முனைவர் நா. கணேசன்.

வல்வில் ஓரி குறித்த ஆய்வு நூல்: எழுத்தாளர் நாமக்கல் நந்தருக்கு அரசு பரிசு,

மே 05, 2018, தினமணி

_______________________________________________________________

நாற் குறிப்பு:

மங்கல சமூகத்தார் மாண்புமிகு வரலாறு – ஆய்வு நூல், தொகுதி: 2

ஆசிரியர்: நந்தர் (எ) தங்கம் விஸ்வநாதன்

பதிப்பு: முதற்பதிப்பு – 2010

பக்கம்: 272

முன் அட்டையில் : திருச்செங்காட்டங்குடி வாதாபி கணபதி

வெளியீடு: நந்தினி பதிப்பகம் (email: Nanthar14071956@gmail.com

விலை: ரூ. 200

_______________________________________________________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மங்கல மரபினரான மருத்துவர் குலமும் அவர்களது மாட்சியும் வீழ்ச்சியும்”

அதிகம் படித்தது