மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

‘மஞ்சப்பை’ பேசும் அரசியல் – திரை விமர்சனம்

ஆச்சாரி

Jun 21, 2014

திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், ராகவன் இயக்கத்தில், ராஜ்கிரண், விமல், லட்சுமி மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் மஞ்சப்பை.

manjappaiபெரும்பாலும் கதை அறியப்படுவது, தாத்தா பேரனுக்கு இடையே நிகழும் பாச நெறி என்பதுவே. தனது தாய், தந்தையை இழந்த கதாநாயகனான விமல், தனது தாத்தாவான ராஜ்கிரணால் வளர்க்கப்பட்டு, உயர்கல்விகள் கற்று சென்னையில் ஒரு பெரிய ஐ.டி கம்பெனியில், நல்ல சம்பளம் பெறும் நபராக வலம் வருகிறார். தனது உழைப்பினால், ஒரு புரோஜக்ட் மூலமாக அமெரிக்கா செல்லும் வாய்ப்பினையும், மேலும் அங்கேயே தொடர்ந்து வாழவும் கம்பெனி மூலமாக விமல் தெரிவு செய்யப்படுகிறார். இன்னும் மூன்று மாதங்களில், அமெரிக்கா சென்று பின்னர் அங்கேயே தங்கிவிட நேரிடும் என்பதனால், சென்னையில் இருக்கும் காலம் வரை தனது தாத்தாவோடு மகிழ்ச்சியாய் இருக்க எண்ணி அவரை சென்னைக்கு வரவழைக்கிறார்.

கிராமத்தில் வளர்ந்து, வாழ்ந்த தாத்தாவிற்கு பெருநகர வாழ்க்கை பற்றி ஏதும் தெரியாததாலும், இவரின் யதார்த்த நடைமுறைகளால் அப்பார்ட்மெண்ட் வாசிகள் அல்லலுறுவதும், கதாநாயகியான லட்சுமி மேனன் வெறுப்பதும், இதற்காய் காதலர்கள் பிரிவதும் தொடர்வாய் நடக்கும் விடயங்களாக அமைகிறது. பல பிரச்சனைகள் தொடர்ந்த போதும், விமல் தனது தாத்தாவினை ஒரு துளியும் கோபித்துக் கொள்ளாது கடந்து செல்கிறார். இறுதியாக தனது அமெரிக்கா செல்வதற்கான விசா மறுக்கப்படுகிறது, அதற்குக் காரணம், தனது தாத்தா அமெரிக்க கொடியினை அவமதித்தாகச் சொல்லப்படுகிறது. இதனால் கடும் வெறுப்படைந்த விமல் சோர்வாய் வெளியேற, அந்நேரமும் கூட ராஜ்கிரண் ஒரு நபருடன் சண்டையிட்டுக் கொண்டிருக்க அதனை தடுத்து, தனது தாத்தாவின் மீது கடும் கோபத்தால் திட்டிவிடுகிறார். இதன் பின்னர் தனது காதல் என்ன ஆனது, அமெரிக்கா செல்கிறாரா இல்லையா, தனது தாத்தா என்ன ஆகிறார் போன்றவைகள்தான் கதையின் இறுதிகள்.

manjappai2பெரும்பாலும் இது தாத்தா பேரன் கதையாக பலராலும் பார்க்கப்பட்டாலும், இதில் பார்க்கப்படாத, பேசப்படாத சில அரசியல்களை நாம் இங்கு கவனிக்க வேண்டியுள்ளது, அல்லது சொல்லியாக வேண்டியுள்ளது. இக்கதையினை வேறு கோணத்தில் ஆராய்ந்தால், அமெரிக்கா செல்கிறாரா இல்லையா என்பதும் கூட கதையின் இன்னொரு சாரமாக உள்ளது. காதலில் வெல்கிறாரா இல்லையா என்பது கூட ஏதோ சம்பிரதாயச் சடங்குதானே தவிர அது கதையில் பெரும் அழுத்தமே இல்லை. ஏதோ கதையை இழுக்க வேண்டும் என்பதற்காக ஏற்ப்படுத்தியுள்ள காட்சிகள்தான் காதல் காட்சிகள். ஆகையால் அமெரிக்க பயணத்தை மட்டுமே அழுத்தமாகவும், அரசியல் ரீதியாகவும் பார்க்க வேண்டியுள்ளது.

முதலில் அமரிக்க மோகம் என்பது, தனது காதலையும், தன்னை வளர்த்து ஆளாக்கிய தாத்தாவினையும் வெறுக்க வைக்கிறது. இது இன்று பெருவாரியான நகரவாசிகளிடம் மேலோங்கியுள்ள மோகம், இதனால் வரும் இழப்புகளை மிக அழகாய் இறுதிக் காட்சியில் விளக்கியுள்ளார் இயக்குனர் ராகவன்.

ஒரு காட்சி இப்படி வருகிறது, “அமெரிக்கா செல்வதற்காக வேண்டி நேர்முகத் தேர்விற்காய், சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பு இடப்பட்டுள்ள சாலையோர தடுப்பில் வரிசையில் நிற்கிறார் விமல். அப்பொழுது அவரின் தாத்தா கேட்பது, ‘ஏன்ப்பா அமெரிக்கா போறதுக்கு பேச வந்திருக்கேனுட்டு, இப்புடி ரேசன் கடையில நிற்கிறாப்புல நிற்கிற, என வினவுகிறார்” அடுத்த காட்சிகளில் பேரன் சிரித்துக் கொண்டே வரிசையில் முன்னேறுகிறார்.

இந்தக் காட்சியினைக் குறிப்பிடுவது எதற்கெனில், இதுதான் இன்றைய நமது நிலை. மிகவும் செல்வந்தர்கள், நமது மண்ணில் உயர்வுடையவர்கள், மக்கள் மத்தியில் மதிப்பு பெற்றுள்ளவர்கள் என எவராயினும், அவர்களுக்கு நமது மண்ணிலயே நிகழ்த்தப்படும் மிகப்பெரும் அவமானம்தான் இது. மிகவும் உயர்வாகச் சொல்லப்படுகிற, அதிக செலவீனங்கள் செய்திட்டு செய்கின்ற பயணத்திற்கு நாம் ஒப்புதல் பெற வெயிலில் வரிசை கட்டி நிற்க வேண்டியுள்ளது. நமது மண்ணில் தங்கள் அலுவலகத்தினை அமைத்துக் கொண்டு, அவர்கள் நம்மை நடத்தும் விதம் மிகவும் இழிவானச் செயல். இதனை நாம் பலவாறாக கண்டு கொண்டுதான் உள்ளோம். என்ன செய்ய, நாம் அங்கு சென்றாக வேண்டுமே என்கிற நிலைக்கு தள்ளப்பட்டு, நவீன கால அடிமைத்தனத்தை நாகரீகப் போர்வையில் மறைத்துக் கொள்கிறோம். இதுவே ஒரு அமெரிக்கர்கு அவர்களின் நாட்டில் நாம் செய்திருந்தால், அல்லது நம் மண்ணில் இப்படி அவர்களைச் செய்திருந்தால், கூக்குரல்கள் சர்வதேசப் பிரச்சனையாக உருமாறுமல்லவா?

படத்தில் இக்காட்சிக்கு அடுத்தாக இன்னொன்று வருகிறது, “அமெரிக்கத் தூதரகத்தின் முன்பு உயரமாக பறக்கவிடப்பட்டிருக்கும் அமெரிக்க கொடியினை கண்டதும், ‘வெள்ளையனே வெளியேறு’ என முழக்கமிட்டும், அதனை கீழே இறக்கும்படியும் காவலாளர்களிடம் ராஜ்கிரண் சண்டையிடுகிறார். பிறகு இதற்காய் விமலும், தனது தாத்தாவும் கைது செய்யப்பட்டு ஜீப்பில் ஏற்றப்பட்டு செல்லும் பொழுது, ராஜ்கிரண் சொல்கிறார், இப்படித்தான் ஆரம்பிக்கும் அப்புறம் நம்மளையே அடிமையாக்கி விடுவார்கள் பிரிட்டிஷ்காரங்க, நாம எவ்வளவு கஷ்டப்பட்டு சுதந்திரம் வாங்கியிருக்கிறோமென சொல்ல, ஐய்யோ தாத்தா இது பிரிட்டிஷ் கொடி இல்லை, இது அமெரிக்கக் கொடி என விமல் சொன்னது, பிரிட்டிஷ்காரனானாலும், அமெரிக்கானாலும் அந்நியன்தானே எனத் திரும்ப விமலிடம் கேட்க அந்த கேள்வியோடு காட்சி முடிக்கப்பட்டுவிடுகிறது.

இங்கு நாம் கவனிக்க வேண்டியது இந்தக் கேள்வியைத்தான். அதனால்தான் என்னவோ இந்தக் கேள்வியோடு காட்சி ஒரு அழுத்தத்தினைக் கொடுத்திட்டு அப்படியே நிற்கிறது. இது உண்மைதானே, பிரிட்டிஷ் ஆனாலும் அமெரிக்காவானாலும், அந்நிய நாட்டுக்காரர்கள்தானே? இதில் மாற்றேதும் உண்டோ?

manjappai3மேலும் இப்படித்தான் எல்லாம் ஆரம்பமாகும் பிறகு நாம் அடிமையாக்கப்படுவோம் என்பதனையே வசனத்திலும் சொல்லிவிடுகிறார் ராஜ்கிரண். இதுவும் உண்மைதான், அதேசமயம் நமது நாடு அடுத்து யாரின் கீழ் அடிமைப்பட்டும், அடிமைப்படவும் உள்ளது என்பதனை சூட்சகமாக சொல்ல முனைகிறது இக்காட்சி. இப்படித்தான் கிழக்கிந்திய கம்பெனி மூலம் தனது கூடாரத்தை இங்கு கட்டியது பிரிட்டிஷ். இப்போது அதனையே கார்ப்ரேட்டுகள், பன்னாட்டுக் கம்பெனிகள் எனும் பெயரில் நவீன கிழக்கிந்திய கம்பெனிகளாக அமெரிக்கா தனது மூக்கை இந்தியா எனும் கூடாரத்திற்குள் நுழைத்து அடுத்த கட்டங்களை நகர்த்தியும் விட்டது. இனி கூடாரத்தை (இந்தியாவை) கபளீகரம் செய்வதுதான் மீதம். பிரிட்டிஷ் வணிக வலையைத்தான் அமெரிக்காவும் கை கொண்டுள்ளது. தனது யுனைடட் ஃப்ரூட் நிறுவனம் மூலம் லத்தீன் அமெரிக்காவினையே தனது கைக்குள் அமெரிக்கா வைத்தது, வைத்துள்ளது எல்லாம் உலகமறிந்தது. வியாபார வலை காலாவதியானால், அடுத்து அது பேராயுதம் எனும் குற்றச்சாட்டை வீசி, தாங்கள்தான் உலகத்தின் மீட்பர் எனவும், கட்டப்பஞ்சாயத்து செய்கிறேனென இறங்கி ஈராக், ஆப்கானிஸ்தானை அழித்ததினைப் போல அழிக்கவும் செய்யலாம். திரிகோணமலையை கைப்பற்றியுள்ளதின்படி பார்த்தால் அதன் முதல் இலக்கு தமிழகமாகத்தான் இருக்கிறது என்பது புலப்படும். இப்பொழுது பொருளாதார மேம்பாட்டுத் திட்டமென, அழிவை அழகாய் காட்டிக் கொண்டுள்ளனர், மீத்தேன், கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் என நீளுகிறது அழித்தொழிப்பு. இதில் நாம் தெளிவு பெற்று தேசியப் போராட்டத்தில் இறங்கினால் நம்மை மிகச் சுலபமாக ஒடுக்கத்தான் திரிகோணமலையை தெரிவு செய்து கைவசப்படுத்தியுள்ளது அமரிக்கா. அட இது என்னப்பா, இந்தியாவிற்கு கீழாகத்தானே நாம் இருக்கிறோம், ஆனா அமெரிக்கா, அமெரிக்கா எனச் சொல்வதைப் பார்த்தால், யார் நம்மை ஆள்கிறார்கள் என்பது கேளிக்கையாக தோன்றலாம். நம்மை ஆள்வது இந்தியாதான், இந்த பொம்மைக்கு சாவி கொடுப்பது அமெரிக்கா, இந்த அமெரிக்காவை அசைப்பது இஸ்ரேல் எனது இது ஒரு உலக நெட்வொர்க். கவலைப்பட வேண்டாம் நம்மை அழித்தப் பிறகு அவர்களின் அடுத்த இலக்கு மொத்த இந்தியாவும்தான். அப்பொழுது எட்டப்பனைப் போல, நமது ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் காலில் விழுந்து கும்பிட்டு பிழைத்துக் கொள்வார்கள், இப்பொழுதும் அப்படித்தான் உள்ளது.

சரி இதெல்லாமுமே படம் சொல்ல வருகிறதா என்றால், அப்படிச் சொல்வதற்கில்லை. இருந்தாலும் அக்காட்சியின் நீட்சியை தொடர்ந்து ஆய்ந்தால் இதெல்லாம் புலப்படும்.

இப்படி அமெரிக்க அரசியல் ஒருபுறமும், அதேசமயம் ஒருபுறம் ஐ.டி கம்பெனிகளின் (இவர்களும் அமெரிக்க கைப்பாவைகள்தானே!) அரசியலும் இங்கு பேசப்படுகிறது.

ஒரு காட்சி, அமெரிக்கா செல்வதற்காக இரவு முழுவதும் உறங்காது தனது புராஜக்ட்டை மடிக்கணினியில் முடித்துவிட்டு அதே களைப்போடு உறங்கிப் போய்விடுகிறார் விமல். காலையில் தனது தாத்தா விமலின் அயற்சியை மனதிற் கொண்டும், அதே சமயம் லேப்டாப்பினை தோசை செய்யும் மின்சார கருவியென (டிஸ்டர்) நினைத்து, தான் கடற்கரையில் இதனை பேரனிடம் கேட்டதினால் வாங்கி வந்திருக்கிறாரென நினைத்துக் கொண்டு, அதனை எடுத்து கேஸ் அடுப்பில் வைத்துவிடுகிறார். பின்னர் அது தீயினால் உருகி வெடித்து விடுகிறது. இதனை அறிந்த விமல் அதிர்ந்து போய், இதே நிலையோடு, அலுவலகத்திற்குச் சென்று தனது நிலையை விளக்குகிறார். ஆனால், அவைகளை ஏற்காது அதிகாரி தன்னை ‘வேஸ்ட்’ என திட்டி அனுப்பிவிடுகிறார். அந்த புராஜக்ட்டை வேறொருவரிடமும் கொடுத்துவிடுகிறார். அப்பொழுது விமல் கதாநாயகியிடம் இப்படி சொல்கிறார், ‘இத்தனை நாள் ஜீனியஸ்னு தூக்கி வச்சு கொண்டாடினானுக, சின்னதா ஒன்னு நடந்ததும் கசக்கி எறிஞ்சுட்டானுக’ என வசனமிடுகிறார். இதுவும் நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும். நாம் எப்படி நவீன காலங்களில், நமது இளைஞர்கள், ஐ.டி மோகத்தால் கொத்தடிமைகளாக உள்ளனர் என்பதனையும் இது குறிக்கிறது. பின்னர் கதாநாயகன் கெஞ்சிக் கெஞ்சி வேறொரு மடிக்கணினி மூலம் அதனை முடித்துக் காட்டுகிறார். அப்பொழுதும் இறுதிவரை மறுக்கப்பட்டு, வேறு நபர் இந்த புராஜட்டை முடிக்க முடியாமல் கால அவகாசம் கேட்கையில் அவரை உடனே தூக்கி எறிந்துவிட்டு அது மீண்டும் கதாநாயகனுக்கு வருகிறது.

இப்படி படத்தில் ஆங்காங்கே ஆழமான சில அரசியல்களை அறிந்தோ, அறியாமலேயோ இயக்குனர் ராகவன் வைத்துள்ளார். இதுதான் இவரின் முதல் பெரியதிரை என்பதினாலோ என்னவோ, நல்ல கதையினை கொடுத்திருந்தும், திரைக்கதையில் சில இடங்களில் சறுக்கி இருக்கிறார்.

அமெரிக்க அரசியல், ஐ.டி அடிமை வாழ்வு, பெருநகரத்தில் மறந்து போன அல்லது மறுக்கப்பட பந்த,பாசம், காதல் வசத்தால் அப்படியே மதி மயங்காது தன்னை வளர்த்த தாத்தா-தான் முக்கியமென நவீன காலத்து நகர மோகக் காதலை சற்று உரசிப் பார்ப்பது அல்லது எடுத்துப் பேசுவதென படத்தில் இடம்பெற்றுள்ள சமூகக் கருத்துக்கள் அருமை.

தனது முதல் படத்தில் உள்ள இத்தகைய விமர்சனங்கள் தொடர்ந்து வரவேண்டும் என்பதனை வலியுறுத்தி, இப்படத்திற்கான பாராட்டுக்கள் இயக்குநர் ராகவனுக்கு.

When http://order-essay-online.net preparing for an oral presentation, many people are their own worst critics

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “‘மஞ்சப்பை’ பேசும் அரசியல் – திரை விமர்சனம்”

அதிகம் படித்தது