சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மணிமேகலை காப்பிய மரபு

முனைவர் மு.பழனியப்பன்

Feb 12, 2022

siragu manimegalai2

ஒரு மொழியின் வளர்ச்சி என்பது அதன் பரவலாக்கத்திலேயே இருக்கிறது. ஒரு மொழியைப் பேசுவோர் எண்ணிக்கை, அம்மொழியில் எழுதுவோர் எண்ணிக்கை, படைப்புகளைப் படைப்போர் எண்ணிக்கை, படிப்போர் எண்ணிக்கை போன்றனவற்றை அளவீட்டுக் கருவியாகக் கொண்டே ஒரு மொழியின் வளர்ச்சி கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் தமிழ் மொழி வளர்ந்துள்ளது, வளர்கிறது என்பதற்கு அடையாளமாக அமைவன தமிழ்மொழியில் தொடர்ந்து படைக்கப்பெற்றுள்ள, படைக்கப்பெறும் வளமையான படைப்புகளின் பெருக்கமே ஆகும். சங்க காலம் முதல் தற்காலம் வரை பலவகையான படைப்புகள் தமிழ் மொழியில் படைக்கப்பெற்று வந்துள்ளன. சங்க இலக்கிய காலத்தில் பதினெட்டு நூல்களாக மட்டும் இருந்த தமிழ் இப்போது பல்வேறு துறைகளில் படைப்புகளைக் கொண்டு விளங்குகின்றது. இதன் காரணமாக படைப்புகளைப் படிப்போர் பெருகியுள்ளனர். இவ்வாறாக தமிழ் வளர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.

தமிழ் மொழியின் உயர்தர வளரச்சி என்பது அம்மொழியில் தோன்றியுள்ள காப்பிய படைப்புகளை முன்வைத்தே கணக்கிடப்படுகிறது. உலக இலக்கியங்களுடன் ஒப்பிடத்தக்க அளவில் தமிழில் காப்பியங்கள் படைக்கப்பெற்றுள்ளன. தமிழின் காப்பிய வளர்ச்சி என்பது ஐம்பெருங்காப்பியங்கள் என்ற வகைமையில் தொடங்கி ஐஞ்சிறு காப்பியங்களாகி அதன்பின் கம்பராமாயணம், வில்லி பாரதம், திருத்தொண்டர் புராணம், திருவிளையாடற் புராணம், தேம்பாவணி, சீறாப்புராணம் என சமயத்திற்கு ஒரு காப்பியம் என்ற நிலையில் வளர்ந்து, தற்போது பெருமையுடையோருக்குக் காப்பியம் என்ற அளவில் ஏசு காவியம், காந்தி புராணம் என்று வளர்ந்து வருகின்றது. இன்னும் தமிழின் காப்பிய வளர்ச்சி வளர்ந்துகொண்டே இருக்கும். இக்காப்பியங்கள் காப்பியம் என்ற வரையறைக்குள், இலக்கணத்திற்குள் அமைந்து சிறப்பனவாகும். எனவே காப்பியங்களை உருவாக்குவது என்பது மொழியின் உயர்தர வளர்ச்சி என்ற நிலையில் தமிழில் காப்பியங்கள் தோன்றிட தோன்றிய காப்பியங்களை ஆராய்வது என்பது தேவையாகும். இத்தேவையின் ஒருபகுதியாக மணிமேகலைக் காப்பியத்தின் காப்பிய மரபுகளை அறிந்துகொள்ளும் நிலையில் இக்கட்டுரை அமைகிறது.

மணிமேகலையும் காப்பிய மரபுகளும்.

சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களும், கதைத் தொடர்பும் காப்பியக் கட்டமைப்பில் ஒற்றுமையும் உடையனவாகி இரட்டைக் காப்பியங்களாகத் திகழ்கின்றன. மணிமேகலைக் காப்பியம் பெரும்பாலும் சிலப்பதிகார காப்பிய மரபுகளைத் தழுவியே செய்யப்பெற்றுள்ளது. இதற்குக் காரணம் சிலப்பதிகாரக் காப்பியம் தமிழின் முதல் காப்பியம் என்பதாலும், சிலப்பதிகாரக் கதை மணிமேகலைக் கதையின் முன் தொடர்ச்சி என்பதாலும் இக்காப்பிய மரபு பின்பற்றல் எளிமையாகவும், இனிமையாகவும் நடைபெற்றுள்ளது.

தண்டியலங்காரம் காட்டும் ‘‘பெருங்காப்பியக் கூறுகள்” மணிமேகலை எழுதப்பெற்ற காலத்திற்குப் பின்பு தோன்றியவை. இலக்கியம் படைத்தற்குப்பின் இலக்கணம் காண்டலின் நெறிப்படி அமைக்கப்பட்டது தண்டியலங்காரம் காட்டும் காப்பிய இலக்கணங்கள் ஆகும். தண்டியலங்காரம் எழுதப்பெற்ற காலத்திற்கு முன்பு தோன்றிய சிலப்பதிகாரம், மணிமேகலை,சீவக சிந்தாமணி, பெருங்கதை போன்ற காப்பியங்களை அணுகி ஆ ராய்ந்து அவை பின்பற்றிய காப்பிய மரபுகளை வகுத்தும் தொகுத்தும் தந்துள்ளது என்பதே சரியான கருத்தாகும்.

தண்டியலங்காரம் என்ற நூலுக்கு முன்னெழுந்த மணிமேகலைக் காப்பியத்தின் காப்பிய மரபுகளை தண்டியலங்கார நூல் தரும் பெருங்காப்பிய இலக்கணம் கொண்டு அளவிடுவது என்பது ஒருநிலை. ஆனால் தண்டியலங்காரம் காட்டும் காப்பிய மரபுகளையும் மணிமேகலை பெற்றுள்ளது என்பதையும் இங்கு குறிப்பிட்டாகவேண்டும்.

மணிமேகலைக் காப்பியம் தனக்கு முன்னதாக எழுந்த பிற இலக்கியங்களை ஒட்டி, இலக்கணங்க்ளை ஒட்டி, சிலப்பதிகாரக் காப்பியத்தை ஒட்டித் தன் காப்பிய மரபுகளை அமைத்துக் கொண்டுள்ளது என்று கருதுவது சரியான கருத்தாகும்.

‘‘இந்நூல் (மணிமேகலை) அம்மை முதலிய வனப்பெட்டினுள் இயைபின் பாற்படும். தொல்காப்பியர் செய்யுளியலின் கண்ணே ‘அம்மை முதலியவனப்பெட்டும் தொடர்நிலைச் செய்யுட் கிலக்கணம்” என்று கூறுகின்றவழி ‘‘ஞாகரை முதலா ளகார வீற்றுப் புள்ளி யிறுதி யியைபெனப் படுமே” என்னும் சூத்திரவுரையில் ‘‘ஞணநமன யரலவழள ” என்னும் பதினோரு புள்ளியுள் ஒன்றனை ஈறாகவமைத்தச் செய்யுளைப் பொருட்டொடராகவும் சொற்றொடராகவும் செய்வது இயைபெனப்படும். னகார வீற்றானிற்றுப் பொருளுமியைந்து சொல்லுமியைந்து வந்தன சீத்தலைச் சாத்தனாராற் செய்யப்பட்ட மணிமேகலையும் கொங்கு வேளிராற் செய்யப்பட்ட உதயணன் கதையும் போல்வன என்று பேராசிரியரும் ஆசிரியர் நச்சினார்க்கினியரும் எழுதியிருத்தல் காண்க. இந்நூலிற் சொல்லியைபும் பொருளியைபும் அமைந்திருத்தல் அறிதற்குரியது” ( உ.வே.சா. (அரும் பத உரையாசிரியர்)முகவுரை, மணிமேகலை, ப. 17) என்று உ.வே.சாமிநாதையர் குறிப்பதன் வாயிலாக தண்டியலங்காரத்திற்கு முன்பே காப்பிய இலக்கணத்தைத் தொல்காப்பியர் வகுத்துள்ளார் என்பது தெரியவருகிறது. தொல்காப்பியர் காட்டிய வனப்பு இலக்கணப்படி சீத்தலைச் சாத்தனர் தொடர்நிலைச் செய்யுளாகத் தன் காப்பியத்தைப் படைத்துள்ளார் என்பதை மேல் கருத்து காட்டுகின்றது.

தொல்காப்பியர் சொன்ன இயைபு என்னும் வனப்பின்படி, மணிமேகலை

‘அணிவிழா அறைந்தனன் அகநகர் மருங்கென்” ( விழாவறைக் காதை நிறைவடி)
‘இளங்கொடி தோன்றுமால் இளங்கோ முன்” (பளிக்கறை புக்ககாதை நிறைவடி)
‘காயசண்டிகை எனும் காரிகை தாய் என்” ( பாத்திரம் கொண்டு பிச்சை புக்க காதை
நிறைவடி)
‘அந்தரத்து எழுந்தனள் அணி இழைதானென்” (ஆபுத்திரனோடு மணிபல்லவம்
அடைந்த காதை நிறைவடி)

என்ற நிலையில் காப்பியத்தின் காதைகள் அனைத்தும் இயைபு என்ற இலக்கணப்படி ‘ன்‘ என்ற மெய்யெழுத்து கொண்டு முடிக்கப்பெற்றுள்ளது. இதன்வழியாக தொல்காப்பியர் சுட்டிய இயைபு என்னும் காப்பிய மரபினைச் சீத்தலைச் சாத்தனார் பின்பற்றியுள்ளார் என்பதை உணர இயலும்.

மேலும் தொல்காப்பியர் சுட்டும், தொன்மை,தோல், விருந்து என்ற மூன்று வனப்புகளும் சீத்தலைச் சாத்தனாரால் கையாளப்பெற்றுள்ளன. ”உரையாசிரியர் தரும் விளக்கங்களையும் எடுத்துக்காட்டுகளையும் ஆராய்ந்தால் ”தொன்மை, தோல், விருந்து, இயைபு” என்னும் நான்கும் இயற்றமிழ் காப்பியம் தொடர்பானவை என்பதும், ”புலன்” என்னும் வனப்பொன்றும் நாடகச் செய்யுள் தொடர்பானது என்பதும் அறியலாகும்” என்று தொல்காப்பியர் சுட்டிய வனப்புகளில் நான்கினைக் காப்பியத்தின் மரபுகளாகக் காட்டுகின்றார் கொ.இலட்சுமணசாமி. (கொ. இலட்சுமணசாமி, சிலப்பதிகார மணிமேகலை காப்பியமரபு ப. 14)

தொன்மை , தோல் , விருந்து, இயைபு என்ற நான்கு வனப்புகளும் முறையே

1. பழமைத்தாகிய கதைப்பொருள் பற்றிச் செய்யப்படுதல்
2. பரந்துபட்ட ஆசிரியப் பாட்டான் செய்யப்படுதல்
3. பதினோரொற்றுக்களுள் ஒன்றால் இற்றனவாகச் செய்யப்படுதல்
4. புதுவதாகப் புனையப்படுதல்

என்ற வனப்புப் பொருள்களைப் பெற்றனவாகும். இந்நான்கு வனப்புகளையும் மணிமேகலை ஆசிரியர் சீத்தலைச் சாத்தனார் பின்பற்றித் தன் மணிமேகலைக் காப்பியத்தை வடிவமைத்துள்ளார்.

தொன்மைக் கதையான சம்புவின் கதை, இராகுலன் கதை போன்றன கிளைக்கதைகளாக இடம் பெறச் செய்யப்பெற்றுள்ளன. சிலப்பதிகாரம் எழுதப்பட்ட ஆசிரியப்பா யாப்பிலேயே மணிமேகலைக் காப்பியமும் எழுதப்பெற்றுள்ளது. ‘ன்‘ என்ற மெய்யெழுத்தை நிறைவாகக் கொண்டு இயைபு என்ற வனப்பின்படி மணிமேகலைக் காப்பியம் படைக்கப்பெற்றுள்ளது. மணிமேகலை என்ற பெண்ணைக் காப்பியத்தலைவியாகக் கொண்டு, குலங்களைத் தாண்டி மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்ற அடிப்படையில் புதுமையான கருத்துகளைக் கொண்டதாகவும் மணிமேகலைக் காப்பியம் செய்யப்பெற்றுள்ளது.

எனவே தொல்காப்பியர் காட்டிய காப்பிய நெறிகள் மணிமேகலைக் காப்பியப் படைப்பாக்கத்தில் பின்பற்றப்பெற்றுள்ளது என்ற கருத்து உறுதியாகின்றது.

சிலப்பதிகாரக் காப்பியத்தின் பதிகம், சிலப்பதிகாரக் காப்பியம் இளங்கோவடிகளால், சீத்தலை சாத்தனாரின் வழிகாட்டல்படி இயற்றப்பெற்றது என்று குறிக்கின்றது. இந்நி்லையில் சிலப்பதிகார உருவாக்கத்தின்போது சீத்தலை சாத்தனார் உடன் இருந்தவராகிறார். எனவே அவர் மணிமேகலைக் காப்பியத்தைப் படைக்க முன்வந்தபோது சிலப்பதிகாரக் காப்பியமரபுகளை அவர் பின்பற்றவேண்டியவராகிறார்.

‘‘ஐம்பெருங்காப்பியங்களுள் கதையோட்டம் எளிதில் பொருள் புலப்படுத்துகிற இயற்சொற்தொடரோட்டம் எனும் காப்பியப் பண்புகளைச் சிறப்பாகக் கொண்டவற்றுள் முன்னிற்பது சேரநாட்டு இளங்கோவின் சிலப்பதிகாரமே. அதனை அடுத்த பெருமை மணிமேகலைக்கே உரியது” (சுயம்பு, பதிப்புரை, மணிமேகலை, ப.4) என்ற நிலையில் சிலப்பதிகாரத்தை அடுத்து அதன் காப்பிய மரபுகளைப் பின்பற்றி மணிமேகலை செய்யப்பெற்றுள்ளது என்பது பலராலும் ஏற்கப்பெற்ற கருத்தாகும்.

இந்நிலையில் சிலப்பதிகாரக் காப்பியமரபுகள் ஏறக்குறைய முழுமையான அளவில் மணிமேகலைக்குள் கொண்டுவரப்பெற்றுப் படைக்கப்பெற்றுள்ளன என்று முடிய முடிகின்றது.

பாயிரம், பதிகம், கதை பொதி பாட்டு

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் பதிக மரபு காணப்படுகின்றது. பதிகம் என்பதை நன்னூல் காட்டும் பாயிரம் என்பதனோடு ஒன்றுபடுத்திக் காண இயலும். இந்தப் பதிகத்தைக் கதை பொதி பாட்டு என்றும் பழைய உரையாசிரியர்கள் குறிக்கின்றனர்.

பதிகம் என்பது பாயிரம் போன்றது. குறிப்பாக சிறப்புப் பாயிரம், பொதுப்பாயிரம் என்ற நிலையில் சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் அமையும் பதிகமானது சிறப்புப் பாயிரம் என்ற வகைமை சார்ந்ததாகும். இப்பதிகம் சிலப்பதிகாரம், மணிமேகலைக் காப்பியங்கள் முற்றுப் பெற்றபின்பே பாடப்பெற்றிருக்க வேண்டும். ஏனெனில் சிலப்பதிகார மணிமேகலை பதிகங்களில் காப்பியத்தின் அனைத்துக் காதைகளின் பெயர்களும் தரப்பெற்று இன்னார் இதற்காக எழுதியது என்ற குறிப்பும் அமைக்கப்பெற்றுள்ள காரணத்தால் இப்பதிகம் காப்பியம் பாடி முடித்தபின்பே எழுதப்பெற்றிருக்கவேண்டும் என்று முடியலாம். இதனை எழுதியது யார் என்பதில் இருவேறு கருத்துகள் உள்ளன. ஒரு கருத்து, பதிகத்தைக் காப்பிய ஆசிரியனே எழுதினான் என்பதாகும். மற்றொரு கருத்து காப்பிய ஆசிரியர் அல்லாது பிறர் ஒருவர் எழுதியிருக்க வேண்டும் என்பதாகும். எவ்வாறாயினும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இரு காப்பியங்களும் பதிக மரபைப் பெற்று காப்பிய வடிவ ஒற்றுமை பெற்றனவாக விளங்குகின்றன. மற்ற காப்பியங்களில் பதிக மரபு இல்லை என்பதை இங்கு அறிந்து கொள்ளும்போது சிலப்பதிகாரக் காப்பியமும், மணிமேகலைக் காப்பியமும் ஒத்து நடப்பன என்பதையும் உணர்ந்து கொள்ள இயலும்.

சிலப்பதிகாரத்தில் காணப்படும் பதிக மரபு மணிமேகலையிலும் தொடர்ந்துள்ளது. இந்நிலையில் சிலப்பதிகாரத்தில் பதிக மரபு அமைந்ததற்காக பின்புலத்தையும், சூழலையும் ஆராய வேண்டியுள்ளது.

சேர மன்னர் பதின்மரைப் பற்றிய பதிற்றுப் பத்து ஒவ்வொரு பத்தின் இறுதியிலும் பதிகம் பாடும் முறையைக் கொண்டுள்ளது. பதிற்றுப்பத்தின் இந்தப் பதிக மரபு சிலப்பதிகாரத்தில் தொடர்ந்து வந்திருக்க வேண்டும். இளங்கோவடிகளின் அண்ணனான சேரன் செங்குட்டுவனைப் பற்றி, பரணர் என்ற புலவர் பதிற்றுப் பத்து என்னும் புறத்தொகுப்பில் ஐந்தாம் பத்தில் பாடியுள்ளார். இந்த ஐந்தாம் பத்தின் பதிகம் சேரன் செங்குட்டுவனின் சிறப்புகளை எடுத்துரைத்து, இதனை எழுதியவர் பரணர் என்பதையும் அறிவிக்கிறது.

பத்துப்பாட்டு என்ற தொகுப்பில் அமைந்த நெடும்பாடல்களுக்குப் பதிகம் அமையாத நிலையில், பதிற்றுப்பத்து என்ற தொகுப்பின் ஒவ்வொரு பத்திற்கும் பதிகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் பதிகம் பாடுதல் என்பது ஒருவரைப் பற்றிப் பத்துப்பாடல்கள் பாடப்படும்போது, அவற்றை ஒருங்கி்ணைக்க ஒரு பாடல் தேவைப்பட்டுள்ளது என்பது கருதி பதிகம் என்ற அமைப்பு ஏற்றுக் கொள்ளப்பெற்றுள்ளது. இவ்வகையில் முப்பது காதைகளை உடைய ஒரு காப்பியத்தினை ஒருங்கிணைக்க ஒரு பதிகப் பாடல் தேவைப்படுகிறது என்ற நிலையிலேயே சிலப்பதிகாரத்திற்குப் பதிகப் பாடல் தேவைப்பட்டுள்ளது. இதனைப் பின்பற்றியே மணிமேகலையும் பதிகம் பாடியுள்ளது.

இப்பதிகங்கள் இரண்டிற்கும் பெருத்த ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

“அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற்று ஆவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்என,
முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுகஎன் றாற்குஅவர்,”
(இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், பதிகம் அடிகள் 55-64)
என்ற அடிகளிலும்

“இவ்வா றைந்தும்
உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்,
இது, பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்”
(சிலப்பதிகாரம் பதிகம் அடிகள் 86-90)

என்ற அடிகளிலும் சிலப்பதிகாரத்தை எழுதியவர் இன்னார், அதற்கு உதவியவர் இன்னார், அதன் கதை அளவு இவ்வளவு போன்ற செய்திகள் தரப்பெற்றுள்ளன. இம்மரபு மணிமேகலையிலும் பின்பற்றப்பெற்றுள்ளது.

“இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திறம் மணிமே கலைதுறவு
ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனன்என். “
(மணிமேகலை, பதிகம் அடிகள் 95-98)

என்ற பகுதியின்வழி மணிமேகலையிலும் பதிக மரபு பின்பற்றப்பெற்றுள்ளமை தெரிய வருகிறது. இவ்வாறு சிலப்பதிகார காப்பிய மரபின் தொடர்ச்சியே மணிமேகலைக் காப்பியம் என்பதை உறுதி செய்யமுடிகின்றது.

சிலப்பதிகாரமாகிய முன்னதை இளங்கோ படைக்க சீத்தலைச் சாத்தனார் கேட்டார். பின்னதாகிய மணிமேகலையை சீத்தலைச் சாத்தனார் படைக்க இளங்கோ கேட்டார். இவ்வாறு ஒருவர் ஒரு படைப்பாக்கத்தின்போது படைப்பாளராகவும், மற்றவர் நோக்கராகவும் இருந்துள்ளார் என்பது தெளிவு. மேலும் மற்றொருவர் மற்றொரு காப்பியத்தைப் படைக்கும்போது முன்னால் படைப்பாளராக இருந்தவர் நோக்கராகிறார். முன்படைப்பினை நோக்கியவர் படைப்பாளராக ஆகிறார். இந்நடைமுறை தமிழுக்குக் கிடைத்த தனித்த சிறப்பு என்றே கருத இயலும்.

பதிக மரபு என்பது தண்டியலங்காரத்திற்கு முந்தையதான தண்டியலங்காரம் சுட்டாத காப்பியமரபு ஆகும்.
சிலப்பதிகார பதிகத்தில் நூல் எழுந்ததற்கான வரலாறு உரைக்கப்படுகிறது. கண்ணகி தனியளாய் மலை முகட்டில் ஏறிய காட்சியைக் கண்டவர்கள் சொல்லவும், சீத்தலைச் சாத்தனார் அதனை விரிக்கவும் இளங்கோவடிகள் அதனைக் காப்பியமாகப் படைக்கவும் ஆன முயற்சி்களைச் சிலப்பதிகாரப் பதிகம் காட்டுகின்றது.

மணிமேகலைப் பதிகத்திற்கு இவ்வாய்ப்பு அமையவில்லை. எனவே சீத்தலைச் சாத்தனார் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்புகளை, அதற்குண்டான பெயர்களின் வரலாற்றை எடுத்துரைக்கிறார்.

‘‘வெந்திறல் அரக்கர்க்கு வெம்பகை நோற்ற
சம்பு என்பாள் சம்பா பதியினள்” (பதிகம் அடிகள் 8-9)
என்ற நிலையில் தென்திசை அரக்கரை அடக்க வடதிசையில் இருந்து வந்த சம்பு என்பவள் தவமிருந்த இடமாக விளங்கியது காவிரிப்பூம்பட்டினம் என்பதைப் பதிகம் முதலில் காட்டுகின்றது. சம்பு – பதி என்பதே சம்பாபதி ஆகி காவிரிப்பூம்பட்டினத்தின் பெயராகியது.

இந்த சம்பாபதி அகத்தியரால் உருவாக்கப்பெற்ற காவிரியாற்றை வருக வருக என வரவேற்ற நிலையில் காவிரி வருகையினால் இவ்விடம் காவிரிப்பூம்பட்டினம் என்று பெயர் பெற்றது என்று பதிகத்தில் மற்றொரு பெயரும் விளக்கம் பெறுகிறது.

இவ்வாறு காவரிப்பூம்பட்டினத்தின் சிறப்புகளைச் சீத்தலைச் சாத்தனார் எடுத்துரைக்கக் காரணம் புகார் போற்றுதும் என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் புகாரைப் போற்றியதே ஆகும்.

கடவுள் வாழ்த்து போன்றன இல்லாமல் மணிமேகலைக் காப்பியம் நேரடியாக இந்திரவிழாவில் தொடங்குகிறது. இந்திரவிழாவே கடவுள் வணக்கம் என்பதாகவும் கொள்ளலாம். இருப்பினும் புகார் நகரைப் போற்றிச் சீத்தலைச் சாத்தனார் காப்பியத்தைத் தொடங்கியுள்ள முறைமை சிலப்பதிகாரக் காப்பிய மரபின் தொடர்ச்சி என்பதாகவே கொள்ளவேண்டும்.

-தொடரும்


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மணிமேகலை காப்பிய மரபு”

அதிகம் படித்தது