மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மனிதனின் துவக்கமும் சிறப்பும்! – பகுதி 4

முனைவர். ந. அரவிந்த்

May 1, 2021

 

கோழியிலிருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையிலிருந்து கோழி வந்ததா? என்ற கேள்விக்கு விடையே கிடையாது என்று உலகம் சொல்கிறது. ஆனால், கோழியிலிருந்துதான் முட்டை வந்ததென்று தமிழ் இலக்கியம் அடித்து சொல்கிறது. நிலம், நீர், காற்று, வெப்பம் மற்றும் ஆகாயம் முதலிய ஐம்பூதங்களை படைத்த பின்னரே இறைவன் தனது கால் பெரு விரலின் கீழே இருந்த மண்ணிலிருந்து மனிதனை படைத்தான் என்பது தமிழ் மூதாதையர்கள் மூலமாக தலைமுறை தலைமுறையாக தொன்றுதொட்டு வருகின்ற உண்மையான தகவல்.. ஐம்பூதங்களைப்பற்றி திரு. ம. செந்தமிழன் அவர்கள் ‘முப்பொருள்’ என்ற புத்தகத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மனித உடலை இறைவன் களிமண்ணிலிருந்து உருவாக்கினாலும், அது ஐம்பூதங்களிலேயே ஆனது. இதையே, திருமூலர் ‘அண்டமே பிண்டம்’ என்று இரண்டே வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளார். இதன் அர்த்தம், உலகில் இருப்பவைகளே உடலிலும் உள்ளன. திடப் பொருட்கள் அனைத்தும் நிலம் ஆகும். மனித உடலே நிலம். நிலமும் உடலும் மண்ணாலானது. இதனாலேயே மண்ணில் பிறந்தவைகள்  அனைத்தும் மண்ணிற்கே திரும்புகின்றன. மனித உடலில் 60% நீர் உள்ளது. உடலில் உள்ள நுரையீரல் உதவியுடன், மனிதன் காற்றிலுள்ள பிராண வாயுவை சுவாசித்து கரிமல வாயுவை வெளியிடுகிறான். மனிதன் உயிர் வாழ காற்று இன்றியமையாதது. நாம் உண்ணும் உணவு செரிமானம் அடைய பித்தம் மிக அவசியம். பித்தமானது உடல் முழுவதும் பரவ வெப்பம் தேவை. இந்த வெப்பத்தை சூரிய ஒளியிலிருந்து நாம் பெற முடியும். வெப்பம் வேறு சூடு வேறு. குளிர்ந்த நீரில் குளிக்கும்போது உடலின் வெப்பம் தணியும். காயம் என்றால் ‘உடல்’ என்றும், ‘ஆ’ என்றால் ‘விரிவடைதல்’ என்றும் பொருள்படும்.  நாம் சுவாசிக்கும் போது உடலில் உள்ள நுரையீரல் விரிவடையும். இதுவே, ஆகாயம் கூட உடலில் இருப்பதற்கு சான்று. இறைவனால் மண்ணிலிருந்தே மனிதன் படைக்கப்பட்டான் என்பது திருமூலரின் திரு மந்திரம். மனிதனை படைத்த பின்னர் மனிதனுக்கு இறைவன் உயிர் கொடுத்ததாலே அவனை ‘பிராண நாயகன்’ எனவும் அழைக்கிறோம்.

இறைவன் சூரியனையும் சந்திரனையும் விண்மீன்களையும் காற்றையும் நீரினையும் படைத்ததோடு நிறுத்தவில்லை. அவன் சூரியனுக்கு ஒளியையும், சந்திரனுக்கு குளிர்ச்சியையும், விண்மீனிற்கு ஒளிரும் சக்தியையும், தீயில் வெப்பத்தையும், காற்றில் இயக்கத்தையும், நீரில் சுவையையும் மற்றும் மண்ணில் உறுதி தன்மையை வைத்தான் என்று சிவனை வியக்கிறார் மாணிக்கவாசகர். மண்ணில் இருந்து பிறந்தான் மனிதன் என்று பல தமிழ் புராணங்கள் கூறுகின்றன.

விண்மீன்

siragu vinmeen1

திரு. பி. என். பரசுராமன் அவர்கள் எழுதிய ஒரு தமிழ் புராணக்கதையின்படி, ஒருநாள் ஞானமுள்ள சிறுவன் ஒருவன் மண்ணில் புரண்டு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்தப் பக்கமாக வந்த மன்னர், ‘ஏனப்பா… இப்படி மண்ணில் புரண்டு விளையாடுகிறாய்?’ என்று கேட்டார். அதற்கு அந்த ஞானச்சிறுவன், ‘இந்த உடம்பு, மண்ணால் ஆனது தானே! எப்படியும் மறுபடியும் மண்ணுக்குள் தான், போகப் போகிறது. அப்படி இருக்கும்போது, மண்ணில் புரண்டு விளையாடினால் என்ன?’ என, பதில் சொன்னான். இறைவன், முதல் மனிதனை மண்ணால் உருவாக்கினார் என்பதே இந்த கதை கூறும் கருத்து. இதையே இன்னும் ஒருபடி மேலே சொன்னால், முதல் மனிதனின் தந்தை ஒரு மனிதன் கிடையாது. முதல் சிங்கத்தின் தந்தை ஒரு சிங்கம் கிடையாது. அனைத்து முதல் படைப்புகளும் இறைவனால் உருவாக்கப்பட்டவை. முதல் மனிதன், முதல் விலங்கு, முதல் பறவை போன்றவை முறையே மனிதனாலோ, விலங்குகளாலோ அல்லது பறவையாலோ உருவாகவில்லை. அவற்றை உருவாக்கியது இறைவன் என்று தமிழ் புராணங்கள் கூறுகின்றன. இதுதான் கோழியிலிருந்துதான் முட்டை வந்ததென்ற விடைக்கு  ஆதாரம்.

அவ்வையார் தன்னுடைய பாடலில், ‘அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது’ என்று மனித பிறப்பின் சிறப்பை பற்றி கூறியுள்ளார். இறைவன் மனிதன், விலங்கு, பறவைகள் அனைத்தையும் படைத்தாலும், மனிதன் இறைவனை உணரும் சக்தி உடையவனானதால் அவனே விலங்குகளையும், பறவைகளையும் விட உயர்ந்தவன். விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் ஐந்தறிவை படைத்த இறைவன், மனிதனுக்கு ஆறாம் அறிவை தந்துள்ளான். அதுவே அவனுடைய சிந்தை. அந்த ஆறாம் அறிவை மனிதன் சுயமாக பயன்படுத்தும் சுதந்திரத்தையும் இறைவன் கொடுத்துள்ளான். முதல் ஐந்தறிவுகளாவன, தொடு உணர்வு, சுவை உணர்வு, நுகர்ச்சி உணர்வு, பார்வை உணர்வு மற்றும் கேட்கும் உணர்வு போன்றவைகளாகும். இதையும் தாண்டி இறைவன் நமக்கு தந்த ஆறாம் அறிவு ‘பகுத்து ஆராய்தல்’ ஆகும். இதனை, ‘சமயோகித புத்தி’, ‘சிந்திக்கும் திறன்’ என்றும் அழைக்கப்படுகிறது. ஆறாம் அறிவை வைத்து மனிதன் அனைத்து மிருகங்களையும் அடக்கி ஆளுகிறான். ஒரு மனிதனை இறைவனுடன் சேர்ப்பது அவனுடைய தெளிந்த சிந்தையே. பேராசைகள் குறைய, குறைய தெளிந்த சிந்தை உருவாகும். ஆசைகள் கூட, கூட அவன் அழிவை நோக்கி செல்கிறான் என்று அர்த்தம். உதாரணமாக, ஒரு சிங்கம் வேட்டையாடி ஒரு மிருகத்தை கொன்று சாப்பிட்டு விட்டது. அதற்கு, திரும்பவும் பசியெடுக்க இரண்டு நாட்கள் ஆகின்றன. அதுவரை, அந்த சிங்கம் எந்த ஒரு மிருகத்தையும் கொல்வதில்லை. அனால், மனிதனின் ஆசைக்கு முடிவே இல்லை. போதுமென்ற மனம் அவ்வளவு எளிதாக வருவதில்லை. உலகமே தன்னுடைய கைக்குள் இருப்பதைப்போல் சாகும் வரை ஓடுகிறான். தன் தேவை என்ன என்பதை அறியாமலே சொத்து சேர்க்கிறான். இதனால், அவன், இறைவனை தேட மறக்கிறான். இறைவன் படைத்த ஆறாம் அறிவை, தவறாக பயன்படுத்துகிறான்.

மனிதனின் பிறப்பைபற்றி வள்ளுவர் பெருமான் குறள் எண்: 351 மூலம்இவ்வாறு கூருகிறார்.

‘பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்புகுறள் எண்: 351

இதன் விளக்கம், மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் மாண்புமிகு மனித பிறப்பு துன்பமாக மாறுகிறது. மனித பிறப்பை ‘சிறப்பான பிறப்பு’ என்றும், ‘மாண்புமிகு பிறப்பு’ என்றும் வள்ளுவர் பெருமான் கூருகிறார். ஆனால், மனிதன் எது நிலையானது, எது நிலையில்லாதது என்று தெரியாமல் திரிகிறான். உண்மை பொருளை உணர மறுக்கிறான். இதன் விளக்கம், உண்மையில்லாத, நிலையில்லாத பொருளை தேடுவதால், மனிதனின் மாண்புமிகு பிறப்பு சிறப்பில்லாத பிறப்பாக மாறுகிறது.

யூத நூல்களும் மனிதனின் பிறப்பையும் அவனுடைய சிறப்பையும் பற்றி ஒத்த கருத்துக்களையே கூறுகின்றன. அதன்படி, இறைவன், முதல் மனிதன் ஆதாமை களிமண்ணால் உருவாக்கினார் என்றும், ஆதாமின் விலா எலும்பிலிருந்து ‘ஏவாள்’ என்ற பெண்ணையும் உருவாக்கினார். இறைவன் களிமண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் பெற்றான் என்று வளைகுடா நாடுகளில் உருவான அத்தனை மத நூல்களும் கூறுகின்றன. அதன்படி, இறைவனே உலகின் முதல் குயவன். இறைவன் ஆதாமையும் ஏவாளையும் படைத்த பின்னர், அவர்களை நோக்கி, நீங்கள் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, கடலின் மீன்களையும், பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொன்னார். இறைவன் ஆதாமையும் ஏவாளையும், ‘இருவரும் ஒரே உடலாய் இருப்பீர்கள்’ என்று வாழ்த்தினார். அது மட்டுமின்றி, இறைவன், மனித குலத்தை மிகவும் நேசித்து, அவர்களுக்குப் பெரும் ஆசீ வழங்கினார் என்று யூத நூல் கூறுகிறது..

மனிதர்களை படைத்த இறைவன் அவர்களை தங்கள் சுய விருப்பத்தின்படி செயல்பட விட்டுவிட்டான். நீரையும் நெருப்பையும் மனிதன் முன்வைத்து உனக்கு விருப்பமானதை எடுத்துக்கொள் என்றான் இறைவன். மனிதர்முன் வாழ்வும் சாவும் வைக்கப்பட்டுள்ளன என்றும், அவர்களே அதனை தீர்மானிக்கின்றார்கள் என்பதே இதன் விளக்கம். அச்சு இல்லாமலே மனிதனை இறைவன் படைத்தான். இறைவன் கையில் களிமண் நாம். இறைவனின் படைப்புகள் அனைத்தும் ஒழுங்கானவைகளே. ஆனால், முதல் மனிதன் முதல் கடைசி மனிதன் வரை ஒருவனும் இறை ஞானத்தை முழுமையாக அறியவில்லை, அதன் ஆழத்தைக் கண்டானில்லை. ஞானத்தின் எண்ணங்கள் கடலினும் பரந்தவை என்பவை யூத நூல்களின் சாராம்சம்.

இறைவனுக்கு எப்படி இணையானவன் கிடையாதோ, அதுபோல் ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் வாய்ந்தவன். மனிதன் மண்ணிலிருந்து இறைவனால் படைக்கப்பட்டான் என்பதையும், உலகின் அனைத்து பிறப்புகளிலும் மனிதனே சிறந்தவன் என்றும் தமிழ் புராணங்களும் யூத நூல்களும் கூறுகின்றன.

மண்பானையைப்பற்றி ஒரு அருமையான சிறுகதை உண்டு. ஒருவன் மண்பானையிடம்  ஒரு கேள்வி கேட்டான். நீ எப்படி எல்லா சூழ்நிலையிலும் குளிர்ச்சியாகவே இருக்கிறாய்? உன்னை சார்ந்திருப்பவர்களையும் குளிர்ச்சியாக வைத்திருக்கிறாய்? என்று. கேள்வி ஒன்றும் புதிதல்ல அதற்கு மண்பானை தந்த பதில்தான் ஆச்சரியமானது. மண்பானை, அந்த மனிதனிடம், “நான் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டேன். என்னுடைய ஆயுட்காலம் முடிந்த பின்னர் நான் மண்ணிற்கே திரும்புவேன். இந்த இடைப்பட்ட காலத்தில் நான் ஏன் கோபப்பட்டு சூடாக வேண்டும்?” என பெருமையின்றி  பதில் சொன்னது.  ஆனால் மனிதன்? மண்ணாலான பானை மீண்டும் மண்ணாவது போல, மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட உடல் மீண்டும் மண்ணிற்கும், இறைவன் கொடுத்த உயிர் மீண்டும் இறைவனிடமும் சேரும்.

தொடரும்


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மனிதனின் துவக்கமும் சிறப்பும்! – பகுதி 4”

அதிகம் படித்தது