மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா”- கவிஞர் இன்குலாப்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jan 13, 2017

Siragu manusangadaa1

21 ஆம் நூற்றாண்டின் பொதுவுடைமை தத்துவத்தின் புரட்சிக்கவி இன்குலாப் என்றால் அது மிகையாகாது. எந்த சூழ்நிலையிலும் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையில் இருந்து வழுவாது தன் கவிதையை ஒடுக்கப்பட்டோரின் ஆயுதமாக ஏந்தத் தந்தவர். அவர் கவிதைகள் வெறும் சொற்கோர்வை அன்று தீப்பிழம்புகள். தன் தொடக்க காலக் கவிதைகளை கவிஞர் இளவேனில் நடாத்திய கார்க்கி இதழில் எழுதினார் இன்குலாப்.

இசுலாமிய சமூகத்தில் பிறந்திருந்தாலும் தன் வாழ்நாளின் இறுதி வரை பகுத்தறிவாளராக வாழ்ந்தவர். அதனால் தான்,

” சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளிதோரும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன் ” என்ற சமயம் கடந்து அவரால் கவி புனைய முடிந்தது.

தன் கவிதைகளைப் பற்றி இன்குலாப் அவர்கள் இப்படித்தான் கூறுகிறார்.

” எழுதியதெல்லாம்
மொழி பெயர்ப்புத்தான்
இளைஞர் விழிகளில்
எரியும் சுடர்களையும்
போராடுவோரின்
நெற்றிச் சுழிப்புகளையும்
இதுவரை கவிதையென்று
மொழி பெயர்த்திருக்கின்றேன் “

25 திசம்பர் 1968இல் தமிழ்நாட்டில், ஒன்றிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், நாகப்பட்டினத்திலிருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள கீழ்வெண்மணி கிராமத்தில், ஆதிக்க சாதி நிலக்கிழார்களால் நடத்தப்பட்ட 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பள்ளர் வேளாண் தொழிலாளர்கள் படுகொலை நிகழ்வை படம் பிடித்துக் காட்டுவதாக அவரின் “மனுசங்கடா” கவிதை இருந்தது. அன்றைய காலக்கட்டத்தில் அந்தப்பாடல் ஒலிக்காத பொதுவுடைமை மேடைகள் இல்லை என்று கூறலாம்.

“மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா — உங்க
இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா – அட
உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா
நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா
உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்
உங்க ஊர்வலத்தில தர்ம அடிய வாங்கிக் கட்டவும் — அட
எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் — நாங்க
இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்
குளப்பாடி கிணத்துத் தண்ணி புள்ளய சுட்டது
தண்ணியும் தீயாய்ச் சுட்டது — இந்த
ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது
சதையும் எலும்பும் நீங்க வச்சத் தீயில் வேகுது — உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது
எதைஎதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க — நாங்க
எரியும்போது எவன் மசுர புடுங்கப் போனீங்க — டேய்
மனுசங்கடா நாங்க மனுசங்கடா
உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள
மனுசங்கடா நாங்க மனுசங்கடா”

Siragu manusangadaa2

அது மட்டுமல்ல ஒடுக்கப்பட்ட மக்கள் எவ்வாறு வஞ்சிக்கப்படுகின்றார்கள் என்பதை ராஜ மகேந்திர சதிர்வேதிமங்கலம் என்ற கவிதைக்கான அறிமுகத்தில் தன் கவிதையில் இன்குலாப் இப்படித்தான் விளக்கியுள்ளார்.

உழைப்பவர் மேனியை உயிரோடு கொளுத்தி
வெந்த சாம்பலைப் பூசிய தெய்வங்கள்
சாம்பல் மேட்டில் சாம்பலாய்க் குவிய…
ராஜமகேந்திர சதுர்வேதி மங்கலம்
யாக குண்டம் போல எரிகிறது.

அடக்குமுறைக்கு எதிராக போராடுபவர்கள் யாராக இருந்தாலும் இன்குலாப்பின் இந்தக் கவிதை வரிகள் அவர்களின் உணர்வுகளை நெருப்பாக்கும் என்பது உண்மை.

சில்லென்று நெருஞ்சிக் காடே!
சிரிக்காதே:
உன் மீது
கால்கள் அல்ல -
களைக் கொத்திகளே இனி நடக்கும்…
எங்களைப்
பிறாண்டிச் சிவந்த உன் நகங்களை நீட்டாதே
ஏனெனில் வெட்டப்படுவது இனிமேல்
நகங்களல்ல
விரல்கள்.

அதே போன்று ஈழத்தின் வலிகளை மட்டுமல்லாது, வீரத்தையும் தன் கவிதை கொண்டு வெளிப்படுத்தியவர் கவிஞர் இன்குலாப் அவர்கள்.

போர்விமானம் எம் தலைக்கு மேலெனில்
புகையும் எங்கள் துப்பாக்கி
போர்க்கப்பல் எம் அலைக்கு மேலெனில்
கடலே எதிரிக்குச் சமாதி -இதை
ஏழுகடல்களும் பாடட்டும்……

என்று உணர்ச்சி போங்க எழுதினார். அதே போன்று கானம் ரத்த கானம் என்னும் பாடல் வரிகளில்,

“வாலை ஆட்டாதே இந்திய அரசே
வரிப்புலி முழக்குவார் விடுதலை முரசே ” என்று தமிழீழ எழுச்சிப் பாடல்கள் எழுதினார்.

Siragu Akilaavin poem3

இன்குலாப் அவர்கள் மிகச் சிறந்த நவீன நாடகாசிரியர். ஆனால் அதற்கான அங்கீகாரம் அவருக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. சங்க இலக்கியத்தையும் ஐம்பெருங்காப்பியங்களையும் மறுவாசிப்புச் செய்து தனக்குள் எழுந்த கேள்விகளை நாடகங்களாக அவர் இயற்றினார். ‘ஒளவை’, குறிஞ்சிப் பாட்டு’, ‘மணிமேகலை’ ஆகிய நாடகங்கள் மிகச் சிறந்த நவீன நாடகங்கள். அவ்வையில் மூன்று அவ்வையார்கள் இருந்திருக்கின்றனர். ஒருவர் அதியமானின் தோழி, இரண்டாமவர் அவ்வை குறள் எழுதியவர், மூன்றாமவர் ஆத்திச்சூடி, மூதுரை எழுதியவர் என்ற கருத்தை தன அவ்வை என்ற நாடகத்தில் மிகத் தெளிவாக இன்குலாப் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

இன்குலாப் என்றால் புரட்சி என்று பொருள். அந்தப் பெயருக்கு ஏற்றார் போல் தன் வாழ்நாளெல்லாம் புரட்சி கவிப்பாக்களை எழுதியவர் இன்குலாப்.

எனது நிறத்திலும், மணத்திலும் நான் பூத்துக்கொண்டிருக்கின்றேன்
இந்த மண்ணின் ஏதோ ஒரு மூலையில் நான் கருகும்வரை பூப்பேன்

என்ற அவரின் வரிகளுக்கு ஏற்றார் போலவே எப்போதும் அவர் கவிதை பூக்கள் மூலம் நம் மனதில் மணம் வீசிக் கொண்டேயிருப்பார்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- ““மனுசங்கடா நாங்க மனுசங்கடா”- கவிஞர் இன்குலாப்”

அதிகம் படித்தது