மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மரக் கறியும் மாமிசமும்

இராமியா

Sep 1, 2018

siragu marakkariyum maamisamum1

மனிதனின் உணவுப் பழக்கம் அவன் வாழும் இடத்தின் தட்ப வெப்ப நிலை, அப்பகுதியில் விளையும் தானியங்கள், காய்கறிகள், வளரும் உயிரினங்கள் மற்றும் பல காரணிகளைக் கொண்டு அமைகிறது. மனிதனின் முதல் தொழிலே வேட்டையாடுதலும் மீன் பிடித்தலும் தான். ஆகவே அவன் இயற்கையில் புலால் உணவு உண்பவனே.

ஆனால் பார்ப்பனர்களும், பார்ப்பனர்களால் மூளை வெளுப்பு செய்யப்பட்டவர்களும் மரக்கறி உணவே மனிதனின் உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது என்று பரப்புரை செய்து கொண்டு இருக்கிறார்கள். காவிகள் மத்தியில் ஆட்சிக்கு வந்த பின் இப்பரப்புரைகள் அர்த்தமே இல்லாத வகையில் சுழன்று சுழன்று வருகின்றன. எந்த ஒரு தர்க்க வழியிலும் இல்லாமல். கீறல் விழுந்த இசைத் தட்டு போலத் திரும்பத் திரும்பப் பரப்புரை செய்யும் பார்ப்பனர்கள் கி.பி. 8ஆம் நூற்றாண்டு வரை புலால் உணவை – அதுவும் மாட்டுக் கறியை – மிகவும் விருப்பமாக உண்டவர்கள் தான்.

பார்ப்பனர்கள் புலால் உணவு உண்டு கொண்டு இருந்ததற்கான சான்றுகள் மனு ஸ்மிருதியிலும், புராண இதிகாசங்களிலும் நிறைவே உண்டு. அதிலும் மாட்டுக் கறி என்றால் அவாளுக்கு மிகவும் பிடிக்கும். வேள்வியின் போது கிடைக்கும் மாட்டுக் கறியைச் சாப்பிட வேண்டும் என்பதற்காகவே பார்ப்பனர்கள் மன்னர்களையும், செல்வந்தர்களையும் வேள்வி செய்யு வேண்டும் என்று அறிவுரை சொல்வர்கள். ஆசை காட்டுவார்கள், வற்புறுத்தவும் செய்வார்கள். இதனால் வேள்விகள் பெருகிய நிலையில் மாடுகளின் எண்ணிக்கை குறைந்து, வேளாண்மைக்குப் போதுமான மாடுகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

புத்தர் பொது வாழ்வில் நுழைய நேரிட்ட போது இந்தச் சூழல் தான் இருந்தது. வேள்விகள் வேளாண்மைக்கு இடையூறாக இருந்ததைக் கண்ட புத்தர் வேள்விகள் செய்வதை எதிர்த்தார். பார்ப்பனர்கள் கடவுளின் பெயரைச் சொல்லி அச்சுறுத்திய பொழுது, புத்தர் கடவுளின் இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கினார். புத்தரின் அறிவுக் கூர்மைக்கு முன்னும், உண்மை நிலைமைகளுக்கு முன்னும் பார்ப்பனர்களின் வறட்டு வாதங்கள் நிற்க முடியவில்லை. உடனே அவர்கள் மன்னர்களை அச்சுறுத்திப் பார்த்தார்கள். ஆனால் வேளாண்மைப் பொருளாதாரம் மன்னர்களுக்குக் கொடுத்த நெருக்கடி, பார்ப்பனர்களைத் தொலைவில் நிறுத்தி விட்டு, புத்தரையே பின்பற்ற வைத்தது. புத்தரின் வழியில் மன்னர்கள் நடந்து வேள்விகளுக்கு முதன்மை கொடுக்காத நிலையில் கால்நடைகளைக் காவு கொடுப்பதும் குறைந்து போயிற்று. மீண்டும் கால்நடைச் செல்வங்களின் எண்ணிக்கை பெருகியது. அவை வேளாண்மைக்கும் உணவுக்கும் தகுந்த விகிதத்தில் பிரிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. பார்ப்பனர்களால் மாட்டுக் கறியிலும், மதுவிலும் ஆசை மிகுந்த, மற்றும் ஏமாந்த அரசர்களையும் செல்வந்தர்களையும் மட்டுமே வேள்வியின் பால் ஈர்க்க முடிந்தது.

இந்நிலையில் 8ஆம் நூற்றாண்டில் சங்கராச்சாரியார் தோன்றினார். பார்ப்பனர்களின் மாட்டுக் கறி ஆசை தான் பார்ப்பன மத வீழ்ச்சிக்குக் காரணம் என்பதை நன்கு விளங்கிக் கொண்டார். மாட்டுக் கறி ஆசையை மட்டும் தவிர்த்தால் பார்ப்பன ஆதிக்கத்தையும், சாதிய ஒடுக்கலையும் புதுப்பித்து, நிலை நிறுத்தி விடலாம் எனக் கண்டு கொண்டார். ஆனால் மாட்டுக் கறியைத் தவிர்த்தலை மட்டுமே கைக்கொண்டால் புத்தரின் வழியை ஏற்றுக் கொண்டது போல் ஆகும். ஆகவே தன்னுடைய சொந்தக் கருத்தாகத் தோன்ற வேண்டும் என்பதற்காக, இனி பார்ப்பனர்கள் புலால் உணவைத் தவிர்க்க வேண்டும் என்ற ஏற்பாட்டை உருவாக்கினார். அதன் பின் புத்தர் ஏற்படுத்தி இருந்த, மன்னர்களின் உல்லாச வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருந்த பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தி மன்னர்களின் சுகபோக வாழ்க்கைக்கு வழியைச் செப்பனிட்டுக் கொடுத்தார். அதன் மூலம் மன்னர்களின் பெரும் ஆதரவைப் பெற்றார். அந்த ஆதரவின் மூலம் புத்த மதத்தையும் சமண மதத்தையும் அழித்து ஒழித்து மீண்டும் வர்ணாசிரம அதர்மத்தை நிலை நாட்டினார்.

இந்த வகையில் புலால் உணவைக் கைவிட்ட பார்ப்பனர்கள், புலால் உணவை உண்பது பண்பாட்டிற்குப் புறம்பான செயல் என்று பரப்புரை செய்யத் தொடங்கினார்கள். காலப் போக்கில் அறிவியல் பெரும் பாய்ச்சலில் வளர்ந்தது. எந்தெந்த உணவில் என்னென்ன சத்துகள் உள்ளன; என்னென்ன அளவில் எவ்வெவற்றை உண்டால் உடல் நலம் நன்றாக இருக்கும் என்றெல்லாம் அறிவியல் தெளிவாகக் கற்பித்தது. அதில் புலால் உணவு கூடாது என்று கற்பிக்கப்படவே இல்லை. சொல்லப் போனால் சில நோய்களுக்குப் புலால் உணவே சிறந்த மருந்தாக இருப்பதையும் அறிவியல் வெளிச்சம் போட்டுக் காட்டியது. எடுத்துக்காட்டாக இரத்த சோகைக்குக் கல்லீரல் அருமருந்தாக இருப்பதை மருத்துவர்களும், உணவியல் நிபுணர்களும் (Dietitians) எடுத்துரைத்தனர்.

மக்கள் அறிவியலின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதன் வழியில் பின் பற்றத் தொடங்கிய பின் பார்ப்பனர்கள் தாங்கள் எதைச் சொல்ல விரும்புகிறார்களோ அதை அறிவியல் சொல்வதாகப் புரளி கிளப்புவதைத் தங்கள் வழக்கமாகக் கொண்டார்கள். அந்த வழியில் புலால் உணவு சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பை இழந்து அறிவுத் திறன் குறைகிறது என்று அறிவியல் கூறுவதாக ஒரு புரளியைக் கிளப்பினார்கள். இன்றும் அதையே செய்து கொண்டும் இருக்கிறார்கள். இதன் மூலம் தாங்கள் அயோக்கியத்தனமாகப் பறித்து வைத்துக் கொண்டு இருக்கும் உயர் நிலை வேலைகள் யாவும் புலாலை மறுப்பதால் விளைந்துள்ள அறிவுத் திறனால் அடைந்தவை என்று நம்ப வைக்க முயல்சிறார்கள். மேலும் புலால் உண்பதால் தீய குணங்களும் முரட்டுத்தனமும் வளர்கின்றன என்று இன்னொரு புரளியைக் கிளப்புகிறார்கள். இன்றும் கிளப்பிக் கொண்டும் இருக்கிறார்கள். இதன் மூலம் தாங்கள் “தர்ம சீலர்கள்” என்றும் உழைக்கும் மக்கள் தீயவர்கள், முரடர்கள் என்றும் மக்களை நம்ப வைக்க முயல்கிறார்கள். அறிவியல் ஆய்வுகள் அப்படிச் சொல்வதாக முகநூலிலும் (facebook), புலனத்திலும் (whatsapp) பதிவுகள் செய்து அவாள் செய்யும் அட்டகாசங்கள் அளவுக்கு மீறியே உள்ளன. அதுவும் காவிகள் மத்திய அரசைக் கைப்பற்றிய பின் இந்த அட்டகாசங்கள் தாங்க முடியாத அளவில் வளர்ந்து கொண்டே உள்ளன.

உண்மையான அறிவியல் அறிவு கொண்டவர்கள் இதற்கு எதிரான செய்திகளைப் பதிவு செய்யத் தான் செய்கிறார்கள். புலால் உணவு அறிவுத் திறனைக் குறைக்கிறது என்றால் உலகில் உள்ள அறிவியல் அறிஞர்கள் கிட்டத்தட்ட அனைவருமே புலால் உணவு உண்பவர்கள் தான் என்பதைச் சுட்டிக் காட்டி அவாளுடைய கருத்தை மறுக்கின்றனர். மேலும் புலால் உணவு தீய, முரட்டுக் குணத்தை வளர்க்கிறது என்றும், மரக் கறி உணவு நல்ல குணத்தை வளர்க்கிறது என்றும் அவாள் கிளப்பி விடும புரளிக்கு இராமகிருஷ்ண பரம ஹம்சர், விவேகானந்தர் ஆகியோரையும், ஹிட்லரையும் சுட்டிக் காட்டுகின்றனர். பொதுவாக மக்களாலும், குறிப்பாகப் பார்ப்பனர்களாலும் சாதுக்கள் என்றும் மகான்கள் என்றும் போற்றப்படும் இராமகிருஷ்ணரும், விவேகானந்தரும் புலால் உணவு உண்டவர்கள். உலக மக்களை வாட்டி வதைத்த ஹிட்லரின் உணவு புலாலை முற்றிலும் நீக்கிய மரக் கறி உணவு மட்டுமே. இச்செய்திகளை அவாளின் புரளிக்கு எதிர்வினையாகப் பதிவிட்டால், அந்தப் பதிவை அப்படியே விட்டு விட்டு (சில சமயங்களில் அதை நீக்கவும் செய்து விடுகின்றனர்), அதே புரளியைப் புதிதாக மீண்டும் பதிவிடுகின்றனர். இது போன்ற புரளிகளைக் கிளப்பி விடுவதற்கு என்றே பல குழுக்களை அவாள் உருவாக்கி வைத்து உள்ளனர். அது மட்டும் அல்ல; அவாளில் உள்ள மருத்துவர்களும், உணவியல் நிபுணர்களும் துணிந்து இப்புரளியைப் பரப்புகிறார்கள் மருத்துவர்களும் உணவியல் நிபுணர்களும் கூறுகையில் அவர்களுக்கு எதிராக வாதம் செய்வது எப்படி? சில விரம் தெரிந்தவர்கள் எதிர் வினா எழுப்பினால் இந்த “மருத்துவர்களும்”, “உணவியல் நிபுணர்களும்” மவுனமாகி விடுகிறார்கள்.

இதில் அவாளுடைய நோக்கம் மக்களிடையே புலால் உணவுப் பழக்கத்தை நிறுத்துவதோ, மரக்கறி உணவுப் பழக்கததை வளர்ப்பதோ அல்ல. மரக்கறி உணவைச் சாப்பிடும் பார்ப்பனர்கள் நல்லவர்கள், அறிவாளிகள். புலால் உணவைச் சாப்பிடும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் முரடர்கள், அறிவுத் திறன் குறைந்தவர்கள் என்ற கருத்தியலை விதைத்து ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களை மனத்தளவில் ஒடுக்கி வைத்து, பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக அணி திரளாமல் தடுப்பது தான் அவாளுடைய உண்மையான நோக்கம்.

ஆகவே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே! பார்ப்பனர்களின் மன ரீதியிலான தாக்குதலுக்குப் பலியாகி விடாதீர்கள். வரலாறு முழுக்க அவாளின் ஒடுக்குமுறைகளும், திறமைக் குறைவும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் மனித நேயமும், அறிவுக் கூர்மையுமே பதிவாகி உள்ளன. ஆகவே அவாளின் மன ரீதியிலான தாக்குதலைத் துணிச்சலுடன் எதிர் கொள்ளுங்கள். அவாள் கிளப்பி விடும் புரளிக்கு நேரடியான எதிர்வினை புரியுங்கள்.

இராமியா.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மரக் கறியும் மாமிசமும்”

அதிகம் படித்தது