நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

மரத்தை நோக்கி விரைந்த முகிலன் (சிறுகதை)

முனைவர் ஆ.சந்திரன்

Dec 29, 2018

Siragu tree1

தீக்குச்சியும் பட்டாசும் புணர்ந்ததன் விளைவாய் பிறந்த வெடிச்சசத்தத்துடன் உடன்பிறந்த நாற்றமும் காற்றில் தவழ்ந்தன. மறுபுறம் வானவேடிக்கைகள் வின்னை அதிரச்செய்து கொண்டிருந்தன. மங்கலமாய்த் தொடங்கியது மணமக்கள் ஊர்வலம். வரவேற்பில் கலந்துகொள்ள வந்திருந்த சுற்றத்தினர் சாலையை ஆக்கிரமித்து இருந்தனர்.

திருமணமண்டபம் பிரதான சாலையை ஒட்டியிருந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மணமக்கள் மண்டபத்தில் நுழைந்த பின்னரும் சாலையில் சலசலப்பு அடங்க சற்று நேரமானது.

தாம்புலம் முடிந்தபின்னர் வெள்ளைவேட்டி வெள்ளைச் சட்டை அணிந்த கூட்டத்தில் ஒரே சலசலப்பு. காரணம் இதுதான் மண்டபத்தின் அருகில் இருப்பது புளிய மரமா? ஆலமரமா?  தொடங்கியது விவாதம். தொடக்கி வைத்தவர் யார் என்பதை மறந்தனரா? அல்லது யார் என்பதை யாரும் அறியவில்லையா? என்பன கேள்விகளாய் மிஞ்சி இருந்தன கூட்டத்தில் சிலரிடம்.

மணமக்களின் மகிழ்ச்சியைப் பறித்துக்கொண்டோடியது விருந்துக்கு வந்த உறவினர் கூட்டம்.

ஒரு வழியாய் வழிதேடி அலைந்துதிரிந்து மண்டபத்தைக் கண்டுபிடித்த முகிலன் மகிழ்ச்சியை விழுங்கியது மண்டபத்தின் அமைதி. கலவரம் தொற்றிய முகத்துடன் மண்டபத்தை நோக்கி விரைந்தான்.

யாருமின்றி வெறிச்சோடிக்கிடப்பதன் காரணம் அறியும் ஆவலைக் காட்டிலும் ஒரு வேளை மண்டபம் மாறி வந்துவிட்டோமா என்ற ஐயமே அவனை அலைக்கழித்தது.

தன்னுடைய செல்போனிலிருந்த கல்யாணப் பத்திரிக்கையைத் தேடி முகவரியை சரி பார்த்தான்.

“மலர்சோலை சங்கம் திருமண மகால்” என்று தாய் மொழியிலும் ஆங்கிலத்திலும்  இருந்தது. அத்துடன் முகவரியும் சரியாக இருப்பதை உறுதி செய்து கொண்டான்.

ஆழ்ந்த யோசனையுடன் மண்டபத்தை அடைந்தான். மண்டபத்தின் பிரதான கேட்டில் பெரிய பூட்டுத் தொங்கிக் கொண்டிருந்தது. உள்ளே யாரும் இருப்பதாய்த் தெரியவில்லை.

என்ன செய்வதென்று தெரியாமல் மண்டபத்தின் வாயிலுக்கு அருகில் இருந்த ஒரு கருங்கல் மீது  அமர்ந்தான்.  நீண்ட பயணத்தின் அசதி மற்றும் உறக்கமின்மை இரண்டும் அவனை மிகவும் சோர்வடையச் செய்தன.

தொலைவில் சேவல் கூவும் சத்தம் கேட்பதாய் அவனுக்குத் தோன்றியது. அது உண்மைதானா என்று தன் காதுகளை கூர்மையாக்கி மீண்டும் கேட்க தயாரான போது “யாரு நீங்க” என்ற ஒலி அவனை நோக்கி விரைந்தது.

வாடிய முகத்தை நிமிர்த்திய முகிலன் எதிரே நின்ற அக்குரலினை உதிர்த்த நபரைப் பார்த்தான். நரைத்த முடி, தளர்ந்த தேகம், கையில் சிறு மூங்கில் கழி, காக்கிச் சட்டை என நீண்ட அடையாங்கள் அவர் மண்டபத்தின் செக்கியூரிட்டி என்பதை அவனுக்கு உணர்த்தின.

“நண்பர் கல்யாணத்துக்கு வந்தேங்க” என்றான் அவரைப் பார்த்து முகிலன்.

தம்பி! கல்யாணம் நின்னு போச்சி. எல்லாரும் மூட்ட முடிச்செல்லம் கட்டிட்டு போய்ட்டாங்க – இது செக்கியூரிட்டி அவனிடம் கூறிய பாதில்.

“ஏன்? என்னாச்சி, ஏதாவது பெரிய பிரச்சனையா?“   ஆச்சரியத்துடன் கேட்டான் முகிலன்.

“சரியாத் தெரியலப்பா? ஆனா …..” என்று ஏதோ சொல்ல வந்தவர் சொல்லத் தயங்கினார்.

“சொல்லுங்க சார். என்ன பிரச்சனை? நான் ரொம்ப தூரத்துல இருந்து வரேன் … ” என்று நீண்ட முகிலனின் கேள்விகளுக்குத் தயங்கிவாரே சற்றுத் தொலைவில் பேய்போல் காட்சித் தரும் இருள் தழுவிய மரத்தைச் சுட்டிக்காட்டி “அதுதான் காரணம்” என்றவர், கேட்டைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார். அவருடைய முகம் வெளிப்படுத்திய விரக்தி, அவரைப் பின்தொடர விடாமல் முகிலனைத் தடுத்து நிறுத்தியது.

“திருமணத்திற்கு மாப்பிள்ளை ரெடி. பொண்ணும் ரெடி. ரெண்டு வீட்டுக்காருங்களும் அவர்களின் விருப்பங்களை ஏத்துக்கிட்டாங்க. அப்புறம் என்ன? போயும் போயும் ஒரு மரம் எப்படி அவங்க திருமணத்த நடக்கவிடாம தடுத்துச்சி” என்ற நீண்ட யோசனைகளுடன் பிரதான சாலையை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

அடர்இருள் உருக ஆரம்பித்தது. ஆழ்கடலில் மூச்சடக்கிய கதிரவனின் கரங்கள் அலைகளைக் கிழித்துக்கொண்டு பூமித்தாயின் குழந்தைகளை அரவணிக்க முயன்றுகொண்டிருந்தன.

சற்றுத் தொலைவில் தெரிந்த லாந்தர் விளக்கொளியை நோக்கி நடந்தான்.

“அண்ணே! ஒரு பால்” என்றவன், கடையில் தொங்கியிருந்த நாளிதழின் விளம்பரத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். அதிலிருந்த சில வாக்கியம் அவனுடைய கண்களை விரியச் செய்தன.

“இந்தாப்பா” என்ற கடைக்காரின் குரல் “டப்“ என்ற கண்ணாடி கிளாசின் ஒலியும் காதில் விழ நிமிர்ந்தான்.

வழக்கமாய் ரசித்துக் குடிப்பது போலன்றி வேண்டாதவர் வீட்டில் சாப்பிடுவது போல் வேகமாக குடித்து முடித்தான்.

செக்கியூரிட்டி சொன்ன மரம் நினைவுக்கு வர அம்மரத்தை நோக்கிச் நடக்க ஆரம்பித்தான்.

மரத்தை நெருங்கியவனுக்கு அதிர்ச்சி காற்றில் தவழ்ந்துகொண்டிருந்தது மரக்கிளைகளின் வடிவங்களில்.

சூரியனின் அதிகாரம் வரம்புமீறிப் போவதை புற்களில் பதுங்கியிருந்த நீர்த்துளிகளின் தற்கொலைகள் பூமித்தாய்க்கு உணர்த்திக் கொண்டிருந்தன.

கிளைகளை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தவன் ஸ்… ஸ்… என்று இரண்டு மூன்றடி காலை உதரிக்கொண்டே வலிஏற்படுத்திய இடங்களில் சதையைப் பற்றியிருந்த எறும்புகளைக் கையால் விளக்கிக் கொண்டே மரத்தடியை நெருங்கினான்.

அவனுடைய தலையில்  “டப்னு“ விழுந்த ஒன்றைப் புற்களுக்கிடையே தேடியெடுத்தான்.

வேம்பின் பழம். நன்றாகக் கனிந்திருந்தது.

கனி விழுந்த இடத்திற்கு மேலே தலையை நிமிர்த்திப் பார்த்தான். பிரதான கிளையிலிருந்து பிரிந்த இருகிளைகளில் ஒன்றில் ஆலம் இலைகளும் மற்றொன்றில் புளிய இலைகளும் பசுமையாகத் தழைத்திருந்தன. அவற்றை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.

பறவைகள், விலங்குகள் மற்றும் காற்றின் மூலமாக உருவாகும் ஒட்டுண்ணித் தாவரங்கள் பற்றிய பாலபாடம் பாடங்கள்  அவன் நினைவில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தன.

அவற்றை அசைப்போட்டவாறே அமர்ந்திருந்தவனின் முதுகைத் தாங்கியவாறு பின்னால் ஊன்றியிருந்த வலது கையை வெடுக்கென எடுத்தான். ஏதோ ஒரு பூச்சி விரல்களுக்கிடையில் வேகமாய் ஓட முயன்றது.

எறும்பின் தோற்றத்தில் ஆனால் எறும்புகள் இல்லை. மரத்தின் வேரிலிருந்து மண்ணை உருட்டிக்கொண்டு வருவதும் போவதுமாய் இருந்தன. அவற்றில் ஒன்று தான் இப்போது அவன்  உள்ளங்கையில் இருந்தது.

மிக நெருக்கத்தில் கொண்டு வந்து அதன் அழகை ரசிக்க நினைத்தான். அப்போது அது தன்னுடைய இரு முன்னங்கால்களை அந்தரத்தில் உயர்த்தியது. பூச்சுகளின் வழக்கத்திற்கு மாறான அந்த செய்கை அவனை மிகவும் வசியப்படுத்தியது. குழந்தைகளுடன் கொஞ்சுவது போல் அதனுடன் கொஞ்ச அவனது பால்ய நினைவு உந்தியது.

“ஹாய்! உன்பேரென்ன? எங்கிருந்து வர? இவங்க எல்லாம் யாரு? நீங்கெல்லாம் என்ன பன்றீங்க?”  என்ற அவனுடைய வினாக்களின் நீட்சி முடியும்முன் அதிர்ந்து போனான் முகிலன்.

“என் பேரு உளையன்” என்ற அதன் பதிலைச் சற்றும் எதிர்பராததனால்.

“நான் இந்த மரத்தின் ஆணிவேரில் இருந்து வருகிறேன். இவர்கள் எம் தோழர்கள். இம்மரத்தின் ஆணிவேருக்கு ஊட்டமளிக்கும் சல்லிவேருக்கு அடிக்கடி மூச்சு முட்டுகிறது. அதனால்தான் அவற்றிற்கு காற்று சென்று திரும்பும் விதமாக வழி ஏற்பாடுசெய்கிறோம்” என்ற அதன் பதில் அவனை ஆழ்ந்த யோசனையில் அமுக்கியது.

இயல்பு நிலைக்கு திரும்ப பத்து பதினைந்து நிமிடங்கள் ஆயின.

அதற்குள் அசுர வேகத்தில் இருப்பிடம் சேர்ந்திருந்த அவற்றின் நெறி அவனை மெய்சிலிர்க்க வைத்தது.

தலையில் விழுந்து பரவிய தூசை தட்டியவாறு மேலே பார்த்தான். மரமுழுவதும் மஞ்சள் நிற மலர்கள் நிறைந்திருந்தன.

அதன் அழகை சிறிது நேரம் தன்னை மரந்து ரசித்தான்.

“புலி உறுமுது புலி உறுமுது” பாடல் வரிகள் அவன் காதுகளைத் தஞ்சமடைந்தன.

ஒலிவந்த திசையை நோக்கித் திரும்பினான்

“கிளைகற்ற காய்ந்த மரத்தின்மேல் பசலை படரத் துவங்கின.  அந்த மரத்தின் நிழலில் “மணமக்கள்  தம் பெற்றோர் கால்களில் வீழ்ந்து வணங்கிக்கொண்டிருந்தனர்”.

அந்த இடத்தை நோக்கி அவனுடைய கால்கள் விரைந்தன.


முனைவர் ஆ.சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மரத்தை நோக்கி விரைந்த முகிலன் (சிறுகதை)”

அதிகம் படித்தது