சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மரபணு சிகிச்சை மூலம் பார்வைக் குறைபாட்டிற்குத் தீர்வு

தேமொழி

Jun 25, 2016

Siragu genetic4பல பிறவிக் குறைபாடுகளைத் தீர்க்க மரபணு சிகிச்சையில் வழியுள்ளது என்ற நம்பிக்கை அறிவியல் ஆய்வாளர்களுக்கு உண்டு. மரபணு சிகிச்சை முறையில் தீங்களிக்காத வகையைச் சேர்ந்த நுண்ணுயிர்களான வைரஸ்கள் மரபணுவைக் கடத்தும் ஒரு கடத்தியாக (viral vector) பயன்படுத்தப்படும். வைரஸ்களின் வழியே, ஆரோக்கியமான குறைபாடற்ற மரபணுக்களோ அல்லது குறைபாடு கொண்ட பகுதி சீர் செய்யப்பட்ட மரபணுக்களோ உட்செலுத்தப்படுவதே மரபணு சிகிச்சையின் வழிமுறை. வைரஸ்களில் உள்ள அவற்றின் மரபணுக்கள் நீக்கப்படும், பின்னர் ஆய்வகத்தில் சீரமைக்கப்பட்ட மரபணுக்களோ, அல்லது ஆரோக்கியமான மரபணுக்களோ வைரஸ்களில் செலுத்தப்படும். பிறகு இந்த வைரஸ்கள் நோயாளிகளின் பாதிக்கப்பட்ட உறுப்புகளில் அறுவை சிகிச்சை மூலம் உட்செலுத்தப்படும். இதுநாள் வரை பல மரபணு சிகிச்சைகள் பரிசோதனை அடிப்படையிலேயே பெரும்பாலும் அளிக்கப்பட்டு வருகின்றன.

பரிசோதனை முறையில், இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் குழுவினர் நடத்திய மரபணு சிகிச்சை ஒன்று, மரபணு சிகிச்சையின் மூலம் பிறவிக் குறைபாடுகளுக்கு எதிர்காலத்தில் நல்ல முறையில் நிரந்தரத் தீர்வு கிடைக்க வழியுள்ளது என்ற நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஆய்வுமுறை சிகிச்சைமுறையின் முடிவுகள் “நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசன்” (New England Journal of Medicine) என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

Siragu genetic1

நான்காண்டுகளுக்கு முன்னர் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ‘ஜான் ரெட்கிலிஃப் மருத்துவமனையில்’ (University of Oxford’s John Radcliffe Hospital), ‘பேராசிரியர் ராபர்ட் மெக்லாரென்’ (Professor Robert MacLaren) என்பவர் தலைமையில் இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பிறவிக் குறைபாட்டால் வாழ்வின் மையப்பகுதியில் சிறிது சிறிதாகப் பார்வையை இழந்து, பாதிக்கப்பட்டவர்களைப் பார்வையற்றவர்களாகவே மாற்றிவிடும் இக்குறைபாட்டினை நிறுத்த அல்லது அதனைத் தாமதப்படுத்தும் நோக்கில் மரபணு சிகிச்சை ஆறு பேருக்கு வழங்கப்பட்டது. மீண்டும் அவர்கள் பார்வையைப் பரிசோதித்ததில் அவர்களுக்குப் பார்வை மீட்கப்பட்டிருப்பதும் சிகிச்சை முறை நிரந்தரமாகப் பலன் அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

சிகிச்சை அளிக்கப்பட்டவர்களின் பிறவிக் குறைபாடான ‘கோராய்ட்டெர்மியா’ (choroideremia) என்ற பார்வைக்குறைபாடு ஒரே ஒரு மரபணுவில் காணப்படும் கோளாறால் ஏற்படுவது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணின் ஒளியுணரும் செல்கள் சிறிது சிறிதாக அழிந்து பார்வைக் குறைபாடு ஏற்படும். இதுநாள் வரை இந்தக் குறைபாட்டிற்கு எந்தவகைச் சிகிச்சையும் இல்லாதிருந்தது. அதனால் ஒளியுணரும் செல்கள் அழியத்துவங்குவதை நிறுத்த வழியின்றி, சிறிது சிறிதாக பார்வை குறைந்து, 40 வயதை நெருங்கும் பொழுது பார்வையை நிரந்தரமாக இழக்கும் நிலை இவர்களுக்கு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இவர்களுக்கு அளிக்கப்பட்ட மரபணுச் சிகிச்சைமுறையில் கோடிக்கணக்கான ஆரோக்கியமான பார்வைக் குறைபாடற்ற மரபணுக்கள் வைரஸ்களில் பொருத்தப்பட்டு, அறுவை சிகிச்சையின் மூலம் இவர்களது கண்ணின் பாதிப்படைந்த விழித்திரை பகுதியில் உட்செலுத்தப்பட்டது.

Siragu genetic2நான்காண்டுகளுக்குப் பிறகு செய்த சோதனையில், இவர்களது சிலரின் பார்வை மீட்கப்பட்டுள்ளதும், சிலருக்கு ஒளியுணரும் செல்களில் ஏற்படும் அழிவு தடுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. சிகிச்சை பெற்றவர்களில் ஒருவருக்கு இரவில் வானில் தெரியும் விண்மீன்களை முதன்முறையாகப் பார்த்தபொழுது மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டதும், மற்றவரால் கைப்பேசியில் உள்ள எண்களைப் படிக்க இயன்றதும் குறிப்பிடத்தக்கது. சிகிச்சை பெற்றவர்களின், சிகிச்சை அளிக்கப்படாத மற்றொரு கண்ணின் நிலையுடன் ஒப்பிட்ட பொழுதும், குறைந்த அளவு மரபணு செலுத்தப்பட்ட மற்றொருவருடைய பார்வையுடன் ஒப்பிட்ட பொழுதும் அவை பாதிக்கப்பட்டே இருந்ததில் இருந்து, சிகிச்சை பலனளித்து மரபணு சிகிச்சை ஒளியுணரும் செல்களின் மறுமலர்ச்சிக்கு உதவியது தெளிவானது.

Siragu genetic3இந்த ஆய்வின் முடிவால், ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக்களால் ஏற்படும், இளைஞர்களை பாதிக்கும் ‘ரெட்டினிட்டிஸ் பிக்மெண்ட்டோசா’ என்றவகை பார்வைக் குறைபாடும், முதியவர்களை பாதிக்கும் ‘மாக்குலார் டிஜெனெரேஷன்’ (retinitis pigmentosa and macular degeneration) என்ற மற்றொரு வகைப் பார்வைக் குறைபாடு உள்ளோருக்கும், தொடர்ந்து வரும் ஐந்திலிருந்து பத்தாண்டுகளுக்குள் பார்வையை மீட்க வழியேற்படும் என்று மருத்துவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நோய்கள் துவங்கும் பொழுதே மரபணு சிகிச்சையை அளித்தால் நோயைத் தடுத்துவிடும் வாய்ப்பு இருப்பதாக இந்தச் சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் கருதுகிறார்கள். பார்வைக் குறைபாட்டிற்கு அளிக்கப்படும் இந்தச் சிகிச்சை முறை மருத்துவத்தில் ஒரு திருப்புமுனையாகவும் கருதப்படுகிறது. பொதுவான சிகிச்சைமுறைகளில் பலமுறை சிகிச்சை அளித்து ஒரு நோயைத் தீர்க்கும் முறையே வழக்கத்தில் உள்ளது. ஆனால் ஒரே சுற்றில் தீர்வைக் கொடுப்பது இந்த மரபணு சிகிச்சை முறையின் ஒரு சிறப்பு.

Reference:

Thomas L. Edwards, Jasleen K. Jolly, Markus Groppe, Alun R. Barnard, Charles L. Cottriall, Tanya Tolmachova, Graeme C. Black, Andrew R. Webster, Andrew J. Lotery, Graham E. Holder, Kanmin Xue, Susan M. Downes, Matthew P. Simunovic, Miguel C. Seabra, Robert E. MacLaren. Visual Acuity after Retinal Gene Therapy for Choroideremia. New England Journal of Medicine, 2016; DOI: 10.1056/NEJMc1509501

http://www.nejm.org/doi/10.1056/NEJMc1509501

Oxford University research into gene therapy reverses blindness in patients, The Oxford Times – ‎Apr 29, 2016‎

http://www.oxfordtimes.co.uk/NEWS/14459937.Blindness_reversed_by_pioneering_new_gene_therapy/

University of Oxford. (2016, April 28). Gene therapy shows long-term benefit for treating rare blindness. Science Daily. Retrieved May 1, 2016 from www.sciencedaily.com/releases/2016/04/160428152312.htm

Photo credit: University of Oxford. Diagram illustrating how the virus is injected under the retina in operations taking place at the John Radcliffe Hospital, Oxford.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மரபணு சிகிச்சை மூலம் பார்வைக் குறைபாட்டிற்குத் தீர்வு”

அதிகம் படித்தது