மார்ச் 6, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

மரபுக் கவிதைகளில் தொன்மங்களின் தாக்கம்

முனைவர் மு.பழனியப்பன்

Jan 6, 2018

Siragu kavikkuyil
தமிழ் இலக்கிய வடிவங்களி்ல், நெடுங்கால வரலாற்றையும், நீண்ட நெடிய பாரம்பரியத்தையும், பரந்து விரிந்த களங்களையும், அளவில் பெருமையையும் கொண்ட கவிதை வடிவம் மரபுக்கவிதை வடிவம் ஆகும். புதுக்கவிதையின் எழுச்சியினால் மரபுக்கவிதை எழுதுவது தற்கால எல்லையில் குறைவுபட்டிருப்பினும் முற்றிலும் அழிந்துவிடாமல் இவ்வடிவம் மரபுக்கவிஞர்களால் காக்கப் பெற்று வரப்பெறுகிறது. பழைய மரபிலக்கியம், மரபிலக்கணம் ஆகியவற்றின்மீது படைப்பாளர்கள், வாசகர்கள் கொண்டிருக்கும் மதிப்பு, பற்று, உயர்ச்சித்தன்மை ஆகியவற்றின் காரணமாக மரபுக்கவிதை வடிவம் தன் இருப்பைத் தக்கவைத்தே தற்காலத்தில் வளர்ந்து வருகிறது.

ஆசிரியப்பா, வெண்பா என்ற மரபுக்கவிதை வடிவங்கள் முறையே சங்கப் பழமைக்கும், நீதிநூல் பழமைக்கும் உரியன. திருத்தக்கதேவர், கம்பர் போன்றோரால் விருத்தப்பா விளக்கம் பெற்றது. பதிகம் பாடும் சிறப்பு பக்தி இலக்கியத்திற்கு வாய்த்தது. அருணகிரிநாதரால் சந்தம், வண்ணம் ஆகியன மதிப்பு பெற்றன. தாயுமானரால் கண்ணி என்னும் மரபு வளம் பெற்றது, சித்திரக்கவிகளும் மரபுக்கவிதைகளின் கட்டமைப்பு வளர்ச்சியாக அமைந்தன. தொடர்ந்து கலிவெண்பா, கட்டளை கலித்துறை ஆகியன சிற்றிலக்கிய காலத்தில் மரபுக்கவிதை வகைமைக்கு பலமூட்டின. பாரதி, பாரதிதாசன், முடியரசன், வாணிதாசன், சுரதா, நாமக்கல் கவிஞர், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் போன்றோரின் கவிதைகள் தற்கால இலக்கிய நிலையில் மரபுக்கவிதைகளுக்கு நிலைத்த இடத்தை ஏற்படுத்தித் தந்தன. இவர்களைத் தொடர்ந்து தற்காலத்தில் வாழும் பல கவிஞர்கள் மரபுசார் கவிதைகளைப் படைத்து இவ்வடிவை மங்காமல் காத்து வருகின்றனர். அமுதபாரதி, அரங்க. சீனிவாசன், அரசி, அரசு மணிமேகலை, கே.சி.எஸ். அருணாசலம், ஆற்றலரசு, ஏர்வாடி இராதா கிருஷ்ணன், இராய. சொக்கலிங்கம், இளந்தேவன், உடுமலை நாராயணகவி, கண்ணதாசன், குழ.கதிரேசன், கம்பதாசன், கருமலைத்தமிழாழன், கலைவாணன், காமராசன், கு.ச.கிருஷ்ணமூர்த்தி, மனசை கீரன், குருவிக்கரம்பை சண்முகம், குலேத்துங்கன், கொத்தமங்கலம் சுப்பு, வரத. கோவிந்தராசன், கோவேந்தன், சக்திக்கனல், சவகர்லால், சிற்பி, பெரி.சிவனடியான், அ.சீனிவாசராகவன், சுத்தானந்த பாரதியார், எஸ்.டி. சுந்தரம், சொ.சொ.மீ.சுந்தரம், ச.து. சுப்பிரமணிய யோகியார், புத்தனேரி சுப்பிரமணியம், சுப்பு ஆறுமுகம், சுரதா, செங்குட்டுவன், செய்குதம்பிப் பாவலர், செல்லகணபதி, பொன் .செல்வகணபதி, வா.மு. சேதுராமன், அரு. சோமசுந்தரன், மீ.ப. சோமசுந்தரம், சௌந்தரா கைலாசம், ஞானக் கூத்தன், ஞானச் செல்வன், தமிழன்பன், தமிழன்பன் முத்துச்சாமி, தமிழ்ஒளி, தமிழ்நாடன், தாராபாரதி, திருச்சி பரதன், திருச்சிற்றம்பலக்கவியராயர், தெசினி, தேசிகவிநாயகம் பிள்ளை, தேனீரா பாண்டியன், நாரா. நாச்சியப்பன், நெல்லை ஆ. கணபதி, ம.வே. பசுபதி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், பல்லவன், சாமி.பழனியப்பன், பாரதிதாசன், கு.மா. பாலசுப்பிரமணியன், மரு.பரமகுரு, போன்ற பலரையும் மரபுக்கவிஞர்களாக இனம் காண முடிகின்றது.

மரபுக்கவிதைகள் வடிவால் மட்டும் மரபு சார்ந்தன அல்ல. மரபுக்கவிதைகளின் பாடுபொருள்களும் மரபு சார்ந்து அமைந்திருக்கும். அவற்றில் சுட்டப்படும் எண்ணங்கள், எழுச்சிகள், வளர்ச்சிகள் அனைத்தும் மரபு சார்ந்தே கட்டமைக்கப்பெற்றிருக்கும். மரபுக்கவிதை வார்த்த பாத்தி்ரங்களும் மரபு சார்ந்தனவாகவே அமைந்திருக்கும். எதிர்பாத்திரங்களிலும் மரபு சார் தன்மைகள் பொதிந்து இருக்கும். இவ்வகையில் மரபுக்கவிதைகள் தனித்த உருவ உள்ளடக்க அமைதி பெற்றனவாக விளங்குகின்றன.

சிலப்பதிகாரத்தை, மணிமேகலையை, திருக்குறளை, தேவாரத்தைப் படிப்பவர்கள் அவற்றின் பாடுபொருளை மரபு சார்ந்த வடிவில் காண்கிறார்கள். கற்கிறார்கள். அதனையே உயர்வானது, கட்டமைப்புடையது என்ற உறுதியைப் பெறுகிறார்கள். அதிக பரப்பளவு கொண்ட மரபுக்கவிதை இவ்வகையில் எழுதுவோரைத் தாண்டிப் படிப்போரிடத்திலும் தன் உருவ ஆளுமையைச் செய்து கொண்டுள்ளது.

மரபு என்பது தொன்று தொட்டு செயல்பட்டு வரும் நடைமுறை. அம்மரபின் மூலம் தொல்மரபு எனப்படுகிறது. இந்தத் தொல்மரபு, ஒரு அடிக்கருத்தைக் கொண்டு, திரும்பத் திரும்ப படைப்புகளில் இடம்பெறச் செய்தல், படைப்பாளர் மனதில் உறைதல் என்ற அடிப்படையில் மீண்டும் மீண்டும் எழும் நிலையைப் பெறுகிறது. இந்த தொல்மரபு அடிக்கருத்தினை அடிப்படையாகக் கொண்டு படைப்பாளர்தம் அடிக்கருத்துகளை எளிதில் கண்டு கொள்ள முடியும். இம்மூல வடிவத்தைக் கண்டறியும் மரபே தொன்மவியல் ஆய்வாகின்றது.

தொன்மம்:

தொன்மம் என்பதை முந்தைய பழமையான அடிக்கருத்து என்று விளங்கிக்கொள்ளலாம். இதனை ‘‘உலகத்தின் தோற்றம் பற்றியகதை, மனிதன் எவ்வாறு படைக்கப்பட்டான் என்பது பற்றிய கதை. காதல் கதை, வௌ்ளம், பஞ்சம் பற்றிய கதை, காடு, கடல் பற்றிய கதை. சாவைப் பற்றிய கதை. மாபெரும் வீரர்களின் கதை. பெரும் போர்கள் பற்றிய கதை. ஐம்பெரும் பூதங்கள் பற்றிய கதை, என்று உலக நாகரீகம் அனைத்திலும் தோன்றியுள்ள கதைகளைத் தூய தொன்மங்கள் அல்லது ஆதிகாலத் தொன்மங்கள் என அழைக்கின்றனர்‘‘ என்று தொன்மத்திற்கான விளக்கம் சுட்டப்பெறுகிறது,

‘‘தொன்மமவாது பழங்குடி மக்களின் அனுபவமாகக் கடவுளர்களின் செயல்களைக் கூறுவது. அது உண்மையானது. ஏனென்றால் யதார்த்தத்தைப் பற்றியது. புனிதமானது. ஏனென்றால் ஆதிமனிதனின் ஆற்றலைப் பேசுவது‘‘ என்று விளக்கம் தருகிறார் மிர்சியா எலைடு.

இக்கருத்துகளின் வழியாக பழைய ஆனால் அதிகம் எடுத்தாளப்பெறுகிற கதை தொன்ம நிலை சார்ந்தது என்பதையும், தொன்மம் ஆதிமனிதனின் ஆற்றலை வெளிப்படுத்தும் உண்மை அனுபவம் என்பதையும் அறிந்து கொள்ளமுடிகிறது. இதனடிப்படையில் நிகழ்த்தப்பெறும் தொன்மவியல் ஆய்வினால் மூலப்படிமத்தைக் கண்டு உணர இயலும்.

தொன்மவியல் ஆய்வு:

தொன்மவியல் ஆய்வு என்பது மூலபடிவத் திறனாய்வு, தொல்படிவத் திறனாய்வு என்று அழைக்கப் பெறுகிறது. ‘‘இருபதாம் நூற்றாண்டின் இலக்கியத்திறனாய்வு வகைகளில் ஒன்று மூலக்கூறுகளை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு…. இதன் அடிப்படையில் எல்லா இலக்கியங்களும் ஒரு பொதுமையான இயற்கையோடு இணைந்த வாழ்வு நெறியின் விளக்கம் என்பதே‘‘ என்று தொன்மத்திறனாய்வின் மூலம் பற்றிக் கருத்துரைக்கிறார் கா.செல்லப்பன்.

‘‘தொல்படிமவியல் திறனாய்வு இலக்கியத்தில் தொல்படிமங்களைத் தேடுகிறது. அவற்றை விளக்குகிறது. இலக்கியத்தில் காணப்படுகின்ற சொற்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் தொல்படிமங்களின் அடிப்படையில் விளக்கம் தருகின்றது. தொல்படிமம் என்பது வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டு மனித குலத்தின் மூளையில் பதிந்த பண்பாட்டுத் தடயங்களின் சாரம். மரபு வழியாகத் தொடர்ந்து வரும் கூட்டு நனவிலி மனத்தின் வடிவம். மனிதகுலத்தின் அதன் வெவ்வேறு காலகட்டங்களில் சந்தித்த ஒரே வகை மாதிரியான எண்ணற்ற அனுபவங்களின் உளவியல் நிலையிலான எச்சம். குழுக்களின் பொதுவான குறியீடுகளாகத் தொன்மங்களாக சடங்குகளாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் மூலபடிவம். தொடர்ந்து வருவதன் அடிப்படையில் முறைப்படுத்தி உணரப்படும் வகைமாதிரி படிமம்‘‘ என்று விளக்கம் தருகிறார் தி.சு.நடராஜன்.

இதன்வழி பொதுமையாக இலக்கியங்களில் தொடர்ந்து வரும் மூலவடிவத்தைக் காணும் நோக்கத்தினை உடையது மூலபடிவத் திறனாய்வு என்பதை உணரமுடிகின்றது. தற்கால மரபுக்கவிதைகளில் இத்தகைய மூலபடிமங்கள் உறைந்துகிடக்கின்றன. பல நூற்றாண்டுகளாக இயங்கி வரும் அடிக்கருத்துகள் இம்மூலபடிமத்துக்குள் நிலைத்து நிற்கின்றன. இவ்வகையில் தொல்படிமத் திறனாய்வின் அடிப்படையில் மரபுக்கவிதைகளை ஆராயும் போக்கினை நோக்கமாகக் கொண்டு இக்கட்டுரை வரையப் பெற்றுள்ளது.

தமிழ்க் கவிதை மரபும், தொன்ம வெளிப்பாடும்:

தமிழ் மரபுக்கவிதை படைப்பாக்கம் என்பது தொன்ம வெளிப்பாடு அதிகம் உடைய களம் என்று தொன்மத் திறனாய்வாளர்கள் அறிவித்துள்ளனர். கா.செல்லப்பன், மருதநாயகம், பஞ்சாங்கம், தி.சு. நடராஜன் ஆகியோர் இக்கருத்துகளைத் தொட்டுக்காட்டியுள்ளனனர்.

பாரதியிடத்தில் தொன்ம ஏற்பும் பாரதிதாசனிடத்தில் தொன்ம மறுப்பும் நிலவினாலும் தொன்ம அடிக்கருத்து இவ்விரு கவிஞர்களிடத்தில் வினைபுரிந்துள்ளது என்பது எண்ணத்தக்கது. இதனைப் பின்வருமாறு சுட்டுகிறார் கா.செல்லப்பன்.

‘‘இந்தப் பழமை புதுமை இணைப்பை இருபதாம் நூற்றாண்டுக் கவிதை வரலாற்றிலும் காணலாம். பாரதீயத்தின் அடிப்படை வேதம். ஆனால் அவரிடம் (பாரதியிடம்) வேதம் புதுமை பெறுகிறது. பாரத மகாசக்தி, பழம் பொருள். அதுவே புதிய யுகத்தின் புது மனிதனிதத்தின் மூலப்பொருள். பாரதியி்ல் இந்தியப் புராணங்கள், புதிய மனிதப் பொருள் பெற்றுப் பொலிவடைகின்றன. பாஞ்சாலி சபதம் பாரதத்தாயின் அவலத்துக்கும், அவளது விடுதலை வேட்கைக்கும் உருவகமாக அமைகிறது. மாகாளி பராசக்தி உருஷ்யப் புரட்சியின் அடிப்படை சக்தியாக விளங்குகிறாள். பாரதிதாசனிடம் தெளிவான புராணிய மறுப்பு இருக்கிறது. இங்கே இராமத்துவத்தைக் குப்பனிடம் காண்கிறோம். சக்திக் கூத்து தமிழச்சியின் கத்தியிலே மின்னுகிறது. அமிழ்து இயற்கையாகிறது. இயற்கை புதிய சமுதாயத்தின் இலட்சிய வாழ்வுக்கு முன்னோடியாகக் காட்டப்பட்டுள்ளது. தமிழ் அந்த இயற்கை சார்ந்த இலட்சிய வாழ்வின் மூலச் சுரங்கமாக முதற்படிவமாகத் திகழ்கிறது.‘‘ என்று பாரதி, பாரதிதாசனிடம் காணப்பெறும் மூலப் படிவத்தை வெளிப்படுத்துகிறார் கா.செல்லப்பன்.

‘‘தொன்மத்தைக் கையாளும் மரபைப் பாரதியாரும் ஆழ்வார்களிடமிருந்தே கற்றார். கண்ணன் பாட்டிலே இறைவனைத் தன் தோழனாகவும், தாயகவும், தந்தையாகவும், சேவகனாகவும், அரசனாகவும், சீடனாகவும், சற்குருவாகவும், குழந்தையாகவும், விளையாட்டுப்பிள்ளையாகவும், காதலனாகவும், காதலியாகவும், ஆண்டானாகவும், குலதெய்வமாகவும் கற்பனை செய்து கொண்டு அவனது மேன்மையைத் தலைசிறந்த கவிதைகளில் பாடுகிறார். கண்ணன் என் தோழன் என்ற பாடலில் தன்னைப் பார்த்தனாகக் கற்பனை செய்து கொண்டு அவன் பெருமை பேசுகிறார்‘‘ என்று பாரதியின் மனதில் இருக்கும் மூலவடிவம் கண்ணன் என்பதை எடுத்துக்காட்டுகிறார் மருதநாயகம்.

இவ்வாறு பாரதி பாரதிதாசனை முன்வைத்து அவர்கள் பயன்படுத்திய தொன்ம வெளிப்பாடுகள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. தொடர்ந்து வந்த படைப்பாளர்கள் பயன்படுத்திய தொன்மங்கள் பற்றி அறிவது என்ற நிலையில் இக்கட்டுரை இத்தளத்தை பாரதி பாரதிதாசனைத் தொட்டு விரிகிற எல்லை உடையதாக அமைகிறது.

அடிப்படைத் தொன்மங்கள்:

இலக்கியப் படைப்புகள் பலவானாலும் அவற்றின் மூலம் ஒரு சிலவாக அமைகின்றன. இம்மூலங்களை உலக அளவில் தேடும் பணி, முயற்சி, ஆய்வு பெருமளவில் மேற்கொள்ளப்பெற்று வருகிறது.

மேலைநாட்டுத் தொல்படிம அறிஞர்களாக பிரை, பிட்லர், பாட்கின், ஜேம்ஸ் ஜார்ஜ் பிரேஜர், கார்ல் குஸ்தவ் யுங், விகோ, சூசன் லாங்கர், ரிச்சர்ட் சேஸ், குமாரி மாட்பாட்கின் போன்றோர் குறிக்கப்பெறுகின்றனர். இவர்களில் நார்த்ரோப் பிரை மிகக் குறிக்கத்தக்கவர் ஆவார். இவர் உலக அளவிலான தொல்படிம மூலங்கள் சிலவற்றை அறிந்து அறிவித்துள்ளார். அவை பின்வருமாறு.

தொன்மங்களின் நான்குக்கட்டங்கள்:

1. பிறப்புக்கட்டம், 2. திருமணம் அல்லது வெற்றிக்கட்டம், 3. சாவு அல்லது மறைவுக்கட்டம், 4.சீரழிவு அல்லது சிதைவுக்கட்டம் என்ற மனிதனின் நான்கு கட்டங்களை மையமாக வைத்தே தொன்மங்கள் படைக்கப்பெறுகின்றன என்பது அறிஞர் பிரையின் வகைப்பாடாகும்.

இக்கட்டங்களைச் சற்று விரித்தும் தொன்மக் கூறுகளை அமைத்துக்கொள்ள இயலும். இவற்றைக் கா.செல்லப்பன் தெளிவுபடுத்துகிறார்.

பிறப்புக்கட்டம்

சிறுபொழுது – அதிகாலை,
பெரும்பொழுது- வசந்தம்,
துணைப்பாத்திரங்கள்- தாய், தந்தையர்
மூல வகை- அதிசயக்கதை, இசைப்பாடல்கள்
என்ற நிலையில் மேற்கண்ட பொருள், குறியீடு கொண்டு பிறப்புக்கட்டம் அமைவதாகக் குறிப்பிடுகிறார் அறிஞர் பிரை.

திருமணக்கட்டம்

சிறுபொழுது- உச்சிவேளை
பெரும்பொழுது- கோடை
துணைப்பாத்திரங்கள் – தோழியர்
மூலவகை- இன்பியல் இயற்கை சார்ந்த இலக்கியம்
ஆகிய நிலைகளில் திருமணக் கட்ட மூல படிவங்கள் அமைகின்றன.

சாவுக்கட்டம்

சிறுபொழுது- அந்தி
பெரும்பொழுது- இலையுதிர்காலம்
துணைப்பாத்திரங்கள்- துரோகி
மூலவகை- துன்பியல் இலக்கியம்
என்ற அமைப்பில் சாவுக்கட்டத்தின் கூறுகள் இலக்கியப் படைப்பாளனின் எண்ணத்தில் ஆட்சி செய்யலாம்.

சீரழிவுக் கட்டம்

சிறுபொழுது- இரவு
பெரும்பொழுது- பனிக்காலம்
மாந்தர்- மாயப்பெண்
மூலவகை- அங்கதம்
என்ற நிலைகளில் நிறைநிலைத் தொன்மங்கள் வெளிப்படலாம்.
இவ்வகையில் நான்கு வகைக் கட்டங்களாக தொன்மங்கள் படைப்பில் இடம்பெறலாம் என்று கருதுகிறார் அறிஞர் பிரை.

இவரின் கருத்தைத் தமிழ்ச்சூழலுக்கு ஏற்றவகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய தொல்படிமங்களாக வருவித்துக்கொள்கிறார் தி.சு.நடராஜன்.

தனிமனித நிலையில் அமைந்த தொல்படிவ மூலங்கள் சிவற்றை இவைதாம் என வரையறுத்துக்கொள்ள முடிகின்றது. பண்பாட்டு மதிப்புகள், சமுதாய நிலைப்பாடு ஆகியன கருதி சமுதாயம் சார்ந்த தொல் மூல படிவங்கள் சிலவற்றை அறிஞர்கள் சுட்டியுள்ளனர். அவை பின்வருமாறு.

1. புனிதமான அன்னை
2. தந்தை
3. கற்பு
4. கொடை
5. அதிகாரம்
என்ற ஐந்து மூலங்களே சமு தாயம் பண்பாடு சார்ந்து இயங்கிவரும் மூலபடிமங்கள் என்ற அறிஞர்கள் கருதுகின்றனர்.

புனிதமான அன்னை

புனிதமான அன்னை என்ற தொல்படிவம் ஒளி, அன்பு, தியாகம், மங்கலம், பணிவு, அறியாமை, பிறப்பு, தகப்பனுக்கு மாறான பண்புகள், விளக்கு, நிலம், நீர், பயிர், சக்தி, தெய்வ நிலை ஆகியவற்றில் வெளிப்படுகிறது.

அன்பான அன்னையைப் பற்றி பல கவிதைகள் பாடப்பெற்றுள்ளன. தமிழையே அன்னையாகக் கருதிய மரபு தமிழர்களின் மரபு. இதன் காரணமாகப் பல மரபுக் கவிதைப் புனைவுகள் தாயைப் பற்றிப் புனையப் பெற்றுள்ளன.

‘‘பேயவள் காண் எங்கள் அன்னை- பெரும்
பித்துடையாள் எங்கள் அன்னை
காய்தழல் ஏந்திய பித்தன்- தனைக்
காதலிப்பாள் எங்கள் அன்னை” ( பாரதியார், வெறிகொண்டதாய்,1)
என்று பாரதத் தாயினை வெறி கொண்ட தாயாகக் காண்கிறார் பாரதியார். மேலும் இங்குப் பித்தன் எனப்படும் சிவனைக் காதலிப்பவளாக அன்னை தெய்வ நிலையில் புரிந்து கொள்ளப்பெற்றுள்ளாள்.

தாய்நாட்டையே தாயாகக் காணும் புரட்சிக்கவிஞரின் சிறு வெண்பா பின்வருமாறு.
‘‘விண்கொள் இமயமா வெற்பே திருமுடியாய்ப்
பண்கொள் குமரி பணி தாளாய் – மண்கொள்
வளமேதன் மேனியாய் வாய்ந்த தாய்வீரர்
உளமேதன் மேனிக்கு உவப்பு” ( பாரதிதாசன்.பாரததேவி, )
என்ற இப்பாடலில் தாயின் உருவமாகவே தாய் நாட்டைக் காண்கிறார் பாரதிதாசன். தாய் என்கிற தொல்படிமம் இங்கு நாடாகி நிற்கிறது.

‘‘எவ்வினைத் தமிழைக் காக்க என்றுஅறிந் திருப்பார் யாரும்
அவ்வினை ஆக்க முன்றில் ஆர்த்திட வேண்டும் அம்மா
செவ்வினையாக்கி என்றன் செந்தமிழ்த்தாயைப் போற்றி
இவ்வுலகமெல்லாம் வாழ்ந்தே இன்புறும் நாளென் நாளோ”
(பெருஞ்சித்திரனார், தமிழ்த்தாய் அறுபது. பாடல் 7)
என்று தமிழைத் தாயாகக் காணும் பெருஞ்சித்திரனார் பாடலில் தாய் என்றும் தொல் படிமம் தமிழாகி நிற்கிறது.
தாயையும் பராசக்தியையும் இணைத்து ஒன்றாய்க் காண்கிறார் நாமக்கல் கவிஞர்.

‘‘நூறென்று மனிதர்க்கு நீ தந்த வயசினில்
கூறென்று பல நோய்கள் பங்கிட்டுக் கொள்ளுதையோ
ஆரெம்மைக் காப்பவர் அன்னையே உன்னையன்றி
பாரெம்மைக் கடைக்கண்ணால் தேவி பராசக்தி”
(நாமக்கல் கவிஞர் பாடல்கள், பராசக்தி பாடல்-1)
இப்பாடலில் தாய் பராசக்தி என்ற தொன்மத்துடன் ஒத்தியங்குவதைக் காண முடிகின்றது.

தமிழன்னையின் இயல்புகளைச் சொல்லி வாழ்த்துகிறார் கவிஞர் புதுவயல் செல்லப்பன்.
‘‘தொன்று தொட்டெழில் குன்றிடாதவள்
தூய நல்லொளி வளர்ப்பவள்
சொல்லும் யாவரும் வெல்லுமாறு அருள்
தூவி நாள்தொறும் காப்பவள்
….ஓங்கு செந்தமிழ் அன்னையை உளம்
தாங்கியே கரம் கூப்புவேன்”
(புதுவயல் செல்லப்பன், எண்ணச் சிலைகள், செந்தமிழ் அன்னை)
வேரென தாயைக் காண்கிறார் கவிஞர் சவகர்லால். ‘‘எத்தனை வேர்கள் நம்வாழ்வில், ஈன்றவள் ஆணி வேராவாள்” (ச. சவகர்லால், நெஞ்சக் கனல், ப.40)
‘அன்பின் உறைவிடம் இன்பின் நிறைவிடம்
அழகின் திருவிடம் ஆனவள்
பண்பில் நிறைந்தவள் பரிவில் உயர்ந்தவள்
பாசமும் நேசமும் வாய்ந்தவள்
தண்பொழில் போன்றவள் விண்மழை ஈன்றவள்
தாரணிக் கேயொரு தாயிவள்”
(தமிழன்பன் முத்துச்சாமி, பெண்கள் உலகின் கண்கள், ப. 197)
என்று தாயின் சக்தியைத் தெய்வச் சக்தி இயக்கமாகக் காண்கிறார் தமிழன்பன் முத்துச்சாமி.

இவ்வாறு தாயின் புனிதம், அன்பு, பாசம் ஆகியன தொல்படிம நிலையில் தொடர்ந்து வருவனவாக படைப்புகளில் படைக்கப்பெற்றுள்ளன.

தந்தை

தந்தை என்ற மூலபடிமம் சொத்துடைமை, வருமானம், அறிவு, மூர்க்கத்தனம், அதிகாரம், தாயை அடக்குதலாகிய வேட்கை, தீ, காற்று, வானம் என்ற களங்களின். வழியாக வெளிப்படுகிறது.

தந்தையர் நாடென்ற பேச்சினிலே என்று பாரதி பாரதத்தைத் தந்தையர் நாடாக, தந்தையர்க்கான சொத்துரிமை நாடாகக் காண்கிறார். சொத்து, பணம் அற்ற நிலையில், ஏங்கும் தந்தையின் நிலையைப் பாரதிதாசனின் தவிப்பதற்கோ பிள்ளை பாடலின் வழி உணரமுடிகின்றது.

‘‘வரும்படியை நினைக்கையிலே உள்ளமெலாம் நோகும்
வாராத நினைவெல்லாம் வந்து வந்து தோன்றும்
துரும்பேனும் என்னிடத்தில் சொத்தில்லை, நோயால்
தொடர்பாகப் பத்துநாள் படுத்துவிட்டால் தொல்லை
அரும்பாடு மிகப்படவும் ஆட்சேபமில்லை
ஆர்தருவார் இந்நாளில் அத்தனைக்கும் கூலி
இருப்பா நான்? செத்துவிட்டால் என் பிள்ளைகட்கே
என்ன கதி? ”
(பாரதிதாசன் , தவி்ப்பதற்கோ பிள்ளை, பாடல்.3)
இவ்வகையில் சொத்தின் இருப்பிடமாக அமைபவன் தந்தை என்பது உறுதியாகின்றது. கவிஞர் ஆனந்தம் எழுதிய கவிதையில் தந்தையின் எண்ணம் சொத்தைக் காப்பதில் இருப்பதை உணரமுடிகின்றது.

இத்தனையும் தேடியபின் செல்லப்பர்தாம்
இறக்கின்ற தறுவாயில் மகனிடத்தில்
செத்தபின்னர் எனக்கெந்தச் சடங்கும் வேண்டா
சிக்கனமாய் வாழ்வதுதான் சீர்திருத்தம்
பத்துவயதாகிற உன் தம்பி நன்றாய்ப்
படித்திடுவான். பிரியமுடன் பார்த்துக் கொள்க
சொத்துக்களைச் சமமாகப் பகிர்ந்து கொண்டு
சுகமாக வாழ்ந்திடுவீர் என்று சொன்னார்”
(ஆனந்தம், பூக்காடு, ப.8)
என்ற பாடலில் சொத்தினைக் காக்க எண்ணும் தந்தையின் நிறைவு கால வாழ்க்கை கண்முன் காட்டப்பெறுகிறது.
எஸ். டி. சுந்தரம் தந்தை பற்றி ஒரு கவிதை வடித்துள்ளார். அதில் தந்தையின் ஆளுமையை எடுத்துரைக்கிறார்.

‘‘கோலக்குலக் குருத்துக் கொழுந்துகளைக் காப்பாற்றும்
காலக்கடமையிலே களைப்பு மிக வந்தாலும்
பாலன் நம்பிள்ளை படுசுட்டிப்பயலென்றே
பாசமழை பொழியும் ஆசை முகில் என் தந்தை
தோளில் சுமப்பார் தோட்டத்தில் தென்னையிளம்
பாளைமணியைப் போல் பரிவோடு பாவிப்பார்
வேளைக்குப் படிப்புண்டு விளையாட்டு மிகவுண்டு
நாளைக்கு எண்ணாமல் நல்லபணி செய்யென்பார்” ‘‘
(எஸ். டி. சுந்தரம் வானமுதம்,ப.11)

இங்கே தந்தை சொல்லும் அறிவுரையாக இன்றே நன்றே செய் என்பது அமைகின்றது. இவ்வகையில் அறிவு புகட்டும் தொன்மைத் தன்மை தந்தையிடம் விளங்குகிறது.

இவ்வாறு தந்தை என்ற படிமத்தின் இயல்புகளைப் பதிய வைத்துள்ளனர் மரபுக்கவிஞர்கள்.

கற்பு

கற்பு என்ற மூலப்பண்பு புனிதம், தூய்மை, பாலியல் கட்டுப்பாடு, தாலி, பெண்ணடிமைத்தனம், சாவு, சாகடிப்பு, மானம், தீ, உடம்பு, இருநிலை எதிர்வு ஆகிய நிலைகளில் வெளிப்படுவதாக அமையும்.

தமிழ்ப் பண்பாட்டில் குறி்க்கத்தக்க இடம் வகிப்பது கற்பு. ஆண், பெண் என்ற இரு கட்சியினர்க்கும் கற்பினைப் பொதுவில் வைத்தார் பாரதியார். பாரதிதாசனின் கற்பே உயிர் என்ற கவிதை புனிதம், தூய்மை, பாலியல் கட்டுப்பாடு போன்றனவற்றை முன்வைக்கின்றது,

‘‘தயிர் விற்க மட்டுந்தான்
தட்டனிடம் பேசலாம்
மோர் விற்க மட்டும்தான்
முத்தனிடம் பேசலாம்
தயிர் விற்க மட்டும்தான்
மோர் விற்க மட்டுந்தான்
உயிர் விற்க என் மனந்தான்
உடன்படுமா சொல்லத்தான்”
(பாரதிதாசன், கற்பே உயிர், 3-4)
என்ற பாடலில் கற்பின் இலக்கணம் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கட்டுப்பாடு என்பதைக் காட்டுவதாக உள்ளது,
கற்பு சார்ந்த மகளிர் கடமைகளைப் பட்டியலிடுகிறார் தமிழன்பன் முத்துச்சாமி.

‘‘பண்பும் ஒழுக்கமும் பாங்கும் எளிமையும்
கண்போல் கற்பும் காக்க நன்மகளிர்
திண்மையும் அறிவும் தெளிவும் அடக்கமும்
பெண்மையின் நலனென்று பேசுவர் பெரியார்
நாணமும் மென்மையும் நவிலுதற் கச்சமும்
பேணுறு பெண்மையின் பெருந்தகை இயல்பாம்
ஞாலம் போல் பொறுமையொடு நயனிலாதவற்றைக்
காலன்போல் சீறும் கற்புளாள் காரிகை”
(தமிழன்பன் முத்துச்சாமி, பெண்கள் உலகின் கண்கள், ப.94)

என்ற நிலையில் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் தொன்மைக் கவசங்களாகச் சுட்டப்பெறுகின்றன. நிலமகள் பொறுமையின் இலக்கணம் என்ற தொன்மக் கூறும் இதனுள் செயல்பட்டுள்ளது. ‘‘தட்டுப் பாடானாலும் கற்பை விற்கச் சம்மதியார் நற்குலத்திற் பிறந்த மக்கள்!” (கண்ணதாசன், மாங்கனி) என்று கற்பின் வலிமையைப் பாடுகிறார் கண்ணதாசன்.
இவ்வகையில் கற்பு என்பது தொல் படிமமாக விளங்கி அவை தற்காலக் கவிஞர்களின் கவிதைகளிலும் சிறக்கின்றன.

கொடை

மேலோர், கீழோர், பிராயச்சித்தம், சாதுரியம், கருணை, பலி, உயர்வு நோக்கிய நகர்வு, சுவர்க்கம், மறுபிறப்பு, அமரத்துவம் போன்றவற்றி்ல் கொடை என்ற மூலப்பண்பு வெளிப்படும்.

பூமிதானம் செய்வதே
புண்ணியத்திற் புண்ணியம்
புனிதமான முறையில் நாட்டின்
வறுமை போகப் பண்ணிடும்
சாமி சாட்சியாக எங்கும்
சண்டை கள் குறைந்திடும்
சரிநிகர் சமான வாழ்வு
சத்தியம் நிறைந்திடும்
(நாமக்கல் கவிஞர் பூமிதான யாத்திரை)
என்ற பாடலில் நிலங்களை வழங்கும் கருணை, கொடை பற்றிக் கூறப்பெற்றுள்ளது. புதிய ஆண்டில் பொலிவு தோன்ற வாழ்த்தொன்றைக் கவிஞர் சவகர்லால் பாடுகிறார்.

‘‘புத்தாண்டு பூ நுகர் வோம் நாசிக்குள்ளே
புகுந்து சென்று புத்துணர்வை மணம் தரட்டும்
புத்தாண்டுப் பூவணிந்தே மகளிரெல்லாம்
பண்பாடு தாங்கிகளாய் வலம்வரட்டும்
புத்தாண்டு பூமணத்தில் ஒரு சிறிதேனும்
போக்கற்ற ஏழைகளைப் போய்ச்சேரட்டும்
புத்தாண்டில் கைநிறையப் பொருளை ஈட்டும்
புதுச்சாதி தீமையிலாப் பூவாகட்டும் ”
(ச.சவகர்லால், நெஞ்சக்கனல், ப. 81)
இப்பாடலில் கொடை என்ற பண்பு கருணை என்ற நிலையில் தொல்படிம நிலையில் படிந்து கிடப்பதைக் காணமுடிகிறது.

அதிகாரம்

சொத்துடைமை, அரசியல், சமுதாயப் படிநிலைகள், அரசு, கட்டில், கொடி, கொடிமரம், காவல்மரம், முரசம், பீடம், காவல், முத்திரைகள், சீருடை, தொலைபேசி, தகவல் சாதனங்கள், மேடை, ஒலிபெருக்கி, விளப்பரப்பதாகைகள், தீ, குண்டு, துப்பாக்கி போன்றவற்றில் அதிகாரம் என்ற மூல வடிவம் பங்குபெறும்.

அதிகாரத்தை வெறுக்கும் நிலையிலும் இத்தொல்படிமம் செயல்படலாம். தாரா பாரதியின் கவிதைகள் போலி அரசியலுக்கு எதிரான புரட்சியைத் தொன்மங்கள் கொண்டு எழுப்புவதாகவே அமைந்திருக்கிறது.

‘‘தூய்மையை விலக்கி வைக்கத்
துணிந்த அரிச்சந்திரர்கள்
வாய்மையைக் கொன்று
வாய்க்கரிசி போடுகிறார்.
சந்திர மதிகளோ
சலன மில்லாமல்
சன நாயகத்தின்
சவ அடக்கம் நடத்துகிறார்
சத்தியத்திற்கு இங்கு
சமாதி கட்டிவிட்டு
சத்யமேவ ஜெயதே
சாட்சி எழுதுகிறார்
சுதந்தர நாடு இன்று
சுடுகாடாய் மாறியதால்
மாபாரத கண்டம்
மயான காண்டமிது”
(தாராபாரதி, தாராபாரதி கவிதைகள். ப. 268)
என்ற நிலையில் சமுதாயத்தைச் சாட தொன்மப் பாத்திரங்கள் கைகொடுத்து உதவியுள்ளன தாராபாரதிக்கு. இவரின் கவிதைகளில் பற்பல இடங்களில் தொன்மக் கூறுகள் கொட்டிக்கிடக்கின்றன. அதிக அளவில் தொன்மக் கூறுகளைத் தன் படைப்புகளில் படைத்தவர்களில் குறிக்கத்தக்கவர் தாராபாரதி ஆவார். உருசிய நாட்டில் தோன்றிய புரட்சிக்கு மாகாளி கண் வைத்ததாகப் பாரதி பாடுகிறார்.

இவ்வகையில் தமிழில் தோன்றிய தற்கால மரபுக்கவிதைகளில் உலகத் தொன்மங்களின் மூலக்கருக்கள் அமைந்துகிடக்கின்ற நிலையை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தனிமனிதன், சமுதாயம் இவையிரண்டுக்குமான தனித்த மூலபடிவங்களைக் கண்டறிந்த தொன்மவியல் அறிஞர்கள் இவையிரண்டுக்குமான பொது மூல உணர்வுகளையும் கண்டுணர்ந்துத் தெரிவித்துள்ளனர். அவை இரண்டு ஆகும்.
1. இன்பியல்
2. துன்பியல்
ஆகிய இரண்டும் தனிமனிதத்திற்கும் சமுதாயத்திற்கும் ஒத்தமைகின்ற பொதுவான தொன்மங்கள் என்பது அறிஞர்கள் கருத்தாகும். மேற்சொன்ன கவிதைகளில் இன்பியலும், துன்பியலும் கவிதைக்கு ஏற்ற நிலையில் அமைந்து சிறப்பதை அறிந்து கொண்டிருக்க இயலும்.

உலக அளவில் எழுந்துள்ள, தொல் படிம நிலை ஆய்வுத்தளத்தின் போக்கிற்கு ஏற்ப தமிழக மரபுக் கவிஞர்களும் தொன்ம நிலைகளை எடுத்தாண்டுள்ளனர் என்பது மேற்கண்டவற்றின் வழி தெளிவாகின்றது. இது பொதுநிலை. சிறப்புநிலையில் தமிழ் மரபுக்கவிஞர்கள் தொன்மங்களை எடுத்தாண்ட நிலையை பின்வரும் பகுதி சுட்டி நிற்கிறது.

தமிழ்க் கவிஞர்கள் தனித்த, சிறப்பு மிக்க தொன்ம வளங்களைத் தன் கவிதைகளில் பெருமளவில் பயன்படுத்தியுள்ளனர். இப்பயன்படுத்தலில் இருவேறுபட்ட நிலைகளைக் கவிஞர்களிடத்தில் காணமுடிகின்றது. அவற்றில் ஒன்று தொன்மங்களை ஆக்க நிலையில் பயன்படுத்துவது. மற்றொன்று தொன்மங்களை எள்ளி நகையாடும் நிலையில் விமர்சனப் போக்கில் கையாள்வது. குறிப்பாக பகுத்தறிவு சார்ந்த கவிஞர்கள் தொன்மப் பாத்திரங்களை எள்ளி நகையாடும் நிலையில் படைத்துள்ளனர். இவ்விரு திறங்களை வகைப்பாடுகளாகக் கொண்டு தமி்ழ்க்கவிஞர்களின் தொன்ம பயன்பாட்டுநிலையை அறிந்து கொள்வது அவசியமாகின்றது.

ஆக்க நிலைத்தொன்மங்கள்

ஆக்க நிலைத் தொன்மங்களைப் பாரதியார் தொடங்கி, கவிமணி, நாமக்கல்லார், கண்ணதாசன் போன்ற பல கவிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக சிவத் தொன்மங்கள் ஒரு பக்கத்திலும், விட்டுணு தொன்மங்கள் மறுபக்கத்திலும் கவிஞர்களால் கையாளப் பெற்றுள்ளன. விட்டுணு தொன்மங்கள் மரபுக் கவிஞர்களின் படைப்பாக்கத்தில் மகாபாரதத் தொன்மங்கள், இராமாயணத் தொன்மங்கள் என்ற இரு வகைகளில் அமைகின்றன.
இதிகாசங்கள் ஏணிகளாகி
இங்கே வானம் இறங்கிவர
கீதை நாயகன் ஊதிய சங்கம்
கிழக்கில் மேற்கை அழைத்துவர,
போதி மாதவன் புனிதச் சுவடுகள்
புதிய உலகைத் திறந்துவிட,
(தாராபாரதி கவிதைகள், ப. 52)
என்ற கவிதையில் இதிசாகசங்கள் இன்னமும் தொன்மங்களாகி மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றுள்ளன என்பதை உணரமுடிகின்றது.

‘‘ஆடும் பாம்பின் அடியில் உறக்கம்
அரங்கத்தில் கொண்டதுண்டு
சாடும் புலியின் எதிரிலும் நடனம்
சபையில் செய்ததுண்டு” (கு.செ. ராமசாமி, கனல்மணக்கும் பூக்கள், ப. 13)
என்ற நிலையில் விட்ணு, சிவா ஆகிய இரு தெய்வங்கள் தொன்மங்களாக இறை குறியீடுகளாக கவிஞர்கள் மனதில் விளங்குகின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. அல்லது எல்லாத் தொன்மங்களும் இவ்விரு நிலைகளில் அடக்கப்பெறுகின்றன என்பதையும் உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

பெரும்பாலும் தமிழ் மரபுக்கவிஞர்களில் சிவ. விட்ணு சார் தொன்மக் குறியீடுகளே அதிகம் பயன்படுத்தப்பெற்றுள்ளன. இதன் காரணமாக இவ்விரு தெய்வச் சார்புகளே பத்தொன்பதாம் இருபதாம் நூற்றாண்டின் மக்கள், படைப்பாளர்கள் மனதில் நிலைபெற்றிருந்தன என்பதை உணரமுடிகின்றது.

சிவா, விட்ணு நிலையில் சார்பு கொள்ளும் தொன்ம நிலைகளை வெளிப்படுத்தும் சில காட்டுகள் பின்வருமாறு. இவ்வெடுத்துக்காட்டுகளை விரிக்கின் பெருகும் என்ற நிலையில் இவை ஓரளவே இக்கட்டுரையின் பக்க எல்லை கருதி அமைக்கப்படுகின்றன.

சிவ தொன்மங்கள்

சிவ தொன்மங்களாக சிவன், சக்தி, விநாயகர், முருகன் முதலான தெய்வங்கள் குறித்து எழுந்த தொன்ம நிலைப்பாடுகளைத் தம் கவதைகளுக்குள் இருந்திப் பாடும் முறைமையை மரபுக்கவிஞர்கள் பெற்றிருக்கின்றனர். சிவ குடும்பம் என்ற அடிப்படையில் இத்தொன்மக் கூறுகள் கவிஞர்களிடத்தில் ஆளுமை செலுத்தியுள்ளன.

சிவன்

பாரதியார் சிவபிரான் தொன்மத்தைக் கையாண்டுள்ளார்.
‘‘இயற்கை என்றுனையுரைப்பார் சிலர்
இணங்கும் ஐம்பூதங்கள் என்றிசைப்பார்
செயற்கையின் சக்தியென்பார் உயிர்த்
தீயென்பார் அறிவென்பார் ஈசனென்னபார்
வியப்புறு தாய் நினக்கே இங்கு
வேள்விசெய்திடுமெங்கள் ஓம் என்னும்
நயப்படு மதுவுண்டே சிவ
நாட்டியங் காட்டி நல்லருள் புரிவாய்”
(பாரதி, சிவசக்தி)
என்ற பாடலில் இடம்பெறும் சிவ நடனம், ஈசன் போன்றன சிவன் குறித்தான தொன்ம வெளிப்பாடுகள் ஆகும்..
தொண்டர் திருமறை ஒதிவலம் செயும்
தோற்றம் தருமெனக்கே – வலம் செயும்
தோற்றம் தருமெனக்கே
மண்ணும் இயற்கையில் ஈசனைக் கண்டு
வணங்கும் மதியுடையோர்- கண்டு
வணங்கும் மதியுடையோர்
பொன்னம்பலம் வெள்ளியம்பலம் தேடிப்
புவியில் அலைகுவரோ- தேடிப்
புவியில் அலைகுவரோ
(கவிமணி, இயற்கையில் ஈசன் )
பொன்னம்பலம், வெள்ளியம்பலம் ஆகியன சிவன் நடனமாடும் அம்பலங்களாகும். இவற்றை உட்படுத்திக் கவிமணி கவிதை வரைந்துள்ளார்.

உடுமலை நாராயணகவி எழுதிய கிந்தனார் சரித்திர கீர்த்தனையில் ரயில் பற்றிய பாடலில் சிவனின் நடனம் தொன்ம நிலையில் எடுத்தாளப்பெறுகிறது.

ரயிலே ரயிலே ரயிலே
ரயிலே ரயிலே ரயிலே
தண்டவாளத்தின் மீதே ஏறி
தாண்டவமாடிடும் ஆண்டவன் நீயே
லண்டனை விட்டு இந்தியாவுக்கு
ரமணீயமாய் வந்த ரயிலே ரயிலே (உடுமலைநாராயணகவி, கவிதைகள் 112)
என்று சிவதாண்டவம் இங்குப் பயன்படுத்தப்பெற்றுள்ளது.
சிவ பெருமான் என்றாலே அவரின் சிவ தாண்டவம் என்பதே நினைவில் நிற்கும் என்ற நிலையில் தமிழக மக்கள் மனதில் அத்தொன்மம் உறைந்து கிடக்கிறது என்பதை இவற்றின்வழி உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

காளி தொன்மம்

காளி தாருகா சூரனை அழிக்க வந்த சக்தியாவாள். சிவபெருமானின் காளமாகிய விஷத்தின் ஒரு துளி கனலாகிச் சக்தி வடிவமாகி காளியானது. (அபிதான சிந்தாமணி). இக்காளியைத் தீமையை அழிக்க வந்த தொன்மமாகப் பாரதி கையாள்கிறார்.
‘‘விண்டு றைக்க அய அரியதாய்
விரிந்த வான் வெளியென நின்றனை
அண்ட கோடிகள் வானில் அமைத்தனை
அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை
மண்டலத்தை அணுவணுவாக்கினால்
வருவதெத்தனை அத்தனை யோசனை
கொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை
கோலமே நினைக் காளியென்றேத்துவேன்” (பாரதியார், மகா சக்திவாழ்த்து,பா.1)
பாரதியின் காளி தொன்மத்தை முன்னிறுத்தியே பாரதிதாசனும் எங்கெங்கு காணினும் சக்தியடா என்று பாடியுள்ளார். இருப்பினும் பாரதிதாசன் தொன்மங்களை எதிர் நிலையில் நின்று விமர்சிக்கும் கவிஞராகப் பின்னால் பரிணமிக்கிறார்.
நாமக்கல் கவிஞர்
‘‘சொல்லையொத்துச் செயல்மனமும்
தூயவர்க்கே தோற்றுவதாய்ச்
சொல்வதற்கு முடியாத
சக்திதனைத் தொழுதிடுவோம்”
(நாமக்கல் கவிஞர், சொல்வதற்கு முடியாத சக்தி)
என்று சக்தியை வாழ்த்துகிறார்.
‘‘தாயே பராசக்தி தனிக்கருணை மாமழையே
வாய்திறந் தழுவோரை வாரியணைப்பவளே
பெற்றவளும் நீதானே பிள்ளைகள் யாம் பெருந்துன்பம்
உற்றக்கால் எமைத்தாங்கி உதவுவதும் நீதானே
யாராட்சி பீடத்தில் அமர்ந்தாலும் உன்னுடைய
சீராட்சி திறந்தானே செகமெல்லாம் காக்கிறது
உன்னுடைய கண்மேகம் அருள் பொழிய வில்லையெனில்
மண்ணில் உயிரெல்லாம் வாடிக் கருகாதா?”
(ச. சவகர்லால், நெஞ்சக் கனல், ப.128)

என்று சக்தியின் ஆட்சி எப்பொழுதும் எங்கும் இருப்பதாகக் காட்டுகிறார் சவகர்லால்.
‘‘என்னைப் படைத்த பொருள் ஏனின்னும் வரவில்லை
என்றெல்லாம் ஏங்கினேன் அந்நாளில்
தன்னைப் பற்றிவிட்டத் தனையர்க்கு தெய்வத்தின்
தன்மையறிவிக்கத் தான்வந்த மாசக்தி”
(எஸ். டி. சுந்தரம், வானமுதம் ப.4)
இவ்வாறு உலக இயக்கம் அனைத்தும் சக்தியின் வழியில் சக்தி பெறுவதாகக் கவிஞர்கள் பாடியுள்ளனர். சக்தியின் குழந்தைகளாகக் கருதப்படும் விநாயகர், முருகன் இவர்களையும் பல நிலைகளில் மரபுக் கவிஞர்கள் தொன்மங்களாகக் கொண்டுப் பாடியுள்ளனர்.

இன்றைய பக்திநிலையைப் பிள்ளையார் தொன்மம் கொண்டு உரைக்கிறார் கவிஞர். கு..செ ராமசாமி.
‘‘ஆற்றங்கரைப் பிள்ளையார்க்குக்
காட்டிவந்த சோறு
அடுத்தடுத்த பிள்ளையார்க்கும்
அதுதான் சாப்பாடு” (கு.செ.ராமசாமி, கனல் மணக்கும் பூக்கள், ப. 48)
விநாயகர் தொன்மத்தை இற்றைக்கால பக்திநிலைப்பட காணும் பாங்கு இதுவாகும். இதுபோன்று முருகன் தொன்மமும் பல நிலைகளில் மரபுக்கவிஞர்களால் கையாளப்பெற்றுள்ளது.

சிவ குடும்பம் என்ற நிலையில் மேற்கண்ட தெய்வங்கள் மரபுக்கவிஞர்களால் எடுத்தாளப்பெற்றுள்ளன. இவற்றை விரிக்கின் பெருகும்.

விட்ணு தொன்மங்கள்

வி்ட்ணு தொன்மங்கள் அளவு கடந்த நிலையில் தமிழ்க் கவிஞர்களிடத்தில் ஆட்சி கொண்டுள்ளன. குறிப்பாக மகாபாரதத் தொன்மங்கள், இராமாயணத் தொன்மங்கள் போட்டி போட்டுக் கொண்டு கவிஞர்களின் படைப்புகளில் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் இதிகாசங்களாக விளங்கும் இத்தொன்மங்களில் இந்தியத்தன்மை மிளிரும் வண்ணம் தமிழ்க்கவிஞர்களால் எடுத்தாளப்பெற்றுள்ளது.

மகாபாரதத் தொன்மங்கள்

மகாபாரதத் தொன்மங்களில் கண்ணன், பாஞ்சாலி, துச்சாதனன், கர்ணன், சகுனி போன்ற பல பாத்திரங்கள் மரபுக் கவிஞர்களால் எடுத்தாளப்பெற்றுள்ளன.

கண்ணன் தொன்மம்

கண்ணன் தொன்மம் மரபுக் கவிஞர்களில் பெருமளவில் எடுத்தாளப்பெற்றுள்ளது. கண்ணனைப் பாடாத கவிஞர்கள் இல்லை என்று சொல்லுமளவிற்குப் பல கவிஞர்கள் கண்ணனைப் பாடியிருக்கிறார்கள்.
‘‘கண்ணன் என்ற ஒரு சிறுவன்
கருத்தை கொள்ளை கொண்ட ஒருவன்
எண்ண எண்ண அவன் பெருமை தனை
என்ன சொல்லுவேன் அருமை”
(நாமக்கல் கவிஞர், கண்ணன் லீலை)
என்று கண்ணன் என்னும் எண்ணம் கொள்ளை கொண்ட ஒருவனை அருமைபடப் பாடுகிறார் நாமக்கல்லார். கண்ணனைத் தன் குருவாகக் கொண்டவர் கண்ண்தாசன். அவர் பெரிதுபட கண்ணனைப் பாடியுள்ளார்.

‘‘பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் –அந்தப்
பார்த்தனும் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்”
என்று கண்ணனிடத்தில் வரம் கேட்கிறார் கண்ணதாசன். பார்த்தன், பாஞ்சாலி ஆகியோர் இங்கு தொன்ம நிலையில் இடம் பெற்றிருப்பது கருதத்தக்கது.

‘‘கண்ணாவுன் சிரிப்பழகைக் கண்டால் சித்தம்
கலங்காத உயிரினங்களுண்டா
கண்ணாவுன் குழலோசை கேட்டு நீலக்
கடலலையும் தாலாட்டுப் பாடும்
(ச.சவகர்லால், நெஞ்சக்கனல்,ப.113)
என்று கண்ணனின் அழகைத் தரிசிக்கிறார் சவகர்லால்.
பாஞ்சாலி பற்றியும் பல தொன்மங்கள் ஏற்படுத்தப்பெற்றுள்ளன. பாரதியின் பாஞ்சாலிசபதம் முழுக்க முழுக்க மகாபாரத பாத்திரங்களை முன்வைத்து விடுதலைக் கால இந்திய நிலையைக் காட்டுவதாக உள்ளது. பாரதி பாஞ்சாலி சபதம் பாடிய அழகைக் கவிஞர் சிற்பி,

‘‘நீதியை வேண்டியச் சூதர் சபையினில்
நேரிழை பாஞ்சாலி பொங்கி
மோதும் அலைகடல் மீதில் எரிமலை
முந்தி அழன்ற தம்மா தீச்
சிந்திச் சுழன்றதம்மா” (சிற்பி, சிற்பி கவிதைகள், ப. 85)
என்று பாடுகின்றார். இதன்வழி பாரதி படைத்த தொன்ம நிலையை இங்குக் கவிதை வழியே சான்றாய்ப் பெறமுடிகின்றது.

‘‘பாஞ்சாலிக்கு ஆடை வழங்கிய
பரந்தாமன் பேர் பாடிவிட்டு
நோஞ்சான் கூட துச்சாதனனாய்
நூறு பாங்சாலி துயிலுரிவான்” (தராபாரதி கவிதைகள்,ப.110)
என்ற நிலையில் பாஞ்சாலியும் துச்சாதனனும் தொன்மங்களாக தாராபாரதியால் கையாளப்பெற்றுள்ளன.

பாஞ்சாலி என்ற தொன்மம் உரிமை கோரும் தொன்மமாக விளங்குகிறது. மரபு சார்ந்த இயக்கமுடைய பிம்பமாகவும் பாஞ்சாலி படைப்புகளில் படைக்கப்பெற்றுள்ளாள்.

மற்ற பாத்திரங்கள்

கண்ணனும் பாஞ்சாலியும் அதிக அளவில் பயன்படுத்தப்பெற்ற மகாபாரதத் தொன்மப் பாத்திரங்களாக விளங்குகின்றன. மற்ற மகாபாரத பாத்திரங்களும், மரபுக் கவிவாணர்களால் எடுத்தாளப்பெற்றுள்ளன.

காயுருட்டில் நாட்டைக் கைக்கொணடென் சகுனிநான்
வாயுருட்டுத்தானே இன்றாட்சி அமைக்கிறது
சூதும் சூழ்ச்சியும் பஞ்ச பாதகச் செயலும்
மீதமின்றிச் செய்கிறார் இன்றிருந்தால் நான் தோற்றேன்
(ச. சவசர்லால் நெஞ்சக்கனல், ப104)
என்று சகுனி தொன்மம் உலக நடப்புகளுக்கு உதாரணம் காட்டப்படுகிறது.
கர்ணன் தொன்மத்தைப் பாரதி கையாள்கிறார்.
‘‘சாகும் பொழுதில் இருசெவிக் குண்டலம்
தந்த தெவர் கொடைக்கை” (பாரதியார், பாரதமாதா-7)
என்று கர்ணன் தொன்மத்தைப் பாரதி பாரததேவியின் கொடைக்கையாகக் காண்கிறார். இவ்வாறு பற்பல மகாபாரதத் தொன்மங்கள் தமிழ் மரபுக்கவி வாணர்களால் கையாளப்பெற்றுள்ளன. துச்சாதனன் தொன்மத்தைப் பத்திரிகைத்துறை அவலத்திற்குப் பயன்படுத்துகிறார் தரா பாரதி.

துச்சாதனராய் இவர்கள் கூடித்
துகிலைப் பறித்துவிடுகையிலே
அச்சு வாகனம் பருத்தி ஆலையா
ஆடை கட்டி விடுவதற்கு (தாராபாரதி கவிதைகள், ப. 282)
என்ற நிலையில் பத்திரிகைத் துறையில் பெண்களுக்கு நடக்கும் அவலம் துச்சாதனத் தொன்மம் வழி வெளிப்படுத்தப்பெற்றுள்ளது.
இவ்வாறு மகாபாரதத் தொன்மங்கள் தற்கால சமுதாய நிலையைப் பாட மரபுக் கவிஞர்களுக்குப் பெரிதும் கைகொடுத்துள்ளன.

இராமாயணத் தொன்மங்கள்

இராமன், சீதை,அனுமன், இலக்குவன் போன்ற இராமாயணப் பாத்திரங்கள் பல கவிஞர்களால் தொன்மங்களாக எடுத்தாளப் பெற்றுள்ளன. பாரதி மகாபாரதத் தொன்மங்களைக் கொண்டுத் தனித்த காவியம் பாடியது போலவே இராமாயணத் தொன்மங்களையும் பல பாடல்களில் தொடர்ந்து வரிசையாகப் பயன்படுத்தியுள்ளார்.
‘‘முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருடைய வில் – எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவிநல்
ஆரிய தேவியின் வில்”
‘‘இந்திரசித்தன் இரண்டு துண்டாக
எடுத்தவில் யாருடைய வில் – எங்கள்
மந்திரத் தெய்வதம் பாரத ராணி
வயிரவி தன்னுடை வில்”
(பாரதியார், பாரதமாதா, 2,3)
என்று இராமாயணத் தொன்மங்களில் இராமன், இராவணன், இந்திரசித்தன் ஆகியோரை முறையே நல்லவை, அல்லவைக்கான தொன்மக் குறியீடுகளாகப் பாரதியார் காண்கிறார். அனும தொன்மத்தைக் கவிஞர் சவகர்லால் பின்வருமாறு கையாள்கிறார்.

‘‘அஞ்சனைக்குப் பிறந்தவன்
அஞ்சி லொன்றைத் தாண்டியே
அஞ்சிலொன்றை வைத்துமே
அச்சம் வென்ற விறலவன்
செஞ்சொற் கிள்ளை சீதையின்
சிந்தை நோயைத் தீர்த்தவன்
நெஞ்சில் அவனைப் போற்றியே
நித்தம் நன்மை எய்துவோம்”
(ச. சவகர்லால், நெஞ்சக்கனல், ப. 94)
என்ற நிலையில் அனுமத் தொன்மம் சீதை என்ற தொன்மத்துடன் இங்கு தொண்டு நிலையில் இணைத்து நோக்கப்பெற்றுள்ளது.

அயோத்தியில் மசூதி இடிக்கப்பட்ட நிலையில் இராமாயணத் தொன்மங்கள் பெரிதும் விமர்சனத்திற்கு உள்ளாயின. அவ்வகையில் தாராபாரதியின் பின்வரும் கவிதை குறிக்கத்தக்கது.
‘‘இராமன் தொட்டில் ஆடிய வீட்டில்
இரகுமான் தொட்டில் ஆடாதா
கண்ணன் தவழ்ந்த கோகுல வீதியில்
கர்த்தர் நடக்கக் கூடாதா
மனிதா வளைவரிச் சங்கு பிறக்கும்
கடலில்தான்
வலம்புரி முத்தும் பிறக்கிறது.
பளபளக்கிற பவழமும் அந்த
அலைகடல்தானே கொடுக்கிறது” (தாராபாரதி கவிதைகள்,ப.336)
மதச் சார்பற்ற இந்திய நாட்டில் மதச் சார்பில்லா நிகழ்வுகள் நடக்கவேண்டும் என்ற நிலையில் இங்கு இராமன் என்ற தொன்மம் பயன்படுத்தப்பெற்றுள்ளது.

கவிஞர் சுரதா சீதை என்னும் தொன்ம வடிவினை அழகின் இருப்பிடமாகக் கருதுகிறார்.
‘‘சீதையைத் தான் பார்த்ததில்லை அவளைப் பற்றி
தீட்டிவைத்த ஏட்டினைநான் படித்ததுண்டு
காதுவரை போய்த்திரும்பும் பளிங்குப் பார்வை
காட்டுமிவள் அவள்தானா?” (சுரதா அமுதும்தேனும். ப.71)
என்ற நிலையில் சீதை அழகின் தொன்ம உருவாகக் கொள்ளபடுகிறாள்.
இவ்வாறு இதிகாசங்களில் ஒன்றான இராமாயணப் பாத்திரங்கள் தற்காலச் சமுதாயச் சூழலை முன்வைத்து மக்களை எழுச்சியுறச் செய்து சமுதாயப் பங்காற்றியுள்ளன.

பிற தெய்வங்கள்

மேற்காட்டிய தொன்மங்கள் தவிரவும் பல்வேறு தொன்மப் பாத்திரங்கள் தமிழ்க் கவிதையுலகில் மீள்நோக்கப்பெற்றுள்ளன. அரிச்சந்தி்ரன், சகுந்தலை, சனி, சரசுவதி, துஷ்யந்தன், ஆதிசேடன் போன்ற பல பாத்திரங்களும் கவிஞர்களின் கைவண்ணத்தில் சிறந்துள்ளன. அவற்றிற்குச் சில காட்டுகள் பின்வருமாறு.
ஜெயங்கொண்ட அந்நாட்டில்
சனிபகவான் தொல்லையிலை
வளங்கொண்ட வளநகரில்
வஞ்கசரின் நெஞ்சமிலை
நயங்கொண்ட நன்மக்கள்
நாவென்றே நீதிசபை
பயமென்ற பேச்சறியா
பொன்னாடு அந்நாட்டில்
(எஸ்.டி.சுந்தரம், வானமுதம் ப.33)
என்ற நிலையில் சனி என்ற தொன்மமும்,
வெள்ளைத் தாமரையில்
வீற்றிருந்த கலைவாணி
வெள்ளித் தாமரையில்
கொலுவீற்றிருக்கிறாள்
(தராபாரதி கவிதைகள்.ப..306)
என்று கல்வி வியாபாரத்தில் சிறக்கும் கலைமகள் காட்சி பற்றி அறிவி்க்கும் தொன்மமும் இவ்வகையில் சான்றுகளாகின்றன.

அரிச்சந்திரன் பற்றி பின்வரும் தொன்மம் இக்காலத்தில் உண்மைக்கு மதிப்பில்லை என்பதைக் காட்டுவதாக உள்ளது.
‘‘அரிச்சந்திரா உனக்கு
ஆனகதி பார்த்தாயா?
ஒரு சந்தி யில்கூட
உனக்குச் சிலையில்லை,
நியாமாய் ஊருக்குள்
நிற்கவேண் டியஉன்னை
மாயானத்தில் கொண்டுவைத்த
மர்மமென்ன புரிகிறதா?” (தாராபாரதி கவிதைகள்,ப. 270)
இவ்வாறு பல்வேறு தொன்மங்களை ஆக்கநிலைத் தொன்மங்களாக மரபுக் கவிஞர்கள் படைத்துள்ளனர்.

தொன்ம ஒருங்கிணைப்பு

தொன்மங்களால் சமயச் சண்டைகள் எழலாம் என்ற நிலை ஏற்படுவதனைக் கண்கூடாகக் கண்ட கவிஞர்கள் அனைத்துக் கடவுளர்களையும் ஒன்றாகக் காணும் தொன்ம ஒருங்கிணைப்பினையும் செய்துள்ளனர். இதுவே இக்காலத்தின் சிறப்பான நிலை என்று கருதத்தக்கது.
நாமக்கல் கவிஞர் இறைவடிவங்கள் பலவானாலும் ஒன்றே கடவுள் என்கிறார்.
‘‘அல்லாவாய்ப் புத்தனாகி
அரனரி பிரம்மனாகி
அருளுடைச் சமணர் தேவும்
அன்புள்ள கிறிஸ்துவாகிக்
கல்லாத மனத்திற் கூடக்
காணாமல் இருப்பா ரந்தக்
கடவுளென் றுலகம் போற்றும்
கருணையைக் கருத்தில் வைப்போம்”
(நாமக்கல் கவிஞர் பாடல்கள். ப.2)
கடவுள் தரும் கருணை ஒன்றே என்ற அடிப்படையில் கடவுள் தொன்மங்களை ஒருங்கிணைத்துக் காண்கிறார் நாமக்கல்லார்.

பாரதியாரும் இப்பொது ஒருங்கிணைப்புக்கு வழிகோலுகிறார்.
‘‘மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங்கதைகள் சேர்த்துப் – பல
கள்ள மதங்கள் பரப்புதற்கோர் மறை
காட்டவும் வல்லீரோ
ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்
உணர்வெனும் வேதமெலாம் என்றும்
ஒன்று பிரம முளதுண்மை அ.ஃதுன்
உணர்வெனக் கொள்வாயே” (பாரதியார், அறிவே தெய்வம் 8-9)
என்ற நிலையில் பாரதியின் பிரம்மம் ஒன்றாய் நிற்கிறது.
தாராபாரதி மதங்களால் சிதறுண்டு கிடக்கும் மனிதரை அவரவர் எல்லை விட்டு இறங்கிவந்துப் பழகச் சொல்கிறார்.
‘‘இந்துமதம் இந்தியாவின்
இதயம் என்றால்
இஸ்லாமும் கிறித்தவமும்
நுரையீரல்கள் மனிதா
இந்துவா நீ இணங்கி வா
பள்ளிவாசலில் நகாரை முழக்கு
இஸ்லாமியனா இணைந்துவா
மாதகோயிலில் மணியடிக்கப் போ
கிறித்தவனா நீ எழுந்துவா
இந்துகோயிலில் அகல் விளக்கேற்று (தாராபாரதி கவிதைகள் ப.326)
என்று மதங்கள் இணையும் சங்கிலித்தொடராக தொன்மக் குறியீடுகளை ஒருங்கிணைத்து முழங்குகிறார் தாராபாரதி.

இவ்வாறு தொன்மங்களை அறிமுகம் செய்து அவற்றை ஒன்றாக்கி மக்கள் பிரிவினை அற்று வாழ வழி செய்கின்ற பணிகளை மரபுக்கவிஞர்கள் ஆற்றியுள்ளனர். தெய்வங்கள் வேறானாலும் அவற்றினுள் உள்ள தெய்வத்தன்மை ஒன்றே என்பது இங்குக் கவிஞர்களின் வழி அறியத்தக்கக் கருத்தாக உள்ளது.

விமர்சன நோக்கில் தொன்மங்கள்

தொன்மங்களை நேர்நிலையில் பயன்படுத்திய மரபுக்கவிஞர்கள் ஒரு புறம் என்றாலும், எதிர் நிலையில் பயன்படுத்திய மரபுக்கவிஞர்களும் தற்காலத்தில் நிலவினர். குறிப்பாக பாரதி நேர்நிலையில் தொன்மங்களைப் பயன்படுத்தினார் என்றால் எதிர்நிலையில் நின்று பாரதிதாசன் தொன்மங்களைக் கையாண்டார். இதன் காரணமாக பாரதி வழியில் தொன்மங்களை அணுகிய கவிஞர்கள் ஒருபுறமும், பாரதிதாசன் வழியில் தொன்மங்களை அணுகிய கவிஞர்கள் ஒருபுறமும் தற்கால மக்களைத் தம் படைப்புகளால் விழிப்படையச் செய்தனர்.

குறிப்பாக பகுத்தறிவுத் தளத்தில் இயங்கிய கவிஞர்கள் தொன்மங்களை விமர்சிக்கும் நிலையில் அவற்றை மறுக்கும் நிலையில் தம் படைப்பாக்கங்களைச் செய்துள்ளனர். அவர்களில் சிலரை இங்குத் தொட்டுக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கத்தை வலுப்பெறச் செய்வதாக உள்ளது.

சஞ்சீவி பர்வதத்தின் சாரல், எமனை எலி விழுங்கிற்று, தீபாவளியா, அகத்தியன் விட்ட புதுக்கரடி போன்றன பாரதிதாசனின் படைப்புகள் தொன்மங்களை விமர்சிக்கும் வலிமை பெற்றனவாகும்.
‘‘ராமனெங்கே ராமன் அருளெங்கே சஞ்சீவி
மாமலையைத் தூக்குமொரு வல்லமை எங்கே இவற்றில்
கொஞ்சமும் உண்மை இருந்தால் நாம் கொத்தவரைப்
பிஞ்சுகள் போல் வாடிப் பிழைப்பதரிகாகி
அடிமையாய் வாழோம ஆண்மை இன்றி
மிடிமையில் ஆழ்ந்து விழியோமே” (பாரதிதாசன் சஞ்சீவிபர்வத்தின் சாரல்,ப.24)
என்ற நிலையில் இராமாயணத்தை, இராமனை,அனுமனை, மருந்துமலையை விமர்சிப்பதாக சஞ்சீவி பர்வதத்தின் சாரல் அமைந்துள்ளது.

‘‘நரகனைக் கொன்ற நாள் நல்விழாநாளா
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு
நரகன் என்பவன் நல்லவனா தீயவனா
அசுரன் என்றவனை அறைகின்றாரே
இராக்கதன் என்றும் இயம்புகின்றாரே
இப்பெயரெல்லாம் யாரைக்குறிப்பன
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னுகின்றார் என்பது பொய்யா
இவைகளை நாம் எண்ண வேண்டும்”
(பாரதிதாசன் , தீவாளியா. ப. 219)
என்ற பாடலில் அரக்கர், நரகர், ராக்கதர், தேவர், நகரகாசுரன், திருமால் போன்ற தொன்மங்கள் விமர்சனத்திற்கு உள்படுத்தப்பெற்றுள்ளன.

இவ்வாறு விமர்சன நிலையில் தொன்மங்களை அணுகும் முறைமையைப் பாரதிதாசன் தொடங்கிவைக்கிறார்.
ஒட்டிய வயிறு
கொட்டும் கண்ணீர்
உயிரொடு போராட்டம்
கட்டத் துணியும்
வாழும் இடமும்
காணாதவர் கோடி
இவர்களைப் பற்றி
எண்ணா தந்தோ
எங்கோ உள்ளதுவாம்
சுவர்க்கம் கடவுள்
தொழுவீர் என்னும்
சுரண்டல் கூட்டங்கள் (த. கோவேந்தன், புதியதோர் உலகு செய்வோம்ப. 24)
என்று கடவுள், சுவர்க்கம் போன்ற தொன்மங்களை விமர்சனப் படுத்தி தொழிலாளர் நன்மை பெறும் உலகமே நல் உலகம் என்கிறார். த,கோவேந்தன்.

உடுமலை நாராயணகவி இறைவன் தன் பணியைச் சரியாகச் செய்யாமல் தூங்குவதாக கவிதை படைக்கிறார்.
எளியோர் மனம் படும் பாட்டிலே
எழும் ஓசையாம் தாலாட்டிலே
ஆண்டவன் ஆகாசமதில் தூங்குகின்றாரே –தினம்
மாந்தரெல்லாம் மாநிலமேல் ஏங்குகின்றாரே –வளர்
பார்தனில் யாரும் பகவான் பெற்ற பேரே – எனில்
பகைமையோடு பாகுபாட்டைப் படைத்தவர் யாரே
தாழ்ந்தோருயர்தோராக மக்கள் வாழுகின்றாரே சிலர்
தனவந்தார் பலர் தரித்திரராயக் காணுகின்றாரே
(உடுமலை நாராயணகவிபாடல்கள்,ப.147)
பகுத்தறிவுவாதிகள் மேலுலக சொர்க்கத்தின் இன்பங்களை இவ்வுலகத்திலேயே காண இயலும் என்றும் கவிதை புனைந்துள்ளனர். உடுமலை நாராயண கவி சொர்க்கம் என்னும் தொன்மச் சிறப்பினை இங்கு காண முனைகிறார்.

‘‘நூலோர் சொல்லும் சொர்க்கம் மேலோகந்தான்-அன்பின்
மேலோர் கண்ட சொர்க்கம் பூலோகந்தான்
வேதாந்தியின் சொர்க்கம் விண்ணாட்டிலே அது விண்ணாட்டிலே
விவசாயி காணும் சொர்க்கம் இந்நாட்டிலே”
(உடுமலை நாராயணகவி பாடல்கள், ப.149)
இவ்வகையில் தொன்மங்கள் விமர்சிக்கப்பட்டாலும் அவை கவிஞர்களின் மனதில் பதிந்து கிடக்கும் மூலபடிமங்களின் வெளிப்பாடுகள் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

தொடர்ந்து மரபுக்கவிஞர்களின் ஆக்கங்கள் தொகுக்கப்பெற்று அவர்கள் பயன்படுத்திய தொல் படிமங்கள் சேகரிக்கப்பெற்று ஆராயப் பெற்றால் மூல தொல் படிமத்தை அறிந்து கொள்ள இயலும். இக்கட்டுரையின் வழியாக தாய், தந்தை, கற்பு, கொடை, அதிகாரம் போன்ற ஐந்து அடிப்படை தொல் படிமக் கூறுகள் கண்டு கொள்ளப்பெற்றன. நேர்நிலை, எதிர்நிலை என்ற இரு நிலைகளில் தொன்மங்கள் சிறப்பு நிலையில் மரபுக்கவிஞர்கள் கையாண்டிருந்தாலும் முன் காட்டிய ஐந்து அடிப்படைத் தொல் படிமக் கூறுகளில் அவை அணைத்தும் பொருந்தி உள்ளாக நிற்பதை உணரமுடிகின்றது.

தொகுப்புரை

தொன்ம ஆய்வு என்பது மூல வடிவத்தைத் தேடிப் போகும் ஆய்வாகும். தமிழ்க்கவிஞர்கள் உலக அளவில் தொன்மங்களாக விளங்கும், தாய், தந்தை, கற்பு, கொடை, அதிகாரம் ஆகிய ஐந்து தொல்படிமங்களின் வழிப்பட்டு நின்றுள்ளனர். மேலும் தொன்மங்களை நேர் நிலையிலும், எதிர் நிலையிலும் நோக்கும் இருவகை நோக்குத் தற்கால மரபுக்கவிஞர்களிடம் காணப்படுகிறது. பாரதி நேர்நிலைத் தொன்ம பயன்பாட்டின் தோற்றுநராகவும், பாரதிதாசன் எதிர் நிலை தொன்மபப் பயன்பாட்டின் தோற்றுநராகவும் வழிநடத்திச் செல்கின்றனர்.

சிவன், திருமால் ஆகிய இரு பெரும் தொன்ம வடிவங்கள் கவிஞர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து கிடக்கின்றன. இவையிரண்டிற்குள் அனைத்துத் தொன்மங்களையும் தொடர்பு பட அமைத்துக்கொள்ள இயலும். இருப்பினும் இவ்விரு நிலைகளைக் கடந்து அனைத்து சமயம் சார் கடவுளர்களையும் இணைத்து ஒரே தெய்வசக்தியாகக் காணும் வல்லமையைத் தமழ்க்கவிஞர்கள் ஏற்படுத்தித் தருகின்றனர்.

தொன்மங்கள் பலவானாலும் அவற்றில் இதிசாகச் பின்புலம், இந்தியத் தன்மை, சமகால ஒப்பீடு போன்ற பாங்குகள் இணைந்து சிறக்கின்றன. இவ்வகையில் தமிழ்க்கவிதை உலகினைக் காண்பது மூல படிமத்தை நோக்கி அழைத்துச்செல்லும் ஆய்வாக அமையும்.

பயன் கொண்ட நூல்கள்

அமுதன் முதலானோர் (ப. ஆ), உடுமலை நாராயண கவி பாடல்கள், கே.சி பழனிச்சாமி.உடுமலை 1999
ஆனந்தம், பூக்காடு, குலோத்துங்கன் பதிப்பகம், சென்னை, இரண்டாம் பதிப்பு 1972
இராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் கவிஞர், நாமக்கல் கவிஞர் பாடல்கள், சீதை பதிப்பகம், சென்னை, 2008
உழவன். உஞ்சனை. வியர்வைநதி, சுப்பிரமணியன் பதிப்பகம், உஞ்சனை, 2011
கோவேந்தன்,த., புதியதோர் உலகம் செய்வோம், இளங்கோ பதிப்பகம், சென்னை, 1932
சவகர்லால்,ச. நெஞ்சக்கனல், பழனியம்மாள் வெளியீடு, சென்னை, 2009
சி்ங்கார வேலு முதலியார், அபிதான சிந்தாமணி, சீதைபதிப்பகம், சென்னை, 2008
சுந்தரம்.எஸ்.டி. வானமுதம் ஆண்டவன் நூலகம் சென்னை, 1964
சுரதா, அமுதும் தேனும் ,சுவாதி பதிப்பகம், சென்னை, 2005
செல்லப்பன், புதுவயல், மனத்தின் மகரந்தங்கள்,புதுவயல் பதிப்பகம், சென்னை, 2000
செல்லப்பன்.புதுவயல், எண்ணச் சிலைகள், புதுவயல் பதிப்பகம், சென்னை, 1999
நடராசன். தி.சு., இலக்கியத்திறனாய்வியல், நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2009
பஞ்சாங்கம்,க. தொன்மத்திறனாய்வு, அன்னம் பதிப்பகம், தஞ்சாவூர், 2005
பரிணாமன்.பாட்டுத் திறத்தாலே, ராகுல்ஜி கல்வி அறக்கட்டளை, மதுரை, 2012
பாரதிதாசன், பாரதிதாசன் கவிதைகள், அருணா பப்ளிகேசன்ஸ், சென்னை, நான்காம் பதிப்பு, 2016
பாரதியார், பாரதியார் கவிதைகள், சுவாமிமலை பதிப்பகம்,சென்னை, ஐந்தாம் பதிப்பு 2016
பாலசுப்பிரமணியன்.சிற்பி., சிற்பி கவிதைகள், முதல் தொகுதி, நியு செஞ்சுரி புக்ஹவுஸ். பி. லிட், சென்னை, ஜீலை 2011
பெருஞ்சித்திரனார், பாவலரேறு. கனிச்சாறு, தென்மொழி அச்சகம்,சென்னை, மறுபதிப்பு 1999
மலர்மகன் (ப.ஆ), கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள், இலக்கிய வீதி சென்னை, 2007
முத்துச்சாமி,தமிழன்பன், ப, பெண்கள் உலகின் கண்கள், தணிகைப் பதிப்பகம், சேடர் பாளையம்.2011
ராமசாமி.கு.செ. கனல் மணக்கும் பூக்கள், ஸ்ரீசரசுவதி பதிப்பகம், கோயம்புத்தூர், 2012


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மரபுக் கவிதைகளில் தொன்மங்களின் தாக்கம்”

அதிகம் படித்தது