ஜூலை 4, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

மறந்த மருத்துவம்

நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,கோவை.

Feb 3, 2018

siragu iyarkai maruththuvam

“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்னும் பழமொழிக்கேற்ப வாழ்வின் சிறந்த செல்வமாகக் கருதப்படும் நோயில்லாமல் ஆரோக்கியமாக வாழ்வெதென்பது இன்றைய சூழலில் எட்டாக் கனியாக உள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நம் வாழ்க்கை முறைதான். நமது உணவு முறையும், மருத்துவ முறையும் நாகரிகத்தை நோக்கிச் செல்ல செல்ல நமது ஆரோக்கியம் இழிநிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை முறையையும் சித்த மருத்துவத்தின் மகத்துவத்தையும் உணர்ந்து வாழ்க்கை நடத்தி வந்த நம் முன்னோர்கள் நம்மை விட ஆரோக்கியத்துடனும், ஆயுளுடனும் வாழ்ந்து வந்தனர். நமது இன்றைய நிலைக்கான சில காரணங்களையும், சில எளிய மருத்துவ முறைகளையும் இக்கட்டுரையில் காண்போம்.

சமையல் அறை மாற்றங்கள்

விளம்பர வாழ்க்கை வாழ விரும்பும் நாம் விளம்பரங்களைப் பார்த்து நமது வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொண்டுள்ளோம். மண்பானைகளாலும், கண்ணாடி பாட்டில்களாலும், உலோக உபகரணங்களாலும் நிறைந்த நம் சமையலறையை இன்று ஆடம்பர அலங்காரத்திற்காக பிளாஸ்டிக் பாட்டில்களாகவும், Nonstick, Airtight container பாத்திரங்களாகவும் மாற்றியுள்ளோம். உப்பு, புளி, ஊறுகாய் போன்றவை பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைத்து உபயோகப்படுத்துவது நமக்கு நாமே விசம் உண்பதற்கு சமம் என்று தெரிந்தும் பிளாஸ்டிக் ஜார்களில் விளம்பரப்படுத்திய ஊறுகாயைத்தானே வாங்கி பயன்படுத்துகிறோம். பிளாஸ்டிக் பாட்டில்களில் சூடான பொருட்களை ஊற்றுவது அதன் விசத்தன்மையைத் தரும் என்று தெரிந்திருந்தும் குழந்தைகளுக்கு பல வண்ணங்களில் பாட்டில்களை வாங்கி அதில் சுடச்சுட நீரை ஊற்றிக் கொடுத்து பள்ளிக்கு அனுப்புகிறோம்.

siragu iyarkai maruththuvam3

வீட்டில் உபயோகப்படுத்தும் குடம், பாட்டில்கள் போன்றவற்றில் தண்ணீர் ஊற்றி ஒரு வாரமாகிவிட்டால் அதை பயன்படுத்த யோசிக்கிறோம் என்றோ எப்போதோ நிறைத்த பிளாஸ்டிக் தண்ணீர் கேனை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறோம். இந்த சின்னச்சின்ன ஆடம்பர விசயங்களே நம் ஆரோக்கியம் கெட அடித்தளமாகின்றன. மண்பானை, இரும்பு தோசைக்கல், இரும்புச் சட்டிகள், வெண்கலக் கரண்டிகள், செம்புக்குடம், பித்தளை பாத்திரங்கள் என உலோகங்களால் அலங்கரித்த அன்றைய நம் சமையல் அறை நம் ஆரோக்கியத்திற்கு பாதுகாப்பு வளையமாக இருந்தது. உலோகங்களை தூக்கி எறிந்ததன் பயன் அயன் சத்துக் குறைபாடு, கால்சியம் பற்றாக்குறை, என பல சத்துக்கள் குறைபாட்டால் அனைத்திற்கும் மருந்துகளைக் கொண்டு அலங்கரிக்கிறது நம் படுக்கையறை.

உணவு முறை மாற்றங்கள்

கவர்ச்சிக்காகவும், ருசிக்காகவும் பல கலவைகளை இட்டு பல்வேறு விதமாகவும் வடிவத்திலும் கிடைக்கின்ற உணவுகளை வாங்கி உண்ணும் நாகரிகத்தை நாம் ஒழிப்போமானால் நம் ஆரோக்கியமும் பாதுகாக்க முடியும். பாக்கெட்டில் அடைத்து விற்கும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம் ஏன் முளைகெட்டிய தானிய வகைகளுக்குத் தருவதில்லை. இரண்டு நிமிடத்தில் தாயராகும் Instant food என்ற விளம்பரத்தை மட்டுமே நம்பி அரை மணி நேரம் அது வேகும் வரை காத்திருக்கும் நாம் குழந்தைகளுக்கு தானியவகைகளை வேகவைத்துக் கொடுக்க நேரமில்லையே.

பாக்கெட் உணவின் ருசியறிந்த குழந்தைகளுக்கும் நமது உணவு பிடிப்பதில்லையே. அதற்கு காரணமும் நாமே. நமக்கு அலுவலகம், வீட்டு வேலை என நேரப்பற்றாக்குறைக்காக பாக்கெட் உணவை உண்ண வைத்துதானே ஆரம்பத்திலிருந்து பழக்குகிறோம். இம்முறையை மாற்ற பெற்றோராகிய நாமே முழு கவனம் செலுத்த வேண்டும்.

வீட்டு முற்ற மூலிகைகள்

siragu iyarkai maruththuvam4

சித்த மருத்துவம் என்றாலே பல மூலிகைகளை அரைத்துப் பிழிந்து சாறெடுத்து பயன்படுத்த வேண்டும் அதற்கு மூலிகைச் செடிகளுக்கு எங்கு செல்வது என்றெல்லாம் கிடையாது. நாம் அன்றாடம் பயன்படுத்துகின்ற பொருட்களை வைத்தே சில நோய்களுக்கு மருந்து தயாரிக்கலாம். இன்று நாம் தங்கியிருக்கும் ஃப்ளாட்களில் எங்கு போய் மூலிகைச்செடிகளை வளர்த்துவது என்ற கவலை நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும். நமக்கு அத்தியாவசியமான சில செடிகளை வளர்த்தாலே போதும் ஓரளவு மருந்துகளை வீட்டிலேயே தயாரிக்கலாம். குழந்தைகள் இருக்கின்ற வீட்டில் ஒரு தொட்டியில் துளசிச்செடியையும், ஒரு தொட்டியில் கற்பூர வல்லிச் செடியையும் வளர்த்தாலே போதும். சின்னச்சின்ன விசயங்களுக்குக்கூட மருத்துவரை சந்திப்பதை தவிர்க்கலாம்.

சில எளிய மருத்துவ முறைகள்

சித்த வைத்தியம், பாட்டி வைத்தியம், பாரம்பரிய வைத்தியம் என பல பெயர்களில் பல மருத்துவ முறைகள் இன்று உள்ளன. பெயர்ப்பலகையை கண்டு பணம் செலவழிக்கும் நாம் சில வைத்திய முறைகளை வீட்டிலேயே செய்தோமானால் மருத்துவரை அடிக்கடி சந்திப்பதை தவிர்க்கலாம்.

சளித்தொல்லை

குழந்தைகள் முதல் பெரியவர் வரை உடனடியாக ஒட்டிக்கொள்ளும் ஒரு நோய் சளித்தொல்லை. சளித்தொல்லை வந்தவுடன் உடனே குழந்தைகளை மருத்துவரிடம் அழைத்துச்செல்லும் நாம், மணிக்கணக்கில் காத்திருந்து nebulizerவைக்கும் நாம் வீட்டிலேயே சில வழிமுறைகளை மேற்கொள்ளலாம்.

வீட்டிலேயே செய்யக்கூடிய சில எளிய மருத்துவ முறைகளைக் காண்போம்.

1. துளசிச்சாற்றை வெறும் வயிற்றில் கொடுக்க சளித்தொல்லை குறையும்.

2. கற்பூரவல்லி இலையையும் சீரகத்தையும் கொதிக்கவைத்து குடிக்க நெஞ்சுச் சளி கரையும்.

3. ஓமம், பனங்கற்கண்டு, மிளகு இவற்றை பாலில் போட்டு காய்ச்சி காலை மாலை குடிக்க சளி குறையும்.

4. மிளகை ஊசியில் குத்தி தீயில் காண்பித்து அந்தப் புகையைப்பிடிக்க மூக்கடைப்பிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

5. தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிறிது மஞ்சள் தூளையும் யூகாலிப்ஸ் தைலம் சில துளிகளையும் விட்டு ஆவி பிடிக்க நெஞ்சு சளி குறையும். nebulizer வைத்த பலன் கிடைக்கும்.

6. வேப்ப இலையை சிறிது எடுத்து அரைத்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் பூச்சி தொல்லை நீங்கும்.

7. வெற்றிலைச்சாறு எடுத்து அதனுடன் சுக்கு, மிளகு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட சளி குறையும்.

8. கறிவேப்பிலையை தினமும் காலை சாப்பிட்டு வர நோய்எதிர்ப்பு சக்தி கூடும்.

9. கறிவேப்பிலை, சுக்கு, மிளகு, சீரகம், கொத்தமல்லிவிதை இவற்றை சம அளவு எடுத்து வறுத்து கசாயம் வைத்துக் குடித்தால் வரட்டு இருமல் குறையும்.

10. செம்பருத்திப் பூவை தண்ணீர் விட்டு சுண்ட காய்ச்சித் தினமும் காலையில் குடிக்க இதயம் வலிமை பெறும்

மருத்துவமனைகளும், மருத்துவமுறைகளும், நோய்களும் பெருகியுள்ள இக்காலத்தில் நாம் மருத்துவரை அணுகாமல் இருப்பது என்பதும் முடிகின்ற காரியம் இல்லை. சில நோய்களுக்கு அவர்களை அணுகத்தான் வேண்டி வரும். நோய் என்ன என்று கண்டறிய முடியாமலும் போதுமான சிகிச்சை கிடைக்காமலும் மரணமடைந்த சதவிகிதத்தைவிட இன்று நோய்வாய்ப்பட்டு இறக்கின்ற சதவிகிதம் அதிகம். இதற்கு முக்கியக் காரணம் நமது வாழ்க்கை முறையே. ஆரோக்கியமான அக்கால வாழ்க்கை முறையை நாம் திரும்பப் பெறுவது கடினம். முடிந்தவரை நம் வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக மாற்றுவோம்.


நா.தீபாசரவணன் உதவிப்பேராசிரியர் ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,கோவை.

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மறந்த மருத்துவம்”

அதிகம் படித்தது