சனவரி 23, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

மறவோம் சமூக நீதிக்காவலர் – வி பி சிங்!!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jun 27, 2020

siragu v.p.singh
ஜூன் 25, 1931 வி பி சிங் பிறந்த நாள்!! தமிழ் நாட்டில் சமூக நீதி சிந்தனை உள்ள ஒவ்வொருவரும் மறக்க முடியாத பெயர்.

“மண்டல் காற்று வீசுவதை நீங்கள் யாரும் தடுத்துவிட முடியாது இனி, இதற்காக ஒரு முறை என்ன நூறு முறை வேண்டுமானாலும் எனது பிரதமர் நாற்காலியை இழக்கத் தயார்!” என்று சமூக நீதியின் தூணாக நின்று உரத்த குரல் கொடுத்தவர். அந்தக் குரல் தான் வட நாட்டுக் கமண்டலங்களை நடுங்கச் செய்தது.

வெறும் 11 மாதங்கள் மட்டுமே இந்தியாவின் பிரதமராக இருந்தார். ஆனால் 2020 இல் கூட அவர் பெயரை மக்கள் மறக்கவில்லை, குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றுமே மறக்க முடியாது. நடுவண் அரசு வேலை வாய்ப்புகளில் மண்டலின் பரிந்துரையை ஏற்று, 27% இட ஒதுக்கீடு இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இந்தியா முழுவதும் கொண்டு வந்தவர் அல்லவா? சமூக நீதியைச் செயல்படுத்தினார் என்ற காரணத்திற்காகவே தன் ஆட்சியை இழந்தவர் அல்லவா?

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் பிறந்திருந்தபோதும் அவர் எளிமையாகவே வாழ்ந்தார், மக்களுக்கு வேண்டியதைச் செய்யும் ஒரு மகத்தான தலைவராக உயர்ந்தார். 1969-ல் தேர்தல் அரசியலில் நுழைந்து உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்! அங்கிருந்து அவரின் அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வு தொடங்கிற்று. 1971 இல் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். 1974 இல் இந்திரா காந்தியால் அவர் அமைச்சரவையில் இணை வர்த்தக அமைச்சராக நியமிக்கப்பட்டார். நெருக்கடிக் காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டு, பதுக்கல்களைக் கட்டுப்படுத்தி விலைவாசி உயர்வைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். ஒரு அணுசக்தி விஞ்ஞானியாக உருவாக வேண்டும் என்று விரும்பியவர், 1980 இல் உத்திர பிரதேசத்தின் முதல் அமைச்சரானார்.

உத்தரப்பிரதேசத்தின் தென்மேற்கு மாவட்ட மக்கள் வழிப்பறி, கொள்ளை இவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். முதல்வரானதும் வழிப்பறி, கொள்ளையைத் தடுக்க கடும் நடவடிக்கை மேற்கொண்டார் வி.பி.சிங். அவர்களைத் தண்டனை என்ற அளவில் மட்டும் அணுகாமல் மறுவாழ்விற்கான நிலையையும் ஏற்படுத்த விரும்பினார். இந்தப் போராட்டத்தில் அவருடைய சகோதரர் கொலைசெய்யப்பட, எந்த வாக்குறுதியைக் கொடுத்து முதலமைச்சராக வந்தேனோ அதை நிறைவேற்ற முடியவில்லை என்று (கொள்ளையர்களைக் கட்டுப்படுத்துதல்) உத்தரப்பிரதேச முதல்வர் பதவியை, பதவியேற்ற இரண்டு வருடங்களில் ராஜினாமா செய்தார் வி.பி.சிங்.

பின், ராஜீவ்காந்தியின் அமைச்சரவையில் நிதியமைச்சர் ஆனார் வி.பி.சிங். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்தார். திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப்பச்சனின் சகோதரர் எனப் பலரும் அவரது நடவடிக்கைகளிலிருந்து தப்பவில்லை. அவரின் நேர்மையின் காரணமாக அந்தப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். பின், வி.பி.சிங்கை பாதுகாப்புத்துறை அமைச்சராக்கினார் ராஜீவ்காந்தி. இந்த நேரத்தில், ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்வீடன் வானொலி அறிவிக்க, பிரதமர் ராஜீவ்காந்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால், இம்முறை துறை மாற்றத்திற்குப் பதில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். உடனே வி.பி.சிங், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் கட்சி உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

மக்களவையிலிருந்து விலகியதும், ‘ஜனமோர்ச்சா’ என்ற கட்சியைத் தொடங்கினார். இருசக்கர வாகனத்தை மக்களோடு மக்களாகப் பயணித்து அலகாபாத் மக்களவை தேர்தலில் வென்றார். அக்டோபர் 11 அன்று 1988-ல் ஜனதா தளம் என்ற புதிய கட்சியைத் தோற்றுவித்தார். ஜனதா தளத்திற்கு வி.பி.சிங் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலக் கட்சிகளான தி.மு.க, தெலுங்கு தேசம், அஸ்ஸாம் கன பரிஷத் ஆகியவற்றுடன் இணைந்து, தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது. அப்போது நிலவிய அரசியல் சூழலில், வி.பி.சிங் ஒரு முக்கியத் தலைவரானார். அவரின் பதவிக் காலத்தில் தான் பாபா சாகேப் அம்பேத்கருக்கு ‘பாரத ரத்னா’ பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்ததும்.

“கோயிலுக்குள் கொண்டுவரக் கூடிய சிலையை வடித்த சிற்பிக்கு கர்ப்பக் கிரகத்தில் அனுமதி இல்லை. அதுபோல, அரசியல் சட்டத்தை வடித்த சிற்பியான அண்ணல் அம்பேத்கருக்கு பாராளுமன்றத்திற்குள் அனுமதி இல்லை என்கிற நிலை. அதை உடைக்கவே பாராளுமன்றம் என்ற கர்ப்பக்கிரகத்திற்குள் டாக்டர் அம்பேத்கார் சிலை நிறுவினோம்” என்று முழங்கியவர் வி பி சிங்!

1990 ஆம் ஆண்டு ராம ர(த்)த யாத்திரையை அத்வானி மேற்கொண்டபோது, மதக் கலவரத்தைத் தூண்டும் விதமாக அந்த ரத யாத்திரை இருந்ததால், உத்திர பிரதேச எல்லையில் நுழையும்முன் லாலு அவர்களால் வி பி சிங் அவர்களின் கட்டளைப்படி அத்வானி கைது செய்யப்பட்டார். அதனால் பாஜக வி பி சிங் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.

மதக் கலவரத்தை வி பி சிங் தடுத்தார் என்ற கோபம் ஒரு புறம் இருந்தாலும், முக்கியமாக அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மண்டல் பரிந்துரையை அவர் துணிச்சலாக அமல் படுத்திய காரணமும் அவரின் பதவி இழப்பிற்குக் காரணம்.

“எனது கால்கள் உடைக்கப்பட்டு இருக்கலாம் ஆனால் நான் எனது இலக்கை என்றோ அடைந்து விட்டேன்” என்று பாராளுமன்றத்தில் கம்பீரமாக முழங்கியவர். பிரதமர் பதவியை விட நாட்டின் ஒற்றுமையே முக்கியம், நாங்கள் பெருமைப்படுகிறோம், மரியாதையுடன் வெளியேறுகிறோம்”, எனத் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு ஆற்றிய உரை என்றும் வரலாற்றில் இடம் பெறும். தமிழ்நாடு ஒரு போதும் வி பி சிங் அவர்களை மறக்காது.

பின், 2006-ம் ஆண்டு ஜனமோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கினார். 2006-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தின் தாத்ரி பகுதியில், விவசாயிகளின் நிலங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியதைக் கண்டித்து, தீவிரமான போராட்டங்களில் பங்கெடுத்தார். பிரதமர் பதவியைவிட்டு விலகும்போது, “பிரதமர் பதவியைவிட முக்கியமானது தேசத்தின் ஒற்றுமை” என முழங்கிய வி.பி.சிங், கடைசி வரை அதுபோல வாழ்ந்தும் காட்டினார்.

அவரின் அரசியல் பயணம் பல சவால்களைக் கொண்டது. அவரின் மற்றொரு முகம், அவர் ஒரு கவிஞர்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ், “V P Singh was meant to be a dreamer, a poet, an artist; it was bad luck he ended up as prime minister” என்று எழுதியது. அது பார்ப்பனியத்திற்குக் கெட்ட வாய்ப்பாக இருக்கலாம் ஆனால் பார்ப்பனர் அல்லாத மக்களுக்கு என்றென்றும் பெரும் வாய்ப்பு வி பி சிங் அவர்கள் !!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மறவோம் சமூக நீதிக்காவலர் – வி பி சிங்!!”

அதிகம் படித்தது