சனவரி 16, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

மறுபிறப்பு

முனைவர். ந. அரவிந்த்

Oct 3, 2020

siragu marupirappu
மறு பிறப்பு பற்றி திருக்குறளில் வள்ளுவர் பெருமான், ‘மெய்யுணர்தல்’ என்ற அதிகாரத்தில், குறள் எண் 357 ல் கீழ்கண்டவாறு கூறியுள்ளார்.

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு – குறள் 357

இதன் விளக்கம் யாதெனில், “உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்பவர்கள் மீண்டும் பிறப்பு உண்டு எனக் கருத மாட்டார்கள்”.
மற்றொரு குறளில், வள்ளுவர் பெருமான் கற்கும் கல்வியின் பெருமையை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒருமைக்கண்தான்கற்றகல்விஒருவற்கு
எழுமையும்ஏமாப்புஉடைத்து – குறள்398

இதன் விளக்கமாக சிலர், ‘ஒருவன் கற்ற கல்வியானது, அவன் வாழ்நாள் முழுவதும் மட்டும் அல்லாமல், அவனுடைய எழு பிறப்பிற்கும் உதவக்கூடியது’ என்று கூறியுள்ளார்கள்.

இது சாத்தியமா என்பதை இப்பொழுது பார்ப்போம். ஒருவன் இந்த பிறவியில் மனிதனாக பிறந்து நன்கு கல்வி கற்று பட்டம் பெற்றுள்ளான். அடுத்த பிறவியில் அவன் ஒரு பறவையாகவோ அல்லது விலங்காகவோ பிறக்கிறான். இப்பிறவியில் அவன் கற்ற கல்வியானது, அடுத்த பிறவியில் அவனுக்கு அதாவது ஒரு பறவைக்கு அல்லது விலங்கிற்கு எப்படி பயன்படும்? இந்த குறளில் வள்ளுவர் குறிப்பிட்டுள்ள ‘எழுமை’ என்ற வார்த்தை ஏழு தலைமுறையினைக் குறிப்பதாகும். இப்பிறவியில் கல்வி கற்ற ஒருவன், அதனால் பெற்ற அறிவாலும் மற்றும் ஈட்டிய பொருளாலும் தன்னுடைய பிள்ளைகளையும், பேரபிள்ளைகளையும் படிக்கவைக்கிறான். இவ்வாறு கற்கும் கல்வியானது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறையாக நன்மை தரக்கூடியது என்பதே இதன் விளக்கம்.

மேற்கண்ட இரண்டு குறள்களையும் வைத்துப் பார்க்கும்போது, நாம் இறந்த பின்னர் மறுபிறப்பு என்று ஒன்று இல்லை என உறுதியாக கூறமுடிகிறது. இறைவனால், மனிதனுக்கு இவ்வுலகில் வாழ ஒரு முறைமட்டுமே சந்தர்ப்பம் கிடைக்கிறது.

ஆனால், ‘ஒருவன் உயிரோடு வாழும் காலத்திலேயே, மறுபடியும் ஒரு முறை பிறக்க வேண்டும்’ என்பது இறைமகன் வாக்கு. மனிதன் பிறக்கும் போதும் மற்றும் குழந்தையாக இருக்கும்போதும் கள்ளம் கபடமின்றி இருக்கின்றான். அதே குழந்தை, பெரியவனாக வளரவளர பாவத்திற்கு அடிமையாகி தவறு செய்ய ஆரம்பிக்கின்றான். ஒரு நாள் அவன் செய்த தவறுகளை திருத்திக்கொள்ள இறைவனே மனிதனுக்கு ஞானோதயம் அருளுகின்றான். பூவுலகில் எதுவெல்லாம் பாவமென உணரும் மனிதன், தன்னிடம் உள்ள மொத்த பாவங்களையும் மூட்டைகட்டி புதைத்து அதனை தலை முழுகுகிறான். இச்செயல் ஒவ்வொருவரது வாழ்விலும் ஒரு முறை மட்டுமே நிகழ வேண்டும். இதுவே, வாழும் போதே பிறக்கும் மறுபிறப்பாகும் .சிலர் ,ஒரு நாள் திருந்துவர், மறுமுறை வாய்ப்பு கிடைக்கும்போது மறுபடியும் தவறுவர். இவர்கள் தினமும் செத்துசெத்து பிழைப்பவர்கள். இவர்கட்கு இறைமகனின் வாக்கு செல்லாது.


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மறுபிறப்பு”

அதிகம் படித்தது