ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

மாசுநீக்கி மாண்புறுவோம் (கவிதை)

பாவலர் கருமலைத்தமிழாழன்

Nov 28, 2015

water pollutionஅகமாசோ   அனைத்துவகை   தீமை   கட்கும்

அடித்தளமாய்   அமைகின்ற   கொடிய   மாசு

முகம்பார்த்து   அறிவதற்கும்   முடிந்தி   டாது

முயன்றாலும்   எளிதாகத்   தெரிந்தி   டாது

நகம்போல   வெட்டியதை   எறியா   விட்டால்

நாகம்போல்   கொத்திவிடும்   நஞ்சைக்   கக்கி

தகவாழ்வு   நாம்பெறவே   எண்ணத்   தூய்மை

தாயன்பு     இரக்கமனம்   அமைய   வேண்டும் !

 

புறமாசோ   அனைத்துவகை   நோய்க   ளுக்கும்

புதுவலிமை   ஊட்டுகின்ற   புன்மை   மாசு

நிறம்கண்ணில்     தெரிவதைப்போல்   தெரிந்தே   நாளும்

நீரினையும்   காற்றினையும்   கெடுக்கின்   றோம்நாம்

இறப்பளிக்கும்   மதுகுடித்தல்   போல   கூற்றை

இயற்கையினை   மாசாக்கி   அழைக்கின்   றோம்நாம்

அறம்நம்மைக்   காத்தல்போல்   சுற்றுச்   சூழல்

அருந்தூய்மை   காக்கினது   நம்மைக்   காக்கும் !

 

அழுக்காறு   சினம்ஆசை   சூழ்ச்சித்   தீயை

அகமாசு   பெருக்கிநம்மை   எரித்த   ழிக்கும்

வழுக்கவைத்துப்   புகழ்கெடுத்தே   உலக   மெல்லாம்

வசைபாடப்   புறக்கணித்தே   இழிவு   செய்யும்

உழுதிடும்மண்   வீசுகாற்று   குடிக்கும்   தண்ணீர்

உயிர்பறிக்கும்   நஞ்சாக்கும்   புறத்தின்   மாசு

விழுதுவிடும்   ஆலம்போல்   தழைத்து   வாழ

விளைவிப்போம்   அகம்புறத்தில்   தூய்மை   தன்னை !


பாவலர் கருமலைத்தமிழாழன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாசுநீக்கி மாண்புறுவோம் (கவிதை)”

அதிகம் படித்தது