ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

மாணவர் போராட்டமும், அதன் பின்னணியும்.!

சுசிலா

Jan 28, 2017

Siragu Jallikattu_struggle4

உலகமே வியந்து பார்த்த நம் தமிழ் மாணவர், இளைஞர்களின் அறப்போராட்டம் மிகவும் சிறப்புக்குரியது. சல்லிக்கட்டு எனும் ஏறு தழுவுதல் இந்த ஆண்டும் மறுக்கப்பட்டதின் விளைவாக தடையை மீறி நடத்துவோம் என பல இடங்களில் சிறிதளவேனும் நடந்துகொண்டிருக்கையில், அலங்காநல்லூரில் பொங்கலன்று நடத்த முற்படுகையில், சில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்குமாறு மாணவர்களும், இளைஞர்களும் அறப்போராட்டத்தை கையில் எடுத்தனர். அன்றைக்கு மறுநாளே சென்னையில் மெரினா கடற்கரையில், வெறும் 300 பேர் கொண்ட மாணவர்குழு அறப்போராட்டத்தில் இறங்கியது.!

இப்போராட்டம் ஒரு புரட்சி என்றே கூற வேண்டும். அந்த அளவிற்கு, சாதி, மத வேறுபாடின்றி, பாலினம் கடந்து ஏழு நாட்கள் தொடர்ந்து போராடினார்கள் நம் இளைஞர்கள். இந்த சல்லிக்கட்டுப் போராட்டம், நம் மாநில உரிமைக்கான போராட்டம், நம்மக்களுக்கான போராட்டம், நம் பண்பாட்டிற்கான ஒரு பெரும்போராட்டமாக நடந்தேறியிருக்கிறது. நம் பண்பாட்டின் அடையாள விழாவான பொங்கல் விழாவையொட்டி நடைப்பெறும் இந்த ஏறு தழுவுதல் கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெறவில்லை. விலங்குகள் நல வாரியம் பீட்டாவின் மனு காரணமாகவும், உச்சநீதிமன்றத்தின் தடை காரணமாகவும் நடைபெறாத இந்த மஞ்சுவிரட்டு, இவ்வாண்டு நடைபெறும் என பெரும் ஆவலில் இருந்த நம் மக்கள், இவ்வாண்டும் நடைபெறாது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் தான், தடையை மீறுவோம் என செயல்பட்டார்கள். இந்த இளைஞர்களைத் தடுத்து, கைது செய்யப்பட்டதின் விளைவாக, மாணவர்கள் இதனை அறப்போராட்டமாக மாநிலம் எங்கும் பல இடங்களில் ஆரம்பித்தார்கள்.!

எப்போதும் மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் தோல்வி அடைவதில்லை என்பதை நம் கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்திருக்கிறது. சல்லிக்கட்டிற்கான தடை நீக்கப்பட வேண்டும், சட்டம் நிரந்தரமாக்கப்பட வேண்டும், காட்சிப் பட்டியலிலிருந்து காளையை நீக்கப்பட வேண்டும் என்பதே அம்மாணவர்களின் கோரிக்கையாக வைக்கப்பட்டது. இதில் பொது மக்களுக்கு எவ்வித இடையூறும் வந்துவிடக் கூடாது என்பதில் மாணவர்கள் கவனமாக இருந்தார்கள். மேலும் பொது மக்களின் பேராதரவு 100 விழுக்காடு மாணவர்களுக்கு கிடைத்தது.!

Siragu Jallikattu_struggle6

சென்னை சாந்தோமிலிருந்து, கடற்கரை சாலை முழுவதும் போக்குவரத்து பாதிக்காமல் மாணவர்களே சரி செய்தனர். நேரில் சென்று, என்னால் முடிந்த அளவு சிறிது நேரம் அங்கு நடப்பவைகளை பார்த்தவள் என்ற முறையில் நானும் இதனை பதிவு செய்ய கடமை பெற்றிருக்கிறேன் என கருதுகிறேன்.

இலட்சக்கணக்கில் கூடியிருக்கும் அம்மாணவர்களின் அன்பும், பண்பும், ஒற்றுமையும், மிகவும் பாராட்டுதலுக்குரியது…. போற்றத்தக்கது. தமிழர்கள் வரலாற்றில் பொன் எழுத்தால் பொறிக்கப்பட வேண்டியவை.! அந்த அளவிற்கு மனப்பக்குவம் பெற்ற இளைஞர்கள் அங்கு கூடியிருந்தனர். வெறும் முழக்கங்கள் மட்டுமே எழுப்பும் போராட்டமாக இல்லாமல், தங்களுக்குத் தெரிந்த தமிழ் பாரம்பரிய கலைகளான, பறையிசை, சிலம்பாட்டம், மேளம், தெருக்கூத்து போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி, தங்களுக்குத் தாங்களே உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார்கள். சோர்வு, ஒய்வு, சலிப்பு என்பதற்கு இடமளிக்காமல் தங்களுக்குத் தாங்களே ஊக்கமளித்துக் கொண்டு, பல குழுக்களாகக் கூடி, கருத்தரங்கம் நடைப்பெற்றுக் கொண்டிருந்தன. நல்ல பல கருத்து பரிமாற்றங்கள் பரிமாறப்பட்டன. பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலம் உணவு, தண்ணீர் நம் இளைஞர்களுக்கு வழங்கப்பட்டது. இது போல் ஒரு போராட்டம் உலகில் வேறு எங்காவது உண்டா… வாருங்கள் மக்களே… எம் தமிழ்ச் சமூக இளைஞர்களிடம் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லுமளவிற்கு மிகச் சிறப்பான அளவில் அந்த அறப்போராட்டம் ஒரு யுகப்புரட்சியாகவே நடைபெற்றுக் கொண்டிருந்தது.!

போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பவர்களும், வரும் பார்வையாளர்களும், ஆதரவு தெரிவிக்க வருபவர்களும் ஒரு குடும்பம் போல் ஒற்றுமையுடன், மகிழ்ச்சியுடன், முகத்தில் புன்னகை தவழ அங்கு அமர்ந்திருந்ததை வரலாறு பதிவு செய்திருக்கிறது. மேலும், மேலும் தமிழினம் வஞ்சிக்கப்படுகிறது என்பதை உணர்ந்து அனைவரும் ஒன்று கூடி பேசி, கலந்துரையாடி, உண்மையை ஒருவருக்கொருவர் பகிர்ந்து, தங்கள் அமர்ந்திருக்கும் இடத்தை, தாங்களே சுத்தப்படுத்தி… அப்பப்பப்பா… எம் தமிழினம் பண்டைய சிறப்பை மீண்டும் கை கொண்டிருக்கிறது என்ற பெருமிதத்துடன் ஒவ்வொருவரும் அங்கு தங்களின் பங்களிப்பை கொடுத்தார்கள் என்றால் மிகையில்லை. !

Protest against Jallikattu ban

தமிழக அரசும் உடனே அவசரச்சட்டம் இயற்றி, அதனை சட்டசபையிலும் சட்டமாக்கியது என்றால், அதற்கு முழு காரணமும் போராடிய அந்த மாணவர்களையே சாரும். ஏழு நாட்கள் தொடர்ந்து இரவு, பகலாக அறவழியில் போராடிய மாணவர்களின் உறுதிக்கும், ஒற்றுமைக்கும், பண்பிற்கும், அன்பிற்கும், தம்மினத்தின் மீது வைத்திருக்கும் பற்றிற்கும் கிடைத்த வெற்றி தான் இது.!

” போராட்டம் முழு வெற்றி… தைப்புரட்சி … மெரினா புரட்சி” என்று சொல்லுமளவிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போராட்டம் தமிழ் மொழி உள்ளமட்டும் காலங்காலமாக பறைசாற்றிக் கொண்டிருக்கும்.!

இறுதியாக நடந்த மிகவும் கொடுமையான செயல் என்னவென்றால், இந்த வெற்றியை கொண்டாடுவதற்கு முன், இச்சட்டம் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஏழாம் நாளும் போராட்டம் தொடரப்பட்டது. ஏழு நாட்கள் போராட்டக்களத்தில் ஆதரவுடன் இருந்த தமிழக காவல்துறை, எட்டாம் நாளான 23-ந்தேதி(23.01.2017), அதற்கு அனுமதியளிக்க மறுத்து, மாணவர்கள் கேட்ட இரண்டுமணிநேர அவகாசமும் மறுக்கப்பட்டு தடியடியில் இறங்கியதுதான்.!

மிகவும் முரட்டுத்தனமாக மாணவர்களைத் தாக்கியது காவல்துறை. பெண்கள், குழந்தைகள் என்று பாராமல், தங்களின் தாக்குதலை அரங்கேற்றியது காவல்துறை. மாணவர்கள் பலருக்கு கை, கால் எலும்பு முறிவு, மண்டை உடைந்து இரத்தப்போக்கு என ஏற்றுக்கொள்ளவே முடியாதபடி, ஒரு மிகப்பெரிய கொடுமை நடந்தேறியது.! தாக்கப்படும் மாணவர்களை தடுப்பதற்கு வந்த அப்பகுதி மீனவ மக்களையும் சரமாரியாக தாக்கியிருக்கிறது காவல்துறை. ‘வேலியே பயிரை மேய்ந்தது போல்’ மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே மாணவர்களையும், மீனவ சமுதாயத்தையும், அங்கு வாழும் தலித் மற்றும் ஏழை எளியவர்களையும், மிகவும் கொடூர முறையில் தாக்கி, அவர்கள் வீட்டிற்குள் புகுந்து உடைமைகளையும் சேதப்படுத்தி, அங்கிருக்கும் மீன் மார்க்கெட்டை எரித்தும், மிகப்பெரிய அவலத்தை அரங்கேற்றி இருக்கிறது. இன்னமும் அப்பகுதியில் உள்ள மூன்று குப்பங்களும் காவல்துறையின் அராஜகத்தை சந்தித்தே வருகின்றனர். தினம், தினம் அச்சுறுத்தப்படுகின்றனர். ஆண்கள் வீட்டிற்கு வர அஞ்சி, வெளியில் தங்கி உள்ளதாகவும், பெண்களும், குழந்தைகளும் ஒருவித அச்ச உணர்வுடனே தெருக்களில் தஞ்சம் புகுந்திருப்பதாகவும் தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன .!

Siragu Jallikattu_struggle8

போராடிய மாணவர்களில், சமூக விரோதிகளும், தேசவிரோதிகளும் கலந்து விட்டனர். அதனால் தான் தாக்குதல் நடத்தியதாக காவல்துறையினர் கூறினாலும், ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகத்தான் இருக்கிறது. காவல்துறையினரே வாகனங்களை எரிக்கும், குடிசையை எரிக்கும் காணொளிகள் வந்தவண்ணம் இருக்கின்றன. போராட்டத்தில் கலந்து விட்டதாகக் கூறப்படும் சமூகவிரோதிகளை களை எடுப்பது தானே காவல்துறையின் கடமை. அதை விடுத்து, மாணவர்களையும், பெண்களையும், குழந்தைகளையும், காப்பாற்ற வந்த மீனவ மக்களையும் தாக்குவது மிகவும் கண்டிக்கத்தக்கது. பெரும் கண்டனத்துக்குரியது…!

இந்த மாணவப்போராட்டம் எப்படி வரலாற்றுச் சிறப்பு மிக்கதோ, அதே போல் தமிழக அரசின் காவல்துறையினர் நடத்திய கொடூரத் தாக்குதல்களும், ஆதிக்க- அதிகார வர்க்கத்தின் பார்வை, ஒரு மாபெரும் களங்கத்தை, நம் சமூகத்தின் மீதான அவலத்தை ஆண்டாண்டு காலம் நிலை நிறுத்தக் கூடியதாக இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.!

Siragu Jallikattu_struggle5

தமிழக அரசு இதனை சிரமேற்கொண்டு, உடனே கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்தும், அவர்களின் மீதுள்ள வழக்குகளை நீக்கியும், அவர்களின் படிப்பும், எதிர்காலமும் பாதிக்காதவண்ணம் முறைமை செய்திடுதல் மிக அவசியம். அது போல் தாக்குதலுக்குட்பட்ட அம்மூன்று குப்பத்து மக்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கி, நீதியை நிலைநாட்ட வேண்டும். !

“ நாளைய சமூகம் மாணவர்களை நம்பித்தான் இருக்கிறது என்பதை தமிழக காவல்துறையும், தமிழக அரசும் உணர்ந்து, செயல்படட்டும் .!”

” தைப்புரட்சி வாழ்க… ! மெரினா புரட்சி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படட்டும்.!”

” வருங்கால இளைஞர்களுக்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்கட்டும்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாணவர் போராட்டமும், அதன் பின்னணியும்.!”

அதிகம் படித்தது