சனவரி 16, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

மாதவிடாய் பெண்களை வலிமை அற்றவர்களாக மாற்றுகின்றதா ?

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

May 20, 2017

Siragu Menopause3

மாதவிடாய் பற்றி இன்றும் பலர் தவறான பழக்க வழக்கங்களைக் கொண்டு, பெண் உடலின் இயற்கை நிலைகளைப் பற்றி அறியாது செயல்படுகின்றனர். முதலில் மாதவிடாய் என்றால் என்ன? என்பதை அறிவியல் விளக்கத்தோடு புரிந்து கொள்ளுதல் அவசியம். ஒரு பருவம் அடைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றம். இது பெண்ணின் இனப்பெருக்கத் தொகுதியிலுள்ள ஒரு உறுப்புகளில் ஒன்றான கருப்பையிலிருந்து, யோனியினூடாக மாதத்தில் 3-7 நாட்கள் குருதியுடன் சேர்ந்து கருப்பையின் உள் சீதமென்சவ்வும் வெளியேறுவதை குறிக்கும். இவ்வளவு தான் மாதவிடாய்க்கான அறிவியல் விளக்கம்.

ஆனால் நம் நாட்டில் மாதவிடாயின் போது பெண்கள் படும் பாடு இருக்கின்றதே? பண்பாடு எனும் பெயரில், மதத்தின் பெயரில் மாதவிடாய் என்றாலே மிகப் பெரிய அசுத்தம் என்பது போன்று இங்கு சித்தரிக்கப்பட்டுள்ளது.

தீட்டு என்றும், வீட்டுக்கு தூரம் என்றும் பெண்கள் மாதவிடாய் காலங்களில் ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். படித்தப் பெண்கள் கூட அதன் அறிவியல் விளக்கம் தெரிந்திருந்தும் அது தீட்டு என்றும், அந்த நாட்களில் பெண்கள் வீட்டில் நடமாடாமல் ஒரு ஓரமாக அமர்ந்து இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

பெண்ணின் உடலில் இருந்து வெளியேறும் குருதி தீட்டு எனச் சொல்பவர்கள், அந்தக் குருதியில்தான் மனிதக் குழந்தை குளித்து வருகின்றது என்பதை அறிந்தும், புரிந்தும் ஏற்காத மூடர்கள்!!

maadhavidaai2

இங்கு அனைத்து மதங்களும் பெண்களின் உதிரத்தை தூய்மை அற்றது என்றே கூறுகின்றது. இந்து மதம் கோயிலுக்குள் பெண்களை மாதவிடாய் காலங்களில் நுழைய அனுமதிப்பதில்லை. சிலர் சமையல் பண்டங்களைக் கூடத் தொட அனுமதிப்பதில்லை. மலக்குடலும், சிறுநீர்ப்பையும் வயிற்றில் வைத்துக்கொண்டு ஆண்கள் கோயிலுக்குள் நுழைவது தூய்மை அற்றதாக பார்க்கப்படாதபோது மாதத்தில் சில நாட்கள் பெண்ணின் உடலில் இருந்து வெளிவரும் உத்திரம் எப்படி தீட்டாகும்? எனக் கேள்விகள் இன்றும் பிறக்கவில்லை!!

அதே போன்று இசுலாமிய மதமும், அத் 2.222-223 -இல் “அது ஒரு தூய்மையற்ற நிலை. ஆகவே மாதவிடாய் காலத்தில் பெண்களை விட்டு விலகியிருங்கள். தூய்மை அடைந்துவிட்டால் அல்லா உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள்” என்கின்றது.

கிறித்துவ மதத்திலும் பெந்தகொஸ்த் பிரிவினர் மற்றும் கன்செர்வேட்டிவ் பிரிவினர் மாதவிடாய் காலங்களில் மற்றவர்களிடம் இருந்து விலகியே இருப்பர்.

யூத மதத்திலும், கான்செர்வ்டிவ் யூதர்கள் பெண்கள் மாதவிடாய் போது சுத்தமாக இருப்பதில்லை எனக் கூறி அவர்களைத் தனி அறையில் வைத்தனர். பொதுவான சின்ஹா நேரத்தில் அனைவரும் பெண்களை ஒதுக்கியே வைப்பர். மாதவிடாய் ஏற்பட்ட பெண்களோடு அமர்ந்து உணவு உண்ணவும் மாட்டார்கள்.

புத்த மதமும் பெண்கள் மாதவிடாயின் போது பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் (vulnerable) என்று கூறுகின்றது.

இவற்றுக்கு பெரும்பாலானோர் கொடுக்கும் பதில், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஓய்வுத் தேவை, அதனால் மதங்கள் பெண்களை ஒதுக்கி வைக்கின்றனர் என்பது தான். இயல்பாக எழும் கேள்வி என்னவென்றால், மாதவிடாய் இழிவு, பெண்ணின் தீட்டு என்று கூறித்தான் ஓய்வளிக்க வேண்டுமா? அது இயற்கை, மனித தொடர்ச்சிக்காக பெண்ணுக்கு வரும் உடலியல் மாற்றம், அந்த நேரத்தில் சிலருக்கு வலி அதிகமாகவும் இருக்கும், சிலருக்கு அசதியாகவும் இருக்கும், அதை எப்படி எதிர்கொள்வது என்ற புரிதலை ஏற்படுத்தி, அவளின் உடல் தன்மை அறிந்து பெண்ணை சக உயிராக மதித்து ஓய்வளிப்பது சிறந்ததா?, இல்லை ஒதுக்கி வைப்பது சரியா? என்பதை பகுத்தறிவோடு எண்ணிப் பார்க்க வேண்டும்.

அந்த அடிப்படையில் மாதவிடாயின் போது சம்பளத்துடன் கூடிய பணி விடுப்பு தேவை என்றும், தேவை இல்லை என்றும் குரல்கள் ஒலித்துக் கொண்டே இருக்கின்றது.

Siragu Menopause4

ஆப்பிரிக்க நாடான சாம்பியாவில் மகளிருக்கு உதவும் வகையில், மகளிர்க்கு மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு அளிக்கப்படுகின்றது. அதை மறுக்கும் நிறுவனங்கள் மற்றும் முதலாளிகள் மீது வழக்கும் தொடுக்க முடியும்.

இந்த விடுப்புச் சட்டத்தின் முன்னோடி ஜப்பான் நாடு தான். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், 1947 இல் அங்கு தொழிலாளர் சட்டம் கொண்டு வரப்பட்ட போதிலிருந்தே மகளிருக்கான மாதவிடாய் விடுப்புச் சட்டம் அமலில் உள்ளது.

இன்று உலகளவில் தைவான், தென்கொரியா, சீனா, இந்தோனேஷியா போன்ற நாடுகளில் மாதவிடாய் விடுப்புத் திட்டம் (Menstrual Leave Policy) அமலில் உள்ளது. கோ எக்ஸிஸ்ட் என்ற பிரிட்டன் நிறுவனம் அண்மையில் மாதவிடாய் விடுப்புத்திட்டத்தை அறிவித்தது. அப்போது இந்தியாவிலும் அந்த திட்டத்தினைக் கொண்டு வர வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இயங்கும் சாஸ்டா டீல் என்ற நிறுவனமும் இந்தத் திட்டத்தை தன் நிறுவன மகளிருக்காக கொண்டு வந்துள்ளது.

இந்தியாவில், ஹைதெராபாத் நிறுவனமும் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. ஆனால் இந்தத் திட்டத்திற்கு இரு வேறு குரல்கள் எழுந்துள்ளன.

ஒன்று இந்த விடுப்புத் திட்டம் பெண்ணை வேலைக்கு எடுக்கும் நிலையில் தொய்வு ஏற்படுத்தும் என்றும், மீண்டும் மாதவிடாய் பற்றிய தவறான புரிதலுக்கு வழி வகுக்கும் என்றும், மாதவிடாய் நேரங்களில் பெண் பலவீனமாக இருப்பாள், மேலும் அவளின் சிந்தனை தெளிவு குறைந்திருக்கும் என்ற மதக் கூற்றுக்கு வலு சேர்ப்பது போன்றே அமையும் என்று பெண்ணிய செயற்பாட்டாளர்கள் சிலர் கருதுகின்றனர். மாதவிடாய் குறித்த அச்சத்தை விலக்கி, அந்த நேரத்தில் பெண் மற்ற அனைத்து நேரங்கள் போன்றே இயல்பாய் செயல் பட முடியும் என்று புரிதல் ஏற்படுத்த வேண்டுமே தவிர்த்து, முற்றிலும் விடுப்பு கொடுத்தல் என்பது அவளின் இயலாமையாய் இந்தச் ஆணாதிக்கச் சமூகத்தால் புரிந்து கொள்ளப்பட வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவிக்கின்ற கருத்தை நம்மால் முற்றிலும் புறந்தள்ளிவிட முடியாது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் 50% மேற்பட்ட பெண்கள் உதிரக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாதவிடாய் என்பது சற்று கடினம் தான். அந்த நேரத்தில் அவர்களுக்கு ஊதியத்துடன் கிடைக்கும் விடுப்பு தேவையானதே. அதை ஏற்க மறுக்கும் ஆணாதிக்கச் சமூகம், ஒரு பெண் இனப்பெருக்கத்திற்காக மாதந்தோறும் சிந்தும் உத்திரத்திற்கு விடுப்புத் தர தயக்கம் காட்டும் எனின், இந்தச் சமூகம் அவள் பிள்ளை பெற்றுத் தர தேவையில்லை என்று கருப்பையை தூக்கி எறிந்துவிட்டு வாழும் சூழலை ஏற்குமா? அவள் வலியும் ஏற்றுக்கொண்டு உழைக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்திடுவது அநீதியானது என்று எழும் குரலையும் நாம் மறுக்க முடியாது !!

ஜெர்மினே கிரீர் (Germaine Greer ) என்ற பெண்ணிய செயற்பாட்டாளர் தி பிமல் ஐநுச் (The Female Eunuch ) என்ற நூலில், ” If you think you are emancipated, you might consider the idea of tasting your own menstrual blood. if it makes you sick, you have got a long way to go” என்கின்றார்.

அதாவது “பெண்ணே நீ விடுதலை அடைந்து விட்டதாக உணர்ந்தால், உன் மாதவிடாய் உதிரத்தை சுவைத்துப் பார்க்க எண்ணிப்பார், அந்த நினைப்பே உனக்கு கசப்பாக இருந்தால் நீ உன் விடுதலைப் பாதையில் கடக்க வேண்டிய தூரம் அதிகம்”.

Siragu Menopause6

அந்த வகையில் பல தடைகளைத் தாண்டி பெண்கள் என்று பலத் துறைகளிலும் சாதித்துக் கொண்டு வருகின்றனர். இந்த இடத்திற்கு வரப் பலப் பெண்கள் தங்கள் உதிரத்தை கொடுத்துப் போராடியுள்ளனர். மாதவிடாயின் போது ஓய்வு கண்டிப்பாகத் தேவை எனின், பல தடகள, நீச்சல் வீராங்கனைகள் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் சாதித்து இருக்க முடியாது. அந்த நேரத்தில் முடிவுகள் எடுக்க பெண்களால் முடியாது எனின் அரசியலில், நிர்வாகத்தில் பெண்களால் சாதித்துக் கொண்டிருக்க முடியாது.

மாதவிடாய் இயல்பான ஒன்று. அதைத் தாங்கிக் கொள்ளும் திறன் பெண்களின் உடலுக்கு இயற்கையிலேயே உள்ளது. சரியான ஊட்டச்சத்து, அதை எப்படி நீர்ச்சத்து கொண்டு சமன் செய்வது என்ற அடிப்படைகளை பெண் பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டுவதே முதன்மை. வலி அதிகமாக இருந்தால் மருத்துவ ரீதியாக சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி மாதவிடாய் நேரங்களில் இயல்பாக, இயங்கவும், சிந்திக்கவும் பெண்களால் முடியும் என்பது உண்மை..

விடுப்புத் திட்டம் இப்போது சரியானதாக இருப்பதாக தோன்றினாலும் காலப்போக்கில் பெண்களை வலுவற்றவர்கள் என்ற நிலைக்கே கொண்டு செல்லும். விடுப்பை விட அலுவலங்களில் ஒய்வு அறைகள் ஏற்படுத்தி மிகுந்த அசதியாய் இருக்கும் நேரத்தில் ஒரு சில மணி நேரம் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாதவிடாய் பெண்களை வலிமை அற்றவர்களாக மாற்றுகின்றதா ?”

அதிகம் படித்தது