மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மாநில சுயாட்சி முழங்குவோம் !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

May 30, 2020

siragu maanila suyaatchi1

இன்று கொரோனா காலத்தில் அரசு தமிழ்நாட்டில் என்ன தான் செய்து கொண்டிருக்கிறது என்று நீங்கள் கேட்பீர்களானால் பதில் உங்களுக்கு எஸ் வீ சேகரும், சாருவும் தந்திருப்பார்கள். அரசு, எஸ் வீ சேகர் வீட்டிற்கு 13 பாக்கெட் பால் அனுப்பிக்கொண்டும், சாருவின் கெட்டுப் போன மீனைச் சரிபார்த்துக் கொண்டும் இருக்கிறது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாநில அரசிற்கு என்று எந்த அதிகாரமும் இல்லாமல், எல்லாவற்றுக்கும் நடுவண் அரசை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கொடுமையையும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

அறிஞர் அண்ணா அவர்கள் 1960-களிலேயே திமுக ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னதாகவே வழக்கறிஞர்களிடையே நிகழ்த்திய சொற்பொழிவுகளில் மத்திய – மாநில உறவுகளைப் பற்றியும் மாநிலங்களுக்குக் குறைவான அதிகாரமே இருப்பது பற்றியும், இப்போதைய அரசியல் சட்டத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பது பற்றியும் தெளிவுறுத்தி இருந்தார்.

1967 ஆம் ஆண்டு அண்ணா ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுத் தமிழ்நாட்டின் முதல்வர் என்ற பொறுப்பை அவர் வகித்தபோது தனது அனுபவத்திலேயே மத்திய மாநில உறவுகளில் எவ்வளவு சிக்கல் இருக்கிறது என்றும், மாநில அரசு என்பது ஒரு நகராட்சி அந்தஸ்தில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார்.

அவர் மரணிக்கும் முன் பொங்கல் விழாவின் போது தம்பிக்கு எழுதிய மடலில் மாநில சுயாட்சி பற்றி வற்புறுத்தி மாநிலங்களுக்குரிய அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அண்ணா ஆட்சியில் மாநில சுயாட்சி மாநாடு ஒன்றை நடத்தினார்கள். 60-களில் தொடங்கி அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது வரை மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் இல்லை என்பதைக் குறிப்பிட்டு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்றார். அந்தக் குரலின் வலியுறுத்தலைத் தான் கலைஞர் இறுதி வரை தொடர்ந்தார்.

1969 மார்ச் 17 -ல் டெல்லி பத்திரிகையாளர்களைச் சந்தித்த கலைஞர் அவர்கள் மத்திய – மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவித்தார். அந்தக் குழு தான் நீதிபதி ராஜமன்னார் தலைமையில் ஏ. லக்ஷ்மணசாமி, பி. சந்திரா ரெட்டி ஆகியோர் உறுப்பினர்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குழு.

அந்தக் குழு பொது ஒழுங்கு, வணிகம் மொழி, பொது ஊழியங்கள் போன்றவற்றில் நடுவண் அரசு எப்படிச் செயல்பட வேண்டும் எனப் பல பரிந்துரைகள் கொடுத்தது. அதில் முக்கியமானது.

மாநிலங்களுக்கான வருவாயை அதிகப்படுத்த வேண்டும். வரிச் சீர்திருத்தம் வேண்டும்.
நெருக்கடி நிலை அறிவிப்பு தொடர்பாக முடிவெடுக்கும்போது மாநிலங்களிடையே கலந்தாலோசித்தே முடிவு எடுக்கப்பட வேண்டும் போன்ற பல பரிந்துரைகள்.

அதை எல்லாம் இன்று காற்றில் பறக்கவிட்ட காரணத்தினால் தான் கொரோனா காலத்தில் உரிய நிதி தமிழ் நாட்டிற்குத் தேவை என்ற குரல் கூட கொடுக்க முடியாமல் தமிழக அரசு மக்களை நெருக்கடியில் தள்ளி வேடிக்கை பார்க்கின்றது.

அதுமட்டுமல்ல, கடந்த 3 ஆண்டுகளாக ஒபிசி பிரிவினருக்கு வரவேண்டிய 10,000 மருத்துவ இடங்களைப் பொதுப்பிரிவினருக்குப் பிடுங்கிக் கொடுத்திருக்கின்றனர். இதைக் கேட்க மாநில அரசால் முடியவில்லை என்பதே வேதனை. நீட்டிற்கு எதிராக முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தும் அதைப்பற்றிக் கவலைப்படாத அரசாகத் தானே இன்று உள்ள அரசு உள்ளது?

அதே போல,
மின் கொள்முதல், மின் விற்பனை, மின்சாரத்தை அனுப்புதல் உள்ளிட்ட அனைத்து ஒப்பந்தங்கள் தொடர்பான தாவாக்களை, இனிமேல் மத்திய அரசின்கீழ் அமைக்கப்படும் “மின் ஒப்பந்த அமலாக்க ஆணையம்” (Electricity Contract Enforcement Authority) ஒன்றே தீர்வு காணும் என்பதும் – மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் விதத்தில் ஒரு ஆணையத்தை நடுவண் அரசு உருவாக்குவது கண்டிக்கத்தக்கது என்று தமிழக அரசால் எதிர்த்துக் குரல் கொடுக்க முடியவில்லை.

இப்படி தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோய்க்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கலைஞரின் குரலை மீண்டும் கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது.

டெல்லியில் 1970 – இல் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் கலைஞர் மாநில சுயாட்சி குறித்துப் பேசியது தொடர்பாக, மறுநாள் “இந்துஸ்த்தான் டைம்ஸ்” இப்படி எழுதியிருந்தது. கூட்டாட்சிக்கும் கூட்டணியாட்சிக்கும் உள்ள வேறுபாட்டுக்கு ஒரு புதிய விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார் கலைஞர்

“நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றான மக்களவை, மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் உறுப்பினர்களைப் பெற்றிருந்தாலும், இன்னொரு அவையான மாநிலங்களவை -தேசிய இனங்களின் அவையாக, எல்லா மாநிலங்களிலிருந்தும் சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைப் பெற வேண்டும்” என்று கலைஞர் விளக்கமளித்தார்.

அது மட்டுமல்ல 1974 ஆம் ஆண்டு நாட்டிலேயே முதன் முதலாக மாநில சுயாட்சித் தீர்மானத்திற் தமிழகச் சட்டமன்றத்தில் நிறைவேற்றியவர் கலைஞர் அவர்கள்.

அந்த தீர்மானத்தைப் பற்றிய உரையில், “இது எந்த கட்சிக்கும் உரியத் தீர்மானம் அல்ல, தமிழகத்திலே இருக்கிற எல்லாக் கட்சிகளுக்கும் இந்தியாவில் இருக்கிற எல்லாக் கட்சிகளுக்கும் உரியத் தீர்மானம். இது எங்கள் கட்சிக்கு மட்டுமே உரியது என்று நாங்கள் வாதிட மாட்டோம். இது அனைவருக்கும் பொதுவான தீர்மானம். தமிழ்ச் சமூகத்தைக் காக்க, இந்தியாவிலுள்ள தேசிய இனங்களைக் காக்க, இந்தியாவிலுள்ள மாநிலங்களின் உரிமைகளைக் காக்க, இந்தியாவிலே இருக்கிற மாநிலங்கள் சுய மரியாதையோடு வாழ இந்தத் தீர்மானம் பயன்படும்.

பொருளாதாரத்திலே வளமும் சுயமரியாதைத் தன்மையிலே தன்னிகரற்ற நிலையும், விட்டுக்கொடுத்துப் போகின்ற நேரத்தில், மத்திய சர்க்காருக்கு அடிமைகளாக இருக்க மாட்டோம். உறவுக்கு கை கொடுப்போம், அதே நேரத்தில் உரிமைக்குக் குரல் கொடுப்போம். அந்த அளவிலே தான் மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்தைப் பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரால் நான் இந்த மாமன்றத்திலே வைக்கிறேன்” என்று முழங்கினார்.

அந்த முழக்கத்தை முன்னெடுக்க வேண்டிய தேவை இன்று உள்ளது. கலைஞரின் 97வது பிறந்தநாளான ஜூன் 3, இல் மீண்டும் அந்த கொள்கைக்கு உரமூட்டுவோம்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மாநில சுயாட்சி முழங்குவோம் !!”

அதிகம் படித்தது