ஜூலை 4, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

மானமிகு சுயமரியாதைக்காரருக்கு வீரவணக்கம் !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Aug 11, 2018

siragu karunanidhi1

யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

இந்தப் பாடலை காதல் கொண்டோருக்காக எடுத்துக்காட்டுவது உண்டு. ஆனால் முதல் முறையாக எம் தமிழ் நாட்டின் திராவிடத் தலைமகனுக்காக இதை கையாள்கின்றேன்! ஆகஸ்ட் 7 தலைவர் கலைஞர் மறைந்தார் என்ற செய்தியை தொலைக்காட்சியில், இணையத்தில் பார்த்த போது, கடல் கடந்து வாழும் என்னைப் போன்றவர்களுக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தலைவரை நேரில் சந்திக்காத பல்லாயிரக்கணக்கான தொண்டர்களில் நானும் ஒருவள் என்ற போதும், அந்த தலைவரின் கருத்தியல் மீது ஈர்ப்புக் கொண்டு நம் நெஞ்சங்கள் செம்மண்ணில் கலந்திடும் நீர் எப்படி அதன் நிறத்தைப் பெற்று பாய்கின்றதோ அதேப் போல்தான் அந்தத் தலைவரின் மீதான அன்பு நமக்கு.

எந்த நிலையில் கலைஞர் இந்த அன்பைப் பெற முடிந்தது? ஏழு ஆண்டுகள் ஆட்சிகள் இல்லை, இறுதி 1.5 வருடங்கள் அரசியலிலும் இல்லை, ஆனால் கலைஞர் மீது மக்களுக்கு எத்துணை பேரன்பு எதற்கு? எதன் அடிப்படையில் சாத்தியம் எனச் சிந்தித்துப் பார்த்தால் அதற்கு காரணம் அவரின் 80 ஆண்டு கால அரசியல் தொண்டு என்று மட்டுமே சொல்ல முடியும்.

அவரிடம் கற்றுக் கொள்ள அப்படி என்னத்தான் இருக்கின்றது?

தலைமைப் பண்பு, எதிரியே ஆனாலும் மதிக்கும் மாண்பு, சளைக்காத உழைப்பு, நிர்வாகத் திறன், விடா முயற்சி, புயலே அடித்தாலும் அடுத்த நொடியே மீண்டு வருவது, தமிழ்ப் பற்று, எழுத்தாற்றல், கவியாற்றால், உரையாற்றல் என அனைத்து துறைகளிலும் கலைஞர் சிகரத்தைத் தொட்டவர். அவரின் இந்த பன்முகத் தன்மையில் ஒரு முகத்தையாவது நாம் கற்றுக் கொள்வது நம் வாழ்க்கைப் பயணத்திற்குதவும். இவற்றை எல்லாம் விட, நவீன தமிழ் நாட்டின் கட்டமைப்பாளர் கலைஞர் எனின் அது மிகையாகாது. 1975 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி அவர்கள் கொண்டு வந்த நெருக்கடி நிலையிலும் அதைக் கண்டித்த ஒரே மாநிலக் கட்சி இந்தியாவிலேயே திமுகவும் கலைஞர் அவர்களும் தான். மக்களாட்சியின் மாண்புகளை ஒரு போதும் அதிகாரத்தின் பெயரால் மீற முடியாது என தலைவணங்காது எதிர்த்து நின்றார். தனக்கு பிரதமர் பதவி தேடி வந்த போதும், என் உயரம் எனக்கு தெரியும் என்று தமிழ் நாட்டு அரசியலில் மட்டுமே முழுப்பணி ஆற்றினார்.

ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அரசியலில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இன்று மறைந்தாலும் தமிழ் நாட்டின் அரசியல் அவரைச் சுற்றி மட்டுமே சுழல்கின்றது. தன் இறுதிப் பயணத்திலும் தனக்கான மீளா உறக்க படுக்கையை போராடியே பெற்றுக் கொண்டார். இள வயதில், தன்னை சாதியின் காரணமாக பள்ளியில் சேர்த்துக் கொள்ள மறுத்தபோது, தண்ணீரில் குதித்து விடுவேன் என தன் கல்வி உரிமையை பெற்றவர் அல்லவா? இறுதி வரையிலும் போராட்டமே உன் பெயர் தான் கலைஞரோ என்ற அளவிற்கு போராட்டங்களை தன் வெற்றிப் பயணத்தின் படிக்கட்டுகளாகக் கொண்டார்.

பாராட்டுகள், பழிப்புரைகள், விமர்சனங்கள், அவதூறுகள் என அனைத்தையும் பேரறிஞர் அண்ணாவிடம் இரவலாகப் பெற்ற இதயத்தைக் கொண்டு தாங்கிக்கொண்டு பயணித்தார்.

சமூக நீதியின் அடையாளமாக இந்த தமிழ் நாட்டை இறுதி வரை தன் திட்டங்கள் மூலம் கட்டியமைத்தார். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு இலவச கல்வி, பள்ளிகளில் சத்துணவுடன் வாரம் இரண்டு நாள் முட்டை, ஒரு வாழைப்பழம், வசதி இல்லாமல் பல மைல்கள் நடந்து படிக்க வரும் ஒடுக்கப்பட்ட சமூக, பிற்படுத்தப்பட்ட சமூக குழந்தைகளுக்கு காலணிகள் என ஒவ்வொன்றையும் தாயுள்ளத்தோடு பார்த்துப் பார்த்துச் செய்தார்.

தமிழ் நாடு உயர் நீதி மன்றத்தின் முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதி திரு. வரதராசனரை நியமித்ததும் கலைஞர் அவர்கள் தான்.
அண்ணல் அம்பேத்கர் பிறந்த மாநிலத்திலேயே அவரின் பெயரை பல்கலைக்கழகத்திற்கு சூட்டக் கூடாது என சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தபோது, தமிழ் நாட்டில் சட்ட கல்லூரிக்கு அண்ணல் அம்பேத்கர் சட்ட கல்லூரி என பெயரிட்டார். பிரதமாராக இருந்த திரு. வி.பி. சிங்க் அவர்கள் மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்த தூண்டுகோலாகவும், பக்க பலமாகவும் இருந்தவர் கலைஞர் அவர்கள். இந்தியாவிலேயே மனிதனை மனிதன் இழுப்பது தவறு என கைவண்டிகளை ஒழித்தவர். மலம் அள்ளும் ஒடுக்கப்பட்ட மக்களும் பல்கலைக்கழங்களில் படிக்க வேண்டும் என்று அருந்திய சமூக மக்களுக்காக 3% உள் ஒதுக்கீடு வழங்கினார். அதேப் போல இசுலாமியர்களுக்கு இடஒதுக்கீடு தந்திட்டார்.

கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியில் இடஒதுக்கீடு வழங்கியவர். சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களின் பிள்ளைகளுக்கும் இட ஒதுக்கீடு தன் ஆட்சியில் வழங்கினார். தமிழ்நாட்டில் மிகச் சிறந்த நிலையில் மருத்துவ கட்டமைப்பை ஏற்படுத்தியவர் கலைஞர் அவர்கள் தான். பெரியம்மை குறித்து மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி அந்த நோய் முழுதும் ஒழிய காரணமாக இருந்தவர். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனி வாரியம் அமைத்து அந்த நோயினை கட்டுக்குள் கொண்டு வந்து ஒழித்தார். தமிழ் நாட்டில் இருக்கும் 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் 19 கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது கொண்டு வந்தது ஆகும்.

திருநங்கை, மாற்றுத்திறனாளி, என சுயமரியாதைக் கொண்ட சொற்களை வழங்கி அந்த மக்களுக்கு அரணாக இருந்தவர். திருநங்கைகளுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கிட ஆவணச் செய்தார். அதனால் தான் கலைஞரின் மறைவில் பெருமளவிற்கு திருநங்கையர்கள் கலந்து கொண்டு தங்களது நன்றியை தெரிவிதித்தனர் எனில் அது மிகையாகாது.

இன்றைக்கு தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து பலர் வெளிநாடுகளில் கணினித் துறையில் பணியாற்ற அவரின் தகவல் தொழில்நுட்ப பூங்காவே காரணம். பல்வேறு மேம்பாலங்கள், தமிழரின் வரலாற்றை பல்வேறு சின்னங்களைக் கொண்டு நிறுவினார். தன் எழுத்தாற்றல் மூலம், குறளோவியம், தொலைக்காப்பிய பூங்கா, சங்கத் தமிழ், என பல நூல்களை எழுதினார். தன் அரசியல் வேலைகளுக்கு நடுவிலும் ஓயாது இலக்கியங்களை படித்து தான் கற்றவற்றை மக்களுக்கும் அழகிய தமிழில் எடுத்து அளித்தார்.

இறுதி வரை தான் கொண்ட கொள்கையில் இருந்து மாறாது பெரியாரின், அண்ணாவின் வழியில் பயணித்தார் என்பது ஒன்றே அவரின் தனிப்பெரும் சிறப்பு. வளைந்து கொடுத்திருப்பார் அரசியல் காரணங்கள் கொண்டு, ஆனால் ஒரு நாளும் ஒடிந்து போய்விடாது ஆற்றலுடன் பயணித்தார். தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளினை எடுத்து அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அவரின் இறுதி இலட்சியத்தை வெற்றியாக்கியதும் கலைஞர் அவர்களே !

கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே என்ற சாரண பாஸ்கர் எழுதி நாகூர் ஹனிபாவின் குரலில் எப்போதும் ஒலிக்கும் பாடலை நாம் மறக்க முடியாது.

கல்லக்குடி கொண்ட
கருணாநிதி வாழ்கவே! – மக்கள்
உள்ளம் குடி கொண்ட
உண்மைத் தலைவர் வாழ்கவே!

பொன்னான தமிழ்நாட்டின்
அண்ணாவின் தம்பியாய்
பொலிகின்ற கருணாநிதி வாழ்கவே!

பன்னாடும் புகழ்ப்பாடி
பணிகாட்டி அணிகாட்டி
கொண்டாடும் கருணாநிதி
கண்ணான கருணாநிதி – கழகத்தின்
கண்ணான கருணாநிதி

அரிதான எழுத்தாற்றல்
அழகான உரையாற்றல்
அமைந்திட்ட கருணாநிதி
பெரிதான கவியாற்றல்
புகழான நடையாற்றல்
நிறைந்திட்ட கருணாநிதி – புகழ்
பூக்கும் கருணாநிதி – தமிழ்
காக்கும் கருணாநிதி

ஏடெல்லாம் புகழ்கின்ற கதை தீட்டி
நாடகக்கலை வாழ பணியாற்றினார்
கேடெல்லாம் களைகின்ற நோக்கோடு
சினிமா வசனத்தில் அணி ஏற்றினார்
ஈடில்லா கருணாநிதி எங்கள்
இதயத்தின் கருணாநிதி
அண்ணாவின் அடிநின்று
அழகான நெறி செல்லும்
அதிமேதை கருணாநிதி
ஐந்து முறை முதல்வராக
ஆட்சி பீடம் ஏறி
தந்த வாக்குறுதிகளை அன்றே
நிறைவேற்றிய கருணாநிதி

குண்டேந்தும் பீரங்கி வந்தாலும்
கொள்கையில் மாறாத கருணாநிதி
பண்போங்கும் கருணாநிதி – கொடும்
பகை வெல்லும் கருணாநிதி
இமயத் தோள் கொண்ட கருணாநிதி
பார்புகழும் கருணாநிதி – என்றும்
பேர் நிலைத்த கருணாநிதி
கல்லல்குடி கொண்ட
கருணாநிதி வாழ்கவே!

14 வயதில் இந்தி எதிர்ப்பு போரில் தொடங்கிய அவரின் பயணம் 94 வயது 66 நாட்கள் தொடர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும். இலட்சியவாதிகள் மரணமடையலாம். இலட்சியங்களுக்கு என்றும் மரணம் கிடையாது, என்பதை நான் பலமுறை வலியுறுத்தி இருக்கிறேன். அந்த இலட்சியங்களில் என்றென்றும் அந்த இலட்சியவாதிகள் வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்ற கலைஞரின் வரிகளையே கொண்டு எழுதுகிறேன், கலைஞர் என்றென்றும் வாழ்வார் நம் மனங்களில்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மானமிகு சுயமரியாதைக்காரருக்கு வீரவணக்கம் !!”

அதிகம் படித்தது