மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மார்கழிக் கோலங்கள் (சிறுகதை)

மா.பிரபாகரன்

Dec 7, 2015

markali kolangal1அம்மாவின்குரல் கிணற்றுக்குள் இருந்து கேட்பது போன்றிருந்தது.ரம்யாபோர்வைக்குள் சுருண்டுகொண்டாள். குளிருக்கு அப்படி முடங்கிக் கொள்வது இதமாக இருந்தது.

“எத்தனை தடவை எழுப்புறது? சொன்னா சட்டுனு எழுந்திரிக்க மாட்ட?” – அம்மாகுரலில் கடுமைகாட்ட வேறுவழியின்றி எழுந்து கொண்டாள்.

வெடவெடவென்று நடுங்கியபடி அம்மாவோடு வாசலுக்கு வந்தவளுக்கு அங்கேஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ஊசிபோன்று உடலைக்குத்தும் பனியையும் பொருட்படுத்தாமல், அந்த அதிகாலை வேளையிலும் ஒவ்வொரு வீட்டுவாசலிலும் பெண்கள் அமர்ந்து கோலம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அதிலும், சிலபெண்கள் குளித்து ஈரத்துணியால் தலையைக் கொண்டையிட்டு பளிச்சென்று குங்குமம் துலங்கிய நெற்றியுடன் கோலம் இட்டுக் கொண்டிருந்தார்கள்.

ரம்யா அவள் தெருவை இதுவரைப் பார்த்திராத கோணம் இது. தெரு விளக்கின் மினுமினுப்பில் வாரியிறைக்கப்பட்ட வண்ணங்களுடன் தெருவே அழகாகக் காட்சியளித்தது.

தெருவின் ஓட்டுமொத்த சுறுசுறுப்பு அவளையும் தொற்றிக்கொள்ள “இன்னிக்கு என்னமா விசேஷம்?” – என்று கேட்டாள்.

“இன்னிக்கு மார்கழி மாசப்பிறப்பு ரம்யா!” – என்றார் அம்மா.

“நான் கோலம் போடவாமா?” – ரம்யா கேட்டாள்.

“எடுத்த எடுப்புல கோலம்போட வராது! பொடி தூவு!” – என்றவர் கலர்பொடிகள் இருந்த டப்பாக்களை அவள்பக்கம் நகர்த்தினார். மார்கழியை வரவேற்கும் விதமாக அம்மா அன்று வண்ணத்துப்பூச்சி கோலம் ஒன்றை இட்டார். ரம்யா வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளுக்கு நிறம் தந்தாள். அவளால் அம்மாவைப்போன்று ஒரேசீராக பொடியைத் தூவ வரவில்லை. இருந்தாலும் தன்னால் முடிந்தவரை செய்தாள். கோலம்போட்டு முடித்தபோது வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கைகளுக்கு நிறம்தந்த ஒரு சின்னப்பெருமிதம் அவளுள் எட்டிப்பார்த்தது.

சிறுசிறு கோலங்களைப் போடக் கற்றுத்தந்தார் அம்மா. முதலில் ரம்யா அவைகளை ஒரு நோட்டுப்புத்தகத்தில் போட்டுப் பார்த்தாள். பின்னர் வாசலில் போட்டாள்.

ஒவ்வொருநாளும் அம்மா போடுகின்ற பிரதானக்கோலத்திற்குத் துணைக்கோலமும், உள்நடை வாசலில் இடுகின்ற சிறுகோலமும் அவள் பொறுப்பாயிற்று. ரம்யா மார்கழிமுழுவதும் அதைத்தவறாமல் செய்துவந்தாள். அதோடு நிற்கவில்லை அவள். ஒவ்வொருநாளும் மற்ற வீட்டுவாசலில் போடுகின்ற கோலங்களை வேடிக்கைப் பார்த்துவிட்டு வருவதையும் வழக்கமாகக் கொண்டாள்.

markali kolangal2புள்ளிக்கோலம், கோட்டுக்கோலம், கம்பிக்கோலம், மாக்கோலம், பூக்கோலம், ரங்கோலி என கோலங்களில்தான் எத்தனைவகை? ஓவ்வொரு வீட்டுப்பெண்கள் போடுகின்ற கோலமும் ஒவ்வொருவிதத்தில் அழகானதாய் இருந்தது. அதிலும் சிலபெண்கள் புரிந்துகொள்ள கடினமான நவீன ஓவியங்களின் வடிவமைப்பைக்கூடத் தங்கள் கோலங்களில் கொண்டுவர முயற்சி செய்திருந்தார்கள். மதிய சாப்பாடுஅடைத்து பிள்ளைகளைக் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அலுவலகம் செல்லும் அப்பாக்களுக்கு  விடை கொடுத்து சாந்தமானத்தோற்றம் கொண்ட அம்மாக்களிடம் இத்தனை ஊற்றெடுக்கும் கற்பனைகளா? ரம்யாவால் நம்பத்தான் முடியவில்லை.

கோலங்களைப்பற்றிக் குறிப்பிடும்போது ரம்யாவின் அப்பா இப்படிச் சொன்னார், ‘சிக்கலானகோலம் ஒன்றைப்போடுவதற்கும் கடினமானக் கணிதப்புதிர் ஒன்றை விடுவிப்பதற்கும் இடையே பெரியவித்தியாசம் ஏதுமில்லை. இரண்டுக்கும் தேவை பயிற்சியும் மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றலும்தான்’ என்றார்அவர். அவர்சொல்வது உண்மைதான்.

பெரியகோலங்களைப் போடும்முன்னால் அவைகளை ஒன்றுக்குப்பலமுறை காகிதத்தில் போட்டுப்பார்க்க வேண்டியிருந்தது. வாசலில்போடும்போது சிறுகவனப்பிசகு நேர்ந்தால்கூட முழுக்கோலத்தையும் முதலில் இருந்து ஆரம்பித்து போடவேண்டியிருந்தது.

கோலம்போடுவது மனத்தை ஒருமுகப்படுத்தும் ஆற்றலை வளர்ப்பதை கண்கூடாகக் கண்டுகொண்டாள் ரம்யா. முன்பெல்லாம் படிக்க உட்கார்ந்தால் சிலநிமிடங்களில் அவளுடைய கவனம் அங்குமிங்கும் சிதறும். ஆனால் இப்பொழுதோ அவளால் நீண்டநேரம் கவனச்சிதறலின்றி பாடங்களை ஊன்றிக்கவனித்துப் படிக்கமுடிந்தது. அதுமட்டுமல்ல, மேலும் அம்மாவோடுசேர்ந்து அதிகாலையில் எழுந்துகொள்வதால் அவளுக்குப் பாடங்களைப் படிக்க கூடுதல்அவகாசமும் கிடைத்தது.

அம்மா ஒருநாள் பெரிய புள்ளிக்கோலம் ஒன்றை இட்டாள். புள்ளியைச்சுற்றி வரும்கோடுகள் எங்கே ஆரம்பிக்கிறது, எங்கே முடிகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியாத சிக்கலான அமைப்புக்கொண்ட கோலம் அது. வண்ணங்கள் ஏதுமின்றி போடப்பட்ட அந்தவெள்ளைப் புள்ளிக்கோலம் மிகவும் அழகாக இருந்தது. கோலத்தின் மையத்தில் சாணவில்லை வைத்து அதன்மீது பூசணிப்பூவை வைத்து அம்மா கோலத்ததை மேலும் மெருகேற்றினாள்.

அந்தக்கோலத்தின் நேர்த்தியையும் நளினத்தையும் வியந்து இரசித்துக் கொண்டிருந்த அப்பாவிடம்,“எதுக்காகப்பா வாசல்ல கோலம்போடனும்?” – என்று கேட்டாள் ரம்யா.

“கோலம் போடுறது மங்களகரமான ஒருசெயல்! வீட்டுக்கு இலட்சுமிகடாட்சம் வேணும்ங்குறதுக்காவும், தீயசக்திகள் ஏதும்அண்டாம இருக்குறதக்காகவும்தான் ஒவ்வொரு வீட்டுவாசல்லயும் கோலம்போடுறாங்க!” – என்றார் அவர். அவரே தொடர்ந்து,“அந்தக்காலத்துல வாசல்தெளிச்சு கோலம் போடுறத பெண்கள் ஒருகலையாவே செஞ்சாங்க! அப்ப எல்லா வீட்டுவாசலும் மண்தரைதான்! எல்லாருமே சாணம் கரைச்சுதான் வாசல் தெளிச்சாங்க! சாணம் மண்துகளைக் கெட்டியா பிடிச்சுக்குறதுன்னால போட்டகோலம் நீண்டநேரம் அழியாம இருக்கும்! அவங்க அதுக்காகமட்டும் சாணத்தைப் பயன்படுத்தல! சாணம் ஒரு கிருமிநாசினியாவும் பயன்பட்டுச்சு! அப்ப ஆட்கள் எல்லோருமே வெறும்காலோடதான் நடந்தாங்க! கால்கள்வழியாக கிருமிகள் பரவாம சாணம் தடுத்துச்சு! இப்ப மண்தரைகள் காணாமப்போச்சு! சாணம் கரைச்சு வாசல்தெளிக்குற பழக்கமும் அநேகமா வழக்கொழிஞ்சு போச்சு!” – என்றார் அவர்.

markali kolangal3அப்பா தொடந்து பேசினார், “இதுவே பண்டிகை நாட்கள்ல வாசல், உள்நடை, வரவேற்பறை, பூஜைஅறைன்னு எல்லா இடங்கள்லயும் மாக்கோலம் போடுவாங்க! இதுக்காக பெண்கள் பச்சரிசியைத் திரிச்சு முதல்நாளே தயாரா வைச்சிருப்பாங்க! கோலங்கள்ல்ல இருக்குற அரிசித்துணுக்குகளில் எறும்புகள் சிறுபூச்சிகள் வந்து உணவுக்காக எடுத்துக்கிட்டுப் போகும்! இதுல சிற்றுயிர்களுக்கும் ஓம்புதல் வேண்டும்ங்குற தாத்பரியம் மட்டுமல்ல! பண்டிகை நாட்கள்ல்ல வீடுகள்ல்ல விசேஷமா இனிப்புக்கள் செய்வாங்க! அதுக்கு எறும்புகள், பூச்சிகள் வராம இருக்குறதுக்குக் கவனத்தைத் திசைதிருப்புற ஒரு உத்தியாவும் இது பயன்பட்டுச்சு!” – என்றார் அவர். அப்பா இப்படி கோலங்கள் தொடர்பான விஷயங்களை ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டு போக, ரம்யா அதை வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம் வந்தது.

“ஏம்பா மார்கழி மாசத்ததுல மட்டும் விசேஷமா கோலம் போடனும்னு வைச்சிருக்காங்க?” – என்று கேட்டாள்.

“நம்ம ஊருல முக்கால்வாசி நாள் வெயிலுதான்! நாம வெயிலுக்குத்தான் பழக்கப்பட்டிருக்கோமே ஒழிய குளிருக்குப் பழக்கப்படல! மார்கழிமாதம் பனிமாதம்! பனிகாலத்துல நாமவீட்டுக்குள்ளயே முடங்கிரக்கூடாது, சுறுசுறுப்பா நம்மோட கடமைகளைச் செய்யனும்ங்குறதுக்காக நம் முன்னோர்கள் அப்படி வைச்சிருக்காங்க! நம்மள எழுப்புறதுக்காக அதிகாலைல கோயில்கள்ல்ல சிறப்பு பூஜைகளுக்கும் ஏற்பாடு செஞ்சாங்க! அது மட்டுமில்ல! அப்ப எல்லாருக்கும் விவசாயம்தான் பிரதானத்தொழில்! மார்கழியை அடுத்து தைமாதம் அறுவடை மாதம்! அறுவடை காலத்துல ஒரு விவசாயி வீட்டுல நிறைய வேலைகள் இருக்கும்! அதுக்கு மனத்தளவுல அவங்களைத் தயார் படுத்திக்கறதுக்காவும் மார்கழியைப் பயன்படுத்திக்கிட்டாங்க!” – என்றார் அவர்.

அப்பா சொல்வது உண்மைதான். அதிகாலைக் காற்று பரிசுத்தமானதாய் இருக்கிறது. அதில் அமிர்தம் என்றழைக்கப்படும் பிராணன் ஏராளம் நிறைந்திருக்கிறது. நாம் அந்தத் தூயகாற்றை சுவாசிக்கும்போது நமது இரத்தஓட்டம் சீர்அடைகிறது. நரம்புமண்டலம் தூண்டப்பட்டு மனத்தில் ஓருஉற்சாகம் உண்டாகிறது. அந்த உற்சாகம் நம்அன்றாடக் கடமைகளைச் செய்வதற்குத் தேவையான ஆற்றலை நமக்கு வழங்குகிறது. ரம்யா இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்து கொண்டாள். அதிகாலையில் எழும் இந்தப்பழக்கமும், அவள்செய்த கோலப்பயிற்சியும் பின்னாளில் அவள் பொறுப்புமிக்க பதவியை அடைய மிகவும் உதவிகரமாய் இருந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?


மா.பிரபாகரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மார்கழிக் கோலங்கள் (சிறுகதை)”

அதிகம் படித்தது