ஏப்ரல் 4, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் அருங்காட்சியகம், அட்லாண்டா

தேமொழி

Sep 9, 2017

Siragu Martin1

மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் (1929 -1968) அறிமுகம் தேவையற்ற ஓர் உலகத் தலைவர். அமெரிக்க கறுப்பின வரலாற்றில் மறக்கமுடியாத திருப்புமுனையை ஏற்படுத்திய ஆப்ரிக்க-அமெரிக்க மனித உரிமைப் போராளி. மகாத்மா காந்தியின் வழியில், அவர் கையாண்ட வன்முறையற்ற போராட்ட முறையை அமரிக்க மண்ணில் நிகழ்த்திக் காட்டி இந்திய மக்களின் உள்ளங்களிலும் நீங்காத இடம் பிடித்தவர். பிற உலகநாடுகளுக்குப் பயணிப்பதை சுற்றுலா எனக் கருதுவதாகவும், தனது இந்தியப் பயணத்தை யாத்திரையாகக் கருதுவதாகவும் குறிப்பிட்டவர். ஆப்பிரிக்க-அமெரிக்க மனித உரிமை இயக்கத்தின் தலைவராகவும், அட்லாண்டா நகரின் வரலாற்றுப் புகழ் மிக்க எபினேசர் பாப்டிஸ்ட் தேவாலயத்தின் சமயத் தலைவராகவும் பணியாற்றியவர். கறுப்பின மக்களின் சமவுரிமைக்காக இறுதிவரை போராட்டம் நிகழ்த்தியவர் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங். இவரது பணியைப் பாராட்டி, 1964-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. மக்கள் நலனுக்காகப் பாடுபட்ட இவரும், மகாத்மா காந்தி எதிர்கொண்ட முடிவைப் போலவே, ஏப்ரல் 4, 1968 அன்று மெம்ஃபிஸ் நகரில் இனவெறியன் ஒருவனால் சுடப்பட்டு, 40 ஆம் அகவையை எட்டும் முன்னரே உயிரிழந்தார்.

வெள்ளையின மக்கள் போலவே கறுப்பின மக்களும் மதிக்கப்பட வேண்டும் என்று மிகவும் விரும்பினார். அது குறித்த கனவுகளும் கண்டார். இவர் வாஷிங்டன் டி. சி. யில் நடைபெற்ற பேரணியில், பல லட்சம் மக்களுக்கு முன் ஆற்றிய உரையில் அதைக் குறிப்பிட்டார். எனது நான்கு குழந்தைகளும் அவர்கள் வாழும் இந்த அமெரிக்க நாட்டில் ஒருநாள் அவர்களின் தோலின் நிறத்தால் எடை போடப்படாமல் அவர்களது குணத்திற்காக மதிக்கப்படுவார்கள் என்று எனக்கு ஒரு கனவு இருக்கிறது என்று முழங்கினார் (“I have a dream that my four little children will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their character. I have a dream today!”). டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் எழுச்சியூட்டும் “எனது கனவு” (I have a Dream) என்ற இந்த உரை அமெரிக்க வரலாற்றின் ஒரு அழியாத பகுதி என்றால் அது மிகையன்று.

பிறந்தபொழுது மைக்கேல் கிங், ஜூனியர் என்று பெயர் சூட்டப்பட்டு, பின்னர் ஜெர்மானிய பிராட்டஸ்ட்டண்ட் சமயத்தலைவர் மார்ட்டின் லூதர் கிங் என்பவரைப் போற்றும் நோக்கில் மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டவர் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங். இவரது பெற்றோர்களான மார்ட்டின் லூதர் கிங், சீனியர் (மைக்கேல் கிங், சீனியர்) மற்றும் ஆல்பர்ட்டா வில்லியம்ஸ் ஆகியோருக்கு ஜனவரி 15, 1929 ஆம் நாளன்று அட்லாண்டாவில் பிறந்தார். இவரது தந்தை பாதிரியாராகப் பணியாற்றிய அதே அட்லாண்டா எபினேசர் பாப்டிஸ்ட் தேவாலயத்தின் திருச்சபையிலேயே டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கும் 1947-ல் சமயத் தலைவராகப் பொறுப்பேற்றார். இவரது வரலாற்றுப் புகழ் மிக்க உரைகளும் இங்கு ஆற்றப்பட்டது. இவரது மறைவுக்குப் பிறகு இவர் மனித இன நலனுக்காக ஆற்றிய நற்பணிகளை மக்கள் அறியும் பொருட்டு அமெரிக்க அரசு அவர் பிறந்த அட்லாண்டா நகரிலேயே, அவர் பிறந்த வீட்டிற்கு அருகிலேயே, அவர் பணியாற்றிய எபினேசர் பாப்டிஸ்ட் தேவாலயத்திற்கு அருகிலேயே ஒரு அருங்காட்சியகத்தை நிறுவியுள்ளது. இவரது உடலும், இவரது மனைவி கொரீட்டா ஸ்காட் அவர்களது உடலும் புதைக்கப்பட கல்லறை-நினைவிடமும் இப்பகுதியிலேயே அமைக்கப்பட்டு அங்கு அணையாவிளக்கு ஒன்றும் ஏற்றப்பட்டுள்ளது. பல வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களை உள்ளடக்கிய 35 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த அருங்காட்சியகத்தின் முகவரி Martin Luther King Jr National Historic Site, 450 Auburn Ave NE, Atlanta, GA 30312, Georgia (https://www.nps.gov/malu/index.htm).

Siragu Martin2

அருங்காட்சியக வளாகத்தின் 1. பார்வையாளர் அரங்கம், 2. டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் வரலாற்று மையம், 3. அவரது கல்லறை, 4. அவர் பிறந்த வீடு, 5. பணியாற்றிய தேவாலயம் ஆகிய வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் யாவும் அடுத்தடுத்த தெருவில் அருகருகே இப்பகுதியில் அமைந்துள்ளன. ஊர்திகள் நிறுத்துமிடத்திலிருந்து வெளியேறி, இர்வின் சாலையைக் கடந்து தென்புறத்தில் இருக்கும் மிகப் பெரிய பார்வையாளர் அரங்கத்திற்குச் செல்லும் A வடிவிலான இரு நீண்ட நடைபாதைகள் ஒன்றாக இணையும் சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது (படத்தில் சிவப்பு நிற புள்ளி உள்ள இடம்). ஆம், டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் பற்றி அறிந்து கொள்ள நாம் பார்வையாளர் அரங்கத்திற்கு நுழையும் முன், அருங்காட்சியக வளாகத்தில் முதலில் நம்மை எதிர்கொள்பவர் நமது காந்திதான். மனித அளவிலான உலோகச் சிலையுருவில் மெல்லிய புன்னகையுடன் கையில் ஊன்றுகோலுடன் கம்பீரமாக வருகையாளர்களை எதிர்கொள்கிறார் காந்தி.

டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் காந்தியைத் தனது வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு அகிம்சை முறையில் அமெரிக்க கறுப்பின மக்களுக்கு சமவுரிமை பெற்றுத் தந்தவர் என்பதால், ‘இந்திய அமெரிக்க சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு’ மற்றும் ‘அமெரிக்காவில் இருக்கும் இந்தியத் தூதரகம்’ ஆகியவற்றுடன் இணைந்து ‘இந்தியாவின் கலாச்சார உறவு குழுவினர்’ நட்பு நோக்கில் இந்தச் சிலையை டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். இச்சிலையின் சிறிய எண்கோண சிலைமேடையின் நான்கு பக்கங்களில் உள்ள செப்புப் பட்டயங்களில், மகாத்மா காந்தியின் இந்த உருவச்சிலை நன்கொடையாக வழங்கப்படுகிறது என்று ஒரு பட்டயத்திலும், காந்தி வன்முறையற்ற போராட்ட வழியைக் குறித்து கூறிய கருத்து ஒரு பட்டயத்திலும், டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் காந்தியைப் புகழ்ந்துரைத்தது ஒரு பட்டயத்திலும், அறிஞர் ஐன்ஸ்டின் மற்றும் அமெரிக்க முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஜார்ஜ் சி. மார்ஷல் காந்தியைக் குறித்து கூறிய கருத்து மற்றொரு பட்டயத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. பட்டயத்தின் வாசகங்களைக் கீழே காணலாம்.

Siragu Martin3Mohandas Karamchand Gandhi

“The Mahatma”

(1869 – 1948)

Donated by The Indian Council for Cultural Relations, India, in collaboration with The National Federation of Indian American Associations and The Embassy of India, USA

*****

“Nonviolence, to be a potent force, must begin with the mind. Nonviolence of the mere body without the cooperation of the mind is nonviolence of the weak of the cowardly, and has, therefore, no potency. It is a degrading performance. If we bear malice and hatred in our bosoms and pretend not to retaliate, it must recoil upon us and lead to our destruction.”

— Gandhi

*****

Tribute to the Mahatma:

Gandhi was inevitable. If humanity is to progress, Gandhi is inescapable. He lived, thought and acted, inspired by the vision of humanity evolving toward a world of peace and harmony. We may ignore him at our own risk.”

— Martin Luther King Jr.

*****

Tribute to the Mahatma:

“Generations to come will scarce believe that such a one as this ever in flesh and blood walked upon this earth.”

— Albert Einstein

“Mahatma Gandhi had become the spokesman for the conscience of all mankind.”

— George C. Marshall, United states secretary of state

*****

1. பார்வையாளர் அரங்கம்:

காந்தியைக் கடந்து பார்வையாளர் அரங்கத்தில் நுழைந்தால், அந்த அரங்கில் இருபதாம் நூற்றாண்டின் மையப்பகுதியில் நடந்த ‘கறுப்பின அமெரிக்கர்களின் சமவுரிமை அறப்போராட்டத்தின் வரலாறும்’, அதில் பங்கேற்று வழி நடத்திய டாக்டர் கிங்கின் வாழ்க்கை வரலாறு ‘கரேஜ் டு லீட்’ (Courage To Lead) என்ற தலைப்பிலும் பல ஒலி-ஒளி ஊடகங்கள், புகைப்படங்கள், மாதிரி சிலைகள் கொண்டு வழங்கப்படுகிறது.   அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அவரது உடலை இறுதி ஊர்வலத்தில் ஏற்றிச் சென்ற கோவேறு கழுதைகளால் இழுக்கப்பட்ட வண்டியும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ஒரு அரை நூற்றாண்டிற்கு முன்னர் அமெரிக்காவில் இனபேதம் காரணமாகக் கறுப்பர்கள் அடைந்த துயரங்களையும், சமவுரிமைக்காக அவர்கள் பட்ட துன்பங்களையும், அதற்கு தங்கள் தலைவரையே விலையாகக் கொடுத்ததையும் கண்டு கழிவிரக்கம் கொள்ளாமல் இருக்க முடியாது. இப்பகுதியில் அவரது உரைகளின் ஒலிப்பதிவுகளையும் கேட்கலாம். அட்லாண்டா நகர் உள்ள ஜியார்ஜியா மாநிலத்தில் இருந்து, அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜிம்மி கார்ட்டர் அறக்கட்டளையும் இணைந்து இங்கு சில செய்திகளை காட்சிப்படுத்தியுள்ளார்கள். மிகச்சிறிய கடையொன்றில் கறுப்பின வரலாறு, டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் குறித்த படங்களும் நூல்களும் விற்பனைக்குள்ளன. சிறுவர்ளை கருத்தில்கொண்டு அவர்களுக்காகவும் காட்சிப்படுத்தப்பட்ட பகுதியொன்றும் உள்ளது.

Siragu Martin4

Siragu Martin5

 Siragu Martin6

 2. டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் வரலாற்று மையம்:

அரங்கில் இருந்து வெளியேறி வளாகத்தின் தெற்கு நோக்கிச் சென்று, கட்டிடத்தின் பின்புறமுள்ள ஆபர்ன் சாலையை அடைந்தால், நேர் எதிரே டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் வரலாற்று மையம் உள்ளது. டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் மனைவி இறந்த பிறகு தனது இல்லத்தில் துவக்கிய அறக்கட்டளையின் பணி பிற்காலத்தில் இங்கு மாற்றப்பட்டது. டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் வரலாற்று மையத்தில் உள்ள ‘ஃப்ரீடம் ஹால்’ (Freedom Hall at 449 Auburn Avenue) கட்டிடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் தனிப்பட்ட முறையில் சேகரித்திருந்த 10,000 க்கும் மேற்பட்ட ஆவணங்களும், அமெரிக்க சமவுரிமைப் போராட்டம் குறித்த ஆவணங்களும் பார்வைக்கு உள்ளன. இக்கட்டிடத்தின் மாடியில், டாக்டர் மாட்டின் லூதர் கிங்கின் வாழ்க்கை, அவரது குடும்பம் குறித்த காட்சி அறைகளும், அவரது மனைவி குறித்த காட்சியகமும் உள்ளன.

அலபாமா மாநிலத்தின் மாண்ட்கோமரி நகரப் பேருந்தில், வெள்ளையர் ஒருவருக்கு இருக்கையைக் கொடுக்குமாறும், பேருந்தின் பின்புறம் இருக்கும் கறுப்பினர் பகுதிக்குச் சென்று அமருமாறும் ரோசா பார்க் என்ற கறுப்பினப் பெண்மணி கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால் 15 வயது கர்ப்பிணியான இளம்பெண் ரோசா பார்க் கட்டளையை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். அதனால், நடைமுறையில் உள்ள வெள்ளையர்-கறுப்பர் என்ற இனபேத பிரிவினையை எதிர்த்ததற்காகக் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து கறுப்பர்கள் போராடினர். இப்போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்து முன்னின்று நடத்தினார் அப்பொழுது அலபாமாவில் பணியாற்றிய டாக்டர் மார்ட்டின் லூதர் கிங். கறுப்பர்கள் பேருந்தை புறக்கணிக்க வேண்டும் என்ற டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் வைத்த வேண்டுகோளின்படி போராட்டம் துவங்கியது. அப்போராட்டம் புரட்சி செய்யும் சமவுரிமைப் போராட்டமாக முழு வளர்ச்சியடைந்தது. பின்னர் இதையடுத்து கறுப்பர்கள் சட்டத்தின் முன் சமவுரிமை பெற்றதும் சென்ற நூற்றாண்டின் முக்கியமான அமெரிக்க வரலாறு.

இப்போராட்டம் துவங்கக் காரணமான ரோசா பார்க் குறித்த காட்சியகம் பகுதியும் இங்கு உள்ளது. அத்துடன் மகாத்மா காந்திக்கு என ஒரு பகுதியும் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் வரலாற்று மையத்தின் ஃப்ரீடம் ஹால் காட்சியகத்தில் உள்ளது. இப்பகுதியில் காந்தியின் அறிவுரைகளும், பொன் மொழிகளும், இந்திய விடுதலைப் போராட்டத்தில் வன்முறையற்ற வழியில் அவர் போராடியது குறித்த குறிப்புகளும், டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்டு இந்தியாவிற்கு வந்தது போன்ற தகவல்களும் காணப்படுகின்றன. பொதுவாக வன்முறையற்ற போராட்டத்தின் மேன்மையை வலியுறுத்தும், மக்களிடையே அந்த எண்ணத்தை விதைக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகம் இது.

Siragu Martin7

3. டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கின் கல்லறை:

டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் வரலாற்று மையத்தின் வாசலுக்கு எதிரில், நீர்பிரதிபலிக்கும் நீண்ட செவ்வகக் குளமும், அக்குளத்தின் நடுவில் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் கல்லறையும், அவருக்கு அருகிலேயே புதைக்கப்பட்ட அவரது மனைவி கொரீட்டா ஸ்காட் கிங் அவர்களின் கல்லறையும் வெண்ணிற பளிங்கினாலான ஒற்றை மேடையாக அமைக்கப்பட்டுள்ளது. முதலில் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கின் உடல் ‘சவுத் வியூ சிமெட்டரி’ (Southview Cemetery) என்ற இடத்தில் புதைக்கப்பட்டிருந்தது. பின்னர் அவருக்காக அருங்காட்சியகம் அமைக்கும் இடம் தேர்வான பின்னர், இப்பொழுதுள்ள வளாகப் பகுதியின் கல்லறைக்கு அவரது உடலை மாற்றிவிட்டனர். பின்னர் 2006 ஆம் ஆண்டு அவர் மனைவியும் இறந்த பின்னர், அவரையும் டாக்டர் கிங் அருகிலேயே புதைத்து கல்லறையைப் பெரிதாக்கியுள்ளனர். இந்த வெண்பளிங்கு மேடை கல்லறைக்கு எதிரே உள்ள நடைமேடைக்கருகில் எரிவாயுவால் தொடர்ந்து எரியும் ஒரு அணையா விளக்கும் அமைக்கப்பட்டுள்ளது. அது டாக்டர் கிங் அமைதி மீது கொண்டிருந்த அணையாத நம்பிக்கையைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.

Siragu Martin8

4. டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் பிறந்த இல்லம்:

டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் வரலாற்று மையத்தின் கிழக்கில் ஆபர்ன் சாலையில் அட்லாண்டாவின் அந்நாளைய குடியிருப்புகளைக் காட்டும் வரலாற்றுக் குடியிருப்புப் பகுதியை, சென்ற நூற்றாண்டின் கட்டிட அமைப்புகளை மாற்றாமல் காலத்தில் பின்னோக்கிச் சென்று பார்ப்பது போன்ற அமைப்பில் பாதுகாத்துள்ளனர். எதிர்வரிசையில் ‘ஷாட்கன்’ வீடு (shotgun home) அமைப்பில் கட்டப்பட்ட குறுகிய நீண்ட வீடுகள் சில உள்ளன. வரலாற்று மையத்தின் வரிசையில் நூறு ஆண்டுகள் பழமையான அக்கால தீயணைப்பு நிலையம் ஒன்று சீரமைக்கப்பட்டு உள்ளது. அதற்கு அருகில் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் பிறந்து, அவரது 12 வயது வரை வாழ்ந்த வீடும் இருக்கிறது (# 501 Auburn Avenue at Sweet Auburn historic district of Atlanta). இந்த வீட்டை டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் குடும்பத்தினர் அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்துவிட்டனர். இந்த வீடு சீரமைக்கப்பட்டு சென்ற நூற்றாண்டில் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் அங்கு வசித்த பொழுது இருந்த அமைப்பில் காட்சிப்படுத்தப்பட்டு, வழிகாட்டி ஒருவர் உதவியுடன் விளக்கமளித்து பார்வையாளர்களுக்கு சுற்றிக்காட்டப்படுகிறது.

Siragu Martin9

டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கின் தாய்வழித் தாத்தாவும், எபினேசர் பாப்டிஸ்ட் தேவாலயத்தின் பாதிரியாராகவும் பணிபுரிந்த ரெவரெண்ட் ஆடம் டேனியல் வில்லியம்ஸ் பாதிரியார், கட்டி 15 ஆண்டுகள் ஆகியிருந்த வீட்டை $3,500 டாலருக்கு, 1909 இல் விலைக்கு வாங்கி குடியேறிய வீடு இது. இந்த வீடு ‘குயின் ஆன்னி’ கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இரண்டு அடுக்கு வீடு. பாதிரியார் ஆடம்ஸ் வில்லியம்ஸின் மகள் ஆல்பர்ட்டா வில்லியம்ஸ், மார்ட்டின் லூதர் கிங் சீனியரை மணந்து இருவரும் அந்த வீட்டில் வசித்த பொழுது, 1929 ஆம் ஆண்டு அவர்களுக்கு மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் பிறந்தார். இவ்வீட்டை அடுத்திருக்கும் மற்றொரு வீட்டில் டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் தொடர்புள்ள சற்றே பெரிய நூல் விற்பனை நிலையத்தையும் அருங்காட்சியகம் அமைத்துள்ளது.

5. டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் பணியாற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க எபினேசர் பாப்டிஸ்ட் தேவாலயம்:

டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கின் தாய்வழித் தாத்தா ரெவரெண்ட் ஆடம் டேனியல் வில்லியம்ஸும், தந்தை மார்ட்டின் லூதர் கிங் சீனியரும், அதே ஆபர்ன் சாலையின் கிழக்குப் பகுதியில் சில கட்டிடங்கள் தள்ளி இருந்த எபினேசர் பாப்டிஸ்ட் தேவாலயத்தில் பாதிரியார்களாகப் பணி புரிந்தனர். பாஸ்டன் கல்லூரியில் சமயம் பற்றிய கல்வியில் முனைவர் பட்டம் பெற்ற பிறகு, அலபாமாவில் சில காலம் பணிபுரிந்தார் டாக்டர் கிங். அவரது அலபாமா பணிக்குப் பிறகு தனது தந்தையுடன் இணைந்து, 1960 முதல் அவர் இறக்கும் வரை இந்த தேவாலயத்தில் துணை பாதிரியாராகப் பணிபுரிந்துள்ளார். டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் படுகொலை செய்யப்பட்டு இறந்த பிறகும், அவரது தந்தையார் மார்ட்டின் லூதர் கிங் சீனியர் தனது பணிவோய்வு காலம் வரையிலும் (1975) அங்குப் பணியாற்றினார்.

தேவாலயத்தில் பணிபுரிந்த பொழுது டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் பல உரைகளை நிகழ்த்தினார். அவரது உரைகள் இங்கு பார்வையாளர்களுக்காக மீண்டும் பதிவு செய்யப்பட்ட ஒலிப்பதிவாகவும், சிறந்த பேச்சாளர்களைக் கொண்டும் நிகழ்த்தப்படுகிறது. இப்பொழுது இந்தத் தேவாலயம் டாக்டர் மார்ட்டின் லூதர் இங்குப் பணிபுரிந்து மறைந்த 1968 ஆண்டுக் காலத்தின் நிலைக்குச் சீரமைக்கப்பட்டுள்ளது. டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கின் வாழ்க்கையுடனும் குடும்பத்துடனும் இந்தத் தேவாலயத்திற்கு இருக்கும் தொடர்பு அதிகம். குழந்தையாக ஞானஸ்நானம் பெற்றதும், சமயப் பாதிரியாராக அங்கீகரிக்கப்பட்டு சமயப்பணி செய்ய ஏற்றுக் கொள்ளப்பட்டதும், இறந்த பிறகு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டதும் என டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் வாழ்வின் முக்கியமான நிகழ்வுகளுடன் பிரிக்கமுடியாத தொடர்பு கொண்டது இந்த தேவாலயம்.

Siragu Martin10

இத்தகைய முக்கியமான இடங்களுடன் ‘இன்டர்நேஷனல் வேர்ல்ட் பீஸ் ரோஸ் கார்டன்’ (International World Peace Rose Garden), ‘பிஹோல்ட்’ (“Behold”) சிலை என்றழைக்கப்படும், ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் தொன்மக் கலாச்சாரத்தில் குழந்தையை வானை நோக்கி உயர்த்தி, கடவுளுக்கு நன்றி கூறி, அருள் வேண்டி, அர்ப்பணிக்கும் வழக்கத்தைக் காட்டும் சிலை ஒன்றும் உள்ளது. எபினேசர் பாப்டிஸ்ட் தேவாலயத்தை நோக்கி இந்தச் சிலை மனிதன் கையில் உள்ள குழந்தையை உயர்த்திக் காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது.

சமூகநீதி, உலக அமைதி, சமத்துவம் என்ற டாக்டர் மார்ட்டின் லூதர் கிங்கின் கனவுகளை உலகுக்கு அறிவிக்கும் இந்த அருங்காட்சியகம், ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது ஒரு மில்லியன் மக்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிட்டு செல்லும் இடம். அமெரிக்க வரலாற்றில் புகழ்பெற்ற அருங்காட்சியக வளாகம் இது. குறிப்பாக, இளைய தலைமுறைக்கு வரலாற்றைக் காட்டும் நோக்கிலும், கறுப்பின மக்கள் தங்கள் முன்னோர்களின் வாழ்வையும் போராட்டத்தையும், தனது மக்களின் சமவுரிமைக்காகப் போராடி உயிரிழந்த தங்களது தலைவரை நினைவு கூரும் நோக்கில் வந்து பார்வையிடும் இடமாக உள்ள அருங்காட்சியக வளாகம் இது.

பசுவைக் காக்கிறேன் என்று உடனிருக்கும் மனித உயிரைப் பறிக்கத் தயங்காது வன்முறையில் வழியில் நடக்கும், மக்களைச் சரிசமமாக நடத்தத் தெரியாது ஆணவக் கொலைகள் புரியவும் தயங்காது, தேசத் தந்தை காந்தியின் அகிம்சை வழியைக் காற்றில் பறக்கவிட்டுவிட்ட இன்றைய இந்தியாவின் வழித்தோன்றல்கள் வந்து பார்வையிட வேண்டிய அருங்காட்சியக வளாகம் இது. அமெரிக்க அருங்காட்சியகத்தில் காந்தியையும் அவரது வழிகாட்டலையும் மதித்து அயலக மண்ணில் காட்சிப்படுத்தப்பட்டவற்றைக் கண்டு இந்தியர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய அருங்காட்சியக வளாகம் இது.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் அருங்காட்சியகம், அட்லாண்டா”

அதிகம் படித்தது