மார்ச் 28, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

மார்த்தா (சிறுகதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Mar 30, 2019

siragu maarththaa1

சாலையோரம் படுத்துறங்கிய மார்த்தா இடுப்பின் பின் எலும்பில் ஊசிக்குத்துவது போன்ற வலியால் துடித்தெழுந்தாள். கிழக்கே உள்ள மணிக்கூண்டில் மணி 6-ஐ தொட்டுக்கொண்டிருந்தது. டிசம்பர் மாத குளிர், வரலாறு காணாத அளவு சிகாகோவை வாட்டிக்கொண்டிருந்தது. குளிரில் நடுங்கியபடி கால்களை இறுக்கக் கட்டிக்கொண்டு முட்டியில் முகம் புதைத்துப் படுத்துக்கொண்டாள். மீண்டும் இடுப்பெலும்பை உருவி வெளி எடுப்பது போன்ற வலி. தன் பையை அருகிழுத்து தேடிப்பார்த்தாள். அவள் தேடியது அகப்படவில்லை. என்ன செய்வது? என்று யோசித்துக்கொண்டே சாலைகளில் வேகமாக சீறிப்பாயும் மகிழுந்துகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.

மார்த்தாவிற்கு வயது 20. மார்த்தாவின் அம்மா குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டு மனநிலை பிறழ்ந்து அரசு நடத்தும் விடுதியில் இருக்கிறார். தன் 17 வயதில் அம்மா மனநல காப்பகத்தில், அப்பா வேறு ஒரு துணையுடன் வாழ்க்கை என சென்றுவிட, வீட்டிற்கு வாடகை கட்ட பணமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறினாள் மார்த்தா. இந்த மூன்று ஆண்டுகளில் தெருவோரமே அவள் வீடானது. மகிழுந்துகள் சமிக்ஞைகிற்கு நிற்கும் போது, ஒவ்வொரு மகிழுந்துவின் கதவருகில் நிற்பாள். யாரவது பணம் தந்தால் starbucks சென்று காலை காபி குடிப்பாள். மதியம் ஏதாவது ஒரு சிறு உணவு விடுதியில், இருக்கும் பணத்தில் ஒரு சிறு ரொட்டித் துண்டை வாங்கிக்கொள்வாள். அதுவே அவளுக்கு பல நேரங்களில் நாள் முழுவதற்குமான உணவு. ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் community hall இல் இலவசமாக பலர் சேர்ந்து சமைத்து வழங்கும் உணவை வாங்கிக்கொண்டு வருவாள். அதை பத்திரப்படுத்தி செவ்வாய்க்கிழமை வரை கூட வைத்துக்கொள்வாள். சில நேரங்களில் எங்காவது வேலைக்குச் செல்வாள்; ஆனால், அங்கு யாரேனும் அவளிடம் வரம்பு மீறி நடந்தால் அவளுக்கு பிடிப்பதில்லை, அதனால் வேலையும் நிலைப்பதில்லை.

எந்தச் சூழ்நிலையையும் சமாளிக்கும் தெம்பு இருந்தாலும், ஒவ்வொரு மாதமும் மாதாந்திர சுழற்சி வலியை மட்டும் அவளால் கடக்க முடியாது. சரியான ஆகாரம் இல்லாததால் கடுமையான வலியில் அவதியுருவாள். அந்த வலி தான் இன்றும் இந்த வாட்டும் குளிரோடு அவளை வாட்டிக் கொண்டிருக்கிறது.

அவள் அணிந்திருந்த கருப்பு அங்கியின் சட்டைப்பையை துழாவினாள். அதில் இரண்டு வெள்ளிகள் மட்டுமே இருந்தன. அதை வைத்துக் கொண்டு ஒரே ஒரு பேட் வாங்கலாம் என்றால், இரவில் இருந்து பட்டினி, வயிறு ஒட்டி இருந்தது. இந்த வலியும் பசியும் சேர்ந்துக்கொண்டதில் சோர்ந்துபோனாள். பையை மீண்டும் துழாவினாள். கிழிந்த காலுறை ஒன்று அகப்பட்டது. எடுத்துக்கொண்டு பொது கழிவறைக்கு ஓடினாள். வழியில் ஒரு குப்பைத்தொட்டியில் ஒரு உடைந்த பொத்தல் ஒன்றை எடுத்துக்கொண்டாள். கழிவறைக்குச் சென்று தண்ணீர் பிடித்துக் குருதி வழியும் அவள் உறுப்பினை சுத்தம் செய்தாள். அந்த அழுக்கு காலுறையை பேட் போன்று பயன்படுத்தினாள். ஆனால் இரண்டு மணி நேரத்தில் முழுதும் நனைந்து விட, மீண்டும் கழிவறை நோக்கி ஓடினாள், அதை எடுத்துவிட்டு அலசி ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்துக் கொண்டாள். பேடுக்கு என்ன செய்வது என சிறிது நேரம் யோசித்து விட்டு, அங்கே கழிவறையில் இருந்த பல கைத் துடைக்கும் நாப்கின்களை எடுத்து பேட் போன்று பயன்படுத்தினாள். இப்படித்தான் இன்னும் இரண்டு நாட்கள் சமாளிக்க வேண்டும் என நினைத்துக்கொண்டாள். பின் தன் தலையில் கொட்டிக்கொண்டு காலம் பூராவும் என சிரித்துக்கொண்டாள். வரும் வழியில் இருந்த இரண்டு வெள்ளிகளை கொண்டு சூடான ஒரு காபி வாங்கிக்கொண்டு ஒரு பூங்காவின் பலகை ஒன்றின் மீது வந்து அமர்ந்தாள். காபி குடித்ததும் சின்ன தெம்பு வந்தது போல் இருந்தது. இரவு கடுங்குளிர் தாக்கும் என நேற்றே சொல்லிவிட்டனர். தன் பையை தூக்கிக் கொண்டு 2 மைலில் இருக்கும் தொடர்வண்டி நிலையத்திற்குள் மெதுவாக சென்று அங்கே ஒரு பலகையில் படுத்துக்கொண்டாள். மீண்டும் அவளின் காகித பேட் நனைந்து விட கழிவறை நோக்கி மீண்டும் ஓடினாள்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மார்த்தா (சிறுகதை)”

அதிகம் படித்தது