ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரசும், ஊரடங்கு உத்தரவும்!

சுசிலா

Mar 28, 2020

siragu coronavirus1
மனிதகுல வரலாற்றில் நாம் பல தொற்று நோய்கள், பல உயிரிழப்புகளைக் கண்டு, அனுபவித்துக் கடந்து தான் வந்திருக்கிறோம். அதன் அனுபவத்திலிருந்து பல பாடங்களும் கற்றிருக்கிறோம். மனித மூளை சிந்தித்து அறிவியலை கண்டடைந்தபோது, இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அந்தந்த காலத்திற்கேற்ப பல புதிய தீர்வுகள் உண்டாகின, அறிவியலார்கள் உருவாகினர், புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன, அதன் மூலம் பல்லாயிரகணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றுதான் வரலாறு பதிவு செய்திருக்கிறது. கடந்த சில நூற்றாண்டுகளில் கூட, பெரியம்மை, காலரா, பிளேக் போன்ற தொற்றுநோய்கள் உருவாகி, மக்களை கொன்று குவித்திருக்கிறது.

1918-ல், ஏற்பட்ட ஸ்பானிஷ் ஃப்ளு காய்ச்சலில், இந்தியாவில் மட்டுமே கோடிக்கணக்கில் மக்கள் மடிந்தார்கள் என்று வரலாறு கூறுகிறது. அவ்வப்போது இயற்கை இப்படிப்பட்ட பேரழிவுகளை ஏற்படுத்திக்கொண்டுதான் இருக்கிறது. இவ்வுலகில் மனிதர்களுடன், தாவரங்கள், விலங்கினங்கள் வாழ்வது போல், கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும் கூட சேர்ந்து தான் வாழ்கின்றன. அவைகளும் நம்மைப் போலவே, நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டிக்கொண்டே போவதற்கான வழிமுறைகளை கையாளுகின்றன. தங்களுக்குத் தாங்களே தகவமைத்துக்கொள்கின்றன என்பதுதான் உண்மை. அவற்றிலிருந்து மனிதகுலம் ஒவ்வொரு முறையும் மீண்டு வந்துகொண்டுதானிருக்கின்றது. ஆனாலும், உயிரிழப்புகள் நேர்வதைத் தவிர்க்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். அது அதிகளவில் நேராத வண்ணம் தடுப்பதற்கான ஆய்வுகள், அறிவியலின் மருத்துவ உலகம் ஒவ்வொரு முறையும் சாதனை புரிந்துக் கொண்டுதானிக்கிறது. இந்த உலக மக்களும், அவர்களை ஆளும் அரசுகளும் அதற்கான முன்னெடுப்பு முயற்சிகளை கைவிடாமல் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

siragu coronavirus2

அதன் நீட்சியாக, இந்த ஆண்டின் பெருந்துயரமாக நம் அனைவரையும் அச்சம் கொள்ளவைக்கும் விதமாக மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிக்கொண்டிருக்கிறது என்பது மிகவும் வேதனைக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது. COVID 19 (CORONO VIRUS DIESEASE 19) என்று பெயரிடப்பட்ட இந்த தொற்றுநோய், சென்ற ஆண்டு 2019 நவம்பரில், சீனா நாட்டு வூகான் மாகாணத்தில், முதலில் தோன்றிய இந்த வைரஸ் ஆரம்பத்தில் உலகநாடுகளின் பார்வையில் அவ்வளவாக கவனம் கொள்ளவில்லை. அது சீன நாட்டுப்பிரச்சனையாகவே பார்க்கப்பட்டது. சாதாரணமான சளி, இருமல், காய்ச்சல், தொண்டைவலி என்று ஆரம்பிக்கும் இந்த தொற்று சில நாட்களிலேயே நுரையீரலை அடைந்து, மூச்சுத்திணறலை உண்டக்கி, கொஞ்சம் கொஞ்சமாக சிறுநீரகம், கல்லீரல், இதயம் என உடலின் அனைத்து பாகங்களையும் செயலிழக்க வைக்கிறது என மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது, வெகு விரைவாக, தொடுதலின் மூலம் மக்களிடையே பரவுகிறது என்றும் சொல்லப்பட்டது. ஆதலால் தான், அந்த மாவட்டம் முழுவதும் பரவி, அதிகளவில் மக்கள் மரணத்தைத் தழுவினர். அப்போது தான் உலகநாடுகள் சீனாவை சற்று கவனிக்க ஆரம்பித்தன. அந்த மாவட்டம் முழுவதுமே தனிமைப்படுத்தப்பட்டது. அங்கே பல உயிரிழப்புகள் நேர்ந்துகொண்டிருக்கும் வேளையில், கொஞ்சம் கொஞ்சமாக பல நாடுகளுக்கு பரவத்தொடங்கியது.

ஐரோப்பியநாடுகள், அமெரிக்கா, கனடா, தென்அமெரிக்கா நாடுகள், தெற்காசிய நாடுகள், ஜப்பான், தென்கொரியா, அரபுநாடுகள் என வேகமாக கடந்த இரண்டு மாதங்களில் இந்த தொற்று பரவியது. அப்போது தான் இந்த தொற்றின் வீரியம் மக்களுக்கும், அதன் அரசுகளுக்கும் புரிய ஆரம்பித்தது. சீனாவிற்கு அடுத்து அதிகம் பரவிய நாடாக இத்தாலி இருக்கிறது. அந்நாட்டு மக்கள் அரசின் ஊரடங்கு உத்தரவை அலட்சியப்படுத்தியத்தின் விளைவாக உயிர்பலி, தொற்றுப்பரவல் இரண்டிலும் முதலாவதாக வந்தது. மக்கள் தினமும் நூற்றுக்கணக்கில் செத்து மடிந்தனர். அங்கே சிகிச்சையளிப்பதற்கு மருத்துவமனைகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை, மருந்து இல்லை, வெண்டிலெட்டர்கள் இல்லை, ஏன்… மரணித்த உயிர்களை புதைப்பதற்குக் கூட இடமில்லை என்று அந்நாட்டு அதிபரே கண்கலங்கிக் கூறியதை நம்மால் மறக்கத்தான் இயலுமா! இதனை, மனித வரலாற்றில், மனித குருதியால் பதியப்பட்டதாகவே நாளை உலகம் கவனத்தில் கொள்ளும்!

மேலும், இந்த தொற்றுநோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் மிகவும் வேதனைக்குரிய ஒன்றாக இருக்கிறது. அதற்கான ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. அமெரிக்கா இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்திருக்கிறோம், ஆனால், அதை பரிசோதித்து, பயன்பாட்டிற்கு வருவதற்கு குறைந்தது ஆறுமாத காலம் ஆகும் என்று கூறுகிறது. மிகக் கடினமான முன்னெடுப்புகளை எடுத்தபிறகு தற்சமயம், சீனா கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணம் தனிமைப்படுத்துதல் என்பது தான். சமூக இடைவெளி ஒன்றே பரவுதலை தடுக்கும். உலகநாடுகளுக்கும் இதையே வலியுறுத்திக்கொண்டிருக்கிறது. மக்கள் வெளியில் வராமல், தங்களைத் தாங்களே தனிமைப்படுத்துக்கொள்வது மிக அவசியம், இந்த நோய்த்தொற்று ஆரம்ப நிலையில் இருக்கும்போது குணப்படுத்திவிடமுடியும் என்பது சற்று ஆறுதலான விடயம்.

siragu coronavirus3

தற்சமயம் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கும் சீனாவை முந்திக்கொண்டு, தொற்று பரவுதலில் இத்தாலி நாடு முதலில் வந்தது. உயிரிழப்புகளிலும் இத்தாலியே இன்றுவரை முதலிடத்தில் இருக்கிறது. உலக அளவில், இந்த தொற்றுள்ளவர்கள் 4லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,000 – த்தை கடந்திருந்தது. இதில், இத்தாலி நாட்டில் மட்டும் 8,000 க்கும் மேலானவர்கள் மரணமடைந்திருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக, இறப்புவிகிதத்தில் ஸ்பெயின் நாடு பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது. இந்த கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், தொற்று பாதித்த நாடுகளில் முதல் நாடாக 85,000 என அமெரிக்கா உள்ளதாக செய்திகள் வருகின்றன. இறப்புகள் ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. வளர்ந்த நாடுகளே இந்தப் பிரச்சனையை கையாளுவதில் திணறிக்கொண்டிருக்கின்றன என்பது கண்கூடு, உலகமே ஊரடங்கு என்ற தனிமைப்படுத்துதலின் மூலம் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

உலக நாடுகள், தங்கள் எல்லைகளை எல்லாம் மூடிக் கொண்டு, ஒரு கூண்டுக்குள் அடைத்துக்கொண்டிருக்கிறது. இந்த அவலநிலை இன்னும் எவ்வளவு நாட்ளுக்கு நீடிக்குமோ என்ற கவலை உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது!

இன்றைய நிலவரப்படி, இந்தியாவில், நோய்த்தொற்று பாதிப்புள்ளவர்கள் 710 பேர்கள் எனவும், உயிர்பலி 20 எனவும் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. தமிழ்நாட்டில், பாதிப்புக்குள்ளானவர்கள் 35 பேர்கள் எனவும், இறந்தவர் ஒருவர் எனவும் கூறப்படுகிறது. இந்தியாவில், இந்த கொரோனா தொற்று இருப்பதையும், அதன் பரவலைத் தடுப்பதற்கும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருக்கிறது இந்திய அரசு. 21 நாட்கள் இந்த ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவித்திருக்கிறது. நாம் இப்போது இரண்டாம் நிலையில் இருப்பதாக மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது தான் மிக முக்கியமான நிலை என்றும், இந்நிலையில் தான் சமூக பரவல் அதிகமாகும் என்பதால், மக்கள் வெளியில் வர வேண்டாம், வீட்டிற்குள்ளேயே ஒவ்வொருவரும் தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி அவர்கள் அறிவித்திருக்கிறார். இது வரவேற்கவேண்டிய ஒன்று. இதனை மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் மருத்துவர்கள், அறிவியல் ஆய்வாளர்கள், கூறும் அறிவுரையாக இருக்கிறது.

siragu coronavirus4

மக்கள் பொது வெளியில் கூட்டமாகக் கூடக் கூடாது என்பதால், கல்வி நிறுவனங்கள், அலுவலங்கள் போன்றவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இதில், சில தவறான நிகழ்வுகள் நம்மை மிகவும் வருத்தப்பட வைத்தன என்பது உண்மை. மார்ச் 22 ஞாயிறு அன்று ஒருநாள் முன்னோட்ட ஊரடங்கு என்று பிரதமர் அறிவித்திருந்தார். மேலும் அன்று 5 மணிக்கு எல்லோரும் அவர்கள் வீட்டின் முன் நின்று மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுப்பணியாளர்கள் ஆகியோருக்கு நன்றி சொல்லும் விதமாக கைதட்டுங்கள் என்று சொல்லியதை, மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கைதட்டினார்கள், நம் தமிழக முதல்வர் உட்பட.!

இதற்கு ஒருபடி மேலே போய் வடமாநிலங்களில், மக்கள் கையை தட்டிக்கொண்டும், நடனம் ஆடிக்கொண்டும், தெருக்களில் ஊர்வலம் போனதும் ஒருபுறம் அரங்கேறியது. உத்திரபிரதேச முதல்வர், யோகி ஆதித்யநாத் ராமர், அயோத்தியில், கோவில் கட்டுவதற்கான பூமி பூசை போடுவதாகச் சொல்லி, மக்களைக் கூட்டி மிகப்பெரிய பாதிப்பை வரவழைத்திருக்கிறார். இந்த ஊரடங்கு கூட, தாமதமான ஒன்று தான். முன்கூட்டியே, அதாவது, சீனாவில் வந்த ஒரு மாதத்திலேயே, கடந்த பிப்ரவரியில் எடுத்திருக்க வேண்டும். காங்கிரசு தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி பிப்ரவரி முதல் வாரத்திலேயே, இந்த கொரோனா தொற்றுப்பற்றி கூறினார். இது இந்தியாவிற்கு வருவதற்கான வாய்ப்பு அதிகளவில் இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்குமாறு சொல்லியும், மத்திய பா.ச.க அரசு அதனை நிராகரித்தது. CAA,NPR, NRC என குடியுரிமை திருத்த சட்டம், குடியுரிமை பதிவேடு, குடியுரிமை மக்கள்தொகை பதிவேடு என்று மக்களை பதட்டத்தில் வைத்து, அதற்கு மக்கள் போராடிய போராட்டங்களை ஒடுக்கும் விதத்தில் செயல்பட்டுக்கொண்டிருந்தது.

உலக சுகாதார மையம் மற்றும் ஐக்கிய சபை செயலர் என உலக தலைவர்கள் கொரோனா பற்றிய தகவல்களையும், இந்தியாவை அது அதிகளவில் பாதிக்கும் என எச்சரிக்கை விட்டபிறகு தான் மத்தியஅரசு இந்த ஊரடங்கு விடையத்தை கையில் எடுத்தது. தாமதம் என்றாலும், இப்போதாவது செயல்படுகிறார்களே என்பது சற்று ஆறுதல் தருவதாக இருக்கிறது. இருந்தும், அதற்கான பணிகள் சரிவர செய்யப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய ஒன்றாக இருக்கிறது. மேலும் தமிழகஅரசின் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால், மார்ச் 24ந்தேதி மாலை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் தங்கள் ஊர்களுக்கு செல்லும் பொருட்டு கூடிய கூட்டம் மிகவும் அபாயகரமானதாக இருந்தது. கூட்டத்தை கட்டுப்படுத்தாமல், ஒரே இடத்தில ஆயிரக்கணக்கானோர் குழுமி இருந்தனர். மேலும், சென்னையில் பாதிப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் இந்த அரசு வெளிப்படையாக சொல்லாமல் மறைத்ததின் விளைவு மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. பாதிப்பு இல்லை என்று சொல்லிக்கொண்டே, திடீரென்று ஊரடங்கு உத்தரவை அறிவித்ததின் எதிரொலி தான் மக்கள் ஆங்காங்கே கூடி செய்வதறியாது குழம்பிப்போனார்கள். இதன் விளைவு வரும் வாரங்களில் தெரிய வரும் என மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்த ஊரடங்கு உத்தரவு என்பது சரியான ஒன்று என்பதை, இப்போது மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், 21 நாட்கள் என்பது மிகப்பெரிய காலமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், அடித்தட்டு மக்கள், தொழிலாளிகள் போன்றவர்களுக்கு, வேலைக்குச் சென்றால் தான் அன்றைக்கான உணவு நிச்சயம் என்ற நிலையில் வாழும் மக்கள் 40% உள்ள நாடு இந்தியா. இங்கே இவர்களுக்கான வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதம் அரசு ஏற்படுத்திக்கொடுக்குமா என்ற கேள்வி எழத்தானே செய்கிறது. ஆரம்பத்தில் மத்திய அரசு இதற்கு வெறும் 15,000 கோடி மட்டுமே ஒதுக்கியது. இந்தியாவின் ஒரு மாநிலமான 3 1/2 கோடி மக்களைக்கொண்ட கேரளா அரசே 20,000 கோடி ஒதுக்கியிருக்கும்போது, 130 கோடி மக்களை கொண்ட இந்தியா 15,000 கோடி ஒதுக்கினால் எம்மாத்திரம்!

பட்டினிச்சாவுகள் ஏற்படக்கூடிய நிலைமைகள் ஏற்படும் என அனைவரும் கூறத்தொடங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் திரு. சீதாராம் யெச்சூரி அவர்கள் பிரதமர் மோடிக்கு பகிரங்க கடிதம் ஒன்றை எழுதினார். பிறகு காங்கிரசு துணை தலைவர் சோனியா அவர்களும் எழுதினார்கள். பொருளாதார நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என அனைவரும் கேட்டபிறகு, தற்போது 1.70 லட்சம் கோடி ஒதுக்குவதாக பிரதமர் அறிவித்தார். அதில், அடுத்துவரும் 3 மாதங்களுக்கு இலவச அரிசி 5கிலோ, பருப்பு என அத்தியாவசியப்பொருட்கள் ரேஷனில் வழங்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு ரூ. 2000/, இன்னும் பல சலுகைகள் வழங்கப்பட இருக்கின்றன என்றும் அறிவிப்புகள் வந்துள்ளன. மேலும், வங்கிக்கடன் தவணைகள் மூன்று மாதங்களுக்கு நிறுத்திவைக்கப்படும் என்றும், வீடு, வாகனக் கடன் தொகைகளும் நிறுத்திவைக்க பரிசீலனை செய்யப்படும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. மேலும் வரிச்சலுகைகளும் அறிவிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இது எல்லாம் போதாது என்பது தான் பொருளாதார நிபுணர்களின் கருத்து, பொது மக்களின் கருத்தும் கூட. இந்த அறிவிப்புகள் எல்லாம் முதல் கட்டமாக இருக்க வேண்டும். மேலும் பல சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை, பாதிப்பு அதிகமிருந்தால், மக்களுக்கான தேவைகள் அனைத்தும் செய்துதரப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் திரு. ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார்கள். திமுக எம்பிக்கள், எம்எல்ஏகளின் ஒரு மாத ஊதியம் முதல்வர் நிவாரண நிதிக்காக கொடுக்கப்படுகிறது என்று அறிவித்திருந்தார். இந்நிலையில், தற்போது அதிமுக எம்பிக்கள், ஏம் எல் ஏக்கள் அதே போல் வழங்குவதாக கூறியிருக்கிறார்கள். தமிழக அரசு எடுத்துவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது என்றாலும், மேலும் அதிகளவில் செய்யவேண்டியது நம் முன்னே இருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. மக்களுக்கான அத்தனை தேவைகளும் செய்ய வேண்டியது அரசின் கடமை. அதனை உணர்ந்து போர்கால அடிப்படையில், விரைந்து தமிழக அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். மேலும் மிக முக்கியமாக மருத்துவப்பணியில் தங்களின் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் ஆகியோர்களுக்கு தேவையான முகக்கவசங்கள், கையுறைகள், கிருமிநாசினி மருந்துகள், ஆய்விற்கான உபகரணங்கள் தேவையான அளவிற்கு வழங்குவதில் குறைபாடுகள் இருக்கின்றன என்ற செய்திகள் வருகின்றன. அதனை உடனே சரி செய்வது அரசின் முக்கியமான கடமையாகும். மேலும், தனியார் மருத்துவமனைகளில், கொரோனாதொற்று பரிசோதனை செய்வதற்கு 4500 ரூபாய் வசூலிக்க வேண்டும் என்று அரசு நிர்ணயித்துள்ளது. வெளிநாடுகளில் இந்த பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. இதற்கான கட்டணத்தை அரசு அளிப்பதற்கு முன்வர வேண்டும்.

siragu coronavirus5

மேலும், இந்த கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வருவதற்கு நாம் எல்லோரும் செய்ய வேண்டிய மிக முக்கியமான பணி ஒன்று இருக்கிறதென்றால், அது மக்கள் அனைவரும் பொது வெளியில் வராமல் வீட்டிற்குள் ஊரடங்கு முடியும் வரை பொறுமையாக, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது தான். குழந்தைகள், முதிவர்கள், நோய்எதிர்ப்புசக்தி இல்லாதவர்கள் மிகவும் கவனமாக இருத்தல் மிக முக்கியம். மக்களை எவ்விதத்திலும் பாதிக்காத வண்ணம், அவர்களுக்கு தேவையானவற்றை வழுங்குவதில் அரசு எந்த சுணக்கமும் காட்டாமல், விரைவாக வழங்கிடல் வேண்டும்.

மக்களாகிய நாம், அரசு சொன்னபடி, ஊரடங்கு உத்தரவை உறுதியாக கடைபிடிப்போம். மத்திய, மாநில அரசுகள் மக்களை பாதுகாக்கும் பணியில், முக்கியமாக விளிம்பு நிலைமையுள்ள மக்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள், கூலி தொழிலாளிகள் மற்றும் விவசாயிகள் அவர்களுக்கான பொருளாதாரத்தை உறுதி செய்து, அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்வது அரசாங்கத்தின் கடமை.

இந்த கொல்லை நோயான கொரோனாவை வெல்வோம் … மீண்டு வருவோம்!
அதே சமயம், பட்டினிச் சாவு ஏற்படா வண்ணம் பொருளாதாரத்தை உயர்த்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவோம்!
நாம் ஒவ்வொருவரும், நம் சமூகத்திற்கான பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஊரடங்கை மதித்து வீட்டினுள் இருப்போம்!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மிக வேகமாக பரவிவரும் கொரோனா வைரசும், ஊரடங்கு உத்தரவும்!”

அதிகம் படித்தது