ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

மீண்டும் ஆணவக்கொலை?!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Nov 24, 2018

siragu meendum aanavakolai1

நத்திஷ் – சுவாதி மீண்டும் தமிழ் நாட்டில் ஆணவக் கொலை செய்யப்பட்டிருக்கும் இணையர்கள். சுவாதி வயிற்றில் மூன்று மாதம் கருவை சுமந்து கொண்டிருக்கிறார் என்று தெரிந்தும் அவரைக் கொன்று, முகத்தை சிதைத்து அவர் அடிவயிற்றைக் கிழித்து கருவை சிதைத்துள்ளனர். இப்படி கொடூரமான கொலையைச் செய்தவர் அந்தப் பெண்ணின் தந்தையும், பெரியப்பாவும்.

சாதி எவ்வளவு மூர்க்கமான மனிதர்களை உருவாக்குகின்றது என்பதற்கு இந்த கொலையே சாட்சி.

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 81 ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஏன் இந்த ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றன என்று எண்ணிப்பார்த்தால் இங்கு மனித மனங்களில் உள்ள உளவியல் சிக்கல்கள் புரியும்.

அண்ணல் அம்பேத்கர் மிகத் தெளிவாக இந்த சாதிய படிநிலைகளைப் பற்றி கூறும்போது “caste is a graded inequality” என்பார். சாதிய படிநிலையில் எந்த இரண்டு சாதியும் சமம் இல்லை என்ற மோசமான உளவியல் தான் மனித உயிர்களை இரக்கமின்றி காவு வாங்குகின்றது. வன்கொடுமை தடுப்பு சட்டங்கள் இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள அலட்சியம் இத்தகைய தொடர் கொலைகள் நடக்க காரணமாக இருக்கின்றன. நித்திஷ் – சுவாதி கொலையில் ஏற்கனவே இவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோதும் காவல் துறையினர் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்திருக்கின்றனர் என்ற செய்திகளையும் படிக்கின்றோம். காவல் நிலையங்கள் எப்படி சட்டத்தை மதிக்காமல் சாதிய உணர்வு என்ற கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றது என்பதை நாம் இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது.

siragu amrutha1

இத்தகைய ஆணவக் கொலைகளுக்கு என்ன தான் தீர்வு? சாதிய தலைவர்களிடம் இருந்து இந்த மக்களை காப்பற்ற வேண்டிய தேவை உள்ளது. சமீப காலங்களாக சமூக நீதி மாநாடுகள் என்று நடத்தும் ஒரு கட்சியினர் தொடர்ந்து அந்த சாதியைச் சேர்ந்த இளைஞர்களை மூளைச் சலவை செய்து சாதி வெறி ஏற்றி, வாட்ஸ் ஆப் காணொளிகளை வெளியிடுவதை பார்க்கின்றோம். இதனை தடுக்க இன்றைய மாநில அரசு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவே இல்லை. குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்ட கோகுல்ராஜ் என்ற தலித் சமூகத்து இளைஞரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் ஒரு கொலைக்குற்றவாளி தொடர்ந்து வாட்ஸ் ஆப்பில் காவல் துறைக்கு சாவல் விட்ட அவலங்களை எல்லாம் நாம் கேட்டோம். சமூக நீதிக்கு இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக இருந்த தமிழ் நாட்டில், தந்தை பெரியாரின் உழைப்பு மூலம் சாதி பெயரை பெயருக்கு பின்னால் போடாமல் இருந்து இந்தியாவிற்கு வழிகாட்டியாக இன்றும் இருக்கும் மாநிலத்தில் இந்த சாதிய ஆணவ கொலைகள் நமக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், அனைத்து நிலைகளிலும் ஊட்டப்படும் இந்து மத உணர்வு, அதன் காரணமாக வளர்த்தெடுக்கப்படும் சாதிய உணர்வு இன்று பெரும் சவாலாகவே இருக்கின்றது. நடுவண் அரசு மத வெறி ஊட்டும் அரசாக இருக்கின்ற காரணத்தால் இதனை அவர்கள் எந்த வெட்கமும் இன்றி பல மாநிலங்களில் செயல்படுத்துகின்றனர். இதை எதிர்த்து முழு வீச்சில் முற்போக்காளர்கள், சாதி ஒழிப்பு போராளிகள் களமாட வேண்டிய முக்கிய காலக்கட்டம்.

கடவுள் மறுப்பு எனது கொள்கையல்ல சாதி ஒழிப்பே எனது பிரதான கொள்கை என்பார் தந்தை பெரியார்!

“சாதியை ஒழிக்க வழி தேடினேன். அது மதத்துக்குக் கட்டுப்பட்டது என்றார்கள். எனவே மதத்தை ஒழிக்க ஆராய்ந்தேன். அது வேதத்துக்குக் கட்டுப்பட்டது என்றனர். வேதத்தை ஒழிக்க முற்பட்டேன். அது கடவுளுக்குக் கட்டுப்பட்டது என்றார்கள்.

சாதி எனும் மரத்தின் கிளைகளை வெட்டினால் அது மீண்டும் மீண்டும் வளரும். எனவே சாதி மரத்தின் அடிவேரான கடவுளை அழிக்க முற்பட்டேனே ஒழிய, எனக்கும் உங்கள் கடவுளுக்கும் வேறெந்தப் பகையுமில்லை.

சாதி ஒழிப்புப் பணியில் எவையெல்லாம் குறுக்கே வந்து தடை ஏற்படுத்துகிறதோ, அவற்றை எல்லாம் அழித்து, இந்த சமுதாயத்தை மானமும் அறிவுமுள்ளதாக மாற்றவும், “மனிதனுக்கு மனிதன் சாதிய ஏற்றத்தாழ்வில்லாமல் வாழச் செய்வதே என்லட்சியம்”. என்பார் தந்தை பெரியார், அதற்காகவே இறுதி வரை உழைத்தார்.

அந்த உழைப்பை வீணாக்காமல் அடுத்த தலைமுறையை செழுமைப்படுத்த வேண்டிய கடமை நம் கடமையாக உள்ளது. தொடர்ந்து சாதி ஒழிப்பை பற்றி பேசுவோம். சாதி என்பது மூடநம்பிக்கை என்பதை மக்களுக்கு தெளிய வைப்போம்! மீண்டுமொரு ஆணவக்கொலை இங்கு நிகழாமல் தடுப்போம்!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மீண்டும் ஆணவக்கொலை?!”

அதிகம் படித்தது