செப்டம்பர் 26, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

முக்கியத் தேவை

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jul 23, 2016

Siragu mukkiyath thevai1

விடுதலை பெற்ற இந்த 69 ஆண்டுகளில் இந்திய நாடு பெரும் வளர்ச்சி பெற்றுக் கொண்டே இருக்கின்றது என்று தான் நாம் இன்று வரையில் பாட நூல்களில் படிக்கின்றோம். இன்றைக்கு இந்த தொழில்நுட்ப யுகத்தில் இந்த நாட்டின் பல்வேறு துறைகள் மிக அதிகமான வளர்ச்சி பெற்றிருக்க நாம் காண்கின்றோம். ஆனால் இந்த வளர்ச்சி என்பது அனைத்து மக்களுக்குமான வளர்ச்சியாக இந்தியாவில் இருக்கின்றதா  என்று சிந்தித்துப் பார்த்தால் கண்டிப்பாக இல்லை. இன்றும் வறுமை கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். இந்தியாவில் 259.5 மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு ரூ.19 வருமானம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள் என்று 2011ல் நடந்த கணக்கெடுப்பு கூறுகின்றது. அதாவது மொத்த மக்கள் தொகையில் 21.3% மக்கள் வறுமை கோட்டிற்குக் கீழ் அடிப்படை வசதிகள் இன்றி வாழ்கின்றனர்.  இது ஒரு புறம் இருக்க, சாதியின் பெயரால் இங்கே நடக்கும் கொடுமைகள் ஏராளம். 2020-இல் வல்லரசு நாடாக இந்தியா திகழும் என்று ஒரு புறம் நாம் பெருமை கொண்டாலும்; இன்றும், மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை  சாதிய அடிப்படையில்  நடந்து கொண்டே இருக்கின்றது.

Siragu mukkiyath thevai7இந்தியாவில் 1.3 மில்லியன் தலித் மக்கள், குறிப்பாக தலித் பெண்கள் மனிதக்  கழிவுகளை அகற்றித்தான் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்த மனிதக்  கழிவுகள்  அகற்றும் வேலை இங்கே சாதியத்தோடு நிலைப்பெற்றிருக்கின்றது, என்று நவி பிள்ளை, ஐ.நாவின் உயர் ஆணையாளர் 2013-இல் தெரிவித்தார்.  1993-இல் இந்தக் கொடுமையான வழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வரச்  சட்டம் கொண்டுவரப்பட்டது (The Employment of Manual Scavengers and Construction of Dry Latrines (Prohibition) Act, 1993).  மனிதக் கழிவுகளை கைகளால் மனிதன் அள்ளும் வேலை தடை செய்யப்பட வேண்டும் என்றும், அதற்கான ஆட்கள் வேலைக்கு நியமிக்கப்படுவதைத் தடை செய்ய வேண்டும் என்றும் அந்தச் சட்டம் சொன்னது. ஆனால் அந்தச் சட்டம் வந்து 20 ஆண்டுகள் கடந்த பின்னும் எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தால்,  மீண்டும் 2013-இல் THE PROHIBITION OF EMPLOYMENT AS MANUAL SCAVENGERS AND THEIR REHABILITATION என்ற சட்டத்தைக் கொண்டு வந்தனர். இந்தச் சட்டத்தின் மூலம் கையால் மலம் அள்ளும் வேலை தடை செய்ய வேண்டும் என்றும், இது நாள் வரை அந்த வேலையைச் செய்த குடும்பங்களுக்கு மறு வாழ்வு வழிமுறைகள் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இன்றளவும்  ஒரு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே இந்த வேலையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 1327 மக்கள், கழிவு நீர்த்தொட்டியில் மனிதக்  கழிவுகளை அகற்றும் போது நச்சு வாயு தாக்கி இறந்திருக்கின்றனர்.

2011-ம் ஆண்டின் சமூக – பொருளாதார – சாதிய கணக்கெடுப்பின்படி, வடஇந்தியாவில், குறிப்பாக பஞ்சாபில் அதிக அளவு மக்கள் மனிதக்  கழிவுகளை கையினால் அள்ளும் வேலையில் ஈடுபடுத்தப்படுவது தெரியவந்துள்ளது. அதே போல் மத்தியபிரதேசம், உத்திரபிரதேசம், திரிபுர, கர்நாடக போன்ற மாநிலங்களில் இந்தக் கொடுமை அதிக அளவில் நடந்து வருகின்றது என்று அந்தக் கணக்கெடுப்பு கூறுகின்றது.

Siragu mukkiyath thevai6

ஜந்தர் மந்தர் என்ற இடத்தில் நடந்த பொது விசாரணையில், பல தொழிலாளிகள் தங்களின் இன்னல்களைத் தெரிவித்தனர். உத்திரப்பிரதேசத்தின் காஜியாபாத் நகரத்தைச் சேர்ந்த கபில், அப்பா உட்பட தன் குடும்பத்தின் ஐந்து உறுப்பினர்கள் 2003-ல் விடவாயு தாக்கி இறந்ததாகக் கூறினார்.  உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த கங்காஸ்ரீ என்பவர் 2014 இல் “அவர்கள் எங்கள் ஆண்களிடம், உங்கள் வீட்டுப் பெண்களை கழிப்பறையைச் சுத்தம் செய்ய அனுப்பவில்லை என்றால் நாங்கள் உங்கள் பெண்களையும், உங்களையும் அடிப்போம், உங்களை அமைதியாக வாழ விடமாட்டோம் என்று கூறினார்கள்” என்று கூறினார். இதன் மூலம் சட்டம் இருந்தாலும், ஆதிக்க சாதியினர், தலித் மக்களை தன்மானத்தோடு வாழ அனுமதிக்க மறுக்கிறார்கள் என்று புலப்படுகின்றது. இன்றும் பள்ளிகளில், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆதிக்க சாதி ஆசிரியர்களால் கழிப்பறைகளை சுத்தம் செய்ய நிர்பந்திக்கப்படுகின்றார்கள் என்பது கசப்பான உண்மை.

இந்திய அரசமைப்புச் சட்டம் சாதியத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளை, தீண்டாமையை தடைசெய்துள்ள போதிலும், குடியுரிமை பாதுகாப்புச் சட்டம், 1955 மனிதக்  கழிவுகளை அள்ள யாரையும் நிர்பந்திக்கக் கூடாது என்று இருந்த போதிலும், 2013 சட்டத்தின் படி கையால் மலம் அள்ளும் வேலை தடை செய்ய வேண்டும், பல்லாயிரம் ஆண்டுகள் அநீதிகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்பது அரசமைப்புக் கடமையாக  இருந்த போதிலும், 2014-இல் உச்ச நீதிமன்றம் கையால் மனிதக்  கழிவுகளை அகற்றுவது பன்னாட்டு மனித உரிமைச் சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிவித்த போதும், இந்திய அரசாங்கம் சட்டங்கள் மூலம் இந்தக் கொடுமையான வேலையை தடை செய்தாலும் உள்ளூர் ஆதிக்க சாதியைச் சேர்ந்த அதிகாரிகள் அந்த ஊரில் இருக்கும் தலித் மக்களை மனித மலத்தை அள்ளும் வேலைகளிலிருந்து விடுவிப்பதில்லை என்று மனித உரிமையகத்தின் தெற்காசிய இயக்குநர் மீனாட்சி கங்குலி கூறினார்.

Siragu mukkiyath thevai5

2014-இல் மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் போகேர்ஜி குண்டரே,

“நான் வணிகம் மற்றும் வங்கி வரையறை படிப்பு படித்திருந்தாலும் எனக்கு அந்தத் துறையில் வேலை கிடைக்காத காரணத்தினால், கிராம சபையில் இருக்கும் ஆதிக்க சாதியினர் என்னை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்தனர் என்று கூறிய நிலை எவ்வளவு இழிவானதும், கண்டிக்கத்தக்கதும் ஆகும் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்”

இந்திய நாட்டை சுத்தமாக்குவதும், கங்கையை சுத்தமாக்குவதும் இங்கே முதல் தேவை அன்று, சாதியின் பெயரால் ஆண்டாண்டுகளாய் நடக்கும் இந்தக்  கொடுமையை தடை செய்வதே இப்போது மிக முக்கியத் தேவை.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முக்கியத் தேவை”

அதிகம் படித்தது