ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

முந்நீர் விழா – தென்னாட்டுப் போர்க்களங்கள்- 5

ஆச்சாரி

Apr 1, 2012

மன்னர் குடிப்பெயரில் மட்டுமின்றி, மக்கட் பெயர் ஆகியவற்றிலும் மொழியிலும், வாழ்விலும் நாம் சோழர் படையெடுப்புக்கு முற்பட்ட சாவக நாட்டில் பல தமிழகத் தொடர்புகளைப் பொதுவாகவும், பாண்டி நாட்டுத் தொடர்புகளை சிறப்பாகவும் காண்கிறோம். மதுரை பண்டைத் தலைநகரின் பெயராகவும், ஒரு தீவின் பெயராகவும் நிலவுகிறது, ஒரு கடலிடுக்கின் பெயராகவும் நிலவுகின்றது. மலாயா என்ற நாட்டுப் பெயர் இன்றும் மலையம்  என்ற பொதிகை மலையை நினைவூட்டுவதாகும். இவையன்றிப் பாண்டியன், மதியன், புகார், மலையன் கோ, செம்புட்சேஎய், குறிஞ்சி, செங்கரை ஆகிய தமிழ்ப் பெயர்களும் அங்கே நிலவுவதாக மகாவித்வான் இரா.ராகவய்யங்காரின் தமிழ் வரலாறு எடுத்துக் காட்டுகிறது, சாவகத்தில் சங்க காலத்தில் தமிழ் பேசப்பட்டதாக மணிமேகலை கூறுகிறது. அத்துடன் சோழர் படை எடுப்புக்கு முன்னும் பின்னும் அங்கே பல தமிழ்க் கல்வெட்டுக்களும், பட்டயங்களும், பண்டைத் தமிழக எழுத்துக்களிலேயே வரையப்பட்ட சமசுகிருதக் கல்வெட்டுக்களும் கிடைக்கின்றன.

முந்நீர் விழா

சயநாடு அல்லது சாவகத்தை வென்ற பெரும் புகழாளன் என்ற முறையிலேயே நெடியோன் சயமா கீர்த்தி என்று அழைக்கப்பட்டான். கி.பி.ஏழாம் நூற்றாண்டுக்கு முற்பட்டவரான இறையனார் அகப் பொருளுரையின் ஆசிரியர் ‘சயமா கீர்த்தியனாகிய நிலந்தருதிருவிற் பாண்டியன்’ என்று கூறுவதால் இது நெடியோன் பெயரே என்பது தெரிய வரும். சாய நாடு, ஜவா நாடு என்ற நாட்டுப் பெயர்கள், அமைந்த சாவக நாட்டுக் கல்வெட்டுக்கள் பல உண்டு. ஜய நகரம், சுந்தர பாண்டியன் என்ற பெயர்களை உட்கொண்ட கல்வெட்டும் ஒன்று உளது. ‘ஜய நகர சுந்தர பாண்டிய தேவாதீசுவர நாம ராஜாபிஷேக’ என்பது அதன் வாசகம் ஆகும். ‘பாண்டிய’ என்ற பெயருக்கேற்ப இந்தக் கல்வெட்டில் மீன் இலச்சினையும் காணப்படுகிறது.

வடிம்பலம்ப நின்ற பாண்டியன், முந்நீர் விழாவின் நெடியோன் என்ற பெயர்கள் கடற் பேரரசன் என்ற முறையில் கடல் கடந்த நாட்டில் அவன் நடத்திய கடல் விழாவைக் குறிக்கின்றன. அதில் அவன் பாறையில் தன் அடிகளைப் பொறித்து அதன் மீது கடல் அலைகள் வந்து அலம்பும்படி செய்ததாக அறிகிறோம். இதுவே இன்று வரை அந் நாட்டவரிடையே அரசர் முடிசூட்டு விழா மரபாக இருந்து வருகிறது. மன்னர் இவ்வழக்கத்தைத் தலைமுறை தலைமுறையாக மேற்கொண்டிருந்தனர் என்பதைக் கல்வெட்டுக்கள் பல காட்டுகின்றன. சீர் அருடன் ஆற்றின் நடுவே இங்ஙனம் அடி பொறிப்பதற்குரிய ஒரு பெரும் பாறை இருக்கிறது. இதில் பூர்ண வர்மன் என்ற பெரியோன் அடி வைத்த செய்தி குறிக்கப்பட்டுள்ளது. இம்மன்னன் பெயருடன் ‘நெடியோன்’ என்று பொருள்படும் தொடரும் உள்ளது.

“தருமா நகர் தலைவனும் உலகை ஆள்பவனுமாகிய நெடியோன் ஸ்ரீமான் பூர்ண வர்மனின் விஷ்ணு (வின் அடிகளை) ஒத்த இணையடிகள்”

“விக்ராந்தஸ்யா வனிபதே ச்ரீமத; பூர்ண வர்மண:

தருமா நகரேந்துஸ்ய விஷ்ணோரிவ பதத்வயம்”

என்பதே இந்தக் கல்வெட்டு (இந்திய பழமை ஏடு 111 355-3558)

இதில் தருமா என்பது கொற்கையே என்று சமசுகிருத ஆதாரம் காட்டி முடிவுகொள்கிறார் இரா.ராகவையங்கார் அவர்கள். வேறு சிலர் அதைக் கன்னியாகுமரி அடுத்த ஓர் இடம் என்று கூறுவதாகவும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். இருவகையிலும் இங்கே காட்டப்பட்ட கல்வெட்டிலும் வேறுபல கல்வெட்டுக்களிலும் குறிக்கப்பட்ட பூர்ண வர்மன் முந்நீர் விழாவின் நெடியோன்தானோ என்று கருத இடம் உண்டு. அவை நெடியோன் கல்வெட்டுக்களானால் அவை ஏன் தமிழில் எழுதப்படவில்லை, சமசுகிருதத்தில் எவ்வாறு எழுதப்பட்டது என்று அறிய முடியவில்லை. ஏனென்றால் இவ்வளவு பழமையான காலத்தில் சமசுகிருத மொழி உருவாகியிருக்க வழியில்லை.

நெடியோன் புகழ் மரபு

நெடியோன் சங்க காலத்திலே பழம் புகழுடையவனாக பல பாடல்களில் (கலி; முல்லை;4 சிலப்பதிகாரம் அழற்படுகாதை 56-61) சிறப்பிக்கப்படுகிறான். பிற்கால இலக்கியங்களிலும் இவன் பெயர் நீடித்து நிலவி வந்துள்ளது.

தமிழகத்தில் மிகப் பழமையான அரசன் என்று கூறுவதன்றி, இன்று அவன் காலத்தையோ பழமை எல்லையையோ நாம் கணித்து வரையறுத்துக் கூற முடியவில்லை. பாரதப் போரை ஓட்டிப் பெருஞ்சோற்றுதியனுக்குக் கி.மு.1000  எனக் குத்து மதிப்பாகக் கூறுவது போலவே, பல ஆசிரியர்கள் தொல்காப்பியத்துக்கும், நெடியோனுக்கும் கி.மு. 500 என்ற கால மதிப்புத் தருகின்றனர். ஆனால் கடைச் சங்கப் புலவருள் மாமூலனார் முதலிய பலர் அசோகனுக்கு முற்பட்டவர் என்று கருத இடமுண்டு. தவிர பாரதப் போர்க்காலம், தொல்காப்பியர் காலம் ஆகிய இரண்டிலுமே எது முந்தியது, எது பிந்தியது என்று கூறுவது முடியாது. இன்றைய புராண இதிகாச அடிப்படையிலேயே பாரதப் போர் முந்தியது என்று ஆராய்ச்சியாளர் மதிப்பிட்டுள்ளனர். எப்படியும் தொல்காப்பியர், நெடியோன் காலங்கள் கி.மு.500-க்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்டிருத்தல் சாலும். ஏனெனில் இலங்கை வேறு, தற்போதைய தமிழகம் வேறு என்ற நிலை பெரிதும் இடைச் சங்க காலத்தில் ஏற்பட்ட நிலையேயாகும். இது பாரதத்துக்கு மட்டுமின்றி, இராமாயண காலத்துக்கும் முற்பட்ட நிலைமை என்று குறிப்பிடத் தேவையில்லை.

நெடியோன் காலத்துக்குரிய, அதாவது பிற்காலச் சோழன் படையெடுப்புக்கு முந்திய தமிழ்க் கல்வெட்டுக்களும் தமிழக வாணிக, குடியிருப்புச் சின்னங்களும் சுமத்ரா, மலாயா நாடுகளில் மட்டுமின்றி சீயம், இந்து சீனா ஆகியவற்றிலும் கிழக்கிந்தியத் தீவுகளிலும் பரந்து காணப்படுகின்றன. இந்து சீனாவில் பல நூற்றாண்டுகளாகச் ‘சம்பா’ என்ற தமிழ்ப் பேரரசே நிலவி வந்ததாக அறிகிறோம். சீனத்திலும், ஜப்பானிலும் கூடப் பண்டைத் தமிழ்த் தொடர்புகளைக் காணலாம் என்று பழமை ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்.

கடலாக, மேலையுலக, தொலைக் கீழையுலகத் தொடர்புகள்

தவிர கி.மு.2000-க்கு முன்னிருந்தே எகிப்து, பாலஸ்தீன், பாபிலோன் ஆகிய மேலை நாடுகள் கிழக்கே சினத்துடன் நிலப் போக்கு வரவுகளும், கடற் போக்குவரவுகளும், வாணிகத் தொடர்பும் உடையவையாய் இருந்தன. சீனத்தின் பட்டும் மாணிக்கமும் மேலை நாடுகளிலும், எகிப்தின் பவளங்கள், வெள்ளியம், துணி வகைகள் ஆகியவை சீனத்திலும் பரிமாறப்பட்டன. கி.மு.1500-க்குப் பின் நிலப் போக்குவரவு திடுமென நின்றுவிட்டது. ஆரியர் போன்ற பண்படா நாடோடி இனங்களின் இடப் பெயர்வால் ஏற்பட்ட விளைவு இது என்று தோன்றுகிறது. இதனால் கடல் வாணிகமும் கடல் போக்கு வரவுகளும் மிகுதியாயின. தமிழகமும் மலாயாவும் இக்கடல் வாணிகத்தில் நடு இடம் வகித்ததினால் பெரும் பயன் அடைந்தன. மலாயாக் கடற்கரையைச் சுற்றிச் செல்வதற்குப் பதில் கீழ்க் கரைத் துறைமுகங்களிலிருந்து மேல் கரைத் துறைமுகங்களுக்குக் கடந்தும் வந்ததால், மலாயா, தமிழகம் ஆகிய இரு நாடுகளிலும் உள்நாட்டு வாணிக வழிகளுடன் இது இணைந்தது.

தொடக்கத்தில் தமிழரே கீழ் கோடிக்கும், மேல் கோடிக்கும் இடையே வாணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் மேற்கே பினீஷியரும் எகிப்தியரும் அராபியரும் படிப்படியாகத் தமிழ் வணிகருடன் அதைப் பங்கிட்டுப்போட்டி வளர்த்தனர். அதுபோல மேற்கே தொடக்கத்தில் மலாய் மக்களும் பின் சீனரும் பங்கு கொண்டனர். இந்தப் பழங்கால அகல் உலக வாணிகத்தில் தமிழகம் போக்குவரவு வழியின் மையமாக இருந்தது போலவே அதன் சரக்குகளும் பேரிடம் வகித்தன. தமிழகத்தின் பண்டைப் பெருஞ் செல்வத்துக்கு இதுவே காரணம்.

கி.மு.3000-லிருந்து உரோமப் பேரரசின் வீழ்ச்சிக் காலமாகிய கி.பி.500 வரை தமிழகமே கடல் வாணிகத்தில் இடைவிடாத நீண்ட வாழ்வுடையதாக இருந்தது. ஏனெனில் தமிழகத்துடன் மேல் திசையில் முதலில் எகிப்தும் பாலஸ்தீனமும் அவர்கள் நாகரிகம் வீழ்ச்சி அடைந்த பின் கிரேக்க உரோமரும், கிரேக்க உரோமர் வீழ்ச்சிக்குப் பின் அராபியரும் தொடர்பு கொண்டனர். கீழ்த் திசையில் இதுபோலவே முதலில் மலாய் இனத்தவரும் அவர்கள் கை தளர்ந்த பின் சீனரும் தமிழருடன் வாணிகத் தொடர்பில் பங்கு கொண்டனர்.

இக்காலங்களிலே அகல் உலகுடன் தமிழகம் கொண்ட அரசியல் கலை நாகரிகத் தொடர்புகள் மிகப் பலவாயிருந்திருத்தல் வேண்டும். இவற்றின் பெரும் பகுதியை நாம் அறிய முடியவில்லை. ஆனால் அறியத்தக்க அளவிலும் பொதுவாகக் கீழ்த் திசையையும் சிறப்பாகத் தமிழினத்தையும் புறக்கணிக்கும் வெள்ளையறிஞர் போக்கு உண்மை துருவிக் காண்பதில் தடைக் கற்களாய் உள்ளன. எடுத்துக்காட்டாக, கி.மு.2000 ஆண்டளவிலேயே எகிப்தியர் ‘பண்ட்’ என்ற நாட்டையும் அதிலுள்ள ‘ஓவிர்’ என்ற துறைமுகத்தையும், அதனருகே கிடைக்கும் தங்கம், தேக்கு, மணப் பொருட்கள் ஆகியவற்றையும் பற்றிக் கூறுகின்றனர். அந்த நாட்டையே தங்கள் மூலத் தாயகமென்றும் குறிக்கின்றனர். பண்ட் என்பது பாண்டி நாடு என்பதும், ‘ஓவிர்’ என்பது உவரி என்ற தென்பாண்டி நாட்டுத் துறைமுகம் என்பதும் மேலீடாகவே தெள்ளத் தெளிவாக விளங்கும் செய்திகள் ஆகும். கோளார் தங்க வயல் சங்க காலத்திலும் சிந்துவெளி நாகரிக காலத்திலும் தொழிற் பட்டிருந்த செய்தி இதனை வலியுறுத்தும். ஆனால் ‘வெண்ணாட்டறிஞர்’ அதை அபிசினியாவிலோ, தென்னாப்பிரிக்காவிலோ தம் கற்பனைக் கோல்கொண்டு கிளறித் தேடுகின்றனர்.

பாண்டியன், மீனன், ஊர், சிவன் முதலிய பேர்களும் இதுபோலவே நாலாயிர ஆண்டுகட்கு முற்பட்ட உலகெங்கும் காணப்படுகின்றன.

உரோமப் பேரரசர் காலங்களில் மேலை நாடுகளில் தமிழகம் வாங்கிய சரக்குகளை விட அங்கே அனுப்பிய சரக்குகளே மிகுதியாயிருந்ததால் மேலை உலகின் தங்கம் முழுவதும் தமிழகத்திலேயே வந்து குவிந்தன. உண்மையில் தம்பட்ட சாலைகளில் அடிக்கப்பட்ட பொன் காசுகள் தமிழகத்துக்கு என்றே அடிக்கப்பட்டன. உரோம் அழிந்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் அக்காசுகள் தமிழகத்தில் செலவாணியில் நீடிக்குமளவு அவை தமிழகத்தில் செறிவுற்றிருந்தன. இவைபோக இன்றளவும் ஒருவேளை இனியும் எடுக்கப்படும் புதையல் பொற்காசுகள் அளவற்றவை.

சங்க காலத் தமிழகத்தின் நகரங்களில், நாகரிக உலகின் எல்லா நாட்டவரும் வந்தும் தங்கியும் சென்றும் இருந்தனர். புதுச்சேரியில் உரோமக் குடியிருப்பு ஒன்று அண்மையில் அகழ்ந்து காணப்பட்டுள்ளது. முசிறியில் உரோமக் குடியிருப்புடன் உரோமப் படைத்தளமும், உரோமப் பேரரசர் அகஸ்டஸ் காலக் கோயிலும் இருந்ததாக மேலை நாட்டாசிரியர் குறிக்கின்றனர். காவிரிப்பூம்பட்டினம் முதலிய நகரங்களில் உள்ள பண்மொழி மாந்தர் பற்றிப் பட்டினப்பாலை பகர்கின்றது.

கடல் கடந்த கீழை உலகத் தொடர்புகள்:

அரசியல் தூதர் தொடர்புகள்

கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே தமிழருக்கும் இலங்கைக்கும் அரசியல், சமுதாய, மணத் தொடர்புகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டிலும் முதலாம் நூற்றாண்டின் இறுதியிலும் தமிழ் மரபினர் இலங்கையில் அரசாண்டனர். கி.மு.26-லும் 20-லும் பாண்டிய அரசன் உரோமப் பேரரசர் அகஸ்டசிடம் அரசியல் வாணிகத் தொடர்பும் படைத்துறைத் தொடர்பும் கோரி இரு தடவை தூதர் அனுப்பி இருந்ததாக ஸ்டிராபோ என்ற பண்டை உரோம ஆசிரியர் குறிக்கிறார். கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் ஹான் பேரரசர் காலத்திலிருந்து முன்னூறு ஆண்டுகள் தமிழகத்திலிருந்து சீனப் பேரரசுக்கு இதுபோன்ற தூதுகள் சென்றதாகப் ‘பான்கூ’ என்ற கடைச் சங்க காலத்துச் சீன ஆசிரியர் குறித்துள்ளார்.

சீனப் பேரரசர் ஹுவான் –தி காலத்தில் கி.பி. 159-லும் 161-லும் தமிழகத்தின் ஒரு பேரரசனிடமிருந்து அரசியல் வாணிகத் தூதுக் குழுக்கள் சென்றதாகச் சீனர் குறித்துள்ளனர்.தந்தம் காண்டாமா (காண்டா மிருகம்) ஆமை ஓடுகள் ஆகியவற்றை அவர்கள் கொண்டு சென்றதாக தெரிகிறது. தமிழர் அந்நாளிலேயே தேன் ஆப்பிரிக்காவுடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதையும் இதே செய்தி காட்டுகிறது. ஏனெனில் இன்றும் காண்டாமா அந்நாட்டுக்குரிய விலங்கு ஆகும். காம்போச நாடும் சம்பா நாடும் சீனத்துக்கு அனுப்பிய பொருள்களில் தமிழகத்தின் வைடூரியங்களும், துணி மணி மணப் பொருட்களும், யானையும் இடம் பெற்றனவாம்.

சம்பாவின் பண்டை எழுத்தும், ஜப்பானிய பண்டைய ‘கடகம’ எழுத்து முறையும் பண்டைத் தமிழ் எழுத்தையே தழுவியவை என்று மேனாட்டறிஞர் கருதுகின்றனர்.

தமிழரின் இவ் அகலுலகத் தொடர்பைக் குறிக்காத வரலாற்றாசிரியர் இல்லை எனலாம். ஆனால் தமிழக வரலாற்றில் இவற்றின் படிப்பினையையும், தொல்காப்பியம், சங்க இலக்கியம் ஆகியவற்றின் படிப்பினையையும் வரலாற்றாசிரியர் மறந்து விடுகின்றனர். சங்க இலக்கியத்தின் பல வரலாற்று மரபுகளைப் போல் ஆராய்வதற்குரிய அல்லது புதிய ஆராய்ச்சியின் நுனித் தும்புகளாகக் கருதுவதற்கு மாறாக, அவற்றைப் புறக்கணிக்க இது இடந் தந்துள்ளது. புராண மரபுகளிலும் தமிழ்த் தொடர்பு நீக்கி அயல் தொடர்புக்கே ஆர்வ நாட்டம் காட்டும்படி இது தூண்டியுள்ளது.

தமிழர்- மேலை உலகத் தொடர்பு, தமிழர் கீழை உலகத் தொடர்பு ஆகியவற்றை விட, தமிழர்- வட உலகத் தொடர்பையே இந்த அயல் மரபு நாட்டம் பெரிதம் பாதிக்கிறது.

தொடரும் …

முந்தைய பகுதிகளை பார்க்க இங்கே சொடுக்குங்கள்

It’s not about finding out if your child is keeping tick here for information secrets, but about preventing them from getting to the point where secret-keeping is necessary

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முந்நீர் விழா – தென்னாட்டுப் போர்க்களங்கள்- 5”

அதிகம் படித்தது