ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

முறி (சிறுகதை)

குமரகுரு அன்பு

Jul 24, 2021

siragu covid1

சைக்கிள் ஹான்டில் பாரின் மீது வியர்வை மழை போல் கொட்டிக் கொண்டிருக்கிறது. தவம் இவ்வளவு வேகமாக சைக்கிளை மிதித்துப் போவது இன்றுதான் முதல் முறை.

செய்தி கேள்விப்பட்ட அடுத்த நிமிடம் தலைப்பாகையை கழற்றி அக்குளில் வைத்தபடி, ஐயாவின் வீட்டு வாசலில் நின்றான்.
“அம்மா! அம்மா!!”

சத்தம் கேட்டு ஐயா வெளியில் வந்தார். வாயில் தண்ணீரை அதக்கியபடி “என்னாடா??” என்றதும்

“ஐயா! மகனுக்கு உடம்பு சரியில்லீங்க. காலையிலேயே என்ன பண்றதுன்னு தெரியாம கூலி வரட்டும் பாத்துக்கலாம்னு வந்துட்டேனுங்க. இப்பதான் ராணி  பிள்ளைக்கு ரொம்ப முடியலயாம் உடனே வர சொன்னாள் அதான்ன்ன்…”

” அட ஏன்டா இம்புட்டு இழுவ. போ போயி புள்ளைய பாரு! இந்தா இந்த ஐநூறை வச்சிக்கோ”
தலையை சொறிந்தபடி வாங்கி கொண்டு…

“நான் அப்ப வரேங்கய்யா”

“சரி! பார்த்து போ”

சைக்கிளின் வேகம் சற்றே குறையும் போதே, அவன் கண்களுக்குள் ஒரு பெருங்கூட்டமும் அதனுள்ளிருந்து சின்ன சின்ன சலம்பல்களும் கேட்டது.

சைக்கிளை ஸ்டாண்டு போட்டுவிட்டு, தலைப்பாகையை கழற்றியபடி கூட்டத்திற்குள் குழப்பமாக நுழைகிறான்.

“என்னங்க!! நீங்க வரதுக்குள்ள புள்ளைய தனபாலும் அவன் கூட நாலு பேரும் சேர்ந்து ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயிட்டாங்கங்க… கொரானா வந்துருக்குன்னு அத்தனை பேரும் இவ்வளவு நேரமா வாசல்ல நின்னு பிரச்சனை பண்ணுனவங்க… நீங்க வந்ததும் பேசிக்கலாமின்னு சொன்னேன்… கேக்காம புள்ளைய எடுத்துக்கிட்டு ஊரை விட்டு போயிடுன்னு சொல்லுறாங்க… தனபால்தான் அதெல்லாம் வேண்டாம் நான் புள்ளைய பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போறேன்னு கொண்டு போயிருக்கான்…”

வாயில் முந்தானை வைத்துபடி ஓயாமல் அணத்திக் கொண்டிருந்த கூட்டத்தின் பெண்களையும்! அவன் என்ன சொல்ல போகிறான் என்ற எதிர்பார்ப்பில் அவனின் கண்களையே பார்த்து கொண்டிருந்த ஆண்களையும் ஒரு நொடி பார்த்தான்…

கத்தியபடி வேகமாக ஓட்டமெடுத்து சைக்கிளை மீண்டும் மிதிக்க துவக்கினான்…

வியர்வையோடு சேர்ந்து அவன் கண்களிலிருந்து கண்ணீரும் சைக்கிளை நனைக்கத் துவங்கியது…

பெரியாஸ்பத்திரி வாசலில் கூட்டமேயில்லை. ஏன்! சாலை கூட வெறிச்சோடித்தான் கிடந்தது. ஆங்காங்கே, மக்கள் வரிசையில் நின்று பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். ஊரே அமைதியாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது.

சைக்கிளை சுவற்றில் சாய்த்துவிட்டு உள்ளே நுழைய எத்தனிக்கையில், வாசலில் இருந்த காவலர் மறித்து… “தம்பி! ஏப்பா நில்லு. எங்க போற, ஆஸ்பத்திரி உள்ளலாம் போவக் கூடாது நில்லு…” என்று தடுக்கத் துவங்குகிறார்…

இவனோ “ஐயா! என் புள்ளையை இங்கதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எங்க ஊரு காரங்க தூக்கிவந்தாங்க, அதான் பார்க்கப் போறேன்…” என்க…
கெஞ்சியவனிடம் “ஏய்யா நில்லுயா, அந்த மூனு பேரு ஒரு பயலை தூக்கிட்டு வந்தாங்களே அவனோட அப்பனா நீயி…”

கேட்டதும் ஒரு நிமிடம் நின்றவன். திரும்பி காவலரை நோக்கி ஓடி வருகிறான்…

“ஆமாங்கய்யா அவன் அப்பாதான். நீங்க என் புள்ளைய பாத்தீங்களா??”

“தம்பி கரோனா வார்டு க்கு இப்பதான் தூக்கிட்டு போனாங்க. பாவம்! சின்ன புள்ள, கொள்ளை நோயி எப்படித்தான் வருமோ தெரியல. அங்கே போயி பாரு”

“ஐய்ய்யய்யோ! எம்புள்ள…” ன்னு கதறி கீழ விழுந்தவன்… மூக்கயும் கண்ணையும் துடைச்சிக்கிட்டு சென்று கொண்டிருக்கையில், தனபால் எதிரில் வந்தான்…

“தனவாலு!! என்னாடா நீ மட்டும் வர! எம்புள்ள எங்கடா…???”

“அண்ணே! உன்னையும் மதினியையும் வர சொல்லியிருக்காக. அத்தாச்சி உங்கூட வரலியா??”

“இல்லடா!! என்னா சொன்னாங்க? வா போயி புள்ளைய பாப்போம்…”

“ணே! அங்க உள்ள விட மாட்டேங்குறாங்க. பயலை ஐ.சி.யு க்கு மாத்திட்டாங்க. முத்திருச்சாம். அதான் உன்னையும் மதினியையும், இங்கே கூட்டியாரச் சொன்னாங்க”

“அடக்கடவுளேஏஏஏஏஏ!!!!”

“சரி நீ இங்கேயே இரு. நானும் இவனுகளும் அவனைத் தூக்கிட்டு வந்தோமில்ல அதனால இப்பக்கி ஊருக்கு போக கூடாதுன்னு சொல்லிருக்காங்க. அத்தாச்சி இங்கே வர…இந்தா மதினியே வந்துருச்சி பாரு…”

“எம்மா!! அவகிட்ட நான் என்னாத்த சொல்லுவேன். மூனு நாளா ஆஸ்பத்திரிக்கு கூட்டி போவ சொன்னா, நான்தான் நமக்குலாம் வராதுன்னு சொல்லி அமத்தி வச்சேன்! இப்ப என்னா பண்ணுவேன்…”

“மதினி! இந்தா பாருங்க! பையனை ஐ.சி.யு ல வச்சிருக்காங்க! அண்ணனோட வாங்க உள்ளே போவனும்”

“ஆத்தா! என்னா சொல்லுறீங்க!!! என் மவனுக்கு ஒன்னுமாகாதுன்னு சொன்னாங்களா இல்லையா… என்னாங்க!! என்ன பண்ணோம்னு இப்படி ஒரு சோதனை!”

“அம்மாடி!” என்று தவம் கலாவை கட்டிக் கொண்டு அழ துவங்குகிறான்…

கரோனா வார்டுக்குள் வரிசையாக மெத்தைகளை வைத்தும் அதில் நாலைந்து பேர் மட்டுமே படுத்திருந்தார்கள். அவர்களின் அருகில் மாஸ்க் அணிந்த செவிலியர்கள் மாத்திரைகளையோ, ஊசியோ, தெர்மாமீட்டரை வைத்து வெப்பத்தை செப்பனிட்டு கொண்டோ இருந்தார்கள்.

தவமும் கலாவும் தனபாலனிடமும் அவன் சகாக்களிடமும் என்ன செய்வதென்று பேசி கொண்டிருந்தனர்.

தனபாலன் அந்த ஊரில் கொஞ்சம் விவரம் தெரிந்தவன். பண்ணிரண்டாம் வகுப்பு வரைதான் படித்திருந்தான். ஆனால், அவனுக்கு சற்று உலக அறிவு உண்டு. செய்தி தாள்கள் மூலமாகவும், சனரஞ்சக பத்திரிகைகள் மூலமாகவும் சிறிது கற்றறிந்தவன்.

அதனால்தான், ஊரே தவம் குடும்பத்தை வெளியேற்ற நினைக்கையில் இவன் மட்டும் பிள்ளையைத் தூக்கிக் கொண்டே ஓடி வந்தான்.

ஆஸ்பத்திரியில் பையனின் நண்பர்கள் மற்றும் அவனோடு தொடர்பிலிருந்தவர்கள் அத்தனை பேரின் பெயர் விவரங்களையும் கேட்டு எழுதி கொண்டனர். அப்போது, அவர்களின் ஊரில் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் யாராவது இருக்கிறாகளா என்ற கேள்விக்கு தவம் வீடிருக்கும் தெரு முனையில் பதினைந்து நாட்களுக்கு முன் துபாயிலிருந்து வந்த சேகர் அண்ணனைப் பற்றி தவம் சொன்னான். சேகர் அண்ணனின் பிள்ளைகளும் தன் மகனோடு விளையாடுவார்கள் என்பதையும் குறிப்பாக சொன்னான்.

தனபாலுக்கு பிரச்சனையின் வீரியம் இப்போது மிகத் தெளிவாக புரியத் துவங்கியது. சட்டென்று சுதாரித்து…

“சேகர் அண்ணன் துபாய்ல இருந்து வரல. அதை அங்கேயிருந்து அனுப்பிச்சு விட்டுட்டாங்க. ஒரு மாசத்துக்கு முன்னாடி அதுக்கு மூளை கோளாறு வந்துருச்சின்னு வேலையை விட்டு நிப்பாட்டிட்டாங்க. அதுக்கப்புறும் அந்தண்ணன் வேல பாத்த கம்பெனியிலையே டிக்கெட்டு போட்டு அனுப்பி வச்சிட்டாங்க. அதையெல்லாம் இங்க கூட்டுக்கிட்டு வந்தா அமளிதுமளி செஞ்சு விட்டுரும். வேற வழி இருக்கா சிஸ்டர??”

“சரி! நான் பெரிய டாக்டர்கிட்ட கேட்டுட்டு வரேன்” என்று சிஸ்டர் உள்ளே சென்ற பின்.

“என்னா தனபாலு சொல்லுற சேகன் அண்ணனுக்கு பைத்தியமா??”

“பைத்தியம் இல்லண்ணே! அதுக்கு வெளிநாட்டுக்கு போறதுல இஷ்டமில்ல. போவ மாட்டேனு சொன்ன ஆளை புடிச்சு தள்ளி உட்டு அனுப்பிட்டாங்க. அங்க போயி தனியா இருந்ததுல என்னமோ ஆயிருச்சு. கொஞ்ச நாளுல சரியாகிடும்னு டாக்டர் சொல்லிருக்காங்க”

“ஹ்ம்ம்!! என்ன உலகம்டா… போவ மாட்டேன்னு சொன்னவனை, போவ சொல்லி அனுப்பி, போன ஊருலருந்து வியாதியை சம்பாதிச்சு கொண்டாந்து எம்புளைக்கு குடுத்துட்டானே….”

மெல்ல உடைந்து மீண்டும் அழ துவங்கிய தவத்தின் முதுகைத் தடவியபடி நின்ற தனபாலின் கண்களும் லேசாக ஈரமாயின…

தவம், கலா, தனபால் உடன் வந்த சகாக்கள் சொன்ன பெயர்களின் பட்டியலை ஆராய்ந்து பெரிய டாக்டரின் உத்தரவுப்படி அவர்களின் மொத்த ஊரும் பெரியாஸ்பத்திரி வாசலில் வந்து இறங்கியாயிற்று!

பெருமூச்சு விட்ட பெரிய டாக்டர்! அத்தனை டெஸ்ட் கிட் நம்ம ஆஸ்பத்திரயிலேயே இல்லையே என்றபடி நிற்க… தொலைக்காட்சியிலிருந்து “சீனாவிலிருந்து வந்து ரேபிட் டெஸ்ட் கிட்கள் சரியான முடிவுகளைத் தராததால் திருப்பி அனுப்பப்படுகின்றன” என்ற செய்தி வந்து காதில் விழுகின்றது…

 


குமரகுரு அன்பு

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “முறி (சிறுகதை)”

அதிகம் படித்தது