டிசம்பர் 15, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

முல்லைப் பெரியாறு அணை: பாதுகாப்பும் பின்னணியும்

ஆச்சாரி

Jan 15, 2012

நீரின்றி அமையாது உலகு என்பது வான்புகழ் தந்த வள்ளுவனின் அமுத வாக்கு. நீர் , நிலம், காற்று என்பவை நமக்கு இயற்கை தந்த வரப் பிரசாதம். மனிதனின் அன்றாடத் தேவைகளுக்கும், விவசாயத்திற்கும் , குடிநீருக்கும் நீர் இன்றியமையாதது . நீர் இயற்கையோடு பின்னிப் பிணைந்தது. வானத்தில் கருமேகமாய் இருந்து மாரியாய்ப் பொழிந்து உலகை வளமாக்கும் வல்லமை பெற்றது. இந்த பூமிப் பந்து 71 விழுக்காடு அளவு தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. அதனில்  97.5 விழுக்காடு உபோயாகமற்ற உப்பு நீரால் சூழப்பட்டுள்ளது . வெறும் 2.5 விழுக்காடு மட்டுமே தூய நீராலானது. நவ நாகரீக இந்த யுகத்தில் இன்று வரை இந்தத் தூய நீரின் அளவு குறைந்து கொண்டே வருவது வேதனையான சேதி. இதற்கு முக்கிய காரணம் பருவ மழை பொய்த்துப் போவதே. புகை மற்றும் வாயு மண்டலத்தின்  மாசு காரணமாகவே பருவ மழை பொய்க்கிறது. பூமியின் வெப்ப நிலையில் மாற்றமும் இதற்கு முக்கிய காரணமாகிறது.

தூய நீரின்  பயன்பாடுகளை கருத்தில் கொண்டு உலக நாடுகள்  நதியின் குறுக்கே அணை கட்டத் தொடங்கியது. உலகில் முதன் முதலாக ஜோர்டான்  நாட்டில் ஜாவா என்ற அணை (15 அடி  உயரமும் 4 அடி அகலமும்) கி.மு 3000 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. உலகில் இது வரை மொத்தம் எட்டரை இலட்சம் அணைகள் கட்டப்பட்டுள்ளன.  கனடாவில் உள்ள  சின்குருட் அணை உலகின் மிகப் பெரிய கொள்ளளவு கொண்ட அணையாகும். இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் விவசாயம்  என்பது பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்தியா 28 மாநிலங்களையும் 7 கூட்டுப் பிரதேசங்களயும் கொண்டுள்ளது. விவசாயத்தில் அணையின் நீர் பெரும் பங்காற்றுகிறது என்பது வியப்பில்லை. அத்தகைய அணைகளிலே இன்று முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து தேவையற்ற சர்ச்சை ஏற்பட்டுள்ளது .

முல்லைப் பெரியாறு அணையின் பின்னணி

கி.பி 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் உணவுப் பஞ்சம் தலை விரித்தாடியது. பஞ்சத்தால் மக்கள் மாண்டனர். இத்தகைய தருணத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்கு பகுதியில் உள்ள கேரள மாநிலத்தில் ஆண்டொன்றுக்கு 3000 மில்லி மீட்டர் அளவு மழை பொழிந்து 44 நதிகளை உருவாக்கி அம்மாநிலத்தை வளமாக்கிக் கொண்டிருந்தது. கேரளாவில் சமவெளி குறைவு என்பதால் நதி நீர் மேற்கு நோக்கி பாய்ந்து வீணாக அரபிக்கடலில் கலந்தது. அன்றைய இராமநாத புரத்து பிரதம அமைச்சர்  திரு. முத்து அருளபிள்ளை அவர்கள் 1778 ஆம் ஆண்டு ஒரு வல்லுநர் குழுவை  கேரளாவிற்கு அனுப்பி, மேற்கு நோக்கி  பாயும்  முல்லைப் பெரியாறு அணையை தமிழகத்திற்கு திருப்பி விடும் சாத்தியக் கூறுகளைக் கண்டறியப் பணித்தார். வல்லநர் குழுவும் சாத்தியம் என்றே தெரிவிக்க, நிதி நிலை காரணமாக திட்டம் கைவிடப்பட்டது. 1882 ஆம் ஆண்டு இந்த திட்டம் வெள்ளையரால் மறு ஆய்வு செய்யப்பட்டு பெரியாறின் குறுக்கே  ஒரு அணை கட்டி நீரைத் தேக்கி மலையைக் குடைந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டது. 1887 ஆம் ஆண்டு அணை கட்டும் வேலை தொடங்கி 1895 ஆம் ஆண்டு பென்னி கூக் என்ற ஆங்கிலப் பொறியாளரால் கட்டி முடிக்கப்பட்டது. இந்த அணை கட்ட 1886 ஆம் ஆண்டு  ஆங்கிலேயர்களால்  திருவாங்கூர் அரசுடன்  ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஒப்பந்தப் படி

 1. ஒப்பந்த காலம் 999 ஆண்டுகள்
 2. 8000 ஏக்கர்  நிலத்திற்கு  நீர்பாசனம், ஏக்கருக்கு ரூபாய் 5 வீதம் வருடத்திற்கு 40000 பணம் திருவாங்கூர் நிர்வாகத்துக்குக் கொடுக்கப்பட வேண்டும்
 3. நிலத்தின் வழியாக வரக்கூடிய அணைத்து நீருக்கும் உரிமை
 4. அணை  மற்றும் அணை சார்ந்த பாசன வேலைகளை செய்ய உரிமை
 5. நீர் பிடி பகுதியில் மீன் பிடிக்க உரிமை
 6. நீர் பிடி பகுதியில் உள்ள மரம் செடி மற்றும் தாது பொருட்களை பயன்படுத்திக்கொள்ள உரிமை
 7. அதிகாரிகள் மற்றும் வேலையாட்கள் செல்ல உரிமை , அணை  பராமரிப்பு  உரிமை
 8. அணை கட்டுதல் மற்றும் பாசன வேலைகளுக்கு 100 ஏக்கர்  நில உரிமை

ஆகிய கோட்பாடுகளுடன்  கையொப்பமானது. முல்லைப் பெரியாறு அணை, கேரள மாநிலம் இடுக்கி  மாவட்டத்தில் உள்ள தேவி குளம் மற்றும் பீர்மேடு  தாலுகாவில் உள்ளது. ஆனால் இந்தப் பகுதி 12 ஆம் நூற்றாண்டு வரை பாண்டிய மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்தது. அதன் பிறகும் இந்தப் பகுதியை தமிழ் சிற்றரசரான பூனையாற்று  தம்பிரானுடைய  கட்டுப்பாட்டில் இருந்தது, ஆனால் மதுரையை ஆண்ட ஆங்கிலேயர்கள் இந்தப் பகுதி திருவாங்கூர்  சிற்றரசருக்கு சொந்தமானது என்று தவறாக எண்ணி இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். பின்னர் 1956 ஆம் ஆண்டு மொழி வாரி மாநிலங்கள்  பிரிக்கப்படும்பொழுது திருவாங்கூர் மாகாணம் கேரளாவுடன் இணைக்கப்பட்டது. 90 சதவீத தமிழர் வாழ்ந்த பீர்மேடு மற்றும் தேவிகுளம் பகுதி கேரளப் பகுதியாக  மாறியது. இதனால் பூர்வீகமாக தமிழனுக்கு சொந்தமான இப்பகுதி  கேரளாவில் சேர்க்கப்பட்டுவிட்டது .

பெரியாறு அணை தமிழ்நாட்டில் சிவகிரி மலைப் பகுதியில் உற்பத்தியாகி முல்லை ஆற்றோடு கலந்து முல்லைப் பெரியாறாக கேரளாவில் பாய்கிறது. ஆகவே முல்லைப் பெரியாற்றின் வடிநிலப் பகுதி தமிழகத்திற்கும் கேரளாவிற்கும் பொதுவான ஒரு பன் மாநில வடிநிலப் பகுதியாகும். இதன் அடிப்படையில் முல்லைப் பெரியாறின்  நீரைப் பெருவதற்கு தமிழ் நாட்டிற்கும், தமிழருக்கும் முழு உரிமை உள்ளது.   கேரளாவில் உள்ள அணைப்பகுதி எப்படி தமிழகத்திற்கு சொந்தமாகும் என்ற எண்ணம், சிலருக்குத் தோன்றும்.

முல்லைப் பெரியாறு அணை தமிழகத்தின் குமுளி என்னும் இடத்திலிருந்து 16 மைல்கள் தொலைவில் உள்ளது. அணையும் அணை  நிலமும் கேரளாவில் இருந்தாலும் அதன் நிர்வாகப் பொறுப்பு  தமிழக பொதுப் பணித்துறையிடம் உள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் தேக்கப்பட்ட தண்ணீர் கால்வாய் வழியாக சுமார்  இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து மேற்கு தொடர்ச்சி மலையைக் குடைந்து சுமார் 2  கிலோ மீட்டர் தூரம் குகை வழியாகக் கொண்டு வரப்பட்ட நீர் சுருளியாற்றுடன் இணைக்கப்பட்டு பாசனதிற்காக தமிழகத்திற்கு பயன்படுத்தபடுகிறது . இதன் மூலம் இரண்டு லட்சத்து எட்டாயிரம் ஏக்கர்  விவசாய  நிலம் பயனடைகிறது. மேலும் 1956 ஆம் ஆண்டு போர் பே என்ற அணை இந்த கால்வாயின் குறுக்கே கட்டப்பட்டு மின்சார உற்பத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.  முல்லைப் பெரியாறு நீர் மூலம் தேனி , திண்டுக்கல் , மதுரை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில்  400 கோடி மதிப்புள்ள உணவு உற்பத்தி செய்யப்படுவதுடன் 10  இலட்சம் விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாக உள்ளது.  மேலும் இந்த நான்கு மாவட்டங்களில் உள்ள 60 இலட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

அணை  கட்டப்பட்டு சுமார் 85 ஆண்டுகளாக எந்தப் பிரச்சனையுமின்றி பாசனம் செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையில் கேரள அரசு 1976 ஆம் ஆண்டு முல்லைப் பெரியாறு அணையிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அணையின் குறுக்கே மின் திட்டத்திற்காக இடுக்கி (1200  அடி நீளமும் 555 அடி அகலம்) அணையைக் கட்டியது , அதன் கொள்ளளவு 70 டி எம். சி. தண்ணீராகும், முல்லைப் பெரியாறு அணையைப் போல 7 மடங்கு அதிக கொள்ளளவைக் கொண்டது.  இந்த இடுக்கி அணைக்கு சரியான  நீர் வரத்து இல்லாத காரணத்தினால் கேரள அரசால் தேவயான அளவு  மின் உற்பத்தி செய்ய இயலவில்லை , ஆகையால் கேரளாவின் கவனம் முல்லைப் பெரியாறு அணை மேல் திரும்பியது.   அக்டோபர் 16 , 1979 ஆம் ஆண்டு கேரளாவின் முன்னணி செய்தி நிறுவனமான மலையாள மனோரமா, முல்லைப் பெரியாற்றின் அருகே நில அதிர்ச்சி என்ற பொய்யான தகவலை வெளியிட்டது. கேரள அரசின்  நிர்ப்பந்தத்தின் காரணமாக மத்திய நீர் வள ஆணையத்தின் தலைவர் திரு கே.சி தாமஸ் அவர்கள் அணையை பரிசோதித்து (23/11/1979) அணை வலுவாக உள்ளதாக தெரிவித்தார். அவரின்  திருவனந்தபுரத்தின் பயணத்திற்குப் பிறகு தான் கூறிய கருத்தை மாற்றி அணை வலுவாக- இருந்தாலும் அணையை பலப் படுத்தினால்  நல்லது என்ற கருத்தை தெரிவித்தார். அதன்படி தமிழகம் மற்றும் கேரள அரசுகள்  பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன. பேச்சு வார்த்தையின் முடிவில் அணையை மூன்று கட்டங்களாக வலுப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. அணையை வலுப்படுத்தும் வரை அணையின் நீர் மட்டம் 152 அடியிலிருந்து 136 அடியாகக் குறைக்க திட்டமிடப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையின் முன் பகுதியும் பின் பகுதியும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்ட கல் கட்டடமாகும். நடுப் பகுதி  கான்க்ரீட் கலவையால் நிரப்பப்பட்டது .  அணையை வலுப்படுத்தும் பணி மூன்று கட்டங்களாகப் பிரிக்கப்பட்டது

 1. அவசர கால நடவடிக்கைகள்
 2. இடைக்கால நடவடிக்கைகள்
 3. நீண்ட கால நடவடிக்கைகள்

அவசர கால நடவடிக்கைகள்

முல்லைப் பெரியாறு அணை  ஒரு புவி ஈர்ப்பு அணையாகும் , அதாவது அணையின் அழுத்தம் மற்றும் நில அதிர்வுகளை அணையின் எடை கொண்டு சமாளிக்கும் திறன் கொண்டது , அதேற்கேற்ப 15 அடி அகலமும் மற்றும் 3 அடி தடிமனும் கொண்ட இரும்புக் கம்பி கொண்டு அணையின் மேல் மட்டம் முழுவதும் கான்கிரீட் போடப்பட்டது . இதன் மூலம் அணையின் மொத்த எடை 12000 டன் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.

இடைக்கால நடவடிக்கைகள்

அணையின் மேல் பரப்பில் 6 இன்ச்  விட்டமுள்ள  துளைகளை இட்டு, துளை வழியாக விசையூட்டப்பட்ட கம்பிகளை செலுத்தி கான்க்ரீட் கலவையால் அடித்தளத்துடன் இணைக்கப்பட்டு மூடப்பட்டது . இதன் மூலம் மொத்த அணையையும் தாங்கிப் பிடிக்குமாறு உறுதி ஊட்டப்பட்டுள்ளது

நீண்ட கால நடவடிக்கைகள்

அணையின் பின் புறம் 10 அடிக்கு மேல் பரப்பில் இருந்து 32 அடி விட்டமுள்ள கான்க்ரீட் கலவையால் சுமார் 145 அடி உயரம் வரை  கான்க்ரீட் கலவை இடப்பட்டு அணை  பலப் படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அணையில் அடிக்கடி நீர் கசிவு ஏற்படுகின்றது என்ற தகவலை கேரள அரசு பரப்பி வருகின்றது. நீண்ட கால நடவடிக்கையின் ஒரு பகுதியாக  அணையில் 10 மற்றும் 45 அடியில் இரண்டு வடிகால் சுரங்கங்கள் கட்டப்பட்டுள்ளது, இதன் மூலம் அணையிலிருந்து வெளியேற்றப்படும் கசிவு நீர் நாள் தோறும் கணக்கிடப்படுகிறது. இந்த அளவு அணைக்கு பாதுகாப்பான அளவை விட மிகக் குறைவு என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அணையிலிருந்து ஒரு கணிசமான அளவு கசிவு நீர் வெளியேற்றப்பட வேண்டும் அது அணைக்கு பாதுகாப்பானது என்கிறது அறிவியல் ஆராய்ச்சிகள். அணையின் மட்டம் 152 அடிக்கு மேலே செல்லும்பொழுது அணையின் உபரி நீரை வெளியேற்ற 36 அடிக்கு 16 அடி என்ற அளவில் 10 மதகுகள் கொண்ட வெளிப்போக்கி அமைக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் 86000 கனஅடி  நீரை வெளியேற்ற முடியும். மத்திய  நீர் வளத்துறையின் பரிந்துரையின் பேரில் மேலும் 3 மதகுகள் அமைக்கப்பட்டு 36000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது . அணையின் மொத்த நீர் வெளியேற்றுத் திறன் 1,22,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அணைத்து வேலைகளும் 1994 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டுள்ளது. பணிகளுக்கான மொத்த செலவு 18 கோடியாகும். பெரியாறு அணையோடு ஒட்டி பேபி அணை என்ற 240 அடி அளவில் சிறிய அணையும் உள்ளது. முக்கிய அணையில் 112 அடியில் நீர் மட்டம் உயரும்போது பேபி அணைக்கு தண்ணீர் வர வாய்ப்புள்ளது .  அணையில் மொத்த நீர் மட்டம் 152 அடியாக இருக்கும்பொழுது பேபி அணையின் நீர் அழுத்தம் 40 அடியாக இருக்கும் . பேபி அணையும் மேற்கூறிய வழிமுறைகளில் பலப்படுத்தப்பட்டுள்ளது.

பலப்படுத்தும்பணி அனைத்தும் முடிந்த தருவாயில் , தமிழக அரசு அணையின் நீர் மட்டத்தை மீண்டும் 152 அடியாக உயர்த்த முடிவு செய்தது , இதை அறிந்த கேரள அரசு வனத்துறையை ஏவி இப்பணியை செய்யவிடாமல் செய்து பல பொய் வழக்குகளைப் போட்டது. தமிழக மக்களின் பல போராட்டங்களுக்குப்பின் தமிழக அரசு நீதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது. இதை எதிர்த்த கேரளா  சங்கங்கள் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகின. பின்பு அனைத்து வழக்குகளும் உச்ச நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது. இரு மாநிலங்களின் பேச்சு வார்த்தை  தோல்வியடைந்ததைத் தொடர்ந்து உச்ச நீதி மன்றம் ஒரு வல்லுநர் குழுவை அனுப்பி அணையின் கட்டுமானத்தைப் பரிசோதிக்க 2000 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. வல்லுநர் குழுவும் அணையை பரிசோதித்து அதன் கட்டுமானத்தின் மாதிரியை டெல்லி மத்திய மண்வள ஆய்வுக் குழுவின் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. வல்லுநர் குழுவின் அறிக்கை மற்றும் மத்திய மண்வள ஆணையத்தின் அறிக்கை ஆகியவற்றின் படி 27.2.2006 ஆம் தேதி உச்ச நீதி மன்றம் கீழ்கண்ட தீர்ப்பை அளித்தது .

 1. தமிழக அரசு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம்
 2. பேபி அணையை பலப்படுத்த கேரள அரசு உதவ வேண்டும்
 3. கேரள அரசோ அல்லது அதன் அதிகாரிகளோ எந்த இடையுறும் விளைவிக்கக் கூடாது
 4. அணையை பலப்படுத்தும் வேலை முழுவதும் முடிந்தவுடன் அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்திக்கொள்ளலாம்

இதை அறிந்து கேரள அரசு உடனடியாக சட்ட மன்றத்தைக்கூட்டி 2003 ஆம் ஆண்டு கொண்டு வந்த கேரள நீர்பாசன சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வந்து அதனை  18/03/2006  அன்று சட்டப்பதிவு செய்தது. அதன் படி கேரளாவில் உள்ள அணைகளின் முழு கொள்ளளவு  நீர் மட்டத்தை வரையறை செய்ய கேரள அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது, நீதி மன்றங்கள் இதில் தலையிட முடியாது என்றும் முல்லைப் பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவாக 136 அடி என்றும் சட்டமாக்கியது . இந்த செய்கையால் கேரள அரசு உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை கேலிக்கூத்தாக்கியது.

இந்த கேரளாவின் முறைகேடான சட்டம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்ததால் இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தை அணுகியது. இதைத்தொடர்ந்து கேரள அரசு உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய உச்ச நீதி மன்றத்தை பல முறை அணுகியது. இதையனைத்தையும் உச்ச நீதி மன்றம் தள்ளுபடி செய்தது, ஆனால் இதைத்தொடர்ந்து உச்ச நீதி மன்றத்தின் செயல்கள்  தமிழர்களுக்கு வேதனை தருபவைகளாகவே உள்ளது. மீண்டும் இரு மாநில அமைச்சர்களையும் கலந்து பேசுமாறு பணித்தது . இரு மாநில அமைச்சர்களின் பேச்சு வார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆனந்த் தலைமையில் ஒரு வல்லுநர் குழுவை அமைத்து அணையை மீண்டும் பரிசோதிக்க உத்தரவிட்டது. இதனால் நாம் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் 2000 ஆம் ஆண்டு இருந்த நிலைக்கே தள்ளப்பட்டுள்ளோம். அணையின் வலிமையை நடைமுறையாக சோதிக்க அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி தகைவுமாணியைக் கொண்டு அணையின் பாதுகாப்பான நீர்மட்டத்தை அளவிடலாம் என்கிறார் மதுரை மண்டல பொதுப்பணித்துறை முன்னாள் இயக்குநர் திரு. விஜயகுமார் அவர்கள்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 132 அடியாகக் குறைத்த பின்னும் , இடுக்கி அணைக்கு நீர் வரத்து தேவையான அளவு இல்லை என்ற  காரணத்தினால் கேரள அரசு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை. அணை பலவீனமாக உள்ளது என்ற பொய் பிரச்சாரத்தை கேரள அரசு மேற்கொண்டு புதிதாக  அணை ஒன்றை கட்ட திட்டம் தீட்டி வருகிறது.

முல்லைப்  பெரியாறு அணை உடைந்தால் என்னவாகும் ?

ஒரு வேளை முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் அதன் நீர் கீழே உள்ள மலைப்பள்ளத்தாக்கில் ஓடி  இடுக்கி அணையைச் சேரும். இடுக்கி அணை முல்லைப் பெரியாறு அணையை விட 7 மடங்கு கொள்ளளவு கொண்டதாகும். இதனால் மொத்த கொள்ளளவையும் எளிதாகத் தாங்கும் தன்மையுடையது இடுக்கி அணை. ஒரு வேளை இடுக்கி அணை ஏற்கனவே முழு கொள்ளளவுடன் இருந்தால் கூட, முல்லைப் பெரியாறு அணையின் நீர்  இடுக்கி அணையை சென்று சேர குறைந்தது சுமார் 4 மணி நேரமாகும். ஆகையால் இதற்குள் இடுக்கி அணையிலிருந்து தேவையான அளவு நீரை வெளியேற்றி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய முடியும் , மேலும் பள்ளத்தாக்கு 200 அடி ஆழம் கொண்டதால் பெரியாறு அணையின் நீர், பாதுகாப்பாக இடுக்கி அணையைச் சென்றடையும் , ஆகவே கரையோர  மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பினையும் ஏற்படுத்தாது இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் நீதியை நிலை நாட்டத் தவறினால் , தமிழகத்தின்  தென் மாவட்டங்களில் பசி, பஞ்சம் மற்றும் கலாச்சார  சீரழிவு  ஏற்படும். இதனால் உச்ச நீதி மன்றம் ஏற்கனவே தான் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து அதை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தமிழனுடைய  அவா.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும்  என்ற  பாரதியின் வாக்கிற்கிணங்க கேரள மற்றும் காங்கிரஸ் அரசியல்வாதிகளின் சூதிலிருந்து முல்லைப்  பெரியாறு அணை மீண்டு தாய்த்தமிழரின்  தாகத்தைத் தணிக்கும் என்பதில் ஐயமில்லை.

www.writemyessay4me.org


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “முல்லைப் பெரியாறு அணை: பாதுகாப்பும் பின்னணியும்”
 1. பால்பாண்டி says:

  முல்லைபெரியார்அணையில்தண்ணிர்தரமறுக்கும்கேரளாகூடங்குளம்த்தில்இருந்திலமின்சாரம்கேட்பதுநியாமா

 2. babu says:

  tamilan win pannuvan do not worry about this my brother and sisters.

 3. Chummah sankar says:

  சிகரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா!

அதிகம் படித்தது