மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

மூட நம்பிக்கையை விட்டொழிப்போம் (சிறுகதை)

சுசிலா

Aug 22, 2020

siragu mooda nambikkai1
மதிவாணன், பேருந்திலிருந்து இறங்கி, சாலையில் நடந்தவாறே அவனுடைய கிராமத்தின் பசுமையை ரசித்து தன்னுள் மகிழ்ந்து கொண்டான். என்ன தான் இருந்தாலும் கிராமம் கிராமம் தான், நகரம் நகரம் தான். சம்பாதிக்க மட்டும் தான் நகரம். இயற்கையை ரசிக்க வேண்டுமானால், இனிமே மாசம் ஒருமுறையாவது நம்முடைய ஊருக்கு வந்து போக வேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.

ஈரோடு மாவட்டம், பவானி அருகேயுள்ள ஒரு அழகான, பசுமையான கிராமம் தான் அவனுடைய கிராமம். பள்ளிப்படிப்பு இங்கே தான். கல்லூரிப்படிப்பு மட்டும் ஈரோட்டில். தற்போது படித்து முடித்து சென்னையில் ஒரு ஐடி கம்பனியில் பணிபுரிந்து வருகிறான். தன்னுடைய அக்கா செல்வி வீட்டுக்குத்தான் தற்போது சென்று கொண்டிருக்கிறான். அக்காவின் மகன், முகிலன் படு சுட்டி. இவனிடம் மிகவும் ஒட்டிக்கொள்வான். ஆறாம் வகுப்பு படிக்கிறான். இவனைக் கண்டால் விடவே மாட்டான். கேள்விகளால் துளைத்து எடுப்பான்.

அவன் அம்மாவும், தன் தம்பி இருக்கும் தைரியத்தில், தனக்குத் தெரியாத கேள்வியைக் கேட்டால்,

“உன் மாமன் வரும்போது இது மாதிரி கேள்வியைக் கேளு.. எனக்கு தெரியாது” என்று சில நேரங்களில் கடுப்படிப்பாள்.

20 நிமிட நடைக்குப் பிறகு, அக்காவின் வீட்டினுள் நுழைந்தான் மதிவாணன்.

” அக்கா … “

” வாடா மதி, எப்படி இருக்கே, என்ன இப்படி இளைச்சி போயிட்டே? ” என்றாள்,

“நானா.. எங்கே அக்கா இளைச்சிருக்கேன்!” என்றான் மதி கிண்டலாக..

“வாப்பா மதி, உன் அக்காவுக்கு, நீ எப்பெல்லாம் சென்னையிலிருந்து வரியோ, அப்பெல்லாம் இளைச்சமாதிரி தான் தெரியும் மதி..” என்று கிண்டலாக சொல்லிக்கொண்டே அறையிலிருந்து வெளியே வந்தார் அக்காவின் கணவர் முத்து.

“அதானே .. உங்களுக்கு பொறுக்காதே..” என்றாள் செல்வி.

சிரித்தபடியே, ” விடுங்க.. அது சரி, எங்கே சின்ன வாண்ட காணோம்? வரும்போதே வாசலேயே நிற்பான்…” என்றான் மதி.

“அத ஏன் கேக்குற தம்பி, இரண்டு நாளா முகில் முகமே வாடி போயிருக்கு, கேட்டா எதுவும் சொல்ல மாட்டேங்குறான். சரியா சாப்பிடறதுமில்லை, புத்தகத்தை தொட்டு இரண்டு நாள் ஆச்சு.. கேட்டா, ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்ல.. ங்குறான்.
சரி நீ தான் வரியே, நீ கேட்டா எதுவும் சொல்வானு விட்டுட்டேன். கொல்லைப்புறத்துல இருக்கான் …நீயே போய் கேளு” என்றாள்.

“முகில் .. என்ன பண்ணுறே”

” வாங்க மாமா, எப்படி இருக்கீங்க?”

” நான் நல்லா தான் இருக்கேன். நீ ஏன் ஒருமாதிரி இருக்கே? “

“அதெல்லாம் ஒண்ணுமில்லையே மாமா. நல்லா தான் இருக்..கேன். ..” என்றான் இழுத்தபடியே.

“சரி, படிப்பு எப்படி போகுது?”

“சூப்பரா போயிட்டிருக்கு மாமா. எனக்கு பள்ளிக்கு நேரமாச்சு. சாயந்திரம் வந்து பேசலாமா?”

“சரி, சரி, போய்ட்டு வா. சாயந்திரம் பேசிக்கொள்ளலாம்.”

இவ்வளவு உரையாடல் நடந்தாலும் கூட, முகிலன் முகத்தில் பழைய மகிழ்ச்சியில்லை என்பதை மதி புரிந்துகொண்டான்.

அக்காவின் கணவரும், முகிலனும் கிளம்பி போய்விட்டனர். அக்காவின் ருசியான சமையலை ஒரு கைபார்த்துவிட்டு, ஒரு குட்டி தூக்கம் போட்டான் மதி.
மாலை, சூடான அவித்த வேர்க்கடலையுடனும், இஞ்சி டீயுடனும் வந்து மதிவாணனை எழுப்பினாள் அக்கா செல்வி.

“உன்னுடைய இந்த அன்பான உபசரிப்பிற்காகவே, மாசாமாசம் இங்கே வந்துடனும் க்கா.” என்றான் கிண்டலாக.

“வா… வா… எனக்காக இல்லையெனாலும், முகிலனுக்காவது வந்துட்டு போ” என்றாள் அவள்.

பேசிக்கொண்டிருக்கும் போதே, முகிலும் பள்ளியிலிருந்து வந்தான்.
அதன் பிறகு, சிற்றுண்டி நேரம் முடிந்ததும், முகிலனை அழைத்துக்கொண்டு, வெளியில் சென்றான் மதி.

“முகில், உனக்கு என்ன பிரச்சனை?
நானும் வந்ததிலிருந்து பாக்குறேன். நீ பழைய மாதிரி இல்லையே .. ஏதோ ஒன்னு உன் மனசுல இருக்கு, இந்த மாமாகிட்ட சொல்ல மாட்டியா?” என்றான்.

“ஆமா மாமா. எனக்கு மனசு சரியில்ல.. என்னுடைய பிரண்ட் பிரபு உங்களுக்குத் தெரியும் தானே..”

“ஓ .. நல்லா தெரியுமே, உன்கூடவே சுத்திகிட்டு இருப்பானே.. அவனுக்கு என்னாச்சு..?”

“அவனுக்கு ஒண்ணுமில்ல மாமா .. அவனுடைய அப்பாவுக்கு தான் ஆக்சிடென்ட் ஆயிடுச்சி..”

“அய்யய்யோ .. என்னாச்சு, இப்ப எப்படி இருக்கார்?”

“பரவாயில்ல.. ஆபரேசன் நடந்து இப்ப வீட்டுல இருக்காரு மாமா. ஆனா, வர வருசம் அவங்க வீடு காலி பண்ணிட்டு பக்கத்து ஊருக்கு போறாங்களாம். பிரபுவை வேற ஒரு பள்ளியில் சேர்த்துவிட்டுருவாங்களாம்…. ஏழாவது, நாங்க இரண்டு பேரும் சேர்ந்து படிக்க முடியாது.” என்று சொல்லும் போதே முகிலனுக்கு நா தழுதழுத்தது. கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

முகிலனை, தன்னோடு சேர்த்து அணைத்தபடி,

“சரி, பிரபு வீடு எங்கே இருக்கு.. தெரியுமா”

“தெரியும். இதோ இன்னும் இரண்டு தெரு தாண்டினா வந்துரும்”

” இப்ப நம்ம போனா, அவங்க எதாவது தப்பா நினைப்பாங்களா?”

“இல்ல மாமா. அதெல்லாம் நினைக்க மாட்டாங்க.. வாங்க போகலாம்.”

சிறிது நேரத்தில், பிரபு வீடு வந்தது.

“டேய் பிரபு, எங்க மதி மாமா வந்துருக்காங்க.. என்று கூப்பிட்டபடியே உள்ளே சென்றான் முகில்.

“டேய் வாடா,” என்று மகிழ்ச்சியுடன் நண்பனை வரவேற்று, பிறகு “வாங்க மாமா..” என்றான் பிரபு.

உள்ளே சென்றதும், பிரபுவின் அம்மா, பாட்டி இருவரும், இவர்கள் இருவரையும் வரவேற்று, அவனின் அப்பா இருக்கும் அறைக்கு அழைத்து சென்றார்கள்.

“காப்பி குடிப்பிங்களா, டீ போடலாமா..” என்று கேட்ட பிரபுவின் அம்மாவிடம், ” இப்ப தான் குடிச்சிட்டு வரோம், ஒன்னும் வேண்டாங்க.. ரொம்ப நன்றி” என்று சொல்லிவிட்டு, விபத்து பற்றிய விசாரணைகள் முடிந்தபிறகு, பள்ளி பிரச்சனையை தொடங்கினான் மதி.

” உங்களுக்கு எதுவும் பணிமாற்றம் வந்திருக்குதா சார்?” என்றான்.

“அப்படியெல்லாம் ஒண்ணுமில்லைங்க. அதே கம்பனி தான். வீடு தான் மாத்துறோம். இது வாடகை வீடு தான். ஏற்கனவே, மூணு வீடு மாத்தியாச்சி… நம்ம நிலைமை தான் மாறல. போன வருசம் எங்க அம்மாவுக்கு டெங்கு காய்ச்சல் வந்து செத்து தான் பொழச்சாங்க. ஆறு மாசம் முன்னாடி, என் மனைவிக்கு வயித்துல ஒரு ஆபரேசன். இப்ப எனக்கு… அதான், எங்க ஜோசியரை கேட்டோம். இந்த ஊரே வேண்டாம். உனக்கு ராசியில்ல. பக்கத்துக்கு ஊருக்கு வீடு மாத்திட்டு போ.. என்று சொன்னாரு …” என்றார் பிரபுவின் அப்பா.

“ஓ… சரி, அங்கே நல்ல பள்ளிக்கூடம் இருக்கா?”

“இல்ல சார், இங்கே இருக்குற பள்ளிக்கூடம் மாதிரி இல்ல.. சுமாரான பள்ளிக்கூடம் தான்.. ஆனா. என்ன செய்றது சொல்லுங்க. வீட்டு நிலைமை இப்படி இருக்கே..” என்றார்.

மதிவாணனுக்கு எல்லாமே இப்போது புரிந்துவிட்டது.

“சார், நான் ஒண்ணு சொன்னா கோபிக்க மாட்டீங்கனு நினைக்கிறேன், எனக்கு தெரிந்த ஒரு நண்பன் வீட்டுல, இரண்டு வருசமா, ஒருத்தர மாத்தி ஒருத்தர் என்று, இப்ப நீங்க சொன்னது போல, உடம்புக்கு எதாவது பண்ணிகிட்டே இருந்தது. அவங்களுக்கு தெரிஞ்ச ஜோசியரை போய் பாத்தாங்க. அவரும் வீடு ராசியில்லாத வீடு என்று சொன்னார். அவன் லோன் போட்டு கடன்ல வாங்குன வீடு. விட்டுட்டு போக முடியாது. வேற எங்கயாவது போனா, வாடகை அதிகம், ஆபிஸ் தூரம்னு ரொம்ப கவலைப்படுவான்.

அப்புறம் நான் ஒரு யோசனை சொன்னேன். அதன்படி அவனும் செய்தான்.

” ஓ … அப்படியா, என்ன சொன்னிங்க..” இது பிரபுவின் அப்பா..

அது என்னனா, ஜோசியர்கிட்ட போய், இதுக்கு எதாவது பரிகாரம் இருக்கானு கேட்டுருக்கான். உடனே, அவரும், “ஓ பேஷா பண்ணிடலாம்.. அதுக்கு ஒரு ஐம்பதாயிரம் ரூபாய் செலவாகும்..” என்று சொல்லியிருக்கார்.

அப்புறம் அவனே புரிந்துகொண்டான், 50,000 ரூபாய் செலவு பண்ணினால், சரியில்லாத ராசி சரி ஆகிடுமா என்று புரிந்துகொண்டு, எதுவும் செய்யல. அப்படியே விட்டுட்டான். இப்ப எந்தப் பிரச்சனையும் இல்லை. அப்படியே பிரச்சனை வந்தாலும், அது நம்முடைய பிரச்சனை, அத நாம தான் சரி பண்ணனும்னு, எதிர்நோக்க தயாராயிட்டான். எந்த ஜோசியர்கிட்டேயும் இப்ப போறதுமில்லை “

இதையெல்லாம் அங்கிருந்த எல்லோருமே மிகவும் உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

பிரபுவின் அம்மாவிடம், ” கொஞ்சம் தண்ணீர் கொடுக்கிறிங்களா க்கா ” என்று கேட்டு ஒரு மொரடு குடித்துவிட்டு மீண்டும் பேசத் தொடங்கினான் மதி.

“இதெல்லாம் எதுக்கு உங்கிட்ட சொல்றேன்னா, நமக்குள்ள பிரச்சனைகள் நமக்குத் தான் தெரியும். ஜோசியருக்கு அதைப்பத்தி கவலையில்லை. ஒரு நல்ல பள்ளிக்கூடத்தை விட்டுட்டு, சுமாரான பள்ளிக்கூடத்திற்கு உங்க பிள்ளையை அனுப்புறதால, அவருக்கு என்னங்க நஷ்டம் ஆகிடப்போகுது. நம்ம பிள்ளை படிப்பு தான் பாதிக்கும். பிள்ளைங்க படிப்புக்கு நாமே இடைஞ்சலா இருந்துடக்கூடாது இல்லையா. வேற வழியே இல்ல, மாறி தான் ஆகணும்னா சரி, மாறிக்கலாம். யார் சொன்னாலும், நீங்க நல்லா யோசிங்க, பிறகு முடிவெடுங்க. யாருக்குமே பிரச்சனையில்லாத வாழ்க்கை இல்ல. பிரச்சனைகள் நம்முடைய அறியாமையாலும், அலட்சியத்தாலும், சில நேரங்களில் மற்றவர்களாலும் தானே வருகிறது. அத நாம தான் சமாளிக்க வேண்டும்.

அப்பா நான் வரேன் சார். உடம்ப நல்லா பாத்துக்கோங்க…. உடம்பு நல்லா ஆனதும், முடிஞ்சா, பக்கத்து தெருவுல இருக்குற பெரியார் படிப்பகத்துக்கு போய் வாங்க.. ” என்று பிரபுவின் அப்பாவிடம் கைகுலுக்கி விடைபெற்றான் மதிவாணன்.

பிரபுவும், முகிலனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டு கைகோர்த்தபடி வெளியில் வந்தனர்.

“ரொம்ப நன்றி மாமா. எங்க அப்பாவை யோசிக்க வைச்சிருக்கீங்க…” என்றான் பிரபு.
அதற்கு முகிலன், “யாரடா… எங்க மாமாவாச்சே..” என்று பெருமையாக சொல்லி, காலரை தூக்கிவிட்டு சிரித்தான்.

பிறகு, மூவருமே சிரித்தனர்.

முகிலனும். மதிவாணனும் விடைபெற்றுக்கொண்டு வீதியில் நடந்துவரும்போது,

“மாமா, நீங்க மட்டும் எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க? ” என்றான் முகிலன்.

“பள்ளி பாடப் புத்தகம் மட்டுமல்லாது, நூலகத்திற்கு சென்று மற்ற புத்தகங்களையும் வாசிக்க வேண்டும். அப்பா தான் உலகத்தைப்பத்தி தெரிஞ்சிக்க முடியும். பெரிய தலைவர்கள் சொன்னதையெல்லாம் புரிஞ்சிக்க முடியும். நீயும், அது போல புத்தகங்களை நிறைய படி. பெரியார் தாத்தா இந்த மாதிரி, மூடநம்பிக்கைகளை பத்தி இன்னும் நிறைய சொல்லியிருக்காரு… என்ன படிக்கிறியா முகில்” என்றான்.

“நிச்சயமா மாமா. இனிமே, லீவு விடும் போதெல்லாம் நூலகத்திற்கு போறேன்..”

“வெரி குட்… ” என்றவாறே, முகிலனை அணைத்துக்கொண்டான் மதிவாணன்.

வரும் வழியில், முகிலுக்கு பிடித்த கொய்யாப்பழங்களை வாங்கியபடி இருவரும் வீடு வந்தடைந்தனர். இருவரின் முகத்திலும் மகிழ்ச்சி தவழ்வதைப் பார்த்த செல்வி, வியப்புடன், மதிவாணனை பார்த்து, “உன்னுடைய தெளிவு, எதையும் பகுத்தறியும் சிந்தனை உன்னை மட்டுமல்ல.. உன்னை சேர்ந்தவர்களையும் என்றைக்குமே முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்லும் தம்பி” என்றாள்.


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மூட நம்பிக்கையை விட்டொழிப்போம் (சிறுகதை)”

அதிகம் படித்தது