செப்டம்பர் 18, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

மூலிகைகளே ஆனாலும், சுய மருத்துவம் கூடாது

சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

Jun 20, 2015

Dr.Jerome -FI

விலங்குகளுக்குக் கூட மருத்துவ அறிவு உண்டு. சில உடல் உபாதைகளுக்கு சில மூலிகைகளைத் தேடி உண்ணுகின்ற அறிவு விலங்குகளுக்கும் உண்டு. ஆதிமனிதன் தனக்குத்தானே வைத்தியம் செய்து கொண்டான்.

அப்படியானால் மருத்துவர் எதற்கு?

பல கோடிக்கணக்கான பணம் செலவுசெய்து கட்டப்படும் மருத்துவக் கல்லூரிகள் எதற்கு?

மருத்துவ ஆராய்ச்சி நிலையங்களை ஏன் உருவாக்க வேண்டும்?

மருத்துவமனைகள் எதற்கு?

மருத்துவம் சார்ந்த படிப்புகள் எதற்கு (Para Medical Sciences)?

மருத்துவ மேல்படிப்புகள் எதற்கு?

இன்னும் ஒருபடி மேலே சென்று கேட்க வேண்டுமானால் பள்ளிக் கூடங்கள் கூட எதற்கு?

நாம் அனைவரும் ஆதிவாசிகளாகவே இருந்துவிட்டு போகலாமே?

சரி விடயத்திற்கு வருவோம்.

சர்க்கரை நோயா? எலுமிச்சம் சாற்றுடன் தேனையும்…

மாதவிலக்கின் போது வலியா? வெந்தயத்தையும்…

தலைவலியா?….சுக்கையும்…

சளித்தொல்லையா?…. ஒரு பிடி துளசியோடு…

வயிற்றுவலியா?… ஓமத்தை பொடித்து…

பேதியா?… மாதுளை ஓடுடன்…

இப்படியெல்லாம் பேசுவதும் எழுதுவதும் ஒரு நாகரிகம் ஆகிவிட்டது.

இப்படி எதையாவது கைவைத்தியம் அல்லது பாட்டிவைத்தியம் அல்லது மூலிகை வைத்தியம் என்ற பெயரில் செய்துவிட்டு, பேதியாவது நிற்காமல் மிகவும் நீர்ச்சத்து குறைந்து, இரத்த அழுத்தம் குறைந்து நிலைமை மிகவும் மோசமானதும் தூக்கிக்கொண்டு பெரிய மருத்துவமனைக்கு ஓட வேண்டியது.

அங்கே மருத்துவர் கேட்பார், “ஏன் இவ்வளவு மோசமாகும் வரைக்கும் வைத்திருக்கிறீர்கள்?” என்று, உடனே உடன் வந்த ஒரு மேதாவி கூறுவார், “டாக்டர் இவர்கள் ஏதோ ஒரு சித்தா மருந்து கொடுத்திருக்கிறார்கள்” என்பார்.

இப்படி சொல்லும் அளவுக்கு மூலிகை மருத்துவம், பாட்டிவைத்தியம், நாட்டுவைத்தியம், கைவைத்தியம் என்று என்பவைகளோடு எல்லாம் சித்த மருத்துவத்தையும் இணைத்து சிந்திக்கும் அளவுக்கு சித்த மருத்துவம் பற்றிய தெளிவு இல்லாமல் இருக்கின்றது.

(பிறகு மருத்துவமனையில் அனுமதித்த அந்த நபரை சில ஆயிரம் செலவு செய்து வீட்டிற்கு கூட்டி வருவர்)

மூலிகைகள் என்றால் இவர்களுக்கு ஏதோ ஒரு பொழுதுபோக்கு போல ஆகிவிட்டது.

சமையல் செய்வதைப் போலவும், காய்கறிகளில் பொம்மை செய்வது போலவும், ஒரு பொழுது போக்காக மூலிகைகளின் மருத்துவ பலன்களையும், மருத்துவக் குறிப்பையும் எழுதியும் பேசியும் வருவது பெருகி வருகின்றது.

ஆனால் இது சரியல்ல.

மருந்துகளில் மருந்துச்சரக்குகளை சேர்ப்பதற்கு முன், சுத்தி செய்வது (Purification) சித்த மருத்துவத்தில் ஒரு முக்கியமான அறிவியல் முறையாகும்.

உதாரணமாக மிகவும் அடிப்படையான மருந்துகளாக எடுத்துக்கொண்டால், சுக்கு, மிளகு, திப்பிலி எனக் கூறலாம்.

இதில் சுக்கு கூட ஒரு மூலிகைப் பொருள் கிடையாது. இது உங்களுக்கு தெரியுமா?. சுக்கு என்றால் என்ன? இஞ்சியின் மீது சுண்ணாம்பு(Calcium Carbonate) என்ற வேதிப்பொருளை சேர்த்து கிடைக்கும் பொருள்தான் சுக்கு.

இதனை மருந்தாகப் பயன்படுத்துவதற்கு முன் சுக்குடன் மேலே இருக்கிற சுண்ணாம்பு மற்றும் தோலை நன்கு நீக்கிய பிறகே பயன்படுத்த வேண்டும். இப்படி ஒவ்வொரு மூலிகைகளையும் பயன்படுத்த வேண்டிய முறை ஒன்று இருக்கிறது.

இதற்கும் மேலாக ஒரு மூலிகையை பயன்படுத்த வெண்டும் என்றால் அதை எப்படி சேகரிக்க வேண்டும் என்பதற்கு ஒரு முறையும், எந்தக் காலத்தில் சேகரிக்க வேண்டும் என்ற முறையும் உள்ளது.

உதாரணமாக ஒரு மூலிகையில் அதன் பல்வேறு பாகங்களை நாம் மருந்துச்சரக்காக (மருந்தாக அல்ல, மருந்துச் சரக்காக – Not as Medicine – but as a raw drug) பயன்படுத்துகிறோம்.

உதாரணமாக ஒரு மூலிகையில் என்னென்ன பாகங்கள் மருந்துச் சரக்காக பயன்படுகின்றன?. அதன் வேர், வேர்பட்டை, கிழங்கு, தண்டு, கட்டை, பட்டை, கட்டையிலிருந்து எடுக்கும் நெய், பிசின், இலை, பூ, காய், கனி, விதை, விதையிலிருந்து எடுக்கும் நெய், மகரந்தம், காயிலிருந்து எடுக்கப்படும் பால், கனியின் உறை, முழு தாவரம் என இப்படி இன்னும் விரிவாக கூறிக்கொண்டே போகலாம். இவை ஒவ்வொன்றையும் நினைத்த நேரத்தில் எடுத்து பயன்படுத்திவிட கூடாது. அது நல்ல பலனையும் தராது.

உதாரணமாக, ஒரு மூலிகையின் பூவைப் பற்றி மட்டும் கூறுகிறேன். பூக்களை மருந்துச் சரக்காக பயன்படுத்த வேண்டும் என்றால் கோடையில் சேகரிப்பதே நல்லது(summer). கோடையில்தான் அந்தந்த பூக்களில் உள்ள மருந்துச் சரக்குகள் (Phytochemicals) அதிகம் இருக்கும். இப்படி மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு மூலிகையின் பகுதிகளும் எப்படி சேகரிக்க வேண்டும், எந்தக் காலத்தில் சேகரிக்க வேண்டும் என்ற ஒரு முறை உள்ளது. இவையெல்லாம் தெரியாமல் 15 வருடங்களாக ஒரு தொட்டியில், ஒரு துளசி செடியை வளர்த்து விட்டு தலைவலியா ஒரு பிடி துளசி சாறுடன்… என மருத்துவம் சொல்ல ஆரம்பித்தால் என்ன செய்வது. இதெல்லாம் மருத்துவம் அல்ல.

மருத்துவம் என்பது உயிரோடும், உடலோடும், குடும்பத்தின் ஒட்டுமொத்த நிலையோடும், சமூகத்தோடும் அதற்கும் மேலாக உங்களுக்கு நம்பிக்கையிருந்தால், ஆன்மாவோடும் தொடர்புடையது.

எனவே இதன் மூலமாக நான் சொல்ல விரும்புகிற விடயம் இதுதான், “உடல் நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரை நேரில் சென்று கலந்து உரையாடுங்கள். எங்களுக்கு தெரியும் உங்களின் உடல்நிலை என்ன? அதற்கு என்ன மருத்துவம் தர வேண்டும் என்று. மூலிகைகளே ஆனாலும் சுயமருத்துவம் கூடாது”

சித்த மருத்துவம் இன்னும் வளரும்..

மேலும் தொடர்புக்கு:

Dr. ஜெரோம் சேவியர் B.S.M.S., M.D

சித்தமருத்துவ மையம்,

Doctors Plazza,

Opposite to Saravana Stores,

Near Velachery busstand,

Velachery, Chennai.

Ph.No: 9444317293

 


சித்த மருத்துவர் ஜெரோம் சேவியர் B.S.M.S, M.D

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மூலிகைகளே ஆனாலும், சுய மருத்துவம் கூடாது”

அதிகம் படித்தது