மெல்லின மேகங்கள் (கவிதை)
மகேந்திரன் பெரியசாமிJun 23, 2018
மேகங்கள்-
நட்சத்திர முட்டைகளை
அடைகாக்கும்
குளிர்ப்பதனக் கூடுகள்-
வான் கடல் எங்கும்
உள்ளே புகுந்து
வெண்மணல் பரப்பிய
பேரழகுக் கடற்கரைகள்-
தொங்கும் தூரத்து
வெள்ளி மலைக் குன்றுகள்!
அந்தரத்தில் தொங்கிச் செல்லும்
சர்க்கஸ் கூட்டத்தின்
யானைப் பரிவாரங்கள்-
கொஞ்சம் இருட்டு
கலந்து செய்த
கரையும் சிலைகள்
விரையும் மலைகள்-
மிதந்தே நகர்கின்ற
கருப்பு வெள்ளைத் பூந்தோட்டங்கள்-
காலை மாலை வேளையில் மட்டும் வண்ணங்கள் பூக்கும் பூங்காவனமாய்-
வானம் வரைந்து காட்டும்
முப்பரிமாண ஓவியங்கள்-
கறுப்பு வெள்ளைக் களஞ்சியங்கள்!
வான்புத்தகத்தின் முதல் அட்டைப்படம்- வானம் தினம்தினம் போடும்
முகநூல் சுவர்ப் பதிவுகள்-
பதில்கள் பதியும்
விருப்பப் பொத்தான்கள்-
அதற்கு
இறைந்து கிடக்கும் கருத்துக் குவியல்கள்
கடலுக்கும் வானுக்கும்
தொடர்ந்து பயணிக்கும்
படகுப் போக்குவரத்துக் கழகங்கள்-
பூமியைக் குளிக்க வைக்க
வானமே பொருத்திய பூநீர்த் தூவிகள்-
திரவப்பூ மழை நீர்
சுரக்கின்ற கருப்பைகள்-
மழைக் குட்டிகள் ஈனுகின்ற
மகப்பேறு மதில்கள்-
மேக மோக சூழ் சுமந்து
வேர்களின் விலாசங்கள் தேடும்
மழை நீர் விழுதுகள்-
யாகம் நடத்தும்
சொர்க்கத்தின் புகைகள்-
வான் நடத்தும் மாநாட்டைக்
கண்டுகளிக்க கடல் தாண்டி
வருகை தந்த மாநாட்டுப் பிரதிகள்-
நட்சத்திரங்கள் உடுத்திய கிழிசல் நிறைந்த பட்டுப் புடவைகள்-
நகரும் நவீன நீச்சல் குளங்கள்..
நீந்தும் ஆமைகள்-
தாவும் குதிரைகள்-
விண்ணெங்கும் வியாபித்த
ஜுராசிக் பூங்காக்கள்!
நிலவுப் பெண் உடுத்திய
மடித்து வைக்காத
துவைத்த துணிமணிகள்-
வானத்து தேவதை
உறங்கி எழுந்ததில்
கலைந்து கிடக்கும்
மிருதுவான மெத்தைகள்-
வான் கடலுக்குள் நுழைந்த
வன மிருகச்சாலைகள்-
சூரியனும் நிலவும்
கண்டு மறைந்து (hide and seek)
தேடி விளையாடும்
மறைவுகள் நிறைந்த
சிறுவர் பூங்காக்கள்!
வானத்தின் வாசல்
அணிந்து கொண்ட
கலை எழில் திரைத்துணிகள்-
சூரியனும் நிலவும்
பகிர்ந்து விளையாடி
வானெங்கும் இறைத்த
விளையாட்டு பொம்மைகள்!
காண்பதற்கு மெல்லினப்
பதுமையாய் இருப்பினும்-
உயிர்கள் வாழ
பயிர்கள் தழைக்க
வல்லினமாய் மாறி
மின்னொளி எழுப்பி
இடியிசை முழங்க
கனமழை வரம் அருள்
மெல்லின மேகங்கள்!
ஆழ்ந்து நாமெல்லாம்
அரை நிமிடம் சிந்திப்போம்-
உனக்கும் எனக்கும்
உயிர்க் காற்றை யார் தந்தார்?
ஆக்ஸிஜனை அடைகாக்க
தேர்ந்தெடுத்த மரப் பசுமை!
நாம் தினம் தினம் உண்ணும்
சுவாசக் காற்றை
மேக அன்னைதான்
பூமிக்கு அனுப்பி
மரங்களை வளர்த்து
மேகங்கள் விதைப்போம்-
மகேந்திரன் பெரியசாமி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மெல்லின மேகங்கள் (கவிதை)”