செப்டம்பர் 18, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

மேகத்துக்கும் தாகமுண்டு (சிறுகதை)

ஸ்ரீதரன்

Jul 7, 2018

siragu megaththukkum1

பிருத்திகா சைதாப்பேட்டையில்  பேருந்து 5 A வுக்காக காத்திருந்தாள். அவள் கிழக்கு தாம்பரம் செல்ல வேண்டும். தி நகரிலிருந்து அந்த பேருந்து  வந்து விட்டது. அப்போது பகல் இரண்டு மணி இருக்கும் என்பதால் பேருந்துவில் அதிகக் கூட்டமில்லை. ஆனாலும் பிருத்திகாவுக்கு நிற்க இடமில்லை. அவள் பெண்கள் பக்கம் நின்றிருந்தாள். அவளுக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் ஒரு நடுத்தர வயது பெண்ணும் அவளுடைய ஆறு வயது பெண்ணும் அமர்ந்திருந்தனர். பிருத்திகாவை அந்தப் பெண் வினோதமாகப் பார்த்தாள். தன் அம்மாவிடம்” யாருமா இவங்க?” என்றாள். அதற்கு அந்தப்  பெண்மணி,“அவ அலி. அதாவது ஆணுமல்ல, பெண்ணுமல்ல.” என்றாள். இதைக் கேட்டதும் பிருத்திகாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. எங்களுக்கு இயற்கையாய் பெண் உணர்வு ஏற்படுவதால் நாங்கள் திருமங்கையாக மாறுகிறோம். அழகாக ’திருமங்கை’ என்று சொல்வதை விட்டுவிட்டு ’அலி’ என்று சொல்கிறாளே.  படித்த முட்டாள் என்று எண்ணினாள்.

அதற்குள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதால் ஒரு பெண்மணி எழுந்துவிடவே ஒரு வயதான அம்மாள் பிருத்திகாவுக்குத் தன் பக்கத்தில்  உட்கார இடம் கொடுத்தாள்.

பிருத்திகா இறங்க வேண்டிய இடம் வந்தது. அவள் இறங்கி தன் இருப்பிடம் நோக்கி நடந்தாள். அவள் நினைவு பின்னோக்கிச் சென்றது. வசதி மிகுந்த குடும்பத்தில் பிறந்தவள். பி காம் பட்டப் படிப்பு படித்திருக்கிறாள். பள்ளிப் பருவத்திலேயே பெண் தன்மையை உணர்ந்த இவளுக்கு கல்லூரி காலத்தில் பெண்மைக்குரிய மாற்றம் வந்தது. மிகவும் ஒல்லியாகப் பார்ப்பதற்கு  அழகானவள். மென்மையானவள் கூட. பேசினால் தான் குரல் ஆண் குரல் போலிருக்கும். அவள் பூர்வீக பெயர் பாலகிருஷ்ணன். அவள் திருநங்கையாக இருப்பதை வீட்டில் விரும்பாததால் வீட்டை விட்டு வெளியே துரத்தப் பட்டாள். அவள் கிழக்கு தாம்பரத்தில் வசிக்கும் திருநங்கை காஞ்சனாவை அம்மாவாக ஏற்றுக் கொண்டாள். காஞ்சனா தாம்பரத்தில் ஒரு பெரிய வீட்டில் பத்து திருநங்கைகளுடன் வசிக்கிறார். பத்தோடு பதினொன்றாக கிருத்திகா அவர்களுடன் சேர்ந்து விட்டாள். திருநங்கைகள் ரயிலில் போய் இரந்து கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தினர்.

அவளுடைய அறையில் இருக்கும் லதா, விஜி மற்றும் கூட வசிக்கும்  மாலதி, அகிலா … எல்லோரும் மின்சார வண்டியில் பணம் கேட்கச் சென்றிருப்பதால்  காஞ்சனா அம்மா மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள். அம்மா வார்த்தையை எல்லாத் திருநங்கைகளும் மதித்தனர். அம்மா  வீட்டை விட்டு எங்கும் வெளியே போக மாட்டாள். வீட்டை விட்டு ஓடி வரும் திருநங்கைகளுக்கு அடைக்கலம் அளித்து தேவையான உதவிச் செய்பவள். வெளியே போகும் திருநங்கைகள் மாலை திரும்பி வரும்போது அம்மாவுக்குக் காணிக்கையாக அவர்கள் வருமானத்தில் ஐந்து விழுக்காடு கொடுத்துவிடுவார்கள். திருநங்கைகளுக்குள் ஏதாவது பிரச்சினை வந்தாலும் அல்லது  காவல் துறையிலிருந்து பிரச்சினை  வந்தாலும், காஞ்சனா தீர்த்து வைப்பாள்.

”என்னடி கிருத்திகா? இன்னிக்கு சீக்கிரமாய் வந்துட்டே. உடம்பு சரியில்லையா?” என்றாள் காஞ்சனா.

”அதெல்லாம் ஒன்னுமில்லை. நான் வந்த பேருந்தில் ஒருத்தி என்னைப் பார்த்து ’அலி’ன்னு சொன்னா. அது என் மனசுக்கு கஷ்டமாயிருந்தது. இவங்களை மாதிரி சிலர் இருக்கிறதனாலேதான் திருநங்கைகளுக்கு மதிப்பு கிடைக்கிறதில்லே. சமூகத்திலே இந்த நிலமை மாறுவதற்கு ஏதாவது பண்ணனும். “

”அதுக்கு என்ன பண்ணலாம்ன்னு நீ நினைக்கிறே ?”

”எனக்குத் தெரியல. நீங்க தான் ஏதாவது சொல்லணும்.”

”அப்பாவிகளை மிரட்டி பணத்தைப் பறிக்கும் திருநங்கைகள் சிலர் இருப்பதால்தானே நமக்கெல்லாம் கெட்ட பெயர். யாராவது ஒருவர் அல்லது இரண்டு பேர் அப்படிச் செய்யலாம். எல்லாரும் அப்படிச் செய்வதில்லை. ”

”இருந்தாலும் திருநங்கைகளை கேலியாக சிலர் பார்க்கிறார்கள். சிலர் பயத்துடன் பார்க்கிறார்கள். சிலர் ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். நம்மை எல்லாரும் கண்ணியமாக பார்க்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். சாதாரண திருநங்கை போல் கடை வீதிக்குப் போய் பணம் கேட்பது, மின்சார ரயிலில் போய் பணம் யாசிப்பது போல் இல்லாமல் நான் சாதித்து பெயர் எடுக்க விரும்புகிறேன். அதனால் நல்ல வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அரசுப் பணிக்கான தேர்வுகளை எழுதியுள்ளேன். எப்படியாவது அரசு வேலை எனக்குக் கிடைத்துவிடுமென்னும் நம்பிக்கை எனக்கு இருக்கிறது. காஞ்சனாவுக்கு அவள் நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றினாள். கனவுள்ளவர்கள் வாழ்க்கையில் வெற்றிபெறுவார்கள். இவள் பெரியதாக நினைக்கிறாள். இவள் கனவு சீக்கிரம் நிஜமாகும் என்று அவளுக்குத் தோன்றியது.”

” நீ நினைப்பது ஒரு நாள் நடக்கும். விட்டு விடாமல் உன் தேடலை தொடர். உன்னை மாதிரி நான்கு திருநங்கைகள் இருந்தால் போதும். நாம்  சீக்கிரம் முன்னேறி விடலாம்.”

”சீக்கிரத்தில் வானத்தைத் தொட்டு விடலாம்” என்று சொல்லிவிட்டு பிருத்திகா தன் அறைக்குள் நுழைந்தாள்.

சிறுது நேரத்தில் லதா, விஜி இருவரும் வந்துவிட்டார்கள். லதா பட்டப்படிப்பு படித்திருக்கிறாள். விஜி பன்னிரண்டாவது வரை படித்திருக்கிறாள்.

”இன்று பண வரவு அதிகம் என்றாள் விஜி. எனக்கும் பரவாயில்ல” என்றாள் லதா.

எதையோ சிந்தித்துக்கொண்டிருந்த பிருத்திகாவைப் பார்த்து, எந்த உலகத்தில் இருக்கிறாய்? என்ன ஆச்சு உனக்கு? என்று விஜி கேட்டாள்.

இன்று  பேருந்தில் வரும்போது ஒருத்தி என்னைப் பார்த்து ’அலி’ என்று சொல்லி விட்டாள். அது எனக்கு மிகவும் கஷ்டத்தைக் கொடுக்கிறது. நாம் ஏன் அவல வாழ்க்கையை நடத்த வேண்டும். நம்மால் நல்ல வாழ்க்கை வாழ முடியும். நாம் எல்லாம் சுற்றி திரிந்து பணத்தை யாசித்து வாழ்க்கை நடத்துவதால் நமக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. அந்த நிலமை மாறவேண்டுமானால் நாம் நல்ல வேலைக்கு முயற்சி செய்ய வேண்டும்.   நல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும். நான் காவல் துறையில் சேர முடிவு எடுத்திருக்கிறேன்.

அதைக் கேட்டு லதா, விஜி இருவரும் சிரித்தார்கள். “போடி பைத்தியமே ! யாராவது ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பார்கள். அதையெல்லாம் மனசிலே வைச்சுக்காதே. . எதோ போனாயா, நாலு பேர் தலையைத் தொட்டு நாலு காசு வாங்கினாயா, அன்றைய பொழுது கழிந்ததா என்று இருக்காமல் காவல்துறையில் சேருகிறேன், திருநங்கைகளின் மதிப்பை உயர்த்துகிறேன்  என்று கனவு காணாதே. உனக்கு யார் வேலைக் கொடுக்க காத்துகிட்டு இருக்காங்க.“ என்று கேலி பேசினார்கள்.

பிருத்திகா அதைப் பொருட்படுத்தவில்லை. ”திருநங்கைகளின் சமூக ஏற்புக்காக நான் குரல் கொடுக்கப் போகிறேன்” என்று கூறிய அவளைப் பார்த்து முதல்லே நாங்க கூப்பிட்டா எங்களுக்குக் குரல் கொடு. மத்ததெல்லாம் அப்புறம்…” என்றாள் லதா.

அடுத்த நாள் முதல் காலை உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஓடுதல் முதலியவற்றைச் செய்ய ஆரம்பித்தாள். காலை ஐந்து மணிக்கு எழுந்து விடுவாள். அரை மணி நேரம் நடைப்பயிற்சி. பிறகு தான் தங்கியிருக்கும் அறையிலேயே உடற்பயிற்சி செய்வாள். தினமும் தேர்வுக்காக படிக்க ஆரம்பித்தாள்.  அவளுடன் கூட இருக்கும் தோழிகள் சலியூட் அடித்து என்று கிண்டல் செய்வார்கள். நம் கூட இருக்கும் ஒருவர் நம்மிடம் இல்லாத நல்ல பழக்கங்களுடன் இருந்தாலோ அல்லது வாழ்க்கையில் முன்னேற முயன்றாலும் மனசில் எழும் பொறாமையைத் தவிர்க்க முடியாது. இது இயற்கை. அதுபோலவே லதாவுக்கும் விஜிக்கும் மனசில் பொறாமை கொழுந்து விட்டு எரிந்தது. ”நீ மட்டும் என்னடி படிக்கணும், வேலைக்குப் போகணுமுன்னு சொல்றே. எங்களைப் போல நீயும் இரேன். தினந்தோறும் தாம்பரத்திலிருந்து ரயிலில் கடற்கரை வரை ஒருமுறை போயிட்டு வந்தால் ஐநுறு கிடைக்கும். ஒரு நாளைக்கு ஐந்து முறை போயிட்டு வந்தால் கணிசமா கிடைக்கும். என் செலவு போக  மிச்சப்படுத்தும் பணத்தை என் வங்கி கணக்கிலே நான் சேர்த்து வைத்திக்கேன்.” என்றாள் லதா.

”காலையிலே சீக்கிரம் கிளம்பிவிட்டாயானால் நாலு மணிக்குள் வீட்டுக்கு வந்திடலாம். அப்புறம் வேற வேலையை கவனிக்கலாம்” என்று கண் சிமிட்டினாள் விஜி. அவள் சாயந்திரம் தன் காதலுனுடன் ஊர் சுற்றுவாள். அவள் ஒரு திருநம்பியைக் காதலிக்கிறாள். அவனைக் கல்யாணம் செய்ய போவதாய் இருக்கிறாள். வாழ்க்கையைத் தொடங்குவதற்கு இவளிடம் ஒரு இலட்சம் பணம் கேட்டிருக்கான். இவளும் சேர்க்க ஆரம்பித்து விட்டாள். இன்னும் நான்கு மாதத்தில் அவன் கேட்ட பணம் கிடைத்துவிடும். அப்புறம் டும், டும் தான்.

தமிழ்நாடு காவல்துறை பணியிடத்துக்கு நடத்தப்பட்ட தேர்வில் பிருத்திகா பங்கேற்று தேர்வானார். அவளுக்கு சப்- இன்ஸ்பெக்டர் பதவிக்கு உத்தரவு வந்துவிட்டது.

உத்தரவு வந்த அன்று பிருத்திகா வீட்டில்தான் இருந்தாள். அவளுக்குத் தன் கண்களை நம்ப முடியவில்லை. ஒருமுறை தன்னைக் கிள்ளிப் பார்த்தாள்.  கனவில்ல நிஜம்தான் என்றதும் அவளுக்கு ஆனந்தம் தாங்கவில்லை. காஞ்சனா அம்மாவிடம் அந்த ஆர்டரை காண்பித்தாள்.

“அம்மா எல்லாம் உங்களால்தான். நீங்கள் எனக்கு அடைக்கலமும் ஊக்கமும் கொடுக்கவில்லையென்றால் என்னால் தேர்வில் வெற்றி அடைந்திருக்க முடியாது. நான் என்றைக்கும் உங்களை மறக்க மாட்டேன். திருநங்கைகள் நலனுக்காக நான் குரல் கொடுக்கிறேன்”

”நீ திட்டமிட்டுப் படித்தாய். வெற்றி அடைந்தாய். லதாவும் விஜியும் வரட்டும். உன்னை ஓயாமல் கேலி செய்து கொண்டிருந்தார்கள். நீ சாதித்ததைப் பார்த்து நீ ஆகாயக் கோட்டை கட்டவில்லை என்பதைப் புரிந்துகொண்டு அவர்களும் உன் வழியைப் பின்பற்றுவார்கள் என்று நினைக்கிறேன். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது கண்ணு என்று அவள் கன்னத்தில் லேசாகத் தட்டினாள்.

பிருத்திகாவுக்கு ஒரு நப்பாசை. அண்ணா நகரில் இருக்கும் தன் வீட்டுக்குப்போய் தன் அம்மாவைப் பார்த்துவிட்டு தான் காவல் துறையில் சேர இருப்பதைச் சொல்லி விட்டு வரலாம் என்று கிளம்பினாள். நான்கு வருடம் கழித்து அவள் தாய் வீடு போகிறாள். மனம் பரபரப்பாய் இருந்தது.  என்ன இருந்தாலும் அம்மா இல்லையா? தன்னை விட்டுக் கொடுக்க மாட்டாள் என்று எண்ணினாள். அவள் வீட்டை அடைந்து அழைப்பு மணியை  அழுத்தினாள். அவள் அப்பாதான் கதவைத் திறந்தார். இவளைப் பார்த்ததும், ”பால கிருஷ்ணா, ஏண்டா இங்கே வந்தே போடா வீட்டுக்குள்ளே நுழையாதே” என்று கத்தினார். அவள் அம்மாவும் ”போடா நாயே”, வீட்டுக்குள் நுழையாதே என்று துரத்தினாள்.

பிருத்திகா கலங்கிய கண்களுடன், ”எனக்குக் காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக் கிடைத்திருக்கிறது அம்மா “ என்றாள்.

அம்மாவுக்கு மனசில் பாசம் பொங்கியது. ஆனால் கணவனை மீறி எதையும் செய்ய முடியாத நிலை. கலங்கிய கண்களுடன் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

பிருத்திகா அம்மா இன்னும் தன் மீது வெறுப்புடன் இருப்பதாக நினைத்தாள்.

”போடா, இனிமே இந்தப் பக்கம் வராதே. உனக்கும் எங்களுக்கும் உள்ள சம்பந்தம் என்னைக்கோ அறுந்து போச்சு” என்று சொன்ன அப்பா கோபத்துடன் கதவைச் சாத்தினார். பிருத்திகா வருத்தத்துடன் தன் இருப்பிடம் வந்தடைந்தாள்.

பிருத்திகா தேர்ச்சி பெற்று காவல்துறையில் சேர இருப்பதை அறிந்த லதாவும் விஜியும் மிகவும் திகைப்பு அடைந்தார்கள். ”நாங்கள் நீ தேர்வு ஆக மாட்டாய் என்று நினைத்திருந்தோம். நீ வெற்றி பெற்றுவிட்டாய். எங்களில் நீ தனித்துவமாய் இருக்கிறாய். உன்னை மனமாரப் பாராட்டுகிறோம்” என்றார்கள்.

பிருத்திகா வேலையில் சேர்ந்து ஒரு மாதம் ஆகி விட்டது. அவள் தாம்பரத்திலிருந்து வெளியே வந்து இப்போது  சைதாபேட்டையில்  தனியே வசித்துக் கொண்டிருக்கிறாள்.

ஒரு நாள் அவள் வேலை முடிந்து வீட்டுக்குப் போகும் வழியில் ஒரு கடை வாசலில் பத்துபேர் கும்பலாய் நின்றிருந்ததைப் பார்த்து தன் இருசக்கர வண்டியை நிறுத்திவிட்டு அருகில் சென்றாள்.

அங்கு விஜியும் லதாவும் நின்றிருந்தார்கள். ”நீ நல்லா இருக்க மாட்டே” என்று கடைக்காரனை திட்டிக் கொண்டிருந்தார்கள்.

“ஏண்டி கடைக்காரனைத் திட்டி கொண்டிருக்கீங்க” என்று பிருத்திகா கேட்டாள்.

அவள் அணிந்திருந்த உடையைப் பார்த்து முதலில் பயந்து நடுங்கிய  இருவரும் அவளது குரலைக் கேட்டு தெளிந்து, ”ஹை கிருத்திகா, எப்படி இருக்கே?” என்று நலம் விசாரித்தனர். கடைக்காரன் பணம் தராததால் அவனைத்  திட்டி கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்து ”அப்படிச் செய்யாதே. ஏதாவது வேலையில் சேர்ந்து உருப்படுகிற வழியைப் பார்” என்றாள்.

”அப்படியே செய்யறோம் அக்கா. எங்களுக்குச் சரியான வழிகாட்டுதல் இதுவரை இல்லை. உன்னை மாதிரி நாங்களும் வேலையில் சேர முயற்சி செய்கிறோம்” என்றாள் லதா.

இவள் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்த கடைக்காரனும் மனசு மாறி  புன்சிரிப்புடன் கல்லா பெட்டியிலிருந்து ஒரு பத்து ரூபாயை எடுத்து லதாவின் கையில் கொடுத்தான். அவர்களுடன் சில நிமிடங்கள்  பேசி விட்டு ”அப்புறம் உங்களைப் பார்க்கிறேன்” என்று பிருத்திகா கிளம்பி விட்டாள்.

அன்று மாலை பிருத்திகா வீடு வந்ததும் சீருடையை மாற்றிச் சேலையை அணிந்து கொண்டு காஞ்சனா அம்மாவை பார்க்கப் புறப்பட்டாள். அவள் ஏறிய பேருந்து 5A. என்ன ஆச்சர்யம் !  முன்புஒரு நாள்  பார்த்த பெண்மணியும் சிறுமியும் இன்றும் அதே இருக்கையில் அமர்ந்திருந்தனர். ஒரு வேளை அவர்கள் தி நகரில் பேருந்து கிளம்பும்போதே அமர்ந்து வருகிறார்களோ என்னவோ? பிருத்திகாவைப் பார்த்ததும், ”ஆண்டிக்கு இடம் கொடு” என்று சிறுமியை மடி மேல் அமர்த்திக் கொண்டாள் அந்தப் பெண். பிருத்திகா உட்கார இடம் கிடைத்தது.

”தனக்கு இடம் கிடைத்தது போல் மற்ற திருநங்கைகளுக்கும் சமூகத்தில் நல்ல இடமும் மரியாதையும் கிடைக்க வேண்டும். அதற்காக இனி  பாடு பட வேண்டும்” என்று எண்ணினாள்.


ஸ்ரீதரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மேகத்துக்கும் தாகமுண்டு (சிறுகதை)”

அதிகம் படித்தது