ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

மோட்சத்தின் வாசற்படிகள் (பகுதி – 15)

முனைவர். ந. அரவிந்த்

Jul 17, 2021

மோட்சத்தை அடைய நாம் தூய எண்ணங்கள் மற்றும் நல்ல செயல்கள் எனும் இரு வாசற்படிகளில் ஏற வேண்டும். மோட்சம் சென்றால் நமக்கு அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கும். அங்கு துன்பம் என்று ஒன்று இல்லவே இல்லை. எங்கும் இன்ப மயம். போட்டி, பொறாமை எதுவுமில்லை. நம் இறப்பிற்கு பின்னர் மோட்சம் செல்வோமா அல்லது நரகம் செல்வோமா என்பதை நம் பூவுலக வாழ்வின் எண்ணங்களையும், செயல்களையும் வைத்து இறைவன் முடிவு செய்கிறான். மோட்சமும் நரகமும் ஒரு வழிப் பாதைகள். இரண்டு இடங்களுக்கும் சென்றவர்கள் திரும்ப பூமிக்கு வர முடியாது. வானத்திற்கும் புவிக்கும் ஏறி இறங்க இறைவனால் மட்டுமே முடியும். மோட்சம் சென்ற பின்னர் அங்கே இறைவனின் திருவடியில் நீங்காத இடம் பெறுகிறோம். மோட்சம் அடைய நாம் கற்ற கல்வியும் சம்பாதித்த பணமும் துளிகூட உதவாது. மதம், சாதி போன்றவைகள் உதவாது.

siragu motcham1

மோட்சம் என்ற சொல்லிற்கு வீடு, வீடுபேறு, வைகுண்டம், தேவலோகம், பரமபதம், பரலோகம், விண்ணுலகம், விண்ணரசு, வானவர் நாடு, மேலுலகம், தேவருலகு போன்ற பல பெயர்கள் உள்ளன. சொர்க்கம் என்ற சொல் என்பது ‘ஸ்வர்க்க’ என்னும் வடமொழி சொல்லில் இருந்து தோன்றியதாகும்.

கீழே உள்ள பாடல் மூலம் அவ்வையார் நமக்கு வானவர் நாடாகிய வைகுண்டத்தின் சிறப்பையும், அதனை எப்படி அடைய முடியும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார்.

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு
பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
பேடு நீங்கிப் பிறந்த காலையும்
ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது
ஞானமும் கல்வியும் நயந்த காலையும்
தானமும் தவமும் தான் செயல் அரிது
தானமும் தவமும் தான் செய்வ ராயின்
வானவர் நாடு வழி திறந்திடுமே!
இதன் விளக்கும் யாதெனில், இந்த உலகில் உள்ள சகல உயிரினங்களிலும் மனிதனையே மிகச் சிறந்ததாக இறைவன் படைத்துள்ளான். அப்படிப்பட்ட மனிதன் பிறந்தாலும், அவன் தன் உடலில் எந்த ஒரு நோயும் இன்றி பிறத்தல் அரிது. அப்படி எந்த ஒரு நோய் இன்றி மனிதன் பிறந்தாலும் அவனுக்கு ஞானமும் கல்வியறிவும் கிடைத்தல் அரிது. அதையும்தாண்டி அவனுக்கு ஞானமும் கல்வியறிவும் கிடைத்தாலும் அதன் மூலம் ஈட்டிய பொருளை பிறருக்கு தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருவது அரிது. அதனுடன் அவன் தினமும் இறைவனை நோக்கி தவம் இருப்பது அரிது. அப்படி ஒருவன் பிறருக்கு தானமும் செய்து இறைவனை நோக்கித் தவமும் செய்தானானால், அந்த இறைவன் உள்ள நாடாகிய விண்ணுலகம் வழி திறந்திடும்.

விண்ணுலகம் பற்றி வள்ளுவர் பல குறள்களில் குறிப்பிட்டுள்ளார். குறள் எண் 222 ல், அவர் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று – குறள் எண் 222

இதன் விளக்கம் யாதெனில், இல்லாதவர்க்குக் கொடுப்பதால் மட்டும் விண்ணுலகம் கிடைத்துவிடாது, அப்படி இருந்தாலும் பிறருக்கு கொடுத்து உதவுதல் நல்லது.

இப்புவி வாழ்க்கையினை ‘இம்மை’ எனவும், இறப்பிற்கு பின்னர் வாழும் வாழ்க்கையை ‘மறுமை’ எனவும் அழைக்கிறோம். மறுமை என்பது மோட்சம் அல்லது பாதாளத்தில் வாழும் வாழ்க்கையைக் குறிக்கும். வள்ளுவர் பெருமான் தன்னுடைய மற்றொரு குறளில் (குறள் எண் 98), இனிய சொல் பேசுவது இம்மையில் மட்டுமல்லாது மறுமையிலும் இன்பம் தரும், எனவே இனிய சொற்களையே பேச வேண்டும் என்று கூறியுள்ளார்.

சிறுமையின் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும் – குறள் எண் 98

குறள் எண்: 966 ல் வள்ளுவர் பெருமான், தேவருலகைப்பற்றி குறிப்பிட்டுள்ளார். இதன் விளக்கம் யாதெனில், இப்புவியில் உயிர்வாழ மானத்தை விட்டுவிட்டுத் தம்மை இகழ்பவர் பின்னே சென்றால் அது, இம்மைக்கும் புகழ் தராது. மறுமையாகிய விண்ணுலகிலும் சேர்க்காது என்பதாகும்.

புகழின்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை – குறள் எண் 966

நாம் இப்புவியில் செய்யும் புண்ணிய பாவங்களை வைத்து மோட்சம் செல்வோமா அல்லது நரகம் செல்வோமா என்பது நிர்ணயிக்கப்படுகிறது என்பது தமிழர்களின் நம்பிக்கை.

பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் புண்ணிய பாவங்களைப் பற்றிய முழு விபரங்களையும் ஒருவர் பதிவு செய்கிறார். அவர் சித்திரகுப்தன் அல்லது சித்திர புத்திர நாயனார் என அழைக்கப்படுகிறார். பாவ புண்ணிய கணக்குகள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எழுதப்படுகிறது. இந்த கணக்குகளை நாம் உயிரோடு உள்ளவரை நம்மால் காண இயலாது. ‘சித்திரம்’ என்றால் ‘வரைதல்’ அல்லது ‘எழுதுதல்’ என்று பொருள்படும். ‘குப்த்’ என்றால் ‘ரகசியம்’ என்றும் ‘குப்தன்’ என்றால் ‘ரகசியம் காப்பவன்’ என்றும் பொருள். ஒவ்வொருவருடைய இறப்பிற்குப் பின் அவரவருடைய இந்த கணக்கைப் பார்த்துதான் மோட்சம் அல்லது நரகம் போன்றவற்றில் இடம் அளிக்கப்படுகிறது.

மனித மனம் அகமனம், புறமனம் என இருவகைகளாக செயல்படுகின்றன. புறமனம் உலகிற்கு ஏற்றார்போல் பகுத்தறிந்து செயல்படுகிறது. அகமனத்தின் எண்ணங்கள் ரகசியமானவை. அவை இறைவனுக்கும் அவனவனுக்கு மட்டுமே தெரியும். இந்த மறைமுக கணக்கிற்கும், இரகசிய கணக்கிற்கும் இதனாலேயே ‘குப்த கணக்கு’ என பெயர் வந்தது.

சித்திரகுப்தன் இதனை நிர்வகிப்பதால் அவன் ‘இறை தூதன்’ என்பது மக்களின் நம்பிக்கை. ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக அவரவர் செய்த நல்லவை மற்றும் கெட்டவை அனைத்தும் துல்லியமாக பாரபட்சமின்றி எழுதப்படுகிறது. ஏதாவது மறைமுக தவறு செய்தால் இந்த உலகில் ஒருவேளை நீதிபதி மூலம் தண்டனை கிடைக்கத் தவறினாலும் மரணத்திற்குப் பின் கண்டிப்பாக தண்டனை கிடைக்கும். சித்திர புத்திர நாயனார் இறைவனால் படைக்கப்பட்ட நம் கணக்குகளை வைத்திருக்கும் ஒரு ‘கணக்குப் பிள்ளை’ என்று தமிழ் புராணங்கள் கூறுகின்றன. அந்த கணக்குப் பிள்ளை நம் அகமனம் போல் செயல்படுகிறார். அந்த அகமனம்தான் அனைத்திற்கும் சாட்சி. குற்றம் செய்பவனுக்கு அந்த குற்றமே தண்டனையாகி அவனை வாட்டி வதைப்பதற்கு அவனுடைய அகமனமே காரணம். இந்த அகமனம் விமானத்தின் கருப்பு பெட்டிபோல் அனைத்தையும் சேகரித்து வைக்கிறது. சிலருக்கு அகமனம் கல்லாக இருந்தாலும், அவர்கள் சித்திரகுப்தன் கணக்கிற்கு தப்பமுடியாது.

இது பற்றி மற்ற நூல்கள் என்ன சொல்கின்றன என்று காண்போம். திருக்குரான் 36: 12 யின் படி, மனிதர்கள் செய்த நன்மைகள், தீமைகள் எல்லாவற்றையும் தெளிவான பதிவேட்டில் கணக்கிட்டு குறித்து வைத்துள்ளோம் என்று இறைவன் சொல்வதாக எழுதப்பட்டுள்ளது.

விவிலியம், யாரெல்லாம் விண்ணுலகம் செல்வார்கள் என்று இவ்வாறு கூறுகின்றது. நீதியாய் நடப்பதால் துன்பப்படுகிறவர்களுக்கு விண்ணுலகம் சொந்தம். இறைதொண்டு புரிவதால் அவர்களை, மக்கள் இகழ்ந்து, துன்புறுத்தி, இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொன்னாலும் அவர்களுக்கு விண்ணுலகில் கிடைக்கும் பிரதிபலன் அதிகம். மறைநூல் அறிஞர், அரசியல் கட்சி மற்றும் சமூக இயக்கத்தை சேர்ந்தவர்களைவிட நெறியில் சிறந்தவர்கள் விண்ணுலகம் செல்வார்கள். இறை மகனுக்கு எதிராக பேசினாலும் மன்னிக்கப்படுவார். ஆனால், தூய ஆவியாகிய இறைவனுக்கு எதிராகப் பேசுவோர் இம்மையிலும் மறுமையிலும் மன்னிப்புப் பெற மாட்டார்கள். விண்ணுலகம் புதையல் போன்றது. இரு கண்களோடு கெடுதல் செய்து நரகம் செல்வதைவிட ஒற்றைக் கண்ணோடு நன்மைகள் செய்து விண்ணுலகம் செல்வது சிறந்தது. வெளிப்படுத்துதல் 20 12 யின் படி, இறந்தவர்கள் அனைவரும் இறைவனுக்கு முன்பாக நிற்கக் கண்டேன். அப்பொழுது புத்தகங்கள் திறந்து வைக்கப்பட்டன. அந்த புத்தகங்களில், வாழ்வின் நூல் போன்ற வேறு ஒரு புத்தகமும் திறந்து வைக்கப்பட்டது. இறந்தோரின் செயல்கள். அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன. அவற்றிற்கு ஏற்ப அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதன் மூலம் உலகம் முழுவதும் மனிதர்கள் செய்யும் பாவ புண்ணியங்கள் ஒரு புத்தகத்தில் எழுதப்படுகிறது என்பது உறுதியாகத் தெரிகிறது.

 


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “மோட்சத்தின் வாசற்படிகள் (பகுதி – 15)”

அதிகம் படித்தது