மௌனித்துப்போன தர்மம்! (கவிதை)
ராஜ் குணநாயகம்May 23, 2020
ஆயுதங்களை
மௌனிக்கச்செய்தாய்
“விடுதலைப்போராட்டம்
இளைஞர்களிடம் ஒப்படைக்கப்படுவதாகவும்” சொன்னாய்.
இறுதியாய் ஒற்றை அறிக்கையிலே
மாபெரும் அரசியலையே
விட்டுச்சென்றாய்!
எம் தலைவா!
ஆயுதங்களை
மௌனிக்கச்சொன்னவனே
ஆயுதங்களோடு
“நீயும் மௌனித்துவிடுவாய்” என்று
சொல்லவில்லையே.
உலக வல்லரக்கர்களின்
நயவஞ்சகத்தின் முன்
ஓர் இன விடுதலைக்கான
புனிதப்போரும்
மௌனித்துக்கொண்டது!
தோற்கவில்லை!
ஆயிரமாயிரம் மாவீரர்களையும்
தம்மண்ணை நேசித்த மக்களையும்
தன்னோடு அணைத்துக்கொண்டே.
அன்று
முள்ளிவாய்க்காலில்
மௌனித்த தமிழினம்
இன்னும்
மௌனம் கலைக்க முடியவில்லை
சுதந்திரமாய்
தம் உரிமைகளுக்காய்.
வரலாறு
தெரிந்தவனும்
தெரியாதவனும்
தெரிந்தும் தெரியாதது போல் நடிப்பவனும்
கூறும்
புதுப்புது புனைகதைகள்
நீளும் நாளும்.
தொடர்ந்தும்!
உரிமைப்பிச்சை கேட்டிருக்கும்
தமிழினம்
அதர்ம வழிகளையே தேடும்
“மகாவம்ச” புனைகதைகளுள்
புதையுண்ட
“சிங்க ரஜயோக்களின்”
புத்தன் தேசம்!
“புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி..”
சாதுக்கள் ஓதும்
புத்தன் போதனைகள்
முள்ளிவாய்க்கால் கரை வரை கேட்டிருக்கும்.
தர்மம்!
போதி மாதவனின் போதனைகளில் மட்டுமோ?
சமாதானம்!
ஒவ்வொருவர் இதயங்ககளிலும்
பூத்திட தவம் கிடக்கிறதோ……..?
-ஈழன்-
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “மௌனித்துப்போன தர்மம்! (கவிதை)”