மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

யார் தமிழர்?

வேம்பையன் தொல்காப்பியன்

Jun 15, 2012

யார் தமிழர் என்பதைச் சொற்களால் தீர்க்கமாக வரையறை செய்ய இயலாது. யார் ஆங்கிலேயர் / பிரெஞ்சுகாரர்… என்பன போன்றனவும் அப்படியே. அவற்றை ஒருவரின் உளச்சார்பைப் புறக்கணித்து விட்டுச் சொல்ல முடியாது. ஒருவர் தன்னைத் தமிழர் என்று அடையாளப் படுத்திக் கொள்ள விரும்பினால் அவர் தமிழர் ஆவார். அதுவே நடைமுறைக்கும் மனித குல வளர்ச்சிக்கும் உகந்தது ஆகும். மனிதர் சமுதாய விலங்கினத்தைச் சேர்ந்தவர். எனவே ஒருவரின் அடையாளத்தைப் பிறர் அங்கீகரிக்க வேண்டிய தேவையைப் புறக்கணிக்க முடியாது. அப்படியான தன்னறிவு, அங்கீகாரம்(1) குறித்ததே இக்கட்டுரைப் பகிர்வாகும்.

பிறப்பின் திணிப்பு

நம் பிறப்பை நாம் தேர்ந்தெடுக்கவில்லை. நாம் பிறப்பதா வேண்டாமா, எங்கு, எப்படி, எப்போது, யாருக்குப் பிறப்பது என்பன நம் முடிவல்ல. எனவே பிறப்பால் அமைந்த பால் (ஆண்/பெண்), குடும்பம், இனம், மொழி, நாடு, மதம், பழக்க வழக்கங்கள் எல்லாம் திணிக்கப்பட்டவையே.

‘நான்’ (தான்) என்ற மன வளர்ச்சி மூன்றிலிருந்து ஐந்து வயதுக்குப் பின் ஏற்படுகிறது என்று உளவியல்(2) காட்டுகிறது. அந்த வளர்ச்சி பெற்ற பின் சமூகப் பொருளாதார அரசியல் மரபு பண்பாட்டுச் சூழ்நிலைகளால் கட்டாயப்படுத்தப் படுபவை திணிப்பு(3) என்கிறோம். ‘நான்’ என்ற தன்னுணர்வு மன வளர்ச்சிக்கு முன்பு அப்படிப்பட்டச் சூழ்நிலைகளால் புகுத்தப்படுபவையும் திணிப்பு(3) என்று சொல்லலாம்.

ஆனால் இத்தகைய திணிப்புகள்(4) அனுகூலமாக அமைந்தால் அவற்றை நாம் ‘திணிப்பு’ என்று கூறுவதில்லை. எதிர்க்கூலமாக அமைந்தாலே அப்படிப் பார்க்கிறோம். பக்கிங்காம் அரண்மனையில் பிறந்தாலும் பழங்குடி வனத்தில் பிறந்தாலும் இதே தன்மை தான்.

இத்தகைய தன்னறிவை நாம் வளர்த்துக் கொள்வதும் பகிர்ந்து கொள்வதும் நம் அடையாளம் குறித்த ‘அடிமைத்தன’த்திலிருந்து விடுதலை பெறவும் அவ்விடுதலையின் அடிப்படையில் நம் அடையாளத்தைத் தேர்ந்தெடுத்துக்(5) கொள்ளவும் வழி வகுக்கும்.

விலங்கா சிறகா

‘தமிழன்’ என்ற திணிக்கப்பட்ட அடையாளத்திலிருந்து ‘இந்தியன்’ / ‘பிரிட்டிஷ்’ / ‘அமெரிக்கன்’ / ‘பிரெஞ்சு’… என்ற அடிமைத்தனங்களுக்குத் தாவுவதாக இருந்தால் அது ‘விடுதலை’ ஆகாது; ஒரு விலங்குக்குப் பதிலாக வேறு விலங்கு என்றே ஆகும். ‘தமிழன்’ என்பது ‘இந்தியன்’ என்பதை எதிர்த்து இல்லை. அதே போல் ‘இந்தியன்’ என்பது ‘பிரிட்டிஷ்’ / ‘அமெரிக்கன்’ / ‘பிரெஞ்சு’… என்பதை எதிர்த்து இல்லை. அவையும் ‘மனிதன்’ என்ற உலகளாவிய அடையாளத்தை எதிர்த்து இல்லை. ஒவ்வொரு அடையாளமும் விலங்காக நம்மை அடிமைப் படுத்தலாம். அல்லது சிறகாக நம்மை விடுவிக்கலாம். அது நம் அணுகுமுறையைப் பொறுத்ததே. ஒரு சிறகால் பறக்க முடியாது. பறக்க இரண்டு சிறகுகள் குறைந்த அளவு தேவை. பல சிறகுகள் நாம் பறப்பதை (வாழ்வதை) இலகுவாக்கும்; எளிமையாக்கும்; அதிர்வு குறைந்த (less vibration / smooth) இன்பமாக்கும்.

பொதுமைவேறுபாடு

அன்றாட வாழ்வில் பெற்றோர் / பிள்ளை, நண்பர், அண்ணன் / தம்பி, அக்கா / தங்கை, அலுவலர் / ஊழியர்… எனப் பல அடையாளங்களுக்குள் (பாத்திரங்களுக்குள்) சுலபமாகப் பயணம் செய்கின்றோம். மகனாக என் பெற்றோரிடம் நடந்து கொண்டே அப்பாவாக என் பிள்ளைகளுக்கு நான் விளங்குகின்றேன்.

உறவு அடையாளமும் மொழி, இன அடையாளமும் வெவ்வேறு தான். அதே சமயம் அவற்றிடையே பொதுமையும் உள்ளன. பொதுமை இல்லாமல் வேறுபாடு இருக்க முடியாது; வேறுபாட்டை அறிய முடியாது. அதே போல் வேறுபாடு இல்லாமல் பொதுமையை அறிய முடியாது என்பதும் உண்மை ஆகும்.

இந்தப் பின்னணிச் சிந்தனைகளுடன் ‘யார் தமிழர்’ என்பதை அணுகி ஆய்வு செய்தால் தமிழ் மொழி, இன, நாட்டு நலனில் அக்கறையுள்ளோர் அனைவரும் தமிழரே ஆவர். அப்படி அல்லாது இருப்போர் பிறப்பாலும் சட்டம் / சான்றிதழ் / குடியுரிமையாலும் ‘தமிழர்’ என்ற அடையாளம் கொண்டோர்; அவ்வளவே. அதாவது அவர் அறிவுணர்வு ரீதியாகத் தமிழராக இல்லை. இது ‘தமிழர்’ என்ற அடையாளத்திற்கு மட்டுமன்று. வேறு எந்த (கன்னடர், தெலுங்கர், மலையாளி, குஜராத்தி, இந்தியர், பிரிட்டிஷ், பிரெஞ்சு, அமெரிக்கர், சீனர்…) அடையாளத்திற்கும் பொருந்தும்.

சிலர், ‘அவர் எனக்குப் பிறப்பால் (குருதி உறவால்) தாய் / தந்தை… என்பது தவிர வாழ்க்கையில் (உணர்வு / கடமை) அப்படி நடந்து கொள்ளவில்லை’ என்று கூறுவதைக் காணலாம். அதே போல் சிலர், ‘அவர் எனக்குப் பிறப்பால் தாய் / தந்தை… இல்லை என்றாலும் வாழ்க்கையில் அவர் தான் எனக்கு அப்படி விளங்கினார்’ என்றும் சொல்வதைப் பார்க்கலாம். இதை ஒருவரின் ‘தமிழர்’, ‘இந்தியர்’ போன்ற அடையாளங்களுக்கும் உரைகல்லாக ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

நிகழ்வுவரலாறு

குருதி ரீதியாக இன்றைய ஆங்கிலேயர் என்பவர் ‘தூய்மையான’ ஆங்கிலோ சாக்ஸன் குருதியினர் என்று சொல்ல முடியாது. இன்றைய ஆங்கிலேயர் என்போர் குருதியில் இந்நாட்டில் ஆண்ட, வாழ்ந்த, வாழ்ந்து வரும் ரோமன், நார்மன், வெல்ஷ், ஸ்காட்டிஷ், ஐரிஷ், பிரெஞ்சு, ஜெர்மன், ஆப்பிரிக்கர்…. எனப் பலரின் குருதிகள் கலந்துள்ளன. இன்றைய எலிசபெத் மகாராணியின் குடும்பம் (Windsor family) ஜெர்மன் குருதிக் கலப்பு உள்ளது(6).

இந்த ஆண்டிற்கு முன் வந்தவர்கள் என்று பிரித்துப் பார்த்தாலும் ஒரு குறிப்பிட்ட ஆண்டு என்பதை முடிவு செய்ய சார்பற்ற அளவு கோல் எதுவும் கிடையாது. இதே நிலைதான் ‘இந்தியர்’ / ‘தமிழர்’ / ‘மலையாளி’ / ‘கன்னடர்’… என்பதற்கும் ஆகும்.

வரலாறு என்பது நிகழ்காலத்திலிருந்து தான் தொடங்குகிறது. நாம் வழமையாக நினைத்துக் கொண்டிருப்பது போல், அனுமானித்துக் கொள்வது போல், ‘வரலாற்றிலிருந்து’ நாம் ‘நிகழ்காலத்திற்கு’ வரவில்லை. ‘இன்று’ தான் இருப்பது. இந்த இருப்பிலிருந்துதான் ‘நேற்று’ என்பது கருக்கொண்டு(7) பிறக்கிறது.

எனவே இன்றைய ‘தமிழர்’ என்பதிலிருந்து தான் நாம் ‘பழந்தமிழரை’ப் (நேற்றைய தமிழரைப்) பார்க்க முடியும்; பற்றிப் பேச முடியும். ஆக, இன்றைய ‘தமிழர்’ என்பதில் ஒத்திசைவான கருத்து எதுவோ அதுவே உண்மை ஆகும். அப்படியான ஒத்திசைவு பெரும்போக்காக (main stream) இல்லாவிடில் கூச்சலும் குழப்பமுமே நிலவும்.

வரலாற்று ரீதியாகப் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பிறர் ஆட்சியில் தமிழகம் இருந்தது. ஒன்று பட்ட சென்னை மாகாணமாக நான்கு இனத்தவரும் வாழ்ந்தார்கள். இதனால் தமிழக ஆட்சி, அதிகாரத்தில் பிற இனத்தவர் பல முக்கிய பொறுப்புகளில் உள்ளனர்.

இன்று தமிழ்நாட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தெலுங்கர்களுக்கு ஆந்திராவிலும், கன்னடர்களுக்கு கர்நாடகத்திலும், மராத்தியர்களுக்கு (சௌராஷ்ட்ரா) மகாராஷ்டிரத்திலும் மலையாளிகளுக்குக் கேரளத்திலும் உறவு இணைப்புகளோ சமமான அங்கீகரிப்போ இல்லை.

அவர்கள் பேசும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி போன்றவையும் வாழும் இடத்தால் தமிழ் மொழியின் கலப்புக்குள்ளாகி இருக்கின்றன. அதுவல்லாது ஆங்கில மொழிக் கலப்பு என்பது இந்தியாவின் ஏன் உலகின் எல்லா மொழிகளுக்கும் உள்ளது.

இவர்களின் வாழ்வும் சிக்கல்களும் (தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து, இலஞ்சம், மாசுக்கட்டுப்பாடு, சுற்றுப்புற சூழல், பிள்ளைகள் பள்ளி, கல்லூரிப் படிப்பு, வேலை, பொழுதுபோக்கு, சட்ட ஒழுங்கு பாதுகாப்பு….) தமிழ்நாட்டோடுதான் உள்ளன.

இவர்கள் தங்களை (வீட்டில் என்ன மொழி பேசினாலும்) தெலுங்குத் தமிழர் என்றும் கன்னடத் தமிழர் என்றும் மலையாளத் தமிழர் என்றும் மராத்தித் (சௌராஷ்ட்ரத்) தமிழர் என்றும் அடையாளப் படுத்திக் கொண்டு பெருமையுறும் வகையில் நாம் (அவர்களும் சேர்ந்து) சமுதாய மனப்பான்மையைக் கொண்டு செல்ல வேண்டும்.

தமிழ்நாட்டிற்கியல்பான வகையில் அப்படி ஒருங்கிணைத்துப் பலம் பெறும் போது தான் தமிழ்நாட்டின் சிக்கல்களுக்குப் போராடும் வலிமை கிடைக்கும். இது தெருவில் இறங்கி ஊர்வலம் போவது மட்டுமில்லை. இப்படி ஊர்வலம் போக வேண்டிய தேவையே இல்லாமல் அரசியல், அதிகார அணுகுமுறைகளால் நீதி கிடைக்கச் செய்வதாகும்.

தமிழ்நாட்டில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் ஒவ்வொருவரும் தன்னை இந்த இனத்தவர் என்று வெளிப்படையாக அடையாளப் படுத்திக் கொள்ளப் பயப்படத் தேவையில்லை என்றாலும் அப்படிப் பெருமைப் பட்டுக் கொள்ளும் படியாகச் சூழ்நிலை, மக்கள் மனப்பான்மை இல்லை என்பது வருந்தத் தக்கதே.

எடுத்துக்காட்டாக, பல திரைப்பட நடிகர்கள், நடிகைகள், பல முக்கியப் பதவிகளில் உள்ளோர் பிறப்பால் தமிழர் அல்லர் என்பது இரகசியம் அன்று. ஆனால் அவர்கள் தன்னை அவ்வாறு பெருமைப் பட்டுக் கொள்ளும் படியாகச் சூழ்நிலை இல்லை. அதனால் ஏமாற்று வேலைகளில், பரப்புரைகளில் இறங்க வேண்டி உள்ளது. இதற்குத் துணை போகித் தமிழ்நாட்டு மக்களிடம் பணம், வாக்கு கறப்பதில் பிறப்பால் ‘பச்சைத்(!) தமிழர்’களாக விளங்குவோரும் அடங்கும்.

முன் நோக்குபின் நோக்கு

நாம் எதை எப்படி மாற்ற முடியும் எதை எப்படி மாற்ற முடியாது என்று தெளிவாகத் தெரிந்து வைத்திருப்பது முக்கியம். வடநாட்டில் மத மோதல்கள் அதிகம். கேரளாவில் கூட மத மோதல்கள் முன்பு இருந்தன. தமிழ்நாட்டில் மத மோதல்களைத் தூண்டச் சிலர் முயற்சி செய்தார்கள். ஆனால் நடக்கவில்லை. ‘முட்டாள், காட்டுமிராண்டி’ போன்ற கடுமையான நாத்திகச் சொற்கள் கூடத் தமிழ்நாட்டில் சகித்துக் கொள்ளப் பட்டு வருகின்றன. அதைப் பிற மாநிலங்களில் காண முடியாது.

நாம் தமிழர்களின் பெருந்தன்மைப் போக்கை முன் நோக்கி விரிவு படுத்தித் தான் செல்ல முடியும். அது தான் தமிழர்களுக்கு இயல்பானது. அதற்கு மாறாகப் பின் நோக்கி மலையாளி / கன்னடர்களுக்கு உள்ளது போன்ற குறுகிய இனப்பற்றை உருவாக்க முடியாது. அதற்கான கூறுகள் தமிழர்களிடம் இல்லை. இருப்பதும் மோசமான ‘வெறுப்பின்’ அடிப்படையிலான கோழைத்தனமான நம்மை மேலும் பிளக்கும் வகையைச் சேர்ந்ததே. தமிழர்களின் இயல்புக்கு எதிரானதைத் திணிக்க முற்பட்டால் போலித்தனமே வளரும். அது தான் நிகழ்ந்துள்ளது. நிகழ்ந்து வருகின்றது.

போலித்தனத்தில் முதலில் நம்மை நாம் ஏமாற்றிக் கொள்கிறோம். அதனால் நமக்கு உள்ளூரத் தாழ்வு மனப்பான்மையே இருக்கும். நம் இயல்புக்கு ஒத்ததைப் பின்பற்றும் போது தான் நமக்குள் உண்மையான பெருமையும் ஒற்றுமையும் வரும். மேற்சொன்ன ‘பணம் / வாக்கு’ கறக்கும் குழுவினர் இப்படியான முற்போக்குக்குத் தடையாக இருப்பர். ஏனெனில் அதற்குப் பிறகு அவர்கள் ஏமாற்று வேலை பலிக்காது.

‘நாங்கள் தமிழர்கள். ஆனால் திறமையுள்ள எந்த இனத்தவருக்கும் முன்னேற வாய்ப்பு கொடுக்கும் பெரிய மனது படைத்தவர்கள்’ என்று பேசிப் பாருங்கள். தமிழ் நாட்டில் பெரிய ஆதரவு எல்லா இனத்தவரிடம் இருந்தும் வெளிப்படையாகக் கிடைக்கும். எதை மாற்ற முடியாதோ மறுக்க முடியாதோ மறைக்க முடியாதோ அதை அணைத்துக் கொள்ள வேண்டும். வணிக நோக்கில் சொல்வதனால் தமிழ்நாட்டில் இந்த இலாபகரமான இடம் (political space) எடுத்துக் கொள்ளப்படக் காத்திருக்கின்றது. தமிழ் மொழியால் ஈர்க்கப்பட்ட, பிறப்பால் தமிழரல்லாதார் தமிழுக்கு ஆக்கமான பணிகள் செய்தது போல, அதை முன் வந்து தமிழ்நாட்டில் வாழும் வேற்று இனத்தவர் செய்தாலும் வியப்பில்லை.

தமிழ் மொழியை வளர்ப்பதற்கும் தமிழ் நாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கும் ‘தூய தமிழர்’ கூப்பாடுகள் பயனளிக்கா. அவை கனவுகள். அவை அந்த நோக்கங்களுக்கு இடையூறாகவே வந்து முடியும். பிறப்பு ஆராய்ச்சி, வீட்டு மொழி ஆராய்ச்சி என்று பிரிந்து கொண்டு போனால் பலரை அந்நியப்படுத்துவதாகவே வந்து முடியும். கடந்த 40 ஆண்டு கால வரலாற்றில் நாம் இதைப் புரிந்து கொள்ளவில்லை என்றால் எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்.

வரலாற்று ரீதியாகத் தமிழ் நாட்டில் வாழ்வோருக்குப் பிற இனத்தவரை நடத்துவதில் அமைந்துள்ள பரந்த மனப்பான்மை, சகத் தமிழரிடமும் குடும்ப உறவுகளிலும் வந்தால் நன்மை பயக்கும். அதை விட்டுப் பின் நோக்கிச் செல்ல முடியாது.

ஒன்று வெளிப்படை. தமிழ் நாட்டில் வாழும் பிற மொழியினர் அவரவர் மாநிலத்தில் வாழ்வதை விடத் தமிழ்நாட்டில் வாழ்வதில் விருப்பம், நிறைவு, வசதி இருப்பதால் தான் வாழ்கிறார்கள். அப்படிப் பட்டவர்களை எப்படி வெளிப்படையாக ஒருங்கிணைப்பது என்பது தான் நம்முன் உள்ள சவால். இது போன்ற உபாயத்தையே வளர்ந்த மேற்கு நாடுகள் பயன்படுத்துகின்றன. அதனால் இங்கு ஏதோ புதிதாகக் கண்டுபிடித்துச் சொல்லப்படவில்லை. கண்முன் காண்பதே சொல்லப் படுகின்றது. இதை நாம் வெளிப்படையாகச் செய்தால் நன்மை விளையும்.

இன்று இந்த அடிப்படையில் தமிழ் நாட்டில் ஓர் இயக்கம் (தேர்தல் அரசியலில் ஈடுபடாமல்) எல்லாத் தரப்பிலும் உள்ள தமிழ்நாட்டின் நலன் குறித்து அக்கறை கொண்ட பிற மொழி, இனத்தவர் மீது பகைமை, வெறுப்பு இல்லாதவர்களைக் கொண்டு ஆரம்பித்தால் நல்லது.

பெரும்பான்மையான மக்களைத் தெருவில் இறக்கிப் போராட வைத்து எல்லாவற்றையும் பெற முடியாது. அதைத் தொடர்ந்து செய்யவும் இயலாது. நம்மைப் போன்றோர்(8) தொடர்ந்து எப்படி இருக்கிறோம் என்பதே ஓர் இன, நாட்டு முன்னேற்றம் / நலம் / வளத்திற்கு முக்கியம்.

வந்த சிந்தனைசொந்த சிந்தனை

ஒன்று ‘எல்லாம் கடவுள் செயல்’ என்று எது நடந்தாலும் (தமிழ் அழிந்தாலும் தமிழினம் அடிமைப் பட்டாலும் அழிந்தாலும்) கவலைப் படாது பேரின்ப நிலையில் இருக்க வேண்டும். இல்லாவிடில், நமக்குச் சிந்திக்கவும் செயல்படவும் தன் சுதந்திரம் (free will) உள்ளது என்று நம்பினால், நாம் என்ன சிந்திக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமையை, பொறுப்பை நாம் முழுமையாக எடுத்துக் கொள்ள வேண்டும். இக்கட்டுரை உள்பட கேட்பதையும் படிப்பதையும் வினா எழுப்பி ஆய்வு செய்ய வேண்டும்.

அப்படி எடுத்துக் கொண்டால், எந்த சிந்தனை நம்மை, பிறரை ஒருங்கிணைக்கிறதோ அதற்கே நாம் இடம் கொடுக்க வேண்டும். மாறான ‘வெறுப்பு’ச் சிந்தனைகளை (ஓரளவுக்கு அதில் உண்மை இருந்தாலும்) ஒதுக்கித் தள்ள வேண்டும். நமக்குள் இருக்கும் பல் வேறு இழுப்புகளுக்குள் முதலில் ஒருங்கிணைப்பு (integration) இயக்கச் சமநிலை (dynamic equilibrium) வர வேண்டும். இதை முதலில் தனி மனிதனாக நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பற்றி நினைப்பதில் ஆரம்பித்து, பிறகு குடும்பம், பணியிடம், நட்பு, பொது வாழ்வு… என்று வளர்த்துக் கொண்டு செல்ல வேண்டும்.

குடும்பத்திலும் குமுகாயத்திலும் குறுகிய மனப்பான்மைக்கு (மாற்று) மருந்து குறுகிய மனப்பான்மை அன்று. வாழ்க்கை நெருக்கடிகளும் சமுதாயச் சிக்கல்களும் நம்முள் (பரிணாம வளர்ச்சிப் போக்கால்) இருக்கும் விலங்குணர்ச்சிகளை(9) எளிதில் எழுப்பி அதற்கு நம்மை ஆட்படுத்தி விடும் அபாயம் உள்ளது. இதை உணர்ந்து விழிப்பாக இருந்து பெரும் உணர்ச்சிப் புயலிலும் அறிவுச் சுக்கானைச் சரியாகக் கையாள்வதன் மூலம் தான் பாதுகாப்பாகக் கடலைக் கடந்து கரை சேர முடியும்; புதிய உலகம் காண இயலும்.

பலவிதமானக் கருத்துகள் இருக்கும் போது தான் அவற்றை ஒருங்கிணைக்கும் ‘ஒற்றுமை’க் கூறுகளைக் கண்டு பிடித்து அவற்றை முன்னிறுத்திச் செல்லும் தெளிவும் உறுதியும் அவசியமாகின்றன. அதே போல் விலங்குணர்ச்சிகளை எழுப்பக் கூடிய சூழ்நிலைகளில் தான் பண்பட்ட, பக்குவமான, விவேகமான குணங்களை முன்னிறுத்திச் செல்லும் தெளிவும் உறுதியும் அவசியமாகின்றன.

உளவியல்உலகியல்

இன்று உலகத்தில் ஒருவரை விரும்புவது என்பது அடுத்தவரை (குறைவாக விரும்பாமல்) வெறுக்காமல் இல்லை. இன்னும் ஒரு படி மேலே போனால் பிறரை வெறுப்பதில் உள்ள ஒத்த தன்மையில் தான் ‘நாம்’ என்ற உணர்வை அதிகமாகப் பெறுகிறோம்.

ஆங்கிலேயரை வெறுப்பதில் தான் நாம் இந்தியர் என்ற உணர்வைப் பெற்றோம். இப்போது பாகிஸ்தானை வெறுப்பதில் தான் பெரும்பாலோர் இந்தியர் என்ற ஒருமித்த உணர்வைப் பெறுகிறார்கள்.

இந்த எதிர்ப்புணர்வுக்கு இடம் வாய்ப்பு இல்லாத சூழ்நிலையில் தமிழருக்குள், மலை யாளிகளுக்குள், இந்தியருக்குள்… உள்ள பிரிவினை, எதிர்ப்பு, வெறுப்பு, காழ்ப்பு உணர்ச்சிகள் முன்னுக்கு வந்து விடும். இன்ன சாதியினருக்கு எதிராக நாம் இந்த சாதியினர். இன்ன கட்சியினருக்கு எதிராக நாம் இன்ன கட்சியினர். We are defined by who we consider as we-are-not. ஆக நம்மவர் என்று எந்த அடையாளத்திலும் சேருவது அதில் வராத பிறர் என்பவர்களை ஒதுக்கி, புறக்கணித்து, வெறுத்தே அமையும். இது நட்பு, உறவு, குடும்பம், பணியிடம், தெரு, ஊர்… எல்லாவற்றிலும் உள்ளது.

இப்படித் துவக்கத்தில் எதிர்மறை (வெறுப்பு) உணர்வால் வரும் ஒருங்கிணைப்பை, உடன்பாட்டு உணர்வால் நிலை நிறுத்துவது பெரிய சவால் ஆகும். இந்திய ஆட்சியினர் அத்தகைய பெருந்தன்மையைக் (மாநில சுயாட்சி) கொண்டிருக்கவில்லை. அதே போல் மாநில ஆட்சியினரும் தங்களுக்குக் கீழ் ஆளுமை, அதிகாரப் பகிர்வை (மாவட்ட, உள்ளூர் சுயாட்சி) செய்ய வாய்ப்பு இருந்தும் செய்யவில்லை.

நம்மால் வறட்டுத்தனமாக வெறுக்க முடிகிற அளவுக்கு வழிபாடு இல்லாத விருப்பம் தொடர்ந்து காட்டமுடியவில்லை. இரண்டும் மோசமான வகையைச் சார்ந்தனவாக உள்ளன. வெறுப்பு மென்மையானதாகவும் விருப்பம் மயக்கம் அற்றதாகவும் மாற வேண்டியுள்ளது. பல இனக் குழுக்களிடையே அந்த வெறுப்பில் (விருப்பக் குறைவில்) அளவு வேறுபாடுகள் இருக்கலாம்.

இத்தகைய பொது விருப்பு-வெறுப்பு உளவியல் தேவைக்கு (psychological need) அப்பாற்பட்டு, இந்தியாவில் வாழும் பல மொழி இனத்தவர்கள் ஒருவரை ஒருவர் இனமாக வெறுக்கிறார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளதா? அத்தகைய திட்டமிட்ட இன வெறுப்பு (institutional racism) என்பது சிங்களர் தமிழர்களுக்குள் கூட இல்லை.

எடுத்துக்காட்டாக, ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட காலத்தில் அவர்கள் குருதிக் கலப்பு இந்தியருடன் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மிகவும் விழிப்பாக இருந்தனர். இது குறித்த வெளிப்படையான பி.பி.சி. செய்திப் படம் 2008-ஆம் ஆண்டில் (இந்திய 60-ஆம் சுதந்திர ஆண்டை ஒட்டி இந்தியாவைப் பற்றிப் பல செய்திப் படங்கள் பி.பி.சி. தொலைக்காட்சியில் காட்டப்பட்டன) காட்டப்பட்டது. அதில் பல காதலர்கள் (ஆங்கிலேயருக்கும் இந்தியருக்கும் இடையில்) எப்படித் துன்புற்றுப் பிரியக் கட்டாயப் படுத்தப் பட்டார்கள் என்பதை அவர்களின் பிள்ளைகள், பேரப் பிள்ளைகள் பேட்டி, அப்போது எழுதப் பட்ட கடிதங்கள் போன்றவற்றுடன் விளக்கினார்கள். பிரிய விரும்பாதவர்கள் இங்கிலாந்துக்குத் திரும்ப அனுமதிக்கப் படவில்லை. [ஆங்கிலேயர் எவ்வளவு(?!) தூய்மையான 'ஆங்கிலோ சாக்ஸர்கள்' என்பதை ஏற்கனவே பார்த்தோம்.] இது தான் இன வெறுப்பு, இன ஒதுக்கல். அதிலும் அரசாங்கத்தால் திட்டமிட்டுக் கண்காணித்து நடைமுறைப் படுத்தப் பட்டது(10).

இது போல் சிங்களர் தமிழரிடையே இல்லை. தமிழர் மலையாளியரிடையே இல்லை. தமிழர் தெலுங்கரிடையே இல்லை. தமிழர் கன்னடரிடையே இல்லை. இந்தியாவுக்குள் எந்த இரண்டு மொழியினருக்கும் இடையே இருக்கிறதா என்பது ஐயமே.

பணத்துக்காக, சலுகைகளுக்காக எல்லா இனத்திலும் விலை போகின்றவர்கள் உள்ளனர். அப்படி விலைக்குப் போகும் சிலர் தமிழர்களுக்கு எதிரான போக்குகளைக் கடை பிடிப்பதால் (பணம், சலுகை பெறுவதற்காக) பொதுவாக அவ்வினத்தினர் தமிழர்கள் மீது இன எதிர்ப்பு உணர்வைக் கொண்டுள்ளார்கள் என்று முடிவு செய்ய முடியுமா? அவர்களின் பிறப்பு, வீட்டு மொழி ஆராய்ச்சி செய்து பயன் உண்டா?

பிறர் மாநில, மொழி, இன நலனைப் பாதுகாப்பது என்பது நம் மாநில, மொழி, இன நலனுக்குப் பாதகமாக அமையலாம் என்பது உலக வழக்கு. அதற்கு நாம் இடம் கொடுத்து விட்டு அவர்களை ‘இன எதிரிகள்’ என்று பழி சொல்வது தகுமா? ஆடத் தெரியாதவர்கள் தங்கள் தோல்விக்கு ‘எதிர் அணியினரின் வெறுப்பே’ காரணம் என்று சொல்வதா? இங்கு என்ன விளையாட்டு நடக்கிறதோ அதற்குத் தக நம்மை வளர்த்துக் கொள்ளவும் மாற்றிக் கொள்ளவும் வேண்டாமா?

பெரியாறு, காவிரி போன்ற சிக்கல்களில் நம்மால் போராடி உரிமைகளைப் பெற முடியவில்லை என்பதைப் பெரிது படுத்தித் தலை மூழ்கி விட்டது போல் தாழ்வு மனப்பான்மைக்கு இடம் கொடுக்கக் கூடாது. தனி வாழ்க்கையில் கூட நாம் ஈடுபடும் செயல்களில் எல்லாம் வெற்றி பெற முடியவில்லை. குடும்பத்தில் ஏற்படும் ஒரு சில துன்பங்களுக்குக் கலங்கி மூலையில் முடங்கி விடும் குடும்பத் தலைவரைக் கொண்ட குடும்பம் பிழைக்க முடியுமா, முன்னேற முடியுமா?

கிடைப்பதை, அவர்கள் கொடுக்கத் தயாராய் இருப்பதை மீண்டும் ஏமாறாமல் சட்டப்படி உறுதிப் படுத்திக் கொண்டு வேறு எந்த வழிகளில் நம் தண்ணீர்த் தேவையை நிறைவு செய்வது என்று தேட வேண்டும். அது சொட்டு நீர்ப் பாசனமாக இருக்கலாம். மழை நீர் சேமிப்பாக இருக்கலாம். காடுகளை வளர்ப்பதாக இருக்கலாம். உலகில் எந்த நாட்டிலும் எல்லா வளங்களும் சமமாக இயற்கையில் அமையவில்லை. நாம் எப்படி இடர்ப்பாடான சூழ்நிலையிலும் சமாளிக்கிறோம் என்பதே குடும்பத்திலும் குமுகாயத்திலும் முக்கியம். பக்கத்து மாநிலத்தோடு தண்ணீர்ச் சிக்கல் வருவதற்கும் பக்கத்து வீட்டுக் காரனோடு வேலி, வாசல், விளக்குக் கம்பம்… என்று சிக்கல் வருவதற்கும் வேறுபாடு இல்லை.

இரண்டிலும் நம் பலத்தையும் பலவீனத்தையும் நாம் எந்த அளவுக்கு எதிர்ப்பு, உடன்பாடு போக்கைக் கடை பிடிக்கத் தயாராய் இருக்கிறோம் என்பதையும் எவ்வளவு இடையூறு இழப்பைத் தாங்க இயலும் என்பதையும் கணக்கில் கொண்டு அடுத்து என்ன எப்படி நடப்பது என்று செய்ய வேண்டியது தான். நம்மிடம் ஒற்றுமை இல்லை என்பதே கூட நம் பலமாக, நம்மை மாற்று வழி தேட வைக்கும் தூண்டு கோலாக இருக்கலாம்.

வன்செயல்களுக்குத் தேவையே இருக்காது என்பது இதன் பொருள் அன்று. ஆனால் அது வெறுப்பில் மேல் எழுந்ததாக இருக்காது. அது மாண்பிறந்த மானத்தின் மீது எழுந்ததாக இருக்காது. அதை நாம் குடும்பத்தில், குமுகாயத்தில் காணாததால் அது எப்படி இருக்கும் என்று நமக்குப் புரியவில்லை. அது சண்டையும் போடும். சரணடையவும் தயங்காது. அது கடந்ததை மறக்காது. ஆனால் கடந்ததில் வாழாது. அது அடுத்தவரைப் பணிய வைக்கவோ பயமுறுத்தவோ பழி வாங்கவோ முனையாது. மாறாக வன்செயல் என்பது அடுத்தவருக்குப் புரிய வைக்கும் மொழி என்ற அளவில் பயன்படுத்தும். அது தீர்வுகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்காது. முக்கியமாகக் குடிமானத்தைக் காக்கத் தன்மானத்தை இழக்க எப்போதும் தயாராக இருக்கும்.

பெரிய அளவில் ஒற்றுமை உள்பட நம்மிடம் இல்லாதவற்றை எண்ணி ஏங்கி கொண்டு இல்லாமல் நமக்குள்ளவற்றைக் கொண்டு தனியாகவும், குடும்பமாகவும், குழுவாகவும், தெருவாகவும், ஊராகவும் நாம் சாதிப்பதன் மூலம் தமிழ் நாட்டில் வாழும் பிற இனத்தவரும் தாங்களும் தமிழர்கள் தான் என்று சொல்லிக் கொள்ள விரும்பும் படி நடக்க வேண்டாமா? பிறகு பெரிய அளவிலானஒற்றுமை எப்படி வாசலில் வந்து நிற்கிறது என்று பாருங்கள்.

அதற்கு மாறாக நாம் இன்று ஒருவரை ஒருவர் திட்டி வசை பாடிக் கொண்டும் எட்டி மிதித்துக் கொண்டும் நம் ஒவ்வொருவரின் குறைகளை உணராமல் சீர்படுத்திக் கொள்ளாமல் இவரால் தான் வீழ்ந்தோம், இந்தப் பெயரால் நம்மை அழைத்து ஏமாற்றி விட்டார்கள், இவரை / அவரை ஒழித்தால் தான் உருப்பட முடியும் என்று கத்திக் கொண்டும் பிறகு துன்பம், தோல்வி வரும் போது தீக்குளித்துச் செத்துக் கொண்டும் இருந்தால் யார் தன்னைத் தமிழன் என்று சொல்லிக் கொள்ள முன்வருவான்?

நம்முடைய வலிமை என்ன என்று பார்த்து உலகமயமாகி வரும் இக்காலக் கட்டத்தில் எப்படித் தமிழ் நாட்டில் எல்லோருக்கும் வாழ்க்கைத் தரம் உயர வழி வகுக்க முடியும் என்றும் அதே சமயம் எல்லோரும் எப்படி இன்றைய நுகர்வு அலைக்குள் அமிழ்ந்து விடாமல் பொருள் பொதிந்த நிறைவான வாழ்வுக்கு வழி காண முடியும் என்றும் முன் நோக்கிப் போவதே அறிவுடைமை. எல்லோரையும் இணைக்கும் பொது வழி. தமிழர்களுக்கு மட்டும் என்று தனியாகத் தப்பிக்க வழியில்லை.

ஒத்து வாழ்உணர்த்தி உயர்

உலகில் ஒவ்வொரு நாடும் புவியியல் அமைப்பு, வரலாற்றுப் பின்னணிகளைப் பொறுத்து தன்னுடைய தனிச் சிறப்பான வலிமை, பலவீனங்களை உணர்ந்து, அதற்குத் தகச் செயல்பட்டு முன்னேற முயல்கின்றன. அப்படித் தான் தமிழர்களும் செய்ய முடியும்.

‘எல்லோரும் அம்மணமாக (குறுகிய நோக்கம்) இருக்கும் ஊரில் கோவணம் கட்டியவன் (பரந்த நோக்கம்) பைத்தியக்காரன்’ என்பதுடன் ‘உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே’, ‘பண்புடையார் பட்டுண்டு உலகம்’ (திருக்குறள்: 996) என்பதையும் சேர்த்துச் சிந்திக்கப் பழக வேண்டும். குழந்தை வளர்ப்பில் சுதந்திரம், கட்டுப்பாடு இரண்டையும் சேர்த்து அளவறிந்து செயற்படுத்துவது போல் தான் இதுவும்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்

கல்லார் அறிவிலா தார் (திருக்குறள்: 140)

 

எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு

அவ்வது உறைவது அறிவு (திருக்குறள்: 426)

என்று அறிவுறுத்திய திருவள்ளுவர்,

அறிவுடையார் ஆவது அறிவார், அறிவிலார்

அஃதுஅறி கல்லா தவர் (திருக்குறள்: 427)

 

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய் (திருக்குறள்: 429)

என்றும் வலியுறுத்தி வழிகாட்டியுள்ளார்.

தமிழர்கள் நல்லவர்களாகவும் வல்லவர்களாகவும் விளங்கத் தமிழருக்கு, அவர்களின் வரலாறு, மரபு, பண்பாட்டால் அமைந்த தனிச் சிறப்பான வழிகாட்டுதல் உள்ளது. உலகத்தோடு ஒட்டி உறைந்து கொண்டே (வல்லமை) ‘ஆவது அறிந்து’ அந்த நோக்கில் உலகத்திற்கு உணர்த்தி (நல்ல தன்மை) உயர்வோமாக!

விளக்கக் குறிப்புகள்:

(1)இது சான்றிதழ், குடியுரிமை போன்ற ‘சட்ட’ (legal certitude) அடையாளம் குறித்ததன்று. சட்டம் 10% தான். சமுதாய மனப்பான்மையே மீதி 90%. எனவே இக்கட்டுரையின் நோக்கம் சமுதாய மனப்பான்மையை (social attitude) வளர்க்க உதவுவதே ஆகும்.

(2)இதற்கு, நாம் ஒவ்வொருவருக்கும் நம் சிறுவயதில் ‘நான்’ என்ற உணர்ச்சி வருமுன் நடந்தவை எதுவும் நமக்கு நினைவில் இல்லை, என்பதைச் சான்றாகக் கொள்ளலாம்.

(3)இத்தகைய திணிப்புகள் இல்லாமல் வாழ்க்கை சாத்தியம் இல்லை. இவற்றை அறவே நீக்குவது அல்லது அப்படியே ஏற்றுக் கொள்வது இயலாது. இவற்றின் பயன் கருதித் தொடர்ந்து சீர்திருத்திக் கொள்ள வேண்டும். அத்தகையஅணுகுமுறைக்கு இத்தகையபுரிதல் தேவை.

(4)ஆண்/பெண் அடையாளத்தின் புகுத்தப்பட்டத் தன்மையையும் விளக்குவது தன்னறிவிலிருந்து ‘மெய்யறிவு’க்கு (மெய்யுணர்தல்) இட்டுச் செல்லும். அதை நாம், எடுத்துக் கொண்ட பொருளுக்கு உடனடியாகத் தேவையில்லை என்பதால், இங்கு தவிர்ப்போம்.

(5)இப்படி எல்லா அடையாளங்களையும் மாற்றிக் கொள்ள (எ.டு. உயிரியல் ரீதியான ஆண் / பெண்) எல்லோராலும் முடியாது என்பது தெளிவு.

(6)http://mygermantravels.com/2011/04/german-blood-flows-in-british-royal-family/

http://en.wikipedia.org/wiki/House_of_Windsor

(7)இதைச் சரியாகப் புரிந்து கொள்வதும் பின்பற்றுவதும் தான் ஆரோக்கியமான அன்றாடமும் (லௌகீகம்) ஆன்மீகமும் ஆகும்.

(8)இங்கு ‘நாம்’ என்பது எல்லா துறைகளிலும் (அரசு நிர்வாகம், நீதி, காவல், ஊடகம், வணிகம், தனியார் துறை, அறிஞர், சான்றோர்…) உள்ள படித்த பொருளாதாரத்தில் நடுத்தர, மேல்தட்டு மக்களைக் குறிக்கிறது. இதில் கணிசமான சதவிகிதத்தினர் (குத்து மதிப்பாக 25%) மக்களாட்சிப் பாதுகாவலர்களாக, அதைத் தொடர்ந்து செம்மைப் படுத்தக் குரல் கொடுப்பவர்களாக, செயல் படுத்துபவர்களாக இருக்க வேண்டும். வளர்ந்த மேற்கு நாடுகளில் இப்படி இருப்பதால் தான் மேற்கு நாடுகளில் மக்களாட்சி உயிர்ப்புடன் இருக்கிறது.
(9)பழங்குழு மனப்பான்மை (tribalism), பிற இனத்தவரை ஒட்டு மொத்தமாக வெறுத்தல், நம் இனத்தவர் செய்யும் தவறுகளை மறைத்தல், மறுத்தல்…

(10)இன்றைய பிரிட்டன் இப்படி இல்லை என்பதுடன், வரலாற்றை உள்ளது உள்ளபடி சொல்லும் முதிர்ச்சியும் பெற்றுள்ளது.

A group of words that begin homeworkhelper.net/ with a preposition is called a prepositional phrase

வேம்பையன் தொல்காப்பியன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

3 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “யார் தமிழர்?”
  1. ram says:

    Very good article.

  2. க. தில்லைக்குமரன் says:

    தமிழர் யார்? திராவிடர் யார்? என்று குழம்பிக்கிடக்கும் இளைஞர்களுக்கு இது நல்ல கட்டுரை. குழப்பவாதிகளுக்கு அனுப்பிவைக்க வேண்டும். நன்றி!

  3. முத்துக்குமார் says:

    மிக மிக அருமையான கட்டுரை…

அதிகம் படித்தது