அக்டோபர் 1, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர் அவர்களின் நேர்காணல்

சிறகு நிருபர்

Apr 25, 2015

roja muththaiya noolagam3கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?

பதில்: எனது பெயர் சுந்தர். நான் முதலில் இயற்பியல் படித்தேன், அதைத்தொடர்ந்து முதுகலையில் வரலாறு படித்த மாணவன், அதன் பின் நூலகவியலில் ஒரு பட்டம் பெற்றேன். இந்த ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் 1994ல் எப்பொழுது தொடங்கப்பட்டதோ, அப்பொழுது இந்த நூலகத்தில் வந்து சேர்ந்தேன். தொடர்ந்து இருபது ஆண்டுகாலமாக இந்த நூலகத்தோடு சேர்ந்து நானும் வளர்ந்திருக்கிறேன்.

கேள்வி: இந்த நூலக இயக்குனர் பணி எப்படி இருக்கிறது, இதில் கிடைத்த அனுபவம் என்ன?

பதில்: நிறுவனமயமாக்கப்பட்ட ஒரு ஆவணக்காப்பகம் தனியார் துறையில் இது ஒரு முன்னோடி என்று சொல்லலாம். அந்த வகையில் இது ஒரு புதிது. வேறு ஒரு நிறுவனத்தைப் பார்த்து கற்றுக்கொள்ளவேண்டும், கற்றுக்கொண்டு செய்யவேண்டும் என்ற ஒரு மாதிரி(model) தனியார் துறையில் இல்லை. அதுவே ஒரு சவால் (Challenge) என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் மெல்ல மெல்ல எங்களிடம் இருக்கக்கூடிய யோசனைகளை வைத்து, குழு(team) இருக்கிறது. இவர்களிடம் சேர்ந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதனால் பல விசயங்களை இதில் செய்ய முடிந்தது.

roja muthaiah noolagam1கேள்வி: உங்களது ரோஜா முத்தையா நூலகத்தின் செயல்பாடு மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

பதில்: செயல்பாடுகள் என்று பார்த்தோம் என்றால் முதன்மையான செயல்பாடு புத்தகங்களை பாதுகாப்பது. புத்தகங்களை பாதுகாக்கவேண்டும் என்றால் முதலில் புத்தகங்கள் வேண்டும். ஏற்கனவே ரோஜா முத்தையா சேகரித்த புத்தகங்களை வைத்து, புத்தகங்கள் என்றால் புத்தகங்கள் மட்டுமல்ல நூல் சாரா ஆவணங்கள், மற்ற ஆவணங்கள், இதழ்கள் இவை அனைத்தையும் சேர்த்துதான் சொல்கிறேன். ஒரு ஆவணக் காப்பகத்தில் என்னென்ன இருக்கவேண்டுமோ அனைத்து ஆவணங்களையும் தொடர்ந்து சேகரித்துக்கொண்டே இருக்கவேண்டும். ரோஜா முத்தையா அவர்கள் சேகரித்தவை ஒரு லட்சம் ஆவணங்கள். 1994ல் இந்த ஆவணங்கள் எங்களது கைக்கு வந்தது. அதன்பிறகு அது இன்றைக்கு மூன்று லட்சம் ஆவணங்களாக இருக்கிறது. தொடர்ந்து நாங்கள் ஒவ்வொரு நூலகங்களுக்கும் சென்று தனிநபர் சேகரிப்பவர்களிடம் சென்று அவர்களால் பாதுகாக்க முடியவில்லை என்றால் அந்த புத்தகங்களை அங்கிருந்து வாங்கி வந்துவிடுவோம். ஒருவேளை அவர்களுக்கு கொடுக்க விருப்பமில்லை என்றால் அவர்களிடமிருந்து கொண்டுவந்து நுண்படம் எடுத்துவிட்டு திருப்பிக் கொடுத்துவிடுவோம். இந்த மாதிரி மூல ஆதாரமாகவோ அல்லது நுண்படமாகவோ இந்த ஆவணங்களை, தரவுகளை பாதுகாத்து சேகரித்துக்கொண்டு வருகிறோம் இது ஒரு பணி.

இது தவிர்த்து புத்தகங்களை சேகரிப்பது ஒரு பக்கம், ஆனால் என்ன புத்தகங்கள் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவதற்கு நூல்பட்டியல் தேவை. நூல் பட்டியல் தயாரிப்பது என்பது ஒரு நுட்பமான வேலை. அந்தத் துறை சார்ந்தவர்கள் இதில் மிகவும் நேர்த்தியாக, உலகத்தரம் வாய்ந்த standards என்று சொல்லக்கூடிய விசயங்களைப் பின்பற்றி, பட்டியலிடுவது மிக முக்கியமான விசயம். அந்த வகையில் எங்களிடம் இருக்கும் அத்தனை நபர்களும் நிபுணர்கள். எல்லோருமே நூலகப் பின்புலம் இருப்பவர்கள் மற்றும் தமிழியல் துறையில் ஈடுபாடு உள்ளவர்கள். அந்த வகையில் இவர்களுக்கு பட்டியலிடுவது பிடித்த விசயமாக இருந்தது. அதனால் இந்தப் பட்டியல் மிக நன்றாகவும் வந்திருக்கிறது. ஏனென்றால் மற்ற இடங்களுக்கு ஒப்பிட்டு பார்க்கும் பொழுது ஒரு புத்தகத்தை எப்படி தேடுவீர்கள், நூல் பெயர் தலைப்பு, ஆசிரியர், பதிப்பித்த ஆண்டு, பதிப்பித்தவர்கள், எங்கு பதிப்பிக்கப்பட்டது இந்த மாதிரி சில விசயங்களை வைத்து தேடலாம். அதனை Sub fields என்று சொல்லுவோம். இதையும் தாண்டி இந்த நபர் காசு கொடுத்து, இந்த வேலையை எடுத்து, இந்த நூலை உருவாக்கி, அதை இந்த நபர் பரிசோதித்து, இந்த நபரால் பதிப்பிக்கப்பட்டது என்ற முழு வரலாறு இருக்கிறது பாருங்கள் அதை சேகரிப்பது ஒரு நூலகத்தின் கடமை என்று நான் நினைத்து அந்த வகையில் முழு விவரத்தையும் சேகரித்து வைத்திருக்கிறோம் இது இரண்டாவது பணி. இந்தப் பணி ஏன் முக்கியம் என்றால் ஆவணக் காப்பகங்களிடம் இருக்கிற விசயங்கள் என்ன விசயம் இருக்கிறது என்று நிறைய நபர்களுக்குத் தெரியாது. அதற்குக் காரணம் இந்த மாதிரி பட்டியல் இல்லாதது தான். பட்டியல் முதுகெலும்பு மாதிரி, அதனால் அந்தப் பணியைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம்.

roja muthaiah noolagam9மூன்றாவது பொதுவாக பாதுகாப்பதற்காக (preservation)என்று இல்லாமல் இரண்டு வகையாக பாதுகாக்கலாம். ஒன்று நுண்படம் எடுத்து செய்யலாம், இன்னொன்று கணிணி மயமாக்குவது. இந்த இரண்டுமே இங்கு செய்துகொண்டிருக்கிறோம். நுண்படங்களுடைய பயன் என்னவென்றால் அதை சரியான முறையில் பாதுகாத்து வந்தால் ஐநூறு ஆண்டுகள் வரை அழியாமல் இருக்கும். ஆனால் கணிணி மயமாக்கப்பட்ட தரவுகள் எத்தனை ஆண்டுகள் வரை இருக்கும் என்றால் இன்னும் சரியாக தெரியாது. ஏனென்றால் எதிர்கால கணிணி நிலை இன்றைக்கு உள்ள காலகட்டத்தில் புரிதல் இல்லை. ஏனென்றால் சில விசயம் சுருங்கிக்கொண்டே வருகிறது, சில விசயங்கள் பெருகிக் கொண்டே வருகிறது. Storage space பெரிதாகிக்கொண்டே வருகிறது, ஆனால் அதனுடைய gadgets சுருங்கிக்கொண்டே வருகிறது. எனவே அந்த தொழிற்நுட்பம் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது. ஆனால் நாங்கள் இரண்டு முறையையும் செய்து வருகிறோம். நாங்கள் புத்தகங்களைப் பாதுகாக்கும் பொழுது புத்தகத்தின் புத்தக வடிவம், இரண்டாவது அதனுடைய நுண்படம், மூன்றாவது அதனுடைய கணிணி மயமாக்கப்பட்ட வடிவம் அதை எதில் சேகரிக்கிறோம் என்பது. ஒன்று server ல் சேகரிப்போம், அது இல்லாமல் harddiscல் சேகரிப்போம், அது இல்லாமல் குறுந்தகடில் சேகரிப்போம், ஒரு இடத்தில் இல்லாமல் பல இடங்களில் சேகரிப்போம். அப்படித்தான் இதை பாதுகாக்கமுடியும் என்று நினைக்கிறேன். அது மிகவும் அவசியம். இது என்னிடம் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தேன் என்றால் ஒரு காலகட்டத்தில் ஏதாவது ஒரு பிரச்சனையில் அது அழியும் வாய்ப்பு வந்தது என்றால் அதன் ஆதாரம் வேறு யார் கையிலும் கிடைக்காமல் போய்விடும். அதனால் இந்த மாதிரி செயல் திட்டம் எடுத்திருக்கிறோம்.

இதற்கு அடுத்து reference services புத்தகங்கள் யாருக்காக வைத்திருக்கிறோம் என்றால் மக்களுக்காக வைத்திருக்கிறோம், ஆராய்ச்சியாளர்களுக்காக வைத்திருக்கிறோம். ஒரு பொது நூலகம் எப்படி செயல்படவேண்டுமோ அதே தன்மையில்தான் இந்த நூலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு பொது நூலகம் என்பது அரசு சார்ந்த நூலகங்கள் வரிசையில் நீங்கள் சேர்க்கலாம். இது தனியாரால் பாதுகாக்கப்பட்டு வரக்கூடிய ஒரு பொது நூலகம். இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம், பயன்படுத்தலாம். அந்த செயலையும் இங்கு பின்பற்றி வருகிறோம். அந்த வகையில் உலகத்திலிருந்து பல இடங்களிலிருந்தும் வந்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து பல பல்கலைக்கழகங்களிடமிருந்தும் வருகிறார்கள். பல்கலைக் கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் தனி நபர்கள் தன்னிச்சையாக ஆராய்ச்சி செய்பவர்கள். பத்திரிகையாளர்கள் (Journalists), வழக்கறிஞர்கள் வருகிறார்கள், ஊடகங்களில் இருந்து சிலர் யாரையாவது பேட்டி எடுக்கவேண்டும் என்றால் அதற்காக ஆவணங்களைத் தேடிப் படித்துக்கொண்டு சென்றுதான் கேள்வி கேட்க முடியும், அதனால் அதற்காக வருகிறார்கள். இந்த மாதிரி பலதரப்பட்ட ஆராய்ச்சிக்காக இங்கு வருகிறார்கள். புத்தகங்கள் எழுதுவதற்காக வருகிறார்கள், கட்டுரை எழுதுவதற்காக வருகிறார்கள், எனவே இது ஒரு வகையான சேவை.

இதன் பிறகு புத்தகங்களின் மூலத்தைப் பாதுகாப்பது என்பது ஒரு தனித்துறை. அதில் தாள் அழியும் தன்மை உள்ளது. அதில் அமிலத்தன்மை இருப்பதால் விரைவில் அழிந்துவிடும், ஒடிந்துவிடும். புத்தகங்கள் இதுவரை இருநூறு ஆண்டுகாலம் இருந்திருக்கலாம், இன்னும் இருநூறு ஆண்டுகாலம் நிலைக்க வைப்பது அந்தமாதிரி விசயங்களைப் படித்து அதை நாங்கள் பின்பற்றிக்கொண்டு வருகிறோம்.

roja muthaiah noolagam10அடுத்தத் துறை பயிற்சி (training) இந்த நூலகங்களில் நுண்படம் எடுப்பது, கணிணி மயமாக்கப்படுவது, பாதுகாப்பது, பட்டியலிடுவது என்பது நாங்கள் மட்டும் தெரிந்துகொண்டால் போதாது, இந்த நாட்டில் உள்ள மற்றவர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பயிற்சி நடத்துகிறோம். இந்த மாதிரி பயிற்சிக்காக பல இடங்களிலிருந்தும் வந்து செல்கிறார்கள். நம் நாடு மட்டும் சொல்ல முடியாது தென் ஆசியா நாடுகளிலிருந்தும் இங்கு வந்து படித்துக்கொண்டு செல்கிறார்கள். இந்தப் பயிற்சியைப் பார்த்தீர்கள் என்றால் நேபாளம், பங்களாதேசம், இலங்கை, நம் நாட்டில் கல்கத்தா, பாம்பே, ஹைதராபாத், பூனே இந்த மாதிரி இடங்களிலிருந்து வந்து படித்துக்கொண்டு செல்கிறார்கள். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் TATA Institute fundamental Research, godrej ஆவணக்காப்பகம், சிப்லா, IIT கான்பூர், Centre for Studies in Social Sciences Calcutta இந்த மாதிரி இடங்களிலிருந்தும் வந்து பயிற்சி எடுத்துக்கொண்டு சென்றிருக்கிறார்கள். நாங்கள் தொடர்ந்து பயிற்சி தந்துகொண்டிருக்கிறோம். இந்தப் பயிற்சி குறிப்பிட்ட நேரத்தில் நடக்கக்கூடிய பயிற்சி என்று சொல்ல முடியாது, நீங்கள் இதுதான் வேண்டும் என்று கேட்டால் அவர்களுக்காக trailer மாதிரியான programs தயார் செய்து அதை நாங்கள் செய்கிறோம். சில நபர்களுக்கு எங்களுக்கு கணிணி மயமாக்குவது மட்டும்தான் வேண்டும், சில பேர் நுண்படம் மட்டும்தான் வேண்டும், சிலர் cataloging மட்டும்தான் வேண்டும், சிலர் எங்களுக்கு எல்லாமே வேண்டும் என்பார்கள். அதற்கு ஏற்றவாறு பயிற்சிகளை வடிவமைத்து அவர்களுக்கு அந்தப் பயிற்சியைக் கொடுப்போம். இது ஒரு பகுதி. சில நபர்களுக்கு ஆவணக் காப்பகம் (Archivesetup) செய்யவேண்டுமாம் புதிதாக, அதற்கான பயிற்சிகளை நாங்கள் தருகிறோம்.

இதன் பிறகு நாங்கள் மாதம் ஒரு முறை கூட்டம் நடத்துவது ஏனென்றால் இங்கு இருக்கும் விசயங்கள் ஒரு குறிப்பிட்ட மக்களுக்குத்தான் தெரியும், ஆய்வாளர்களுக்கு எப்படியும் தெரிந்துவிடும், பொதுமக்களுக்கு ஓரளவிற்குத் தெரியும். எங்களைப் பற்றி ஊடகங்களில் எழுதுகிறார்கள், செய்தித்தாள்களில் வரும். ஆனால் அந்த செய்தியை ஒரிரு வாரங்களில் மறந்துவிடுவார்கள். குறிப்பிட்ட மக்கள் படிப்பதற்கான வாய்ப்பு இருக்கும். தொடர்ச்சியாக இந்த வேலையை எப்படி செய்வது, எப்படி கொண்டு சேர்ப்பது, அதனால்தான் மாதம் ஒரு முறை கூட்டம் நடத்துகிறோம். இதில் academic, non academic இரண்டுமே கலந்த மாதிரி மக்களுக்கு கூட்டங்கள் நடத்துகிறோம். இந்தக் கூட்டங்கள் நடத்தும் பொழுது ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அந்தத்துறையின் வல்லுநரை அழைத்து அவர்களுக்குத் தெரிந்த விசயங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அதை கேட்பதற்கு கிட்டத்தட்ட ஐம்பதிலிருந்து நூறு நபர்கள் வரை வருவார்கள் ஒவ்வொரு மாதமும். குறைந்த பட்சம் மாதம் ஒரு கூட்டம் நடத்துகிறோம்.

roja muthaiah noolagam8இது இல்லாமல் அவ்வப்போது கண்காட்சிகள் நடத்துகிறோம். ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு, உதாரணத்திற்கு “தமிழ்நாட்டில் காந்தி” என்று வைத்துக்கொண்டால் தமிழ்நாட்டிற்கு காந்தி எத்தனை முறை வந்தார் முழுக்க அந்த வரலாறை எடுத்து தொகுத்து ஒரு கண்காட்சியாக வைத்து செய்து கொண்டிருக்கிறோம். சிந்துவெளி நாகரீகத்தைப் பற்றி ஒரு கண்காட்சி பண்ணியிருக்கிறோம். எங்களின் முக்கியமான செயல்பாடு சிந்துவெளி நாகரீகத்தை ஆராய்ச்சி செய்வதுதான் ஆய்வு மையத்தின் வேலை. அதற்கு சிந்துவெளி பண்பாட்டு ஆய்வு மையம்(The Indus Research centre)என்று வைத்திருக்கிறோம். இது Dr. ஐராவதம் மகாதேவன் ஆலோசனையின் பெயரில்தான் துவங்கியது. சில ஆண்டுகள் மதிப்பு ஆலோசகராக (Honorary Consultant) இருந்தார். அதன் பிறகு திரு.ஆர். பாலகிருஷ்ணன் தற்பொழுது மதிப்பு ஆலோசகராக (Honorary Consultant) இருக்கிறார். இவர்கள் இரண்டு நபர்களின் ஆராய்ச்சியும் மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஒருவர் சிந்துவெளி எழுத்துக்களை படிப்பதற்கான ஆராய்ச்சி, இன்னொருவர் சிந்தவெளி நாகரீக மக்கள் ஒரு இடத்திலிருந்து இடம்பெயர்ந்த அந்த வரலாறை எப்படி ஆய்வது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். தொடர்ச்சியாக இந்த மாதிரி ஆய்வுகளை நாங்கள் மேற்கொண்டு வந்துகொண்டிருக்கிறோம். அதற்கு ஒரு செய்தி அறிக்கை(bulletin) ஒன்று போடுகிறோம். ஒரு வருடத்திற்கு இரண்டுமுறை இந்த செய்தி அறிக்கை (bulletin)வரவேண்டும். அதற்கு bulletin of the Indian research centre என்று பெயர் அதற்கு.

அது இல்லாமல் நாங்கள் ரோஜா இதழ் என்று ஒன்று நடத்துகிறோம். ஒரு காலாண்டு இதழ். அது எங்களது செயல்பாடுகளையும், சில முக்கியமான ஆய்வுகளின் முடிவுகளை அதன் வழியாக நாங்கள் பிரசுரம் செய்து கொண்டு வருகிறோம். தொடர்ச்சியாக இந்த வேலைகளை செய்து வருகிறோம்.

மாதாந்திர கூட்டம், கண்காட்சி அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியிடுகிறோம், மின்னஞ்சல் அனுப்புகிறோம், முகநூலில் போடுகிறோம், இணையதளத்தில் போடுகிறோம். எங்களுடைய அட்டவணை (Catalogue) இணையதளத்தில் இருக்கிறது. தமிழ் புத்தகங்களை தமிழிலே அட்டவணை (Catalogue) போடுகிறோம். இதனை நாங்கள் 1994லேயே ஆரம்பித்துவிட்டோம். தமிழ் புத்தகங்களை ஆங்கிலத்தில் அட்டவணை (Catalogue) போடுவதில் பெரிய சிக்கலே இருக்கிறது. ஏனென்றால் என்ன எழுத்து பயன்படுத்துவீர்கள், திருக்குறள் என்றால் தமிழில் ஒரே மாதிரிதான் எழுத முடியும். ஆங்கிலத்தில் எழுதினீர்கள் என்றால் ஒருவர் thi என்று எழுதுவார்கள், ஒருவர் tiஎன்று போடுவார்கள். அதனால் தமிழ் ஆவணங்களை தமிழலேயே அட்டவணை (Catalogue) பண்ணவேண்டும் என்பது எங்களுடைய கொள்கை. அது வேண்டுமென்றால் தொழிற்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கான வசதிகள் எங்களிடம்இருக்கிறது. இந்த இரண்டையுமே இணையத்தில் பார்க்கலாம்.

கேள்வி: கூட்டம், கண்காட்சி இவைகளுக்கு ஏதாவது கட்டணம் இருக்கிறதா?

பதில்: எதுவுமே கிடையாது. இங்கு reference இலவசம்தான். யார் வேண்டுமானாலும் வரலாம், காலையிலிருந்து மாலை வரையிலும் புத்தகத்தை கையில் copy செய்து கொண்டு போகலாம். ஆனால் அதனுடைய நகல் வேண்டுமானால் நாங்கள் charge பண்ணுகிறோம்.

கேள்வி: தாங்கள் அளிக்கும் பயிற்சிக்கு கட்டணம் இருக்கிறதா?

பதில்: அதற்குக் கட்டணம் இருக்கிறது. நாங்கள் 2004 வரையிலும் கட்டணம் வாங்கவில்லை, 2004க்குப் பிறகுதான் நாங்கள் கட்டணம் வாங்க ஆரம்பித்தோம். ஏனென்றால் எங்களது அறங்காவலர்கள் இப்படி நடத்திக்கொண்டு செல்லமுடியாது, எல்லாவற்றையும் இலவசமாக கொடுக்கவும் கூடாது, அதற்கு ஒரு சரியான கட்டணத்தை வாங்கிக்கொண்டு நீங்கள் அந்த பயிற்சியைக் கொடுக்கலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் அதை பின்பற்றுகிறோம். பயிற்சிக்கான சான்றிதழையும் நாங்கள் வழங்குகிறோம்.

கேள்வி: இந்த நூலகத்தை நிர்வாகிக்க வேண்டிய நிதி எவ்வகையில் தங்களுக்குக் கிடைக்கிறது?

பதில்: திட்டப்பணிகளுக்காக மானியங்கள் சில நிறுவனங்களிடமிருந்து வாங்குகிறோம். அதன் வழியாகத்தான் தொடர்ந்து இந்த நூலகத்தை நடத்த முடிந்தது. இதற்கு இலவச மானியம் எதுவும் கிடையாது, இதுவரையிலும் வந்ததில்லை, திட்டப்பணிகளுக்காக கொடுக்கப்பட்ட மானியங்கள்தான். அமெரிக்காவில் சில நிறுவனங்கள், இங்கிலாந்தில் சில நிறுவனங்கள், இந்தியாவில் சில நிறுவனங்களிடமிருந்து வாங்கியிருக்கிறோம். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் பிரிட்டிஷ் நூலகம், National endowment for the humanities, Wellcome Trust, Ford foundationஇந்த மாதிரி நிறுவனங்களிடமிருந்து வாங்கியிருக்கிறோம். இந்தியாவில் அந்த மாதிரியான நிறுவனங்கள் இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை, வெளிநாடுகளிலிருந்துதான் வருகிறது. வருடாவருடம் வருவது கிடையாது, திட்டத்திற்கு ஏற்றாற்போல் நிதி வரும். அதாவது சில திட்டங்கள் மூன்று வருடம் வரும், சில திட்டங்கள் இரண்டுவருடம்தான் வரும். அந்தத் திட்டப்பணி முடிந்தது என்றால் அதன் பிறகு வேறு எங்கேயாவது நாம் தேடவேண்டும். இந்த நூலகத்தை இந்த மாதிரி பணம் வாங்கித்தான் நடத்திக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி: எந்த மாதிரியான நூல்களை உங்கள் நூலகத்திற்கு எடுத்துக் கொள்வீர்கள்?

பதில்: தமிழில் ஆய்வுக்கு உட்படுத்தக்கூடிய எந்த நூலையும் நாங்கள் எடுத்துக்கொள்வோம், நூல் என்று சொல்லமாட்டோம், ஆவணம் என்று சொல்லுவோம். அது புத்தகமாக இருக்கலாம், இதழாக இருக்கலாம், செய்திமடல் (Newsletter)ஆக இருக்கலாம், அல்லது ஒரு துண்டுப் பிரசுரமாக இருக்கலாம். தமிழில் அச்சிடப்பட்ட தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு இவற்றைப் பற்றிய உலகத்தில் இருக்கக்கூடிய எந்தத் தமிழ் ஆவணங்களாக இருந்தாலும் நாங்கள் எடுத்துக் கொள்வோம். அதுவே எங்கள் கொள்கை. ஒரு பரந்த கொள்கை தான். ஆனால் அதில் எவ்வளவு தூரம் வெற்றியடைந்தோம் என்று சொல்ல முடியாது. சிங்கப்பூர், மலேசியா போன்ற வெளிநாடுகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். அங்கு அச்சாகும் ஆவணங்கள் அத்தனையும் இங்கு வருவதில்லை. ஆனால் கிடைத்தால் நாங்கள் எடுத்துக் கொள்வோம். நீங்கள் தமிழியல் என்ற பொருள் (subject)க்கு justify பண்ண முடியும். ஆனால் எங்களிடம் எது அதிகமாக இருக்கிறது என்று பார்த்தீர்கள் என்றால் தமிழ்நாட்டின் அச்சுப் பண்பாடு முழுக்க உள்ளது. அதற்கான சேகரிப்பை நீங்கள் இங்கு பார்க்கலாம். கிட்டத்தட்ட 75 சதவிகிதம் அச்சு ஆவணங்களை, நூல்களை நாங்கள் சேகரித்திருக்கிறோம் என்று சொல்லலாம், அதாவது பதிப்பிக்கப்பட்ட நூல்கள். மீதி இருக்கக்கூடியதை மேலும் நாங்கள் தேடிக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி: தமிழகத்தை தவிர எந்தப் பகுதியில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது?

பதில்: இலங்கை. தமிழ்நாட்டில் (Madras presidency) அச்சு தடை செய்திருக்கும் பொழுதே அங்கு அச்சு (printing) நடந்தது. அதனால் அங்கு உள்ள ஆவணங்களை இங்கு பார்க்கலாம்.

கேள்வி: தமிழர்களின் ஆவணப்படுத்தல் மற்றும் வாசிப்பு குறித்து உங்களது கருத்து என்ன?

பதில்: ஆவணப்படுத்துதல் பற்றிப் பேசவேண்டும் என்றால் ஒரு காலகட்டம் வரையிலும் பெரிதாக சொல்ல முடியாது. நீங்கள் தமிழர்கள் என்று சொல்வதால் நான் பொதுவாக எடுத்துக்கொள்கிறேன். யாழ்ப்பாண பொது நூலகம் என்று ஒன்று இருந்தது, அது இன்றைக்கு இல்லை. தமிழர்கள் ஆவணப்படுத்துதலை எப்போதோ ஆரம்பித்துவிட்டார்கள், மற்ற மொழிகளை விட தமிழில் முதலில் ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த மாதிரி நம்மிடம் இல்லை என்பது இன்று வரையிலும் ஒரு சோகம். ஆனால் ரோஜா முத்தையா என்ன செய்கிறார் என்றால் அந்த மாதிரி நூலகத்தை உருவாக்கவேண்டும் என்று நினைக்கிறார், அதனால் அந்த ஆர்வத்தில் அதை உருவாக்கினார். அவரைப்பார்த்து இன்றைக்கு நிறைய நபர்கள் ஆவணக்காப்பகம் உருவாக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள்.

நீங்கள் யாரைக் கேட்டாலும் ரோஜா முத்தையாவின் தொடர்பு இல்லாமல் சொல்லவே முடியாது. அவரோடு ஒரு இணைப்பு (link) இருக்கும். புதுக்கோட்டை கிருஷ்ணமூர்த்தியாக இருக்கட்டும் அல்லது வேறு யாராவது இருக்கட்டும் எல்லோரும் ரோஜா முத்தையா மாதிரி பண்ணவேண்டும் என்றுதான் நினைத்திருக்கிறார்கள் இது ஒரு பக்கம். இன்றைக்கு ஒரு பண்பாட்டுச் சொல்லாடல் உருவாகிக் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் பண்பாடு பற்றிப் பேசுகிறார்கள், ஆங்கில ஊடகங்கள் கூட பண்பாட்டுக்காக ஒரு பகுதியை ஒதுக்குகிறார்கள், பாரம்பரியம் என்ற விசயத்தைப் பற்றிப்பேசுகிறார்கள். madras week celebrations என்று ஒன்று நடக்கிறது, அதே மாதிரி கோயம்புத்தூரில் நடத்துகிறார்கள், சென்னை சங்கமம் என்று ஒரு நிகழ்ச்சி நடத்துகிறார்கள். இதெல்லாம் நம்முடைய பண்பாடை மீட்டு உருவாக்கம் பண்ணவேண்டும், அதை ஆவணப்படுத்தவேண்டும் என்ற முயற்சியின் வெளிப்பாடுதான். அது மிகவும் நல்ல விசயம்.

roja muthaiah noolagam9சிலநபர் ஆங்கிலம் சார்ந்து போகலாம், இருக்கலாம் ஆனால் அவர்கள் பேசக்கூடிய விசயம் நம் நாட்டைப் பற்றி. அதனால் அதை ஒதுக்கிவிட முடியாது. அதனால் இதெல்லாம் ஆரோக்கியமான சூழல் என்று நான் நினைக்கிறேன். இன்றைக்கு ரோஜா முத்தையா நூலகத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அவ்வளவு பெரிய விசயங்களைக் கொண்டு வந்து சேகரித்திருக்கிறார்கள். தமிழர் பண்பாட்டின் ஒரு அடையாளம்தானே இது. இந்த மாதிரி நீங்கள் எந்த மாநிலத்தில் சொல்ல முடியும். நீங்கள் பஞ்சாப்பில் எடுத்துக்கொண்டீர்கள் என்றால் முழுக்க முழுக்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதரவிலேயே நடக்கிறது. அவர்கள் தெளிவாக சொல்லிவிட்டார்கள் அரசின் ஆதரவு வேண்டாம் என்று, நல்ல வேலை செய்திருக்கிறார்கள். பஞ்சாப்பில் இருக்கக்கூடிய அத்தனை தரவுகளையும் ஆவணப்படுத்தவேண்டும் என்ற முயற்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆதரவை வாங்கி செய்தார்கள். ஆனால் இங்கு அந்த ஆதரவு இல்லை. இருந்தாலும் நாங்கள் திட்டப்பணிகள் மூலமாகவே எங்களால் முடிந்ததை நாங்கள் செய்துகொண்டு வைத்திருக்கிறோம்.

பதினைந்து லட்சம் படங்கள் (Images) இதுவரையிலும் கணிணிமயமாக்கப்பட்டிருக்கிறது. கணிணிமயமாக்கப்பட்டதை மட்டும் சொல்கிறேன். இதற்கு சமமாக ஆக எந்த மொழி (language)-யை சொல்வீர்கள் இந்திய நாட்டில். இந்த மாதிரி வேலைகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. நடக்கும் பொழுது இதற்கு ஆதரவு வேண்டும். அதனால் ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், சிலர் தனிநபர்கள் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள், சிலபேர் நகல்(duplicate)செய்கிறார்கள். நீங்கள் செய்வதை நானும் செய்யக்கூடாது, நான் செய்வதை நீங்கள் செய்தாலும் அதில் பலன் இல்லை. நான் செய்யாததை நீங்கள் எடுத்து செய்யவேண்டும், நீங்கள் செய்யாததை நான் எடுத்து செய்யவேண்டும், எனவே பகிர்ந்துகொள்ளவேண்டும். ஆனால் அதற்கான சூழல் இன்னும் உருவாகவில்லை, அதற்கு சில புரிதல் வேண்டும்.

வாசிப்பிற்கான விளைவை புத்தகக் கண்காட்சியில் பார்க்கலாம். புத்தகக் கண்காட்சி இல்லை என்றால் அவ்வளவு பெரிய விற்பனை இருக்க வாய்ப்பே இல்லையே. வாசிப்பு அதிகமாவதால்தான் விற்பனை இருக்கிறது. அதனால் அதில் நல்ல சூழ்நிலைதான் உருவாகிக்கொண்டிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி: கணிணி மயமாக்கப்பட்டது என்று சொன்னீர்கள், இன்றைக்கு அலைபேசிகள் மூலம் எல்லோரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கு இருக்கும் நூல்களை எல்லாம் அந்த மாதிரி மாற்றக்கூடிய திட்டம் இருக்கிறதா?

பதில்: இருக்கிறது. ஆனால் அதை வெவ்வேறுகட்டங்களாக பண்ணவேண்டும். சிலவற்றை கணிணி மூலமாக வாசிப்பது, சிலவற்றை அலைபேசி வழியாக வாசிப்பது என்று இவை எல்லாவற்றையும் அலைபேசியில் பார்க்கமுடியாது. அலைபேசியில் கொடுக்கவேண்டும் என்றால் அதற்கு ஏற்றமாதிரி உருவாக்க வேண்டும். அந்தப் புரிதல் இல்லாமல் அதை செய்ய முடியாது. எனவே என்ன தேவை என்பதை அறியாமல் நீங்கள் கொடுத்தீர்கள் என்றால் தேவையில்லாமல் குப்பை தான் வரும். எல்லாவற்றையும் எடுத்து இணையத்தில் போட்டுவிடலாம். ஆனால் ஒரு நாளில் எத்தனை நபர்கள் எத்தனை புத்தகங்களைத் தேடிப்போகிறார்கள் என்பது நமக்குத் தெரியாது. அது ஒரு பக்கம் இருக்க இன்றைக்கு தொழில்நுட்பம் (technology) மலிந்து கொண்டே வருகிறது. அதனால் போட்டுவைத்துவிடலாமே என்று நினைக்கலாம், தவறுகிடையாது. அதை செய்யவேண்டும் கட்டாயம் செய்யவேண்டும்.

இரண்டாவது நீங்கள் அலைபேசி என்று சொல்வதனால் அலைபேசியில் தேடிப்பார்க்கக்கூடிய வசதிகள் இல்லை. ஏனென்றால் அது சின்ன திரை, குறைவான தகவல்தான் கொடுக்க முடியும். முழு புத்தகத்தை அலைபேசியில் படிப்பது சாத்தியம் கிடையாது. அதற்கு kindle மாதிரியான ஒரு படிப்பான் தேவைப்படும், ஒரு தொழில்நுட்பம் தேவைப்படும். அந்த மாதிரி செயலிகள் வரவேண்டும், அதற்கான போட்டி வேண்டும். இதற்கான ஒரு தேவை உருவானால்தான் இந்த தொழில்நுட்பத்தை (technology)பயன்படுத்துவதற்கு இதற்கான வணிக வளர்ச்சி வரும்.

roja muththaiya noolagam2கேள்வி: கணிணி மயமாக்கல் என்று தாங்கள் சொல்வது படமாக பதிவு (store) செய்கிறீர்களா? அல்லது வேறு எவ்வாறு பதிவு (store) செய்கிறீர்கள்?

பதில்: முதலில் புத்தகங்களிலிருந்து படியெடுப்பது எங்களது வேலையாக இருந்தது. இன்றைக்கு இருக்கிற தொழில்நுட்பம் அதுதான். அடுத்து கணிணிமயமாக்குவது, அந்த micro நுண்படத்திலிருந்து கணிணிமயமாக்கியிருக்கிறோம். அது ஒரு படம். அடுத்த கட்டம் அதைத் தேடுவது மாதிரி பார்ப்பது. தேடுவது என்றால் உள்ளே இருக்கக்கூடிய உள்ளடக்கத்தை தேடுவது மாதிரியும், தரவிறக்கம் செய்வது மாதிரியும், வாசிப்பது மாதிரியும் நீங்கள் கொடுப்பது. ஆனால் இரண்டுமே அவசியம். ஏனென்றால் இன்றைக்கு நீங்கள் OCR ஐ வைத்துப் பண்ணலாம், இந்த graphic image-ஐ தேடுவது மாதிரி பண்ணலாம். ஆனால் நல்ல OCR இன்றைக்கு கிடையாது. நூறு சதவிகிதம் பிழைகள் இல்லாமல் கொடுக்கக்கூடிய OCR இன்றைக்கு இல்லை, யாரும் கண்டுபிடிக்கவில்லை, எனக்கு தெரிந்து இல்லை. அது எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும்? தேடுவதற்கு ஓரளவிற்கு வசதி வேண்டும்.

தொல்காப்பியத்தில் ஏதோ ஒரு பொருள் இருக்கிறது, அதனைத் தேடும்போது இது தொல்காப்பியத்தில் இருக்கிறதா என்று அந்த அளவிற்குத்தான் அது பயனுள்ளதாக இருக்குமே தவிர ஆராய்ச்சிக்கு அது எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டால் பல பதிப்புகள் வந்திருக்கிறது. பல பதிப்புகளில் எந்தப் பதிப்பு சரியானது, ஒரு பதிப்பில் தவறுகள் இருக்கலாம் அல்லது தவறுகளை புகுத்திருக்கலாம். அதனால் இதில் எதை எடுத்துப் போடுவீர்கள். எல்லாமே அவசியம். அதனால் நாங்கள் புத்தகத்தின் மறுவடிவம் இது அப்படியே எடுத்து scan செய்து போடுவது. ஆக மாற்றம் இல்லாமல் கொடுப்பது, ஆராய்ச்சிக்கு அது மிகவும் முக்கியம். அதுதான் மூல ஆவணம். அதன் பிறகு நீங்கள் எதுவேண்டுமானாலும் பண்ணலாம். நீங்கள் தேடுவது மாதிரி பண்ணலாம், பிழை இருந்தாலும் ஓரளவிற்கு பிழை இருக்கிறது ஆனால் இணையத்தில் சென்று சுட்டிக் கொடுத்துவிட்டால் போதும் உள்ளே தேடுதல் பண்ணிக்கொள்ளலாம் என்பது மாதிரி செய்யமுடியும். ஆனால் இரண்டுமே செய்கிற திட்டம் இருக்கிறது.

கேள்வி: இந்தப் பணியில் இருக்கிற சவால்கள், பிரச்சனைகள் என்ன?

பதில்: முதலில் புத்தகங்களை தேடி எடுப்பதிலிருந்து நீண்ட நாள் அதை பாதுகாப்பது வரை எல்லா கட்டத்திலும் பிரச்சனைகள் இருக்கிறது. முதலில் நான் ஏன் கொடுக்க வேண்டும் என்னிடம் மட்டும்தான் இருக்கவேண்டும் என்று நினைப்பது, அந்த மாதிரி எத்தனையோ நபர்கள் நினைத்து ஐந்துவருடம் கழித்து அந்த புத்தகம் இருக்காது. அந்த மாதிரி இழந்திருக்கிறோம் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நூல்களை விட இதழ்கள். எத்தனை விதமான அரசியல் விசயங்கள் நடந்திருக்கிறது அதனுடைய பதிவுகள்தான் இதெல்லாமே. சமூக மறுமலர்ச்சி நடந்திருக்கிறது அதனுடைய பதிவுகள் எல்லாமே அழிந்துபோய்விட்டது. அது எல்லாம் இதழ்களில் இருக்கிறது. தொடர்ந்து இந்த பிரச்சனைகளால் அழித்துக்கொண்டிருக்கிறோம். இரண்டாவது ஒன்று தொழில்நுட்பம், இருக்கிற குறைந்த நிதி ஆதாரம் வைத்துக்கொண்டு ஓராண்டுக்கு இவ்வளவுதான் செய்யமுடியும் என்று நாங்கள் செய்கிறோம். இதை முதலில் செய்யலாம், பணம் கிடைத்தது என்றால் அடுத்தது இந்த வேலையை செய்யலாம் அது செய்வதற்குள் இது காணாமல் போய்விடும். எனவே நிதி ஆதாரம் தொடர்ந்து கிடைக்கவில்லை என்றால் இந்த சிக்கல்கள் இருக்கிறது.

கேள்வி: எவ்வளவோ நூலகங்கள் சென்னையில் இருக்கிறது, மற்ற நூலகங்களுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இந்த ரோஜா முத்தையா நூலகத்திற்கு என்றால் நீங்கள் எதை சொல்வீர்கள்?

roja muthaiah noolagam1பதில்: எங்களுடைய அட்டவணை (catalogue). நீங்கள் வந்து தேடுகிறீர்கள் ஐந்து நிமிடத்தில் இந்த புத்தகம் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்துகொள்ளலாம். இல்லையென்றால் நீங்கள் போய்க்கொண்டே இருக்கலாம், நீங்கள் வரவேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. நீங்கள் இணையத்தில் தேடுகிறீர்கள் இந்த நூலகத்தில் இல்லை அல்லது ஒரு தொலைபேசியைத் தொடர்புகொண்டு கேட்கலாம் இந்தப் புத்தகம் வைத்திருக்கிறீர்களா என்று, தேடி இருக்கிறதா, இல்லையா என்று உடனே சொல்லிவிடுவார்கள். இருக்கிறது என்றால் வந்தால் போதும். நீங்கள் ஒரு குறிப்புக்காக வருகிறீர்கள், பத்து நிமிடத்தில் அந்தப் புத்தகம் இருக்கும். அதுதான் எங்களுடைய வெற்றி.

கேள்வி: தஞ்சை சரஸ்வதி நூலகத்திற்கு ஒரு முறை சென்றிருந்தேன் அங்கு இருக்கிற ஒரு மூத்த பணியாளர் அவர் ஆதங்கத்தை என்ன சொன்னார் என்றால் இன்னும் இங்கு ஓலைச்சுவடிகள் ஏராளமாக இருக்கிறது, இன்னும் அதிலிருந்து படியெடுக்காமல் தாளுக்கு வராமலேயே இன்னும் பல ஓலைச்சுவடிகள் இருக்கிறது. அதை யாராவது முயற்சி செய்தார்கள் என்றால் அதை நூலாக கொண்டு வரலாம் என்று அவருடைய ஆதங்கத்தை சொன்னார். அதற்கு ஏதாவது நூலகத்தின் மூலமாக ஏதாவது முயற்சி எடுக்கமுடியுமா?. அனைத்துமே தமிழ் இலக்கியம் சார்ந்ததுதான்.

பதில்: இந்த மாதிரி சரஸ்வதி மகால் நூலகம் மட்டுமல்ல இந்தியாவில் இருக்கக்கூடிய பல நூலகங்களுக்கு இந்த மாதிரியான சிக்கல்கள் இருக்கிறது. நான் சுவடி நூலகங்களைப் பற்றிப் பேசுகிறேன். அதாவது தாளுக்கு வராமல் இன்னும் சுவடிகளாக இருக்கக்கூடிய நூலகம். அதனால்தான் கணிணிமயப்படுத்திவிட்டால் அதை படங்களாகவே பார்த்துக்கொள்ளலாமே என்ற நோக்கத்தில்தான் அதை ஆரம்பித்தார்கள். ஆனால் அதை எந்த அளவிற்கு முடித்திருக்கிறார்கள் என்று என்னால் சொல்ல முடியவில்லை. உதாரணத்திற்கு இந்திய அரசு பத்தாண்டுகளுக்கு முன்னால் ஒரு திட்டப்பணி பண்ணினார்கள் அதாவது national machines for manuscripts. சுவடிக்கு மட்டுமே. எங்கெல்லாம் சுவடி இருக்கிறதோ அவர்களிடம் தெரியவைத்துவிட்டீர்கள் என்றால் அவர்கள் அதற்கு பணம் தருகிறார்கள். நீங்கள் கணிணிமயமாக்கிக் கொடுத்துவிடலாம். ஒரு மாதிரி நகலை நீங்கள் வைத்துக்கொண்டு ஒரு நகலை central locationல் வைத்து பாதுகாப்பதுதான் அந்தத் திட்டத்தினுடைய நோக்கம். சரஸ்வதி மகால் நூலகம் அதை பண்ணியிருக்கலாமே.

கேள்வி: இறுதியாக இன்றைய வாசகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

பதில்: வாசகர்களுக்கு நிறைய சொல்லலாம். ஒன்று ஆவணப்படுத்துதல் என்பதற்கு விழிப்புணர்வு வேண்டும். அது அவசியம். இது அவசியமில்லை துண்டு காகிதம்தானே என்று தூக்கி போட்டுவிடாமல் அதனை ஆவணப்படுத்தவேண்டும் என்கிற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். நம்மால் ஆவணப்படுத்தமுடியவில்லை என்றால் இப்படி ஒரு நிறுவனம் இருக்கிறது, அந்த நிறுவனத்திடம் கொடுத்தால் அவர்கள் அதை ஆவணப்படுத்துவார்கள் என்பதை தெரிந்துகொள்ளவேண்டும். மூன்றாவது எல்லாமே இலவசமாக கிடைக்காது ஆவணக்காப்பகத்தை உருவாக்க வேண்டும். தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் பத்தாது. நமக்காக ஏதாவது செய்யவேண்டும். ஒரு நிதி வேண்டும், ஒரு உபகரணம் வாங்கவேண்டும் என்றால் கூட நிதி தேவைப்படுகிறது. இதெல்லாம் எங்கிருந்து வாங்குவது. ஏன் இதை சொல்கிறேன் என்றால் வெளிநாட்டிற்குச் சென்று நிதி கேட்கும் பொழுது இன்றைய காலகட்டத்தில் என்ன சொல்கிறார்கள் என்றால் all the money is a india and china, why are you coming here? என்று கேட்கிறார்கள். இங்கு நிதி உதவி என்று கேட்கப்போனால் TATA மட்டும்தான் நம் மனதிற்கு வருகிறார்கள், தமிழ்நாட்டில் யாருமே இல்லையா.

சிறகுக்கு நேர்காணல் அளித்தமைக்கு நன்றி.

 


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் நிர்வாக இயக்குனர் சுந்தர் அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது