மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

லாங்ஸ்டோன் ஹுக்ஸ்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Dec 22, 2018

siragu Langston_Hughes1

Donald B. Gibson என்ற ஆங்கில கவிதைகளின் விமர்சகர் அவருடைய கறுப்பின கவிஞர்கள் (Modern Black Poets: A Collection of Critical Essays (Prentice Hall, 1973) என்ற நூலில் லாங்ஸ்டோன் ஹுக்ஸ் (Langston Hughes) பற்றிக் கூறும் போது ஹுக்ஸ் இன் கவிதைகள் மற்ற கறுப்பின கவிஞர்களிடம் இருந்து வேறுபட்டது. இவரின் கவிதைகள் முழுவதும் மக்களின், குறிப்பாக கறுப்பின மக்களுக்கானது என்று கூறுகின்றார். ஆம் லாங்ஸ்டோன் ஹுக்ஸ் அமெரிக்க கறுப்பின கவிஞர்களில் ஒரு விடிவெள்ளியாக மின்னியவர். 1902 ஆம் ஆண்டு பிப்ரவரி 1, ஜோப்லினில் பிறந்தவர். (Joplin, Missouri.) ஹுக்ஸ் அவர்களின் இளமைக்காலம் அவரின் பெற்றோரின் மணவிலக்கினால் மிகுந்த போராட்டங்களுக்கிடையே கழிந்தது. இருப்பினும் இந்த போராட்டமே அவரை ஒரு தேர்ந்த கவிஞராவும் உருவாக்கியது எனின் மிகையல்ல.

ஒரு கவிஞராக தன்னை இவ்வுலகிற்கு வெளிப்படுத்துவதற்கு முன்னர், ஒரு சலவைக்காரராக, சமையற்காரராக, பேருந்து நடத்துனராக என பல வேலைகளை தன் வாழ்க்கை ஓட்டத்திற்காக செய்தவர் ஹுக்ஸ். இவரின் முதல் கவிதைத்தொகுப்பு The Weary Blues(1926)வெளிவந்தது. பின் 1930 இல் அவரின் முதல் நெடுங்கதை Without Laughter, (1930) வெளிவந்து இலக்கியத்திற்கான ஹர்மோன் (Harmon) தங்கப் பதக்கத்தை பெற்றது.

ஹுக்ஸ் தான் பால் லாரன்ஸ் டுன்பர், கார்ல் சண்ட்பேர்க் ,வால்ட் விட்மன் ஆகியோரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டதாக பதிவு செய்கின்றார் .அமெரிக்க கறுப்பின மக்களின் வாழ்க்கையை 1920-1960 வரை தன் அனைத்து எழுத்து வடிவங்களிலும் படம் பிடித்து காட்டியவர் ஹுக்ஸ். நெடுங்கதை, சிறுகதை, நாடகம், கவிதை என எழுத்தின் அனைத்து வடிவங்களிலும் ஆற்றல் பெற்றவர். ஜாஸ் (jazz) என்ற இசை வடிவத்தின் மூலம் தன் கவிதைகளை படைப்பதில் முன்னோடியாக திகழ்ந்தவர்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் 1917 ஆம் ஆண்டு அமெரிக்கா உலக போரில் ஈடுபட்டபோது, அமெரிக்காவின் நியூயார்க் மாநிலம் பல ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியது. அவர்கள் ஹார்லெம் (Harlem) என்ற நகரத்தில் குடிபெயர்ந்தனர். அவர்களின் வாழ்க்கை தரம் ஓரளவிற்கு மேம்பட்ட இந்தக்கால கட்டத்தில் தான் ஆப்பிரிக்க அமெரிக்க பண்பாடான ஜாஸ், ப்ளூஸ், நடனம், நாடகம், கலை, கற்பனை, கவிதை என கலை வடிவங்களும் வளர்ச்சி பெற்றன. அந்த மறுமலர்ச்சி காலகட்டத்தில் தான் ஹுக்ஸ் அவர்களின் முக்கியமான கவிதை படைப்பான “The Negro Speaks of Rivers,” (1921) என்ற தொகுப்பு The Crisis என்ற இதழில் வெளிவந்து மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஹுக்ஸ் அவர்களின் The Negro Artist and the Racial Mountain,(1926) என்ற அவரின் சிறப்பு வாய்ந்த கட்டுரையில் ஒரு கலைஞன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று எழுதும்போது, “ஒரு கலைஞன் தனக்கு என்ன வேண்டும் என்று தேர்ந்தெடுப்பதில் கட்டுப்பாடு இருக்க கூடாது என்றும், அதே போன்று ஒரு கலைஞன் தனக்கு வேண்டியதை தேர்ந்தெடுக்கும்போது அவனுக்கு எந்த அச்சமும் இருக்க கூடாது என்றும் கூறுகின்றார். இந்த வாக்கியங்களில் அவர், அவருக்கான எழுதும் உரிமைக்கு மட்டுமல்லாது, அடுத்த தலைமுறை எதை பற்றி எழுத வேண்டும் என்றும், குறிப்பாக கறுப்பின மக்களின் நிலையைப்பற்றியும், அவர்களின் ஒடுக்குமுறை பற்றியும் எழுத வேண்டும் என்றே அழைப்பு விடுப்பதாக எண்ண வேண்டியுள்ளது!.

அதனால் தான் ஹுக்ஸ் கறுப்பின கவிதை உலகை கட்டமைத்தவர் (the architect of the black poetic tradition) என்று அனைவராலும் அன்போடு மதிக்கப்படுகின்றார். அதே கட்டுரையில் “தான் ஒரு கவிஞனாக வேண்டும், ஆனால் கறுப்பின கவிஞனாக அடையாளப்படுத்தப்பட விருப்பம் இல்லை என்று கூறும் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்க கவிஞரின் கருத்து பற்றி தன்னுடைய வருத்தத்தையும், சீற்றத்தையும் பதிவு செய்கின்றார்.

மேலும் அந்த கட்டுரையில்,

We younger Negro artists who create now intend to express our individual dark-skinned selves without fear or shame. If white people are pleased, we are glad. If they are not, it doesn’t matter. We know we are beautiful. And ugly too. The tom-tom cries and the tom-tom laughs. If colored people are pleased we are. If they are not, their displeasure doesn’t matter either. We build our temples for tomorrow, strong as we know how, and we stand on top of the mountain, free within ourselves.

siragu Langston_Hughes3

கறுப்பின கலைஞர்களாகிய நாங்கள், எங்கள் எண்ணங்களை எந்தவித அச்சமோ அல்லது அவமானமோ இல்லாமல் எடுத்துரைக்கின்றோம். அதனை கேட்டு வெள்ளையர்கள் திருப்தியடைந்தால் எங்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றால் எங்களுக்கு அதைப் பற்றி கவலை இல்லை. நாங்கள் அழகானவர்கள் என்று எங்களுக்கு தெரியும், அழகில்லாதவர்களும் கூட. டாம் டாம் அழுகிறான், டாம் டாம் சிரிக்கிறான். கறுப்பர்கள் திருப்தியடைந்தால் எங்களுக்கும் திருப்தி இல்லை என்றாலும் அவர்களின் திருப்தியின்மை பற்றி கவலை இல்லை. எங்களுக்கான கோயில்களை நாங்கள் நாளை கட்டுவோம், உறுதியாக கட்டுவோம். எங்கள் உள்ளத்தில் விடுதலை உணர்வோடு மலை உச்சியின் மீது நின்று கொண்டு கட்டுவோம் என்று எழுதுகின்றார்.

ஹுக்ஸ் அவர்களின் கனவுகள் எனும் கவிதை, அமெரிக்க பள்ளி பாடத்திட்டத்தில் நீங்காத இடம் பெற்றது.

Hold fast to dreams
For if dreams die
Life is a broken-winged bird
That cannot fly.

Hold fast to dreams
For when dreams go
Life is a barren field
Frozen with snow.

கனவுகளை கெட்டியாக
பிடித்துக்கொள்ளுங்கள் ஏனெனில்
கனவுகள் இறந்தால்
வாழ்க்கை பறக்க முடியா
சிறகொடிந்த பறவை

கனவுகளை கெட்டியாக
பிடித்துக் கொள்ளுங்கள்;
ஏனெனில் கனவுகள் மறைந்தால்
வாழ்க்கை பனி உறைந்த
தரிசு நிலம்;

இந்தக் கவிதையினை கேட்டு வளராத அமெரிக்க குழந்தைகளே இருக்க முடியாது! “என் கவிதைகள் பெரும்பாலும் நிற வேறுபாட்டினை அடிப்படையாக கொண்டவை”, என தன் கவிதைகளை பற்றி சுயமதிப்பீட்டில் ஹுக்ஸ் தெரிவிக்கின்றார்.

அவருடைய ஒரு கவிதையான Genius Child இல் அவரின் இளமைக்கால வலிகளை பதிவு செய்திருப்பார்.

Nobody loves a genius child.

Can you love an eagle,

Tame or wild?

Can you love an eagle,

Wild or tame?

Can you love a monster

Of frightening name?

Nobody loves a genius child.

Kill him—and let his soul run wild.

குழந்தை மேதை மேல் யாரும் அன்பு செலுத்துவது இல்லை
ஒரு கழுகின் மீது அன்பு செலுத்த இயலுமா?
முரட்டு தனமற்ற?அல்லது முரட்டுத்தனமான?
ஒரு கழுகின் மீது அன்பு செலுத்த இயலுமா?
முரட்டுத்தனமான? அல்லது முரட்டு தனமற்ற?

திடுக்கிடும் பெயர் கொண்ட
ஒரு கோரஉருவத்தின் மீது அன்பு செலுத்த இயலுமா?
குழந்தை மேதை மேல் யாரும் அன்பு செலுத்துவது இல்லை
அவனை கொன்று விடுங்கள்; அவன் உயிர் முரட்டுத்தனமாக ஓடட்டும் !

The Panther and the Lash” (1967), என்ற கவிதைத்தொகுப்பில் ஒரு ஹைக்கூ போன்று அவர் எழுதிய கவிதை, Corner Meeting – தெருக்கோடி கூட்டம்.

Ladder, flag, and amplifier
now are what the soapbox used to be.

The speaker catches fire,
Looking at listeners’ faces.

His words jump down
to stand
in their
places.

ஏணி, கொடி, மற்றும் ஒலிபெருக்கி
இவை தான் மேடையாக இருக்கும்
கேட்போரின் முகங்கள் கண்டு
பேச்சாளர் சொற்களில் அனல் பறக்கும்
அவரின் சொற்கள்
சரியான இடத்தில்
நிற்க கீழிறங்கி குதிக்கும்

இவ்வாறு தன் கவிதைகள் மூலம் புரட்சிகர சமூகத்தை படைக்க உந்திய ஹுக்ஸ் மே 22, 1967 ஆம் ஆண்டு புற்று நோயின் தீவிரத்தால் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரின் பாடல்கள் என்றும் நிலை பெற்று இருக்கும்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “லாங்ஸ்டோன் ஹுக்ஸ்”

அதிகம் படித்தது