நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

‘ வந்தேமாதரம்’ என்ற பெயரில், கல்வியிலும் மதவாதமா ….!

சுசிலா

Jul 29, 2017

Siragu vandhe maadharam2

கல்வி என்பது எல்லோருக்கும் பொதுவானது. பல மதங்கள், இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் கடந்து நம் அறிவை வளர்த்துக்கொள்ளும் சாதனமாக இருப்பது கல்விமுறைதான். அதுவும் இந்தியா போன்ற பன்முகத்தன்மையுள்ள, மதசார்பற்ற ஒரு துணைக்கண்டத்தில், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை போற்றுவதும், ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தூற்றுவதுமாக இருப்பதென்றால், அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா.? தற்போதுள்ள மதவாத பாசக அரசு மென்மேலும் மதவாதத்தை தூண்டும் விதமாகவே செயல்பட்டு வருவது மிகவும் வருத்தத்துக்குரியது… கடும் கண்டனத்துக்குரியது.!

இரு தினங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. எம்.எஸ். முரளிதரன் கூறியிருப்பது மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது எனலாம். ‘வந்தே மாதரம்’ பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்பது தான் அது. கல்வி நிலையங்களில் வாரம் ஒருமுறையும், அரசு அலுவகங்களில் மாதம் ஒரு முறையும் பாடப்பட வேண்டும் என்ற ஒரு கூற்று… இது நம் அரசமைப்புச் சட்டத்தில் சொல்லப்பட்டிருக்கும் மதச்சார்பின்மைக்கு எதிரானதாகும். இந்தப் பாடல் எதற்காக எழுதப்பட்டது, எதை முன்னிருத்தி பாடப்பட்டது என்ற விவரங்கள் அவருக்குத் தெரிந்து தான், இப்படி சொல்லி இருப்பாரா என்பது சந்தேகமாகவே உள்ளது. இந்தத் திணிப்பு எதற்கு என்பது மிக முக்கிய கேள்வியாக இருக்கிறது. இப்பாடலைப்பற்றி சிறிது பார்ப்போம்.

வங்காளத்தைச் சேர்ந்த, பக்கிம் சந்திர சட்டர்ஜி என்பவர் எழுதிய ‘ஆனந்த மடம்’ என்ற நாவலில் இடம்பெற்றுள்ள பாடல் தான் இந்த வந்தேமாதரம் என்ற பாடல். இந்து மதத்தில், முப்பெரும் தேவிகளாக கூறப்படும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று பெண் கடவுள்களை துதிப்பதாக உள்ளது. இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது இப்பாடல், தேசப்பற்றுக்காகவும், நாட்டு விடுதலைக்காகவும், ஆங்கில ஆட்சிக்கு எதிராகவும் பாடப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாக இந்நாவலில் வருகிறது. அப்போது முஸ்லிம்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். அவர்களின் நெறிப்படி, இந்துக்கடவுள்களை துதிப்பதாக உள்ள பாடலை ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர். ‘ஆனந்தமடம்’ நாவலின் கதையம்சமே, இசுலாமியர்களை இழித்தும், பழித்தும் சொல்லப்படுபவையாகவே இருக்கும். அவர்களை நாட்டைவிட்டு துரத்த வேண்டும் என்ற பாணியிலேயே அக்கதை நகரும்.

Siragu vandhe maadharam1

அந்த நாவலின் கதாநாயகனுக்கு, அவன் நண்பனுக்கும் இடையே நடைப்பெறும் உரையாடல்,

‘நமது மதம் போச்சு, வருணாசிரமதர்மம் போச்சு, இப்போது நம் உயிருக்குக் கூட ஆபத்து வந்து விட்டது இந்த முஸ்லிம்களை விரட்டா விட்டால், நமது இந்து மதத்தை காப்பாற்றவே முடியாது.’உடனே, ‘ முஸ்லிம்களை கொல்லு, கொல்லு..’ என்று ஒரே ஆர்ப்பாட்டம்… கொக்கரிப்பு என முழக்கமிட்டுக்கொண்டே, அதனைத் தொடர்ந்து, ‘ வந்தேமாதரம்’ பாடல் பாடப்படுகிறது.

இது தான் இந்தப் பாடலின் கருத்து. இப்பாடலை தேசியகீதமாக ஆக்க வேண்டும் என்று முயற்சி செய்தார்கள். அப்போது வங்க த் தலைவர்களாக விளங்கிய, இரவீந்திரநாத் தாகூர், எம்.என்.ராய், சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர்கள், முஸ்லிம்களை வெறுக்கும் கருத்தைக்கொண்ட இப்பாடல் அனுமதிக்கப்படக்கூடாது என்று தங்கள் கருத்தில் உறுதியாக இருந்ததால், அந்த யோசனை கைவிடப்பட்டது. மேலும் அப்போது நம் மாநில ஆட்சிப் பொறுப்பில் இருந்த, திரு. ராஜகோபாலச்சாரியார், சட்டமன்றத்திலும் படபட வேண்டும் என்றார். அப்போதும் எதிர்ப்பு கிளம்பவே அந்த முயற்சி கைவிடப்பட்டது.
இது தான் வந்தேமாதரம் பாடலின் வரலாறு. வரலாற்று உண்மை இப்படியிருக்க, இன்று இம்மாதிரி ஒரு சட்டம் போடப்படுகிறது என்றால், நாட்டின் மதச்சார்பின்மைக்கு குழித்தோண்டிப் புதைக்கப்படுகிறது என்று தானே பொருள்.!

நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் இரவு உணவு உண்ணாமலேயே உறங்க செல்கின்றனர் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. இன்னும் நம் கிராமங்களில் கழிப்பறை வசதி இல்லை. ஏன்… பள்ளிக்கூடத்திலேயே கழிப்பறை வசதி இல்லாமல் மாணவர்கள் சிரமப்படுகிறார்கள். மக்கள் உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இருப்பிடமும், அடிப்படை வசதியில்லாமல், வாழும் ஒரு நாட்டில் இம்மாதிரியான சட்டங்கள், ஆலோசனைகள் தேவையா… மேலும், பல மதத்தினர் பயிலும் கல்வி நிலையங்களில், இம்மாதிரியான பாடல்கள் பாடப்படுவது, மாணவர்களிடையே மதவெறியை ஊட்டுவதற்கு ஏதுவாக அமையாதா…!

இதனை கட்டாயம் உயர்நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். நாட்டின் ஒற்றுமை நிலவ வழி வகுக்க வேண்டும். மதச்சார்பின்மை என்பது எந்த மதத்தையும் சாராதது என்றுதான் பொருள். ஆனால் அக்கருத்தே தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, ‘எம்மதமும் சம்மதம்’ என்ற பார்வையில் தான் இதுவரை அரசாங்கம் செயல்பட்டு வந்திருக்கிறது. இதையெல்லாம் விழுங்குவது போல், தற்போதுள்ள மதவாத பாசக அரசு, இந்து மதத்தை மட்டுமே தூக்கி நிறுத்தும் செயலில் இறங்கி இருக்கிறது. தேசப்பற்று என்ற ஒரு மாயையில், இந்துமதவெறியை ஊட்டுவதில் அதி மும்முரமாக ஈடுபடுகிறது.!

மக்களாகிய நாம், இதனை உணர்ந்து, மதவெறிக்கு ஆளாகாமல், மத கலவரங்களுக்கு துணை போகாமல், ஒற்றுமையுடனும், சகோதரத்துவத்துடனும் வாழ உறுதியேற்போம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “‘ வந்தேமாதரம்’ என்ற பெயரில், கல்வியிலும் மதவாதமா ….!”

அதிகம் படித்தது