வள்ளலாரின் கொள்கைகளும், செயல்பாடுகளும்
சு. தொண்டியம்மாள்Jul 10, 2021
வள்ளலார் சன்மார்க்க நெறி நின்றவர். சன்மார்க்க நெறி நிற்க அனைவரையும் வழிப்படுத்தியவர். சமரசமாக வாழவும், நோயின்றிப் பசியின்றி சமுதாயம் நெறிப்பட வாழ வழி காட்டியவர். அவரின் நெறிகள் மனித வாழ்க்கை முறையை நெறிப்படுத்தும் நோக்கின. சிறு தெய்வங்களை விலக்கி, அருட்பெருஞ்சோதி பெருங்கடவுளை உலகிற்கு அறிமுகம் செய்து, அவரே பெருங்கடவுள் என்று நிறுவியர். செத்தாரை மீள எழுப்பவும் சாக வாழ்க்கை வாழவும் வழி சொன்னவர். தன் கொள்கையை நிறுவனமாக்கி நிலைத்து நிற்கச் செய்தவர். அவரின் கொள்கைகளை திருவருட்பாவின் ஆறாம் திருமுறையில் பரக்கக் காணமுடிகின்றது.
அவரின் சன்மார்க்க நெறிகளைப் பின்வரும் பாடல்கள் எடுத்துரைக்கின்றன.
கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக
அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க – தெருள்நயந்த
நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்
தெல்லோரும் வாழ்க இசைந்து. (சன்மார்க்கநிலை -5)
சன்மார்க்க நிலை என்பது கருணை மிக்க ஆட்சியில் ஏற்படும் நிலையாகும். நன்மார்க்கர் ஆளும் ஆட்சியும் அதுவேயாகும். எல்லோரும் நன்று நினைந்து இசைந்து வாழ்தலே சன்மார்க்கமாகும்.
புல்லொழுக்கம் எல்லாம் புணரியிடைப் போய்ஒழிக
நல்லொழுக்கம் ஒன்றே நலம்பெறுக – இல்லொழுக்கில்
செத்தார்கள் எல்லாம் திரும்ப எழுந்துமனம்
ஒத்தாராய் வாழ்க உவந்து. (சன்மார்க்க நிலை-6)
தவறான ஒழுக்கம் எல்லாம் கடலில் வீழ வேண்டும். நல்லொழுக்கம் ஒன்றே நலம் பெற வேண்டும். செத்தவார் சாக வாழ்க்கை வாழ வேண்டும் என்று சன்மார்க்க வாழ்க்கை நெறி குறித்து வள்ளலார் பாடுகிறார்.
செத்தார் எழுக சிவமே பொருள்என்றே
இத்தா ரணியில் இருந்தொளிர்க – சுத்தசிவ
சன்மார்க்கம் ஒன்றே தழைக்க தயவறியாத்
துன்மார்க்கம் போக தொலைந்து. (சன்மார்க்க நிலை 7)
தயவு அறிந்த நன்மார்க்கம் சன்மார்க்கம். தயவு அறியா துன்மார்க்கம் ஒழிய வேண்டும் என்று கருணை வாழ்க்கையாக சன்மார்க்க வாழ்க்கை அமைவதை வள்ளலார் காட்டுகிறார்.
செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்
சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே – சுத்தசிவ
சன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும்
என்மார்க்கம் நின்மார்க்க மே. ( சன்மார்க்க நிலை 8)
சன்மார்க்கத்திற்கு இறைவனே தலைவர். அவர் வழியில் தன் மார்க்கம் செல்வதாக வள்ளலார் கருதுகிறார். மேலும் சாக வாழ்க்கை சன்மார்க்க வழி பெறலாம் என்றும் சன்மார்க்க வாழ்வை வெற்றி வாழ்வாகக் காட்டுகிறார் வள்ளலார்.
இவ்வாறு தயவான வாழ்க்கை மகிழ்வான வாழ்க்கை, அருளான வாழ்க்கை சன்மார்க்க வாழ்க்கையாகும். இவ்வாழ்க்கையை வாழ வடலூர் தலைநகரம் என்றால் ஆங்காங்கே உள்ள சன்மார்க்க கிளைநிலையங்கள் அன்பு அரங்கங்கள் ஆகும். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சன்மார்க்க சங்க நிலையங்கள் அமைக்கப்பெற்றுள்ளன. இதன் வழி சன்மார்க்கம் வளர்ந்து சன்மார்க்கிகள் உருவாகிறார்கள். கருணை வாழ்வு மனித குலத்திற்குக் கிடைக்கிறது.
சன்மார்க்க சங்க தோற்றம்
வடலூருக்கு அடுத்து கருங்குழியில் வள்ளலார் தங்கியிருந்தபோது அதாவது 1865 ஆம் ஆண்டு சமரச வேத சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பினை நிறுவினார். 1872 ஆம் ஆண்டில் இவ்வமைப்பு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று பெயர் மாற்றம் பெற்றது. இதன் பிறகு வள்ளலார் கொள்கைகளின் வழி நிற்பவர்கள் இவ்வமைப்பினை ஊர்கள் தோறும் தொடங்கினர்.
இதன் துணை அமைப்பாக விளங்குவது சத்திய தரும சாலை என்பதாகும். சத்திய தரும சாலை என்பது 1867 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 11 ஆம் நாள் வள்ளலாரால் நிறுவப்பட்டது. இது பசி போக்கும் அமைப்பாகும். இன்னமும் இவ்வமைப்பு தன் பசி போக்கல் பணியைச் செய்து வருகிறது. என்றும் செய்யும் அளவிற்கு இது வள்ளலாரின் நினைவைப் போற்றும் வகையில் நடைபெற்றுவரும்.
தொண்டி சத்திய தரும சாலை
இராமநாதபுர மாவட்டம், இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டு, சித்தரை முதல் நாள் அன்று தொண்டியில் சத்திய தரும சாலை தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கியவர் தொண்டியைச் சார்ந்த திரு நா. திருமலை என்பவர் ஆவார். திருமலை என்பவர் சித்தர்களின்மீது, கொண்ட பற்றின் காரணமாக வள்ளலார் அவருக்கு அறிமுகம் ஆனார். தொண்டிக்கு அருகில் உள்ள மேலூர், ஆவுடையார் கோயில் போன்ற இடங்களில் சன்மார்க்க அமைப்புகள் இருந்ததன் வாயிலாக திருமலை என்பவருக்கு, இவ்வமைப்பின் மீது பற்று ஏற்பட்டுள்ளது. எனவே அவர் வள்ளலார் நெறிப்படி பசி போக்கும் ஜீவகாருண்யப் பணியை, நாள்தோறும் மூன்று வேளையும் உணவு வழங்கும் முறைமையை ஏற்றுக்கொள்கிறார். இவ்வுணவு வழங்கலை மேலூர் சார்ந்த அன்பர்கள் துவங்கி வைத்துள்ளனர்.
அமைவிடம்
இவ்வமைப்பு தொண்டியில் கடற்கரைப் பகுதியில் அமைந்து உள்ளது. இவ்விடம் இராமநாதபுர தேவஸ்தானத்திற்குச் சொந்தமானது. இவ்விடத்திற்கு ஆண்டுதோறும் ஒருதொகை வழங்கப்பட்டு வருகிறது.
உணவுக் கூடம் சமையலறை போன்ற அமைப்புகள் கொண்ட இடமாக இது விளங்குகின்றது. உணவுக் கூடத்தில் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் எழுந்தருளச் செய்யப்பெற்று நாள்தோறும் வணங்கப்படுகிறார்.
வழிபாடு
தொண்டி சன்மார்க்க நிலையத்தில், அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஒளி வடிவில் வள்ளலார் சொன்ன முறைப்படி வணங்கப்படுகிறார். இங்குக் கூட்டுவழிபாடு, அகவல் வாசிப்பு போன்றன நடைபெறுகின்றன. அருட்பெருஞ்சோதி வழிபாடு அணையா விளக்காக போற்றப்பெற்று வணங்கப்பெற்று வரப்பெறுகிறது. அருட்பெருஞ்சோதி வழிபாட்டை வள்ளலார்
தானந்தம் இல்லாததன்மையைக் காட்டும்
சாகாத கல்வியைத்தந்தெனக் குள்ளே
தேனந்தத் தெள்ளமுதூற்றிப் பெருக்கித்
தித்தித்துச் சித்தம்சிவமய மாக்கி
வானந்தம் ஆதியும்கண்டுகொண் டழியா
வாழ்க்கையில்இன்புற்றுச் சுத்தவே தாந்த
ஆனந்த வீதியில் ஆடச்செய்தீரே
அருட்பெருஞ்ஜோதிஎன் ஆண்டவர் நீரே.
(அருட்பெருஞ்சோதி என் ஆண்டவர் -3)
என்ற நிலையில் அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் பெருமைகளை வள்ளல் பெருமான் சுட்டுகிறார். அவ்வப் பெருமைகளோடு உள்ள இறைவனை தொண்டியில் காட்டி நிற்கும் அமைப்பாக தொண்டி சத்திய சன்மார்க்க சங்கம் விளங்குகிறது.
செயல்பாடுகள்
காலையில் சன்மார்க்க நெறிப்படி கஞ்சி வார்த்தல் நடைபெறுகிறது. மதியம் முழு உணவும், வெள்ளிக் கிழமைதோறும் வடை பாயசத்துடன் உணவும் வழங்கப்படுகிறது. கொராணா தீநுண்மி காலத்திலும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பெற்றன. எக்காலத்தும் தடைபடாமல் இப்பணி வள்ளலார் கருணையால் நடைபெற்றுவருகிறது.
சன்மார்க்க அன்பர்கள் தம் குடும்ப விழாக்களின் போதும், சிறப்பு வழிபாடுகளுக்காகவும் அன்பளிப்புகளைக் கொடையாக வழங்கி இவ்வமைப்பினைப் புரந்து வருகிறார்கள்.
இவ்வமைப்பு மட்டுமல்லாமல் தற்போது தேவிப்பட்டிணம்,மீமிசல்,மணமேல்குடியிலும் சத்திய சன்மார்க்க சங்கம் நிறுவப்பெற்றுள்ளது. இவ்வமைப்பும் பசிபோக்கி ஜீவகாருண்யம் வளர்க்கிறது.
சீவகாருணிய ஒழுக்கத்தில் அபரசீவகாருணிய மென்றும் பரசீவகாருணியமென்றும் இருவகையாம். அவற்றில் பசிநீக்கலும் கொலைநீக்கலும் பரசீவகாருணிய மாதலால் விசேஷமாகக் குறிக்கப்பட்டதென்றறிய வேண்டும். அன்றியும் பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்குப் பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுடையவர்கள் தாகம் நீங்குதற்குத் தண்ணீர் கொடாமலிரார்கள். தண்ணீர் கொடுப்பது பிரயாசமுமல்ல. தண்ணீர் ஏரி குளம் கால்வாய் முதலான இடத்து மிருக்கின்றது. தாகத்தால், மாற்றிக் கொள்ளத்தக்க ஏகதேச அபாயம் நேரிடுமேயல்லது, அதனால் தேகத்திற்கு பிணி நேரிடாது; பசியினால் மாற்றிக் கொள்ளக்கூடாத கெடுதி தேகத்திற்கு நேரிடும். பசியினால் வருந் துன்பத்தை நிவர்த்தி செய்விக்கத் தக்க தயவுடையவருக்குப் பிணியினால் வருந்துன்பத்தை நிவர்த்தி செய்விப்பதற்கு தயவுண்டாகாமலிராது. பசி மிகுதியினாலேயே பிணிகள் விருத்தியாகின்றன. ஆகாரப் பக்குவங்களாலேயே அப்பிணிகள் நீங்குகின்றன.
பிணிகளுக்கு வேறு மருந்து கொடுப்பினும், பத்திய ஆகாரமே தேகம் நிற்பதற்கு அவசியமான ஆதாரமாயிருக்கின்றது. பிணியோடு தேகத்தை நெடுநாள் வைத்திருக்கக் கூடும். ஒரு நாளாகிலும் ஆகாரமில்லாமல் தேகத்தை வைத்திருக்கக் கூடாது. பசித்தவர்களுக்கு ஆகாரத்தால் பசி நீக்குவிக்கின்ற தயவுடையவர்களுக்கு, இச்சையால் வருந் துன்பங்களை நீக்குவிப்பதற்குத் தயவு வராமலிராது. சீவர்களுக்கு உள்ளபடி பசி நேரிடுமாகில் ஆகாரத்திலல்லது மற்றொன்றிலும் இச்சையே இராது. ஆகாரங் கிடைக்கில் உண்டு பசி தீர்ந்தவர் தம் இச்சையைச் சிறிய முயற்சிகளால் முடித்துக் கொள்ளவுங்கூடும்; அல்லது சமாதானஞ் செய்து கொள்ளவுங்கூடும்; இச்சையோடு பல நாள் தேகத்தை வைத்திருக்கலாம்; பசியோடு ஒரு நாளும் வைத்திருக்க முடியாது. (ஜீவ காருண்ய ஒழுக்கம் பகுதி -1) என்ற வள்ளலாரின் உரைநடை பசி போக்கலின் நன்மையைத் தேவையை எடுத்துரைப்பதாக உள்ளது. இதன்வழி நாளும் பசி போக்கி நலம் பயந்து சன்மார்க்க வாழ்வை நடத்து உறுதுணையாக தொண்டி சத்திய தரும சாலை இயங்கி வருகிறது.
தொண்டி கடற்கரை என்பது மீன்பிடி துறைமுகமாகும். இங்கு முக்கியத் தொழிலே மீன் பிடித்தல் ஆகும். இத்தொழிலுக்கு இடையில் தொழிலாளர்களுக்கு இடையில் சன்மார்க்கம் பரவ உழைத்து வருகிற அமைப்பாக சத்திய தரும சாலை விளங்கிறது. இதன் பணி தொடர வள்ளல் பெருமானின் கருணை முன் நிற்கிறது என்பதில் ஐயமில்லை.
சு. தொண்டியம்மாள்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “வள்ளலாரின் கொள்கைகளும், செயல்பாடுகளும்”