நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

வள்ளலார் கண்ட இறைமுகம்

முனைவர் மு.பழனியப்பன்

May 8, 2021

siragu Vallalar1
அருட்பிரகாச வள்ளலார் பன்முகத் தன்மை கொண்டவர். அவர் ஒரு ஞானி. இறைவனை நேரில் கண்டவர். சுத்த சன்மார்க்க நெறி தந்தவர். அதன்படி வாழ்ந்தவர். பசிப்பிணி போக்குகிற மருத்துவர். சித்த மருத்துவர். வாழ்வியல் வழிகாட்டி உரைநடையாளர். கவிஞர், அருளாளர், மென்மையானவர். அடங்கி வாழ்ந்தவர். இவ்வாறெல்லாம் அவரின் பன்முகத்தன்மைகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இவற்றையெல்லாம் தாண்டி இறைவனை ஒளி வடிவில் அருட்பெருஞ்சோதி ஆண்டவராகக் கண்டவர். அவர் கொண்ட வழிபாடு ஒளி வழிபாடு அசைவற்ற நிலையான ஒளியாக இறைவனைக் கண்டவர். சாதி, மத பேதமற்ற நிலையில் அவரின் வழிபாடு தொடர்ந்துகொண்டுள்ளது.

இறைவன் இப்படித்தான், இந்நிறந்தான் கொண்டிருப்பார் என்று பலரும் சொல்லுகிறார்கள். இறைவன் இந்த மொழி, இந்த ஆடைதான் உடுத்துவான் என்று சொன்னவர்களும் உண்டு. வள்ளலார் உண்மையாக இறைவனை இறைநிலையைக் கண்டு உணர்ந்தவர். அவ்வாறு தான் கண்டுணர்ந்த இறைநிலையை முழுவதும் எடுத்துரைத்தவர். கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்ற மொழிக்கு மாற்றாக கண்டதை விண்டவர். விண்டதைக் கண்டவர் அருட்பிரகாச வள்ளலார்.

அவரின் ஆறாம் திருமுறையில் இறை திருக்காட்சி என்ற முப்பது பாடல்கள் கொண்ட பகுதி அமைந்துள்ளது. இப்பாடல்கள் அனைத்தும் வள்ளலார் கண்ட இறைவனின் தன்மைகளை எடுத்துரைக்கும் பாடல்களாகும். இவற்றின் வழியாக வள்ளலார் கண்ட இறைவனின் முழுத்தன்மையை உணர்ந்து கொள்ள முடிகின்றது. இதனை இக்கட்டுரை எடுத்துரைக்கின்றது.
இரவில் காட்சி தந்த இறைவன்

அருட்பிரகாச வள்ளலாருக்கு இறைவன் காட்சி தருகிறான். இவரின் இளமைப் பருவத்தில் பெற்றோர்கள் இவரைச் சிதம்பரத்திற்கு அழைத்துக் செல்கிறபோது அங்கு சிதம்பர ரகசியத்தைத் திரை நீக்கிக் காட்டுகிறார்கள். இத்தி்ரை நீக்கமே வள்ளலாரின் இறைக்காட்சிக்கு அடிப்படையாக அமைந்து அவர் எழு திரை நீக்கி அருட்பெருஞ்சோதி ஆண்டவரை மக்களுக்குக் காட்டினார்.
‘சிதம்பர ஒளியைச் சிதம்பர வெளியைச்
சிதம்பர நடம்புரி சிவத்தைப்
பதந்தரு பதத்தைப் பரம்பர பதத்தைப்
பதிசிவ பதத்தைத் தற்பதத்தை
இதந்தரும் உண்மைப் பெருந்தனி நிலையை
யாவுமாய் அல்லவாம் பொருளைச்
சதந்தருஞ் சச்சி தானந்த நிறைவைச்
சாமியைக் கண்டுகொண் டேனே.” (திருக்காட்சி 16)
என்ற இத்திருப்பாடலில் சிதம்பரத்தில் உள்ள இரகசியமாகக் கருதப்படும் வெளி வடிவான இறைவனை ஒளி வடிவில் கண்டுகொள்கிறார் வள்ளலார். சிதம்பர இறைவன் பதந்தரும் இறைவனாக, பரம்பர இறைவனாக, பதிசிவபதத்து இறைவனாக, பெருந் தனி நிலை இறைவனாக. சச்சி்தானந்த இறைவனாக வள்ளலாருக்குச் சிதம்பர ஒளியாகக் காட்சி தந்துள்ளார் என்பது இங்கு உறுதியாகின்றது.
சமயமும் மதமும் கடந்ததோர் ஞான
சபைநடம் புரிகின்ற தனியைத்
தமைஅறிந் தவருட் சார்ந்தமெய்ச் சார்வைச்
சத்துவ நித்தசற் குருவை
அமையஎன் மனத்தைத் திருத்திநல் லருளா
ரமுதளித் தமர்ந்தஅற் புதத்தை
நிமலநிற் குணத்தைச் சிற்குணா கார
நிதியைக் கண்டுகொண் டேனே. (திருக்காட்சி 19)
இப்பாடலிலும் ஞானசபை தனிலே நடம் புரிகின்ற தனியை என்ற குறிப்பினால் சிதம்பர இறைவன் இவர் கண்ட இறை தெய்வம் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது. இவ்விறைவன் சாதி, மதங்கள் போன்ற பேதமற்ற சமரச சன்மார்கத்தின் அடிப்படையில் விளங்குபவன் என்று வள்ளலார் தான் கண்ட இறைக் காட்சியைத் திருவருட்பாவில் எடுத்துரைக்கிறார்.
அளவைகள் அனைத்தும் கடந்துநின் றோங்கும்
அருட்பெருஞ் சோதியை உலகக்
களவைவிட் டவர்தங் கருத்துளே விளங்கும்
காட்சியைக் கருணையங் கடலை
உளவைஎன் றனக்கே உரைத்தெலாம் வல்ல
ஒளியையும் உதவிய ஒளியைக்
குளவயின் நிறைந்த குருசிவ பதியைக்
கோயிலில் கண்டுகொண் டேனே (திருக்காட்சி 20)
மேற்பாடலில் தான் கண்ட இறைவன் இவர்தான் என்று சுட்டி நிற்கிறார் அருட்பிரகாச வள்ளலார். அளவைகளால் காண முடியாத பெருமை உடைய அருட்பெருஞ்சோதியே தாம் கண்ட கடவுள் என்று குறிக்கிறார் வள்ளலார். அக்கடவுளைக் கோயிலில் கண்டு கொண்டேனே என்று உரைப்பதன் வாயிலாகக் கோயில் என்பது சிதம்பரத்தைக் குறிக்கும் திருமுறைச் சொல்லாகும். எனவே வள்ளலாரின் மூலமாகிய தெய்வம் சிதம்பரத்தில் நடம் புரியும் பெருமான் என்பது தெளிவாகின்றது.

இந்த இறைவன் வள்ளலாருக்கு இரவுப் பொழுதில் காட்சி தந்தான் என்பதை மற்றுமொரு பாடல் விளக்குகிறது.
புன்னிக ரில்லேன் பொருட்டிருட் டிரவில்
போந்தருள் அளித்தசற் குருவைக்
கன்னிகர் மனத்தைக் கரைத்தெனுட் கலந்த
கருணையங் கடவுளைத் தனது
சொன்னிகர் எனஎன் சொல்எலாங் கொண்டே
தோளுறப் புனைந்தமெய்த் துணையைத்
தன்னிக ரில்லாத் தலைவனை எனது
தந்தையைக் கண்டுகொண் டேனே. (திருக்காட்சி 10)
என்ற இப்பாடலில் இறைவன் இரவுப் பொழுதில் வள்ளலார் முன் தோன்றி மனத்துள் கலந்துள்ளார் என்பதை அறிந்துகொள்ளமுடிகின்றது. இறைவன் அவருக்குத் துணையாகவும், தலைவனாகவும், தந்தையாகவும் விளங்கினான் என்பதையும் வள்ளலார் உரைக்கின்றார்.
இவ்வகையில் சிதம்பரப் பேரொளி இரவு நேரத்தில் திரைநீக்கி தன் மெய் உருவினை அருட்பிரகாச வள்ளலாருக்குக் காட்டினார் என்பதை உணரமுடிகின்றது.

சிதம்பர இறைவனை வள்ளலார் தான் கண்ட உத்தர ஞான சிதம்பரத்தில் வந்து அமரச் செய்கிறார். தில்லையில் மேடைமீது யாரும் அணுக இயலாமல் உள்ள இறைவனை வடலூர், பார்வதிபுரம் என்று உலகத்தவர்களால் அழைக்கப்பெறும் இடமான, உத்தர ஞான சித்தி புரமான தலத்தில் வள்ளலார் குடிபுகச் செய்து அங்கு சமரச சுத்த சன்மார்க்க நெறியில் வழிபாடு இயற்றுகிறார்.
‘‘உத்தர ஞான சித்திமா புரத்தின்
ஓங்கிய ஒருபெரும் பதியை
உத்தர ஞான சிதம்பர ஒளியை
உண்மையை ஒருதனி உணர்வை
உத்தர ஞான நடம்புரி கின்ற
ஒருவனை உலகெலாம் வழுத்தும்
உத்தர ஞான சுத்தசன் மார்க்கம்
ஓதியைக் கண்டுகொண் டேனே.” (திருக்காட்சி 28)
என்ற இப்பாடலின் வழி உத்தர ஞான சித்திமாபுரம் சென்றால் வள்ளலார் கண்ட இறைவனை, அங்கு நிலை நிறுத்திய இறைவனை அனைவரும்கண்டு கொள்ள முடியும் என்பதை உணரமுடிகின்றது.
ஆதியை ஆதி அந்தமீ தெனஉள்
அறிவித்த அறிவைஎன் அன்பைச்
சோதியை எனது துணையைஎன் சுகத்தைச்
சுத்தசன் மார்க்கத்தின் துணிபை
நீதியை எல்லா நிலைகளும் கடந்த
நிலையிலே நிறைந்தமா நிதியை
ஓதியை ஓதா துணர்த்திய வெளியை
ஒளிதனைக் கண்டுகொண் டேனே.(திருக்காட்சி 8)
என்ற இப்பாடல் வழியாக சுத்த சன்மார்க்க துணிபு, சோதி , வெளி போன்ற இயல்புகளை உடையவராக அருட்பெருஞ்சோதி ஆண்டவர் விளங்குகிறார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
என்செயல் அனைத்தும் தன்செயல் ஆக்கி
என்னைவாழ் விக்கின்ற பதியைப்
பொன்செயல் வகையை உணர்த்திஎன் உளத்தே
பொருந்திய மருந்தையென் பொருளை
வன்செயல் அகற்றி உலகெலாம் விளங்க
வைத்தசன் மார்க்கசற் குருவைக்
கொன்செயல் ஒழித்த சத்திய ஞானக்
கோயிலில் கண்டுகொண் டேனே. (திருக்காட்சி 9)
என்ற பாடலில் என் செயல்கள் அனைத்தும் கடவுள் தம் செயல்கள் என்று காட்டி கடவுளின் வழியில் தான் இயங்குவதாகத் தெரிவிக்கிறார். சிதம்பரக் கோயிலில் இருந்த தெய்வத்தினை சத்திய ஞான சபை என்ற ஞானக்கோயில் கண்டவர் வள்ளலார் என்பதும் இப்பாடல் வழி தெரியவருகிறது. மேலும் வன் செயல்கள் அனைத்தையும் அழித்து நன் செயல்கள் புரியச் செய்பவரும் சோதி ஆண்டவர் என்பதும் இங்கு உறுதிப்படுகின்றது.

இறைஞான நிலையில் துரியம் கடந்து பெரு வெளியாக ஒளியாக இறைவன் நிற்கிறார். இதனை
நனவிலும் எனது கனவிலும் எனக்கே
நண்ணிய தண்ணிய அமுதை
மனனுறு மயக்கம் தவிர்த்தருட் சோதி
வழங்கிய பெருந்தயா நிதியைச்
சினமுதல் ஆறுந் தீர்த்துளே அமர்ந்த
சிவகுரு பதியைஎன் சிறப்பை
உனலரும் பெரிய துரியமேல் வெளியில்
ஒளிதனைக் கண்டுகொண் டேனே (திருக்காட்சி 13)
என்ற நிலையில் துரிய மேல் வெளியில் ஒளியாக நிற்கிறான் இறைவன். அவனையே அருட்பெருஞ்சோதி ஆண்டவராகத் தான் வணங்குகிறேன். காண்கிறேன் என்று வள்ளலார் கூறும்போது அவர் பெற்ற ஞானக் காட்சி புலனாகின்றது. கனவிலும் நனவிலும் வந்து ஆட்கொண்டு சினம் முதலான ஆறு கொடுஞ்செயல்களையும் களைந்து, உள்ளத்தில் அமர்ந்த தலைவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்று தான் கண்ட இறைக்காட்சியை வள்ளலார் திருக்காட்சியாக வெளிப்படுத்துகிறார். இத்திருக்காட்சியை வள்ளலார் நெறி நின்றால் எவரும் காண இயலும் என்பதே உண்மை.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வள்ளலார் கண்ட இறைமுகம்”

அதிகம் படித்தது