டிசம்பர் 3, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

வள்ளுவர் கண்ட மக்களாட்சி

சு. தொண்டியம்மாள்

May 22, 2021

 siragu thiruvalluvar1

முப்பால் எனப்படும் திருக்குறளின் நடுவாக அமைந்த பால் பொருட்பால் ஆகும். இப்பொருட்பால் அரசும் சமுதாயமும் நிறைவான வாழ்வு வாழ   வழிகோலும் முறையைச் சொல்கிறது. மக்கள் யாவரும் சமம், மனிதரிடையே ஏற்றத்தாழ்வு யாதுமில்லை, யாரும் எப்பணியையும் மேற்கொண்டு அறத்தின் வழியே வாழ்வு நடத்த முடியும்.

வள்ளுவரின் சமுதாய நோக்கு என்பது பல அதிகாரங்களில்     வெளிப்படுத்தப்பெற்றுள்ளது. அவற்றில் ஒன்று அவையறிதல் என்பதாகும். அவை என்பது பல்லோர் ஒருங்கிணைந்து அமைந்திருக்கும் இடமாகும். முக்கியமான முடிவுகள் எடுக்கும் இடமாகும். இவ்விடத்தை வள்ளுவர் கண்ட சமுதாயமாகக் கொள்ள இயலும்.

இந்த அவையறிதல்  அதிகாரத்தில் அமைந்த குறட்பாக்களின் கருத்துகளைத் தொகுத்து உரைப்பதன் வாயிலாக சமுதாயம் சார்ந்த வள்ளுவரின் கருத்துகளை அறிந்து கொள்ள முடியும்.

அவை

அவை, மன்றம், கழகம் என்பன ஒரு பொருள் தரும் சொற்கள். அவை என்பதற்கு ஒரு கருத்தை மற்றவர்க்குச் சொல்லும் இடம் என்று பொருள் கொள்ளலாம். வள்ளுவர் காலத்தில் சான்றோர் அவை, பொதுமக்கள் அவை, தொழிலாளர் அவை, புலவர் அவை என பல அவைகள் இருந்துள்ளன. இவ்வதிகாரத்துள் புல்லவை, தம்கணத்தார் அல்லாதார் கோட்டியார் அவை, ஒள்ளியார் அவை, முதுவர் அவை  என்று பல அவைகளும் குறிக்கப்பெற்றுள்ளன.

ஒரு அவையில் ஒரு கருத்தைச் சொல்லச்  செல்வோர் அந்த அவையில் இருப்போர் பற்றியும், அவையின் இயல்பு பற்றியும் தெரிந்து கொண்டு செல்ல வேண்டும்  என்ற அடிப்படைக் கருத்தை மையமாகக் கொண்டது அவையறிதல் அதிகாரமாகும்.

மக்களாட்சி  தத்துவத்தின் அடிப்படையைக் காட்டும் அவையறிதல் அதிகாரம்

பொதுமக்கள் கூடும் இடமாயிருந்தாலும் கற்றோர் அவையாகயிருந்தாலும் அவையினரின்  தன்மை அறிந்து, அதற்கேற்ப பேசுபவர் பேசவேண்டும். மேலும் பேசுபவர் பேசுபொருள் பற்றிய நுட்பமான முழுமையான அறிவுடன், சொல் வன்மையோடு உரைக்கவேண்டும். அறிவின் மிக்கார் அவையில் தம் அறிவு மிகும் வண்ணம் பேச வேண்டும். ஒத்தார் அவையில் எவ்வழியிலும்  சொல்லலாம். தாழ்ந்தார் அவைக்கண்  பேசுதலே வேண்டாம்  என்பன  வள்ளுவர் கூறும்  அவையறிதல் தன்மையாகும்.

பேசுபவர் யாருக்குச் சொல்கின்றோம் என்று ஆராயாமல் பேசுவது கூடாது, பேசும்போது சொற்களின் தொகை, வகை, நடை அறிந்து ஆளவேண்டும், மன்றத்தின் செவ்வியை -பொருத்தமான நேரத்தை- நன்றாக உணர்ந்த பிறகே பேச வேண்டும், அறிவு மிக்கவர்களின் கூட்டத்தில் தாம் அவர்களினும் அறிவு மிகுந்தவர்களாக அறியப்படுமாறு பேச வேண்டும், அறிவு குறைந்தவர்களின் ஒன்றும் அறியாதவர்கள் போல் இருக்கவேண்டும்; தம்மைவிட முதிர்ந்தவர்களின் கூட்டத்தில் முற்பட்டுப் பேசாமல் அடக்கமாக இருக்க வேண்டும், பேச்சு வன்மை மிக்க அறிஞர்களின் கூட்டத்தில் ஒருவரது கல்வி விளக்கம் பெறும், சொல்வதை உடனே புரிந்துகொள்பவர்கள் அவையில் பேசுவது, தனக்கு நல்ல ஊட்டமாக அமையும், இழிவானர்கள் கூட்டத்தை அறவே தவிர்க, தம்மோடு ஒத்த உணர்வு இல்லாதவர் அவையில் சென்று உரைப்பது பயனில்லை.

அவையத்திற்கு வள்ளுவர் மிக முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதை இவ்வதிகாரப்பாடல்களன்றி மற்ற அதிகாரப் பாடல்கள் வழியும் அறியலாம். கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கும் அவையங்கள் இன்றைய குடியாட்சிக் கோட்பாட்டில் ஒரு இன்றியமையாத கூறு ஆகும். மக்களாட்சி தத்துவத்தில் அவையறிதல் இந்த அதிகாரம் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. பொருட்பாலில் அரசன், அமைச்சு போன்ற முடியாட்சி கோட்பாடுகள் பல சொல்லப்பெற்று இருப்பினும், மக்களாட்சி முறைக்கான கூறுகள் அவையறிதல் அதிகாரத்தில் சொல்லப்பெற்றுள்ளன.

இன்றைய மக்களாட்சி முறையில் அரசாங்கம் என்பது அவையறிந்து பேசும் நன்முறையிலேயே செயல்பட்டு வருகின்றது. தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு அவற்றின் மீதான நன்மை தீமைகள் விவாதிக்கப் பெற்றுப் பெரும்பான்மை கருத்து வெற்றிவெறும் குடியாட்சி தத்துவத்தில் மக்கள் மன்றத்தில் பேசுவதன் வாயிலாக வெற்றியை எய்த முடிகின்றது. மக்களாட்சிக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறைமையிலும் பேசுபவரின் பேச்சு நிலை முக்கியமானதாக விளங்குகிறது.

மக்கள் அவையில் பேச வேண்டிய முறைமைகள்

சொற்களை ஆளும் தூய்மை உடையவர்கள் சமுதாயத்தில் வெற்றி பெற இயலும்.  அவையின் நிலையை ஆராய்ந்து, சொற்களைத் தொகுத்து ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிச் சான்று காட்டி முடிக்கும் திறன் வெற்றியாளனின் திறனாகக் கருதப்படுகிறது.

இவ்வாறு பேசும் நிலையில்  கேட்பவர் சோர்வடையா வண்ணமும் உரை நிகழ்த்த வேண்டும் என்று அவையறிதல் அதிகாரத்தின் முதல் இரு குறள்கள் காட்டுகின்றன.

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.(711)

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்

நடைதெரிந்த நன்மை யவர் (712)

என்று இரு குறட்பாக்களும் மக்களவையில் பேசுபவர் கொள்ள வேண்டிய தகுதிகள் ஆகும்.

 

அவையறியாமல் பேசுவதால் ஏற்படும் தீமை

அவையின் தன்மையை அறியாது ஒன்றைச் சொல்ல முற்படுபவர் சொல்லின் வகையையும் அறியார். சிறந்த படிப்பும் அவருக்குப் பயன்படுவதில்லை.

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்

வகையறியார் வல்லதூஉம் இல்.( 713)

 என்ற பாடல் கூறுகின்றது.

அடக்கமுடன் இருக்க வேண்டிய அவைகள்

அவையில் தனக்குத் தெரியாத பொருள்  பற்றி பேச்செழும்போது எதுவும் பேசாமல் இருப்பது நலம் என்று வள்ளுவர் காட்டுகிறார்.

ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்

 வான்சுதை வண்ணங் கொளல் (714)

தம்மைவிட அறிவால் மேம்பட்டவர் இருக்கும் அவையில் முன்னே சென்று ஒன்றைச் சொல்லாத அடக்கம் நல்லவை அனைத்திலும் நல்லதாகும்  என்று வள்ளுவர் அடக்கமாய் இருக்க வேண்டிய இடம் பற்றிக் குறிப்பிடுகிறார். இதனை

 நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்

முந்து கிளவாச் செறிவு. (715)

என்ற குறள் காட்டுகிறது.

அடக்கமுடன் இருக்க வேண்டிய மற்றொரு இடத்தையும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். அகன்ற நூற்பொருளை அறிந்து அதன் மெய்ம்மையை உணர வல்லவர் அவையின் முன் தவறாகப் பேசுவது.ஆற்று வெள்ளத்தில் நீந்துபவன் கால் தளர்ந்தது போலாகும் என்று உவமை வாயிலாக  அடக்கமாக இருக்க வேண்டிய இடம் பற்றி வள்ளுவர் குறிக்கிறார்.

ஆற்றின்  நிலைதளர்ந்  தற்றே வியன்புலம்

ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. (716) என்பது மேற்காண் பொருள் தரும் திருக்குறள் ஆகும்.

சொல்லுதல் சிறக்கும் இடங்கள்

அவையில் சொல்லுதல் சிறக்கும் நிலைப்பாடும் உண்டு.  குற்றமின்றிச் சொற்களை ஆராய்வதில் வல்லவர் உள்ள அவையில் பல நூல்களை கற்றறிந்தவரின் கல்வியானது நன்றாக விளங்கித் தோன்றும் அளவிற்கு அவையில் பேசுதல் நிகழ்த்தல் வேண்டும் என்கிறார் திருவள்ளுவர்.

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்

சொல்தெரிதல் வல்லார் அகத்து.  (717) என்ற குறள்  இதனை விளக்குகின்றது.

 ‘‘ உணர்வது உடையார்முன் சொல்லல் வளர்வதன்

 பாத்தியுள் நீர்சொரிந் தற்று (718)

இதன் வழி சான்றோர் அவையில் பேசுவது என்பது பெரும்பயனைத் தரும் என்கிறார் வள்ளுவர். வறண்ட  பாத்தியுள்  நீர் சொரிந்த தன்மை போல் நல்ல சொற்கள் அமைகின்றன. அவையும் பயன்பெறுகிறது.

நல்லோர் இருக்கும் அவையில்,அவர்கள் மனத்தில் பதியுமாறு நல்ல பொருள்களைச் சொல்லவல்லவர். அறிவிலார் உள்ள அவையில் மறந்து எதையும் சொல்லக் கூடாது என்ற குறள் பேச வேண்டிய இடம் பேசக் கூடாத இடம் பற்றி குறிப்பிடுகிறது.

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்

நன்குசலச் சொல்லு வார். (719)

என்ற குறள் இரு நிலைப்பாட்டையும் காட்டுகிறது.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தம்கணத்தர்

அல்லார்முன் கோட்டி கொளல் (720) என்ற குறள் தம் கருத்துக்கு ஒவ்வாதவர்கள் அவையில் பேசுவது பயனளிக்காது என்கிறது.

அவையறிதல் என்ற அதிகாரம் பொதுவாகக் காணுகையில் அவையில் பேசுவது பற்றிய செய்திகளைத் தருவதாக இருந்தாலும், அரசியல் நிலையில் இவ்வதிகாரம் தரும் அறக்கருத்துகள் முக்கியமானவை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ஒரு சட்ட மன்ற உறுப்பினர், ஒரு பஞ்சாயத்துத்  தலைவர் தன் மன்றத்தில் பேசும் நிலைப்பாட்டை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது இவ்வதிகாரத்தின்  கருத்து பெரும் சிறப்புடையதாக விளங்குகிறது.

முடிவுரை

பேசுவது என்பதே கலை அதற்காக பேசுவதை எல்லாம் கலை என்று சொல்லி விட முடியாது. மேடையில் பேசுவது என்பது பலர் முன் நின்று உயர்கருத்துக்களை கேட்போர் உள்ளத்தில் பதிய வைப்பதே சிறந்த பேச்சுக்கலை. இதனையே சொற்பொழிவு என்பர். சொற்களை தேடிப்பிடித்து எளிய நடையில் அமைதியாக பொழிவது தான் சொற்பொழிவு.மழைப்பொழிவதைப் போல சொற்களையும் ஒன்றன் பின் ஒன்றாக வரம்பு மீறாமல் பேசுவதையே சிறந்த சொற்பொழிவு என்பர். இதற்கு விதிமுறை கூறியவர் தான் வள்ளுவர். தனது 72 வது அதிகாரமான அவையறிதலில் திறம்பட விளக்கியுள்ளார் என்பதை இக்கட்டுரையின் வாயிலாக அறியமுடிகிறது.

மக்களவையில், சட்டசபையில் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர் எப்போது எப்படி பேசவேண்டும் என்றதை அவையறிதல் அதிகாரம் குறிப்பிடுகிறது. மேலும் எவ்வகையில் பேசக் கூடாது என்பதையும் காட்டுகிறது. அதே நேரத்தில் மக்களவையில், சட்டசபையில் எதிர்க்கட்சிப் பொறுப்பில் இருப்பவர் பேச வேண்டிய நிலைப்பாட்டையும் இவ்வதிகாரத்தின் வழி அறிந்து கொள்ளமுடிகின்றது. மேலும் பெரும்பான்மையும், எதிர்க்கட்சி மதிப்பும் பெறாத நிலையில் அவைக்குத் தேர்ந்து எடுக்கப்படும் அரசியல் பொறுப்பாளர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும் இவ்வதிகாரம் காட்டுகின்றது. அவை என்றால் அது சான்றோர் அவையாகவும் இருக்கலாம், அல்லது சான்றாண்மை இல்லாதார் அவையாகவும் இருக்கலாம். இது அவையின் தவறு அல்ல. ஆனால் அந்த அவைக்குச் செல்பவர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் காட்டுவதே அவையறிதல் அதிகாரம் ஆகும். அவையறிதல் அதிகாரப்படி அவை அறிந்து அனைவரும் நடந்தால் வெற்றிப்பாதை திறக்கும் என்பதில் ஐயமில்லை.


சு. தொண்டியம்மாள்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வள்ளுவர் கண்ட மக்களாட்சி”

அதிகம் படித்தது