ஆகஸ்டு 17, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

பொறியியல் கல்வி பயின்றால் வேலை பெற என்ன செய்ய வேண்டும்?

பா. வேல்குமார்

Sep 3, 2016

பொறியியல் கல்வி நான் அதிகமாக நேசித்து கற்ற கல்வி, பள்ளிக் கல்வியில் கணிப்பொறியியல் பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துப் படித்து விட்டு, மேலும் நான்காண்டுகள் இளங்கலைக் கணிப்பொறியியலில் பட்டம் பெற்று, ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகின்றேன்.

Siragu engineering education1

பொறியியல் படித்தால் வேலை கிடைக்குமா என்னும் வழிகாட்டித் தொடரை எழுதத் தூண்டியதே நம் தமிழகத்தில் நடந்த நிகழ்வு ஒன்று தான்.

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் லெனின் அவர்களது இறப்பு தான், இக்கட்டுரையை எழுதத் தூண்டியது. கடந்த ஆண்டு பொறியியல் கல்வி முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருந்த இளம் பொறியாளர். லெனின் மத்திய அரசு வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக் கடன் பெற்று, பொறியியல் கல்வி பயின்று கடந்த ஆண்டுதான் கல்லூரியை விட்டு வெளிவந்துள்ளார்.

கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் வேலை கிடைத்து ஆறு மாதங்களில் அல்லது வேலை கிடைக்காவிட்டால் ஒரு வருடம் கழித்து கல்விக் கடனை வங்கிக்கு திருப்பிச் செலுத்த வேண்டும் என்பது தான் கல்விக் கடனுக்கான அரசின் விதிமுறை, ஆனால் பொறியாளர் லெனின் அவர்களது கல்விக் கடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில், லெனின் அவர்களின் கல்வி சான்றிதல்களைப் பறித்து விட்டு, கல்விக் கடனை உடனே திருப்பிச் செலுத்துமாறு, வங்கித் தரப்பில் இருந்து நிர்ப்பந்தப்படுத்தி, ஒரு பொறியாளரின் உயிரைப் பறிக்க தூண்டுகோலாக இருந்தது எந்த வகையில் நியாயம்.

அவமானம் தாங்காமல் லெனின் அவர்கள் தற்கொலை செய்துள்ளார் என்னும் நிகழ்வு, கண்டும் காணாமல் கடந்து விட்டு போகக்கூடிய நிகழ்வு அல்ல.

லெனின் அவர்களது இறப்பே கடைசி இறப்பாக இருக்க வேண்டும், இனி யாருக்கேனும் அவரது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வு நடக்காமல் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் பொறியியல் கல்வி பயின்று விட்டு, ஆண்டு தோறும் பொறியாளர்களாக வெளிவரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

Siragu engineering education2

நான்காண்டுகள் பொறியியல் கல்வி பயின்று விட்டு, கை நிறைய ஊதியத்துடன் வேலை கிடைத்து விடும் என்னும் நம்பிக்கையில் கிராமப்புறத்தில் இருக்கும் பெற்றோர்கள் பலர் தன்னுடைய நிலத்தை விற்று, தங்களது மகன் மற்றும் மகளை பொறியியல் கல்வி பயில்வதற்கு ஏற்பாடு செய்கின்றனர்.

ஆனால் பொறியியல் கல்வி பயின்ற அனைவருக்கும் வேலை கிடைத்ததா என்பது மிகப் பெரிய கேள்விக் குறியாக உள்ளது.

நான்காண்டுகள் படித்து, பட்டம் வாங்கியபின் வேலைக்கு செல்வதற்கு என்ன தயக்கம் என்பது தான் அனைத்துப் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இங்குதான் பிரச்சனை ஆரம்பம் ஆகின்றது, ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்ல, நம்முடைய நான்காண்டு பொறியியல் பட்டப்படிப்பு மட்டும் போதாது, நிறுவனத்தின் பணிக்குத் தேவையான, பணித்திறன் வேண்டும் என்பது நிலத்தை விற்று மற்றும் கல்விக் கடன் வாங்கி பொறியியல் படிக்க வைக்கும் பெற்றோர்கள் அனைவருக்கும் தெரிவதில்லை என்பது நிதர்சனமான உண்மை.

நம் தமிழகத்தைப் பொறுத்தவரை மென்பொருள் நிறுவனங்கள் அதிகம், இதர பொறியியல் கல்வி பயின்றவர்களும் மென்பொருள் நிறுவனத்தில் பணிக்குச் செல்லலாம் என்பது மென்பொருள் துறைக்கே உள்ள தனிச் சிறப்பு.

பொறியியல் கல்லூரிகளுக்கு, நேரடியாக வந்து, வளாகத் தேர்வு நடத்தி, மாணவர்களின் திறனை பரிசோதித்து, அவர்களுக்கு ஆறு மாதங்கள் பயிற்சி அளித்து தத்தமது நிறுவனங்களில் பணியினை அளிக்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள். ஆனால் அனைத்துக் கல்லூரிகளுக்கும் இவர்கள் செல்வதில்லை.

பொறியியல் கல்வி படித்து விட்டு, வேலைக்கான தகுதித் திறனை வளர்ப்பதற்கு என்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதை   அடுத்தத் தொடரில் இன்னும் விரிவாகப் பார்ப்போம்…


பா. வேல்குமார்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “பொறியியல் கல்வி பயின்றால் வேலை பெற என்ன செய்ய வேண்டும்?”

அதிகம் படித்தது