சனவரி 28, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வாக்குப் பதிவு எந்திரம்

இராமியா

Oct 27, 2018

வாக்குப் பதிவு எந்திரம் நம்பிக்கைக்கு உரியது அல்ல என்று மிக மிக… மிகப் பெரும்பான்மையான மக்கள் புரிந்து வைத்துக் கொண்டு உள்ளனர். தங்கள் எண்ணத்தை அவர்கள் சமூக வலைத் தளங்களில் பதியவும் செய்கின்றனர். அதை எதிர்த்து வாதிட முடியாத காவிகள் / பார்ப்பனர்கள் ஒரேயடியாக அடித்துப் பேசுகின்றனரே ஒழிய, முறையான கருத்துகளை முன் வைப்பது இல்லை. “வாக்குப் பதிவு எந்திரத்தில் தில்லு முல்லு செய்ய முடியும் என்றால் இந்த இடத்தில் காவிகளுக்கு வாக்கு குறைந்தது ஏன்? அந்த இடத்தில் வேறு கட்சிகள் வென்றது எப்படி?” என்று பல் முளைக்காத குழந்தை கூட கைகொட்டி நகைக்கும் படியான சொத்தை வாதங்களை முன்வைக்கின்றனர். இவை போன்ற வினாக்கள் எழுந்தால் அவற்றிற்கு விடை அளிக்க வேண்டும் என்பதற்காகவே எந்திரத்தை விட்டுப் பிடித்து இருக்கலாம், அல்லது இந்த மாதிரி முடிவுகள் தான் இப்போது தேவை என்று நினைத்து எந்திரங்களை அதற்கு ஏற்ப வடிவமைத்தும் இருக்கலாம் என்பதைப் பல் முளைக்காத பச்சைக் குழந்தையும் புரிந்து கொள்ள முடியும். இது ஒரு புறம் கிடக்கட்டும்.

மக்கள் முழு மனதுடன் எதிர்க்கும் இந்த வாக்குப் பதிவு எந்திரத்தை அதே வேகத்தில் அரசியல் கட்சிகள் எதிர்க்கவில்லை அல்லது எதிர்க்க முடியவில்லை. அரசியல் கட்சிகளில் பார்ப்பன ஆதிக்கம் உள்ள கட்சிகளே பெரும்பாலும் உள்ளன. அக்கட்சிகளை ஆட்டிப் படைக்கும் பார்ப்பனர்கள் (வெளியில் எதிர்ப்பதைப் போல் காட்டிக் கொண்டாலும்) காவிகளின் இன்றைய வளர்ச்சியைக் கண்டு உள்ளூர மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். அவாளுடைய ஒரே அச்சம் காவிகளின் கண் மண் தெரியாத வேகம் மக்களைப் புரட்சியின் பக்கம் துரத்தி விட்டு விடக் கூடாது என்பது தான். ஆகவே தேர் ஓடும் போது அது குறித்த திசையில் செல்வதற்காக முட்டுக் கட்டைகளைப் போடுவது போல் மிகவும் கவனமாக “எதிர்க்கிறார்கள்”.

பார்ப்பனர்கள் கட்டுப்படுத்தாத அரசியல் கட்சிகளின் தலைவர்களைக் காவி அரசு “சோதனை” (ரெய்டு) என்ற பெயரில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கட்டுக்குள் வைத்துக் கொண்டு இருக்கிறது. அவாள் கையில் அதிகாரம் இருந்தால் காந்தியையே கட்குடியன் என்று நினைக்க வைக்கும் அளவிற்குப் பிரச்சாரம் செய்து நம்ப வைக்கும் சாமர்த்தியம் உடையவர்கள். நமது அரசியல் கட்சித் தலைவர்களோ ஊழல்வாதிகள் என்று சொல்லத் தேவையில்லை. காவிகளை ஒப்பிடும் போது இவர்கள் மிகக் குறைந்த அளவே ஊழல் செய்து இருப்பவர்களாக இருக்கலாம். ஆனால் அதிகாரம் படைத்த காவிகள் எனும் பெரும் ஊழல்வாதிகள் சிறிய ஊழல்வாதிகள் மீது சோதனை என்னும் கணையை ஏவி வீழ்த்தி விடுகின்றனர். ஆகவே அவர்களும் மக்களின் ஒருமுகமான எதிர்ப்பைப் பெற்றுள்ள காவிகளை வெற்றி வீரர்களாக அறிவிக்கப் பயன்படுத்த எண்ணி உள்ள வாக்குப்பதிவு எந்திரங்களை எதிர்த்துப் பேச முடியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்.

Siragu vaakku endhiram1

சரி! வாக்குப் பதிவு எந்திரம் ஏன் பயன்பாட்டுக்கு வந்தது? வாக்குச் சீட்டு முறையில் என்ன குறை? இதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. முதல் காரணம் வாக்குச் சீட்டு முறையில் சில விசமிகள் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றித் தங்கள் விருப்பப்படி வாக்களித்து விடுகின்றனர். இரண்டாவது காரணம் வாக்குச் சீட்டு முறையில் வாக்கு எண்ணிக்கைக்கு நிறைய நேரம் தேவைப்படுகிறது. எந்திரம் என்றால் மிகக் குறுகிய நேரத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்து விடும்.
சனநாயகத்தின் அடிப்படையைக் கணக்கில் கொண்டால் இவை இரண்டும் வலுவே இல்லாத சொத்தை வாதங்கள்.

வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுகிறார்கள் என்றால் அது அரசின் / காவல் துறையின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது. மேலும் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுதல் என்பது மொத்ததில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகத் தான் நிகழ்கிறது. இந்த ஒரு விழுக்காடு வாக்குக் கொள்ளையைத் தடுக்க நூறு விழுக்காடு வாக்குக் கொள்ளையை அனுமதிக்க வேண்டுமா?

Siragu vaakku endhiram2

வாக்கு எண்ணிக்கையை விரைவாக நடத்தி முடிப்பதால் என்ன பெரிய நன்மை ஏற்பட்டு விடும்? தேர்தல் முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கையைத் தொடங்காமல் இரண்டு, மூன்று அல்லது நான்கு நாட்கள் கழித்துத் தொடங்குகிறார்கள். இந்தக் கால தாமதத்துடன் கூடுதலாக ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் தாமதம் ஆவதில் என்ன கேடு வந்து விடும்?

வாக்கு எண்ணிக்கையில் தவறு என்றால் வாக்குச் சீட்டு முறையில் சரிபார்க்க முடியும். எந்திர முறையில் அது முடியாதே? வாக்குப்பதிவு எந்திர முறையில் சில நன்மைகள் உண்டு என்று பார்த்தால், அது சனநாயகத்தின் அடிப்படையையே எரித்துச் சாம்பல் ஆக்கி விடுகிறதே? ஒரு குடிமகன் யாருக்கு வாக்களித்தாரோ அவருக்குத்தான் வாக்கு விழுந்து இருக்கிறது என்ற உறுதியைத் தர முடியாத இந்த எந்திர முறை தேவையா? தேர்தல் முடிவுகள் மக்களின் எண்ணத்திற்கு நேர் எதிராக இருந்தால் உண்மையைச் சரி பார்க்க முடியாத இந்த எந்திர முறை தேவையா?

அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் உச்ச நிலையில் உள்ள நாடுகளே கூட, இந்த எந்திர முறை வேண்டாம் என்று கூறி விட்டு வாக்குச்சீட்டு முறையையே பின்பற்றுவதில் இருந்தே எந்திர முறை நம்பகத் தன்மை இல்லாதது என்று புரிந்து கொள்ளலாமே?

இந்த வாக்குப்பதிவு எந்திரம் இந்தியாவில் 1980ஆம் ஆண்டில் எம்.பி.ஹனீபா (M.B.Hannefa) என்பவர் வடிவமைத்தார். இது 1982ஆம் ஆண்டில் கேரளாவில் வடக்குப் பரவூர் என்ற சட்டமன்றத் தொகுதியில் சில வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்பட்டது. பின் 1999ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் இருந்து வாக்குப் பதிவு எந்திரங்களே பயன்படுத்தப்பட்டுக் கொண்டு இருக்கின்றன. இம்முறை நம்பகத்தன்மை இல்லாதது என்று அன்று முதலே பலர் குரல் கொடுத்துக் கொண்டே இருந்தனர். அவர்களில் ஒருவர் இன்று பா.ச.க.வில் முக்கியமானவராக உள்ள சுப்பிரமணியன் சுவாமி ஆவார். அவர் 3.9.2009 அன்று இந்தியத் தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு ஒரு மென்பொருள் பொறியாளரை அழைத்துச் சென்று வாக்குப் பதிவு எந்திரத்தில் தில்லு முல்லு செய்ய முடியும் என்று நிறுவி இருக்கிறார். ஆனால் வாக்குப் பதிவு எந்திரத்தை உற்பத்தி செய்யும் இந்திய அரசின் மின்னணுக் கழகம் (Electronic Corporation of india) அக்கூட்டத்தைத் தடாலடியாக ரத்து செய்து விட்டது. அதன் பின் இந்திய அரசு அந்த மென்பொருள் பொறியாளரைக் கைது செய்து, பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டது.

ஆனால் அப்பொழுதெல்லம் வாக்குப் பதிவு எந்திரத்திற்கு எதிர்ப்பு உயர் மட்டங்களில் மட்டுமே இருந்தது. இன்று போல் அடித்தள மக்கள் வரையிலும் பரவவில்லை. ஏன்?

வாக்குப் பதிவு எந்திரத்தில் தில்லு முல்லு செய்ய முடியும் என்று நிறுவப்பட்டு விட்டது. அன்று அதிகாரத்தில் இருந்தவர்கள் தில்லு முல்லு செய்து இருக்க மாட்டார்கள் என்றெல்லாம் சத்தியம் செய்ய முடியாது தான். என்றாலும் மிகப் பெரும் அளவில் செய்யவில்லை என்று கூறலாம்; ஒரு வேளை செய்யாமலும் இருந்திருக்கலாம். காவிகள் ஆட்சியைப் பிடித்த பிறகு அரசு அதிகாரங்களை மிகப் பெரும் அளவில் தவறாகவும், பழிவாங்கும் நோக்கில் மிகத் தீவிரமாகவும் பயன்படுத்துவதைப் பார்க்கும் போது தான் இதே அணுகுமுறையை வாக்குப் பதிவு எந்திரத்திலும் பின்பற்றுவார்கள் என மக்கள் அஞ்சுகின்றனர். மக்களின் அச்சத்தை உறுதி செய்வது போல உத்திரப்பிரதேசத்தில் முசுலீம்கள் நிறைந்து உள்ள பகுதிகளில் பா.ச.க. வெற்றி பெற்று உள்ளது. மற்ற பழிவாங்கும் நடவடிக்கைகளாவது ஆட்சி மாறினால் சமநீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கும். ஆனால் எந்திரத்தில் தில்லு முல்லு செய்து காவிகள் மீண்டும் ஆட்சியைப் பிடித்து விட்டால் …. ? அதன் பின் தேர்தலே இராது என்பதை விட தேர்தலே அவசியம் இல்லை என்ற நிலைக்குச் சென்று விடும். அப்புறம் இன்று மறைமுகமாக ஆட்சி செய்து கொண்டு இருக்கும் வர்ணாசிரம அதர்மம் வெளிப்படையாகவே ஆடசி செய்யத் தொடங்கி விடும்.

ஆகவே வாக்குப் பதிவு எந்திர முறைக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றே தீர வேண்டியது அனைத்து அரசியல் கட்சிகளின் தவிர்க்க முடியாத கடமை ஆகும். இதை அடக்கி ஒடுக்கக் காவி அரசு அனைத்து வழிகளிலும் முயலவே செய்யும். ஆகவே காவிகளால் சோதனை (ரெய்டு) ஆயுதத்தை எய்ய முடியாதவர்களையே முன்னிலைப்படுத்துங்கள். இதில் தயக்கம் காட்டினால் முதலுக்கே மோசம் போகும் நிலை ஏற்பட்டு விடும். நீங்கள் கெடுவது மட்டும் அல்லாமல் அனைத்து மக்களையும் கொடுங்கோன்மைக்கு இரையாக்கிய குற்றமும் உங்களைச் சார்ந்து விடும்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வாக்குப் பதிவு எந்திரம்”

அதிகம் படித்தது