மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

வாசிப்பு எனும் மாபெரும் மருந்து!

சுசிலா

Apr 25, 2020

Fletchers Bakery, Sheffield
புத்தக வாசிப்பு என்பது மனிதகுலத்திற்கு மட்டுமே கிடைத்திருக்கும் ஒரு மிகப்பெரிய பொக்கிசம். மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே, தன்னுடைய கருத்துகளை, எண்ணங்களை, ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக்கொண்டுதான் இருந்திருக்கிறான். அது சைகை மூலமாகவோ, சித்திரங்களை வரைதலின் மூலமாகவோ, ஒலி எழுப்பியோ மற்றவர்களுக்கு தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறான். இதன் நீட்சியாகத்தான், மொழி உருவாகி இருக்கிறது என்பது வரலாற்று உண்மை. ஆரம்பகாலத்தில் வெறும் பேச்சாக மட்டுமே இருந்த மொழி, பிறகு கொஞ்சம் கொஞ்சமாக, எழுப்பப்படும் ஒலியை பிரதானமாகக் கொண்டு, எழுத்துகளை உருவாக்கி, அதன்முலம் தங்கள் கருத்துகளை, அனுபவங்களை நம் மூதாதையர்கள் பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். அதன் தொகுப்புகள் நமக்கு ஏராளமாகக் காணக்கிடைக்கின்றன. 2600 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழர்களாகிய நாம் எழுத, படிக்க அறிந்திருக்கிறோம் என்பது கீழடி மூலம் தற்போது மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. எழுத்து என்பது மனிதன் சிந்தித்து, நாகரீகமடைந்து, தன் சமூகம் சிறப்புற வாழ துவங்கியத்தின் அடையாளமாக தான் பார்க்கப்படுகிறது. அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு, எழுத்துகள் பரிமளித்திருக்கின்றன, வளர்ச்சியடைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மேலும், அந்த எழுத்துக்களின் மூலமாகத்தான், அந்த காலகட்டத்தின் வாழ்வியலை வருங்கால தலைமுறையினர் அறிந்துகொள்ள ஏதுவாக அமைந்திருக்கிறது என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் மிகப்பெரிய ஒரு சான்று.

சங்ககாலத்திலிருந்து, நம்முடைய வாழ்வியலை அறிந்துகொள்ள நமக்கு ஏராளமான நூல்கள் கிடைத்திருக்கின்றன. இன்னும் பல சுவடிகள் காணாமல் போயிருக்கின்றன என்பதும் வருத்தத்துக்குரியது தான். இருப்பினும், தற்போது கிடைத்திருக்கும் நூல்கள் அனைத்தும், இந்த உலகு உள்ளமட்டும் பாதுகாக்கப்படவேண்டிய நம் அறிவுசார் பொக்கிசங்களே ஆகும். புத்தகங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், அந்த நூல்கள் முழுவதும் நம்மால் வாசிக்கப்பட வேண்டும், நல்லன எல்லாம் பின்பற்றப்பட வேண்டும் என்பதும் ஆகும். மனித சமூகம், குறிப்பாக நம் தமிழ்ச் சமூகம், தொடக்க காலத்திலிருந்தே, கற்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாகத்தான் இருந்திருக்கிறோம். இடையில், சில நூற்றாண்டுகள் நமக்கு கல்வி மறுக்கப்பட்டது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இருந்தபோதும் கூட, நாம் கற்பதில் சிறிதும் தோய்ந்துபோய்விடவில்லை என்பதும் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய சிறப்புக்குரிய ஒன்று .

வாசித்தல் என்பது நம் உயிர்முச்சு போன்றது. அதை, பழகிக்கொள்ளுதல், வழக்கமாக்கிக் கொள்ளுதல் என்பதைவிட, சுவாசித்தல் போன்று நம்முடைய வாழ்வில் இன்றியமையாததாக ஆக்கப்படல் வேண்டும். இது பெரும்பாலோரால், கடைபிடிக்கப்படுகிறது என்பதை, ஒவ்வொரு ஆண்டும் நம் புத்தகக்காட்சியில் விற்கப்படும் புத்தகங்கள் எண்ணிக்கையில் அதிகமாக போய்க்கொண்டிருக்கின்றன என்பதே சாட்சியாக இருக்கின்றது. வாசிப்பின் அவசியத்தை நம் இளைய தலைமுறையினர் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். வாசிப்பு, நமக்கு அப்படி என்ன தருகிறது என்று கேட்டால், அறிவை விரிவாக்குகிறது என்பது மட்டுமல்லாமல், நம்முடைய சிந்தனையை வலுவாக்குகிறது, அறத்தை போதிக்கிறது, அன்பை அதிகப்படுத்துகிறது, பண்பை வளர்கிறது, அனுபவத்தை கற்றுக்கொடுக்கிறது, கற்பனைத்திறனை அதிகரிக்கிறது, இன்னும் ஏரளாமாக சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வுலகில் நம் வாழ்க்கை என்பது சிறிய காலகட்டமே ஆகும். அதில், நாமே எல்லாவற்றையும் அனுபவமாக பட்டு தெளிதல் என்பது சாத்தியமில்லை. ஆதலால் தான் மற்றவர்களுடைய அனுபவம் நமக்கு , நல்லது, கெட்டது எது என்று அறிவுறுத்தும் படிப்பினை அளிக்கிறது. நல்ல நூல்களை கற்று தெரிந்தவர்கள் நமக்கு நல்ல ஆசானாக இருக்கிறார்கள். மிக முக்கியமான ஒரு செய்தி என்னவென்றால், நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்து, படிப்பது மிகவும் அவசியம். எதெல்லாம் நல்ல நூல்கள் என்ற குழப்பம் வருமேயானால், அது, புத்தகங்களை படிக்க, படிக்க, எது நல்லது எது நல்லன இல்லை என்பது நமக்கே தெரிய வரும். கற்றறிந்தவர்களை கேட்கலாம் என்றாலும் கூட, நாமே , நம் அனுபவத்தால் தெரிந்து கொள்ளும்போது, இன்னும் கூடுதலான அனுபவத்தை பெறுகிறோம் என்பது ஒரு வகையில் வாசித்தலின் அழகியல்!

வெறும் பள்ளி, கல்லூரி சார்ந்த புத்தகங்களையே படித்து வளர்ந்த ஒரு இளைஞனால் , திடீரென்று வேறு புத்தகங்களை படிக்க முடியாது. அதில், அவனுக்கு ஆர்வமும் இருக்காது என்பது தான் உண்மை. பொது அறிவு, உலகை அறிதல், அனுபவ அறிவு என்பது இல்லாத காரணத்தால், அவனால் இவ்வுலகில், மனிதர்களை படிக்க முடியாமலே போய்விடுகிறது என்பது வேதனையான ஒரு விடையம். இவ்வாறு இல்லாமல், சிறு வயதிலிருந்தே, குழந்தைகளுக்கு, பள்ளி புத்தகம் இல்லாமல், வேறு புத்தகங்களைப் படிக்க நாம் பழக்கிவிட வேண்டும். நூலகம் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும். இதில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கு மிகவும் இன்றியமையாதது. இது ஒன்றும் அப்படிப்பட்ட கடினமான பணி அல்ல. பல கட்டங்களாகப்பிரித்து, செயல்படுத்தினால், இது மிகவும் எளிமையான ஒன்று தான். பொதுவாகவே, குழந்தைகளுக்கு, கதை கேட்டல் என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. முதலில் அதனை செயல்படுத்த வேண்டும். இரவு தூங்க செல்லும்முன், கதை சொல்லுதல் என்ற வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதன் துவக்க கட்டமாக, குழந்தைகளுக்குப் பிடித்த விலங்கு, பறவை கதைகளை சொல்ல ஆரம்பிக்கலாம். பிறகு படிப்படியாக அறம் சார்ந்த கதைகள், பல நீதிக்கதைகள் என தொடரலாம். அடுத்தகட்டமாக, அவர்களிடம், என்ன புரிந்துகொண்டார்கள் என்பதை கேட்டு, அதன்மூலம் அவர்களின் சிந்தனையை வளர்த்துவிடலாம். பின்பு, படக்கதை புத்தகங்களை அவர்களாகவே படிக்க சொல்லி, என்ன புரிந்துகொண்டார்கள் என்று கேட்டு, ஆர்வத்தை உண்டாக்கவேண்டும். அவர்களின் வயதிற்கேற்றவாறு, புத்தகங்களை வாங்கிக்கொடுத்து, படிக்க வைத்து, அதன்மூலமாக அவர்கள் அறிந்துகொண்டதை கேட்டு, விளக்கி, ஆரோக்கியமான உரையாடல்களை நிகழ்த்தி, தேவைப்பட்டால், சில போட்டிகள் கூட வைத்து, பரிசுகள் வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தலாம். இந்த முறையை கையாண்டால், அவர்களின் வாசிப்பு பழக்கத்தை மென்மேலும் மெருகேற்றி, ஒரு கட்டத்தில், வாசித்தல் என்பது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாற்றி விட முடியும்.

உலகத்திலுள்ள பல அறிஞர்கள் வாசித்தல் மூலமே தங்கள் சிந்தனையை மென்மேலும் மெருகேற்றி இருக்கிறார்கள் என்பது வரலாற்றில் பொறிக்கப்பட்ட உண்மைகள். அவற்றுள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

1. ‘ என்னைப் பார்க்க வருபவர்களில் புத்தகம் கொண்டு வருபவர்களே நல்ல நண்பர்கள்.’ – ஆப்ரஹாம் லிங்கன்

2. ‘பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எது என்ற கேட்டபோது, துப்பாக்கிகளிலிருந்து வரும் தோட்டாக்களை விட வீரியமானது புத்தகங்கள் தான் என்றார் ‘ – மார்ட்டின் லூதர் கிங்

3. ‘ தனிமைத் தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, புத்தகங்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டு வருவேன் என்றார் . – ஜவஹர்லால் நேரு

4. ‘தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லும் போது கூட லெனின் எழுதிய, அரசும், புரட்சியும் என்ற நூலை படித்துக் கொண்டிருந்தார் – மாவீரன் பகத் சிங்.

5. ‘தன்னுடைய வாழ்நாளில் முக்கால் பங்கு காலத்தை சிறையில் கடத்திய போதும், நூல்கள் படிப்பதிலும், புத்தகங்கள் எழுதுவதிலும் நாட்டம் கொண்ட ஒப்பற்ற தலைவர்’ – நெல்சன் மண்டேலா.

6. ‘தான் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை முடிக்க வேண்டும் என்பதற்காக தன்னுடைய அறுவை சிகிச்சையைக்கூட தள்ளி வைக்க சொன்னவர்’ – பேரறிஞர் அண்ணா.

7. ‘வெளிநாடுகளுக்கு செல்லும்போது நூலகங்கள் இருக்கும் நகரத்தை தேர்வு செய்யும் தலைவர் ‘ – அண்ணல் அம்பேத்கர்.

8. ‘யுத்தங்களுக்கு செல்லும்போது கூட, தன்னுடன் புத்தகங்களை எடுத்து செல்லும் பழக்கத்தைக் கொண்டவர் ‘ – நெப்போலியன் போனபார்ட்

9. ‘ உலகையே மாற்றியமைக்க கூடிய பொதுவுடைமை தத்துவத்தை தந்தவர், தன்னுடைய காதல் மனைவி ஜென்னிக்கு இணையாக புத்தகங்களுடன் வாழ்ந்ததாக சொல்ல படுபவர்’ – கார்ல் மார்ஸ்.

10. ‘படிப்பறிவு இல்லாதவர்கள் வாழும் வீடு, ஒரு இருண்ட வீடு என்று தன்னுடைய நூலின் மூலம் கூறியவர்’ – புரட்சிக்கவிஞர் பாரதிதான்.

11. ‘தன்னுடைய தள்ளாத வயதிலும், சொல்லொண்ணா பல உடல் உபாதைகள் இருந்தபோதும், தன் வாழ்நாளின் கடைசி வரையிலும், படித்தக்கொண்டிருந்த ஒரு தலைவர், பெண் விடுதலைக்கான வழி என்ன என்று வினவியபோது, பெண்கள் கையில் இருக்கும் கரண்டியை பிடுங்கிவிட்டு, புத்தகங்களைக் கொடுங்கள் என்று சொன்ன மாபெரும் தலைவர்’ – தந்தை பெரியார் அவர்கள்.

இப்படி, மனிதகுலம் அறிவுபெற்று, சிறப்புற வாழ வேண்டும் என்று எண்ணிய, உலகெங்கிலும் உள்ள மாபெரும் தலைவர்கள் பலரும் ஏராளமான பல நூல்களை படித்திருக்கிறார்கள். பல அறிவு களஞ்சியங்களை படைத்தும் இருக்கிறார்கள்!

ஆதலால், மக்களே, வாசிப்பது என்பது சுகமான ஒரு அனுபவம். அறிந்து தெளிதல் என்பது இனிமையான ஒரு உணர்வு. அதனை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது. விவரிக்க சொற்களும் இல்லை என்பது தான் நிதர்சனம்!

வாசிப்பை நேசிப்போம்! வாசிப்பை சுவாசிப்போம்!

( ஏப்ரல் 23, உலக புத்தக தின வாழ்த்துகள்!)


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வாசிப்பு எனும் மாபெரும் மருந்து!”

அதிகம் படித்தது