செப்டம்பர் 14, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

வாசிப்பு

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jun 4, 2016

chennai-book-fair9இந்த ஆண்டு (2016) சூன் 1 முதல் 13  வரை சென்னையில் புத்தகக் கண்காட்சி தீவுத் திடலில் நடைபெறுகின்றது. வாசிப்பு எந்த அளவுக்கு ஒரு மனிதனுக்குத் தேவை என்பதை பல அறிஞர்கள் கூறியுள்ளனர். வாசிப்பு புதிய கருத்துகளை அறிமுகப்படுத்துகின்றது. புதிய சிந்தனையை உருவாக்குகின்றது. நம்மை நாமே உணர்ந்து கொள்ள, எண்ணங்களை மெருகேற்றிக்கொள்ள வாசிப்பு உதவுகின்றது. மற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றினைப் படிக்கும்போது, நமக்கு அதிலிருந்து கிடைக்கும் அனுபவம் நம் வாழ்வினை செம்மையாக்க உதவுகின்றது. வாசிப்பு, நமக்கு மற்றவர்களிடம் உரையாடும் பயிற்சியைத் தருகின்றது. நம்முடைய கற்பனையை உயர்த்துகின்றது.

chennai-book-fair5நல்ல நூல்களைத்  தேடித் தேடி வாசியுங்கள். உடலுக்கு எப்படி நாம் உடற்பயிற்சி செய்கின்றோமோ அதுபோல, மனதிற்கு சிறந்த பயிற்சி நல்ல நூல்களை வாசிப்பது மட்டுமே. நல்ல புத்தகம் நல்ல நண்பன் என்பார்கள். வாசிப்பு மட்டுமே மனிதனின் அறிவை விரிவாக்கும், குழம்பிய மனதினை தெளிவாக்கும், ஒருநிலைப்படுத்தும். மனிதனைப் போலத்தான் புத்தகமும் ஒரு வாழ்வின் தோற்றமாகும், அதற்கும் உயிருண்டு, அதுவும் பேசும். மனிதன் இதுவரை படைத்த, இன்றைக்கும் படைத்து வருகிற மற்ற பொருட்கள் போன்ற அளவுக்கு அது ஒரு “பொருள்” மட்டும் அல்ல என்றார் புகழ் பெற்ற “தாய்” காவியம் இயற்றிய மாக்சிம் கார்க்கி.

chennai book fair4ஒரு எழுத்தாளனின் கூர்மையான எழுத்துக்கள், அடிமையாக இருக்கும் ஒரு சமூகத்தை தட்டி எழுப்பவல்லது. அதனால்தான் “புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட  பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!” என்றார் லெனின். நூல்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்த வல்லவை. அதனால்தான் நாளந்தா பல்கலைக்கழகமும், யாழ்ப்பாண நூலகமும் தீக்கிரையாக்கப்பட்டன. 24 மணி நேரத்தில் குறைந்தது ஒரு மணி நேரமாவது நல்ல நூல்களைப் படிக்க ஒதுக்குங்கள். ஒரு புத்தகத்தை எப்படி படிக்க வேண்டும் என்று ஆங்கில தத்துவ ஆசிரியர், எழுத்தாளர்  பிரான்சிஸ் பேக்கன் (Francis Bacon ) கூறும் போது, “Some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested.” என்பார். அதாவது “சில புத்தகங்களை சுவைப்போம்.. சிலவற்றை அப்படியே விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று செரிமானம் செய்வோம்!”.

எவ்வளவு ஆழமான கருத்து என்று சிந்தித்துப் பாருங்கள். சில நேரங்களில் நம் மனது நொந்து போகும், என்ன வாழ்க்கை இது என்றுகூட எதிர்மறை எண்ணங்கள் தோன்றும், அப்போதெல்லாம் ஒரு புதிய நூலினை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள் என்கின்றார் இங்கர்சால். குறிப்பாக ஒரு நல்ல எழுத்தாளராக இருக்க  நிறைய வாசிக்க வேண்டும். வாசிப்பு இல்லாமல் எழுத முடியாது என்பது தான் உண்மை.

chennai-book-fair6இந்த உலகில் பெரிய அறிஞர்கள், தத்துவ ஞானிகள் என்று அறியப்பட்டவர்கள் அனைவரும் சிறந்த நூல்களைப் படித்தனர், அதனால் சிறந்த நூல்களைப் படைத்தனர். கிரேக்க நாட்டின் அறிஞர் சாக்ரடீஸ் தன்னை நஞ்சைக் கொடுத்து கொல்லும் நிலையிலும் சிறைச்சாலையில் இறுதி மூச்சு அடங்கும் வரை படித்தார்.  லிபியா நாட்டின் உமர் முக்கர் தூக்குக் கயிறு அவர் கழுத்தை இறுக்கும் வரை படித்துக் கொண்டிருந்தார்.

1969-இல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த அண்ணாவிடம்  மருத்துவர், “நாளை உங்களுக்கு அறுவை சிகிச்சை” என்று கூறிய போது, இரண்டு நாட்கள் அறுவை சிகிச்சையை தள்ளி வைக்கவும் என்றார். ஏன் என்று கேட்டதற்கு நான் ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருக்கின்றேன், அது படித்து முடித்தவுடன் அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றேன் என்றார். கன்னிமரா நூலகத்தில் அண்ணா அவர்கள் கை படாத நூல்களே இல்லை  என்று கூறுவார்கள். அந்த அளவுக்கு நூல்கள் வாசிப்பிற்கு அண்ணா முக்கியத்துவம் தந்தார்… தமிழ் நாட்டின் அறிஞராகத் திகழ்ந்தார்.

நூல்களை எவ்வாறு படிக்க வேண்டும் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் மிக அழகாகக் கூறுவார்கள்.

chennai-book-fair8 நூலைப்படி — சங்கத்தமிழ்
நூலைப்படி — முறைப்படி
நூலைப்படி

காலையிற்படி கடும்பகல்படி
மாலை, இரவு பொருள்படும் படி
நூலைப்படி

கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டும் அப்படிக்
கல்லாதவர் வாழ்வதெப்படி?

அறம்படி பொருளைப் படி
அப்படியே இன்பம் படி
இறந்ததமிழ்நான் மறை
பிறந்ததென்று சொல்லும்படி

அகப்பொருள் படி அதன்படி
புறப்பொருள் படி நல்லபடி
புகப் புகப் படிப்படியாய்ப்
புலமை வரும் என்சொற்படி

சாதி என்னும் தாழ்ந்தபடி
நமக்கெல்லாம் தள்ளுபடி
சேதி அப்படி தெரிந்துபடி
தீமை வந்திடுமேமறுபடி

பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகம் ஏமாறும்படி
வைத்துள்ளநூற்களை
ஒப்புவதெப்படி

தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்காஇன் பம்மறுபடி
ஆகும்என்ற ஆன்றோர்சொற்படி

எந்த வீட்டில் நூல் நிலையம் இருக்கிறதோ, அந்த வீட்டில்தான் ஒளிவிளக்கு இருக்கிறது என்றார்  பிளாட்டோ. அந்த வகையில், குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள். நல்ல நூல்களைப் படிக்க ஊக்கப்படுத்துங்கள். பாட நூல்கள் தாண்டி நல்ல கதைகள், கட்டுரைகள், அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு இவற்றை படிக்கச் சொல்லுங்கள். குழந்தைகள் நுண்ணறிவு கொண்டும், பொது அறிவு கொண்டும் வளர்வார்கள் என்பதில் ஐயமில்லை.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வாசிப்பு”

அதிகம் படித்தது