மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விசித்தர வழக்குகள் – பகுதி 10

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Jul 2, 2022

siragu vischithra valzhakku1

Dyson v. Hoover (2000)

ஹூவர் என்பது வேக்கூம் கிளினர் உற்பத்தி செய்யும் பெரு நிறுவனம். இது அமெரிக்காவில் 1908ஆம் ஆண்டு வில்லியம் ஹென்றி ஹூவர் என்பவரால் தொடங்கப்பட்டது. வேக்கூம் கிளினர் என்றாலே ஹூவர் தான் என்ற அளவிற்கு மக்களிடத்தில் பிரபலமானது. டைசன் என்ற நிறுவனம் 1991ஆம் ஆண்டு ஜேம்ஸ் டைசன் என்பவரால் தொடங்கப்பட்டது. இந்த இரு நிறுவனங்களுக்கும் தொழில் முறையில் கடுமையான போட்டி நிலவியது. டைசன் நிறுவனம் பை இல்லாத வேக்கூம் கிளினரை கண்டுபிடித்தது.

அக்டோபர் 2000த்தில், ஜேம்ஸ் டைசன் ஹூவர் நிறுவனம் தனது காப்புரிமை வாங்கிய நுட்பத்தைப் பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தது. 1993ஆம் ஆண்டு, டைசன் முதன் முதலில் பல சோதனைகளுக்குப் பிறகு பை இல்லா வேக்கூம் கிளினரை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய தொழில்நுட்பத்தை 1980ஆம் ஆண்டே காப்புரிமை சட்டத்தின் கீழ் பதிவும் செய்தது டைசன் நிறுவனம். அதன் பிறகு 5000 மாதிரிகளை உருவாக்கித்தான் இறுதியான பை அற்ற வேக்கூம் கிளினரை உருவாக்கினர். இதைப் பின்பற்றி ஹூவர் நிறுவனம், “Hoover Triple Vortex” என்பதை அறிமுகம் செய்தனர். டைசன் நிறுவனம் தங்களின் “Dual cycle” வேக்கூம் கிளினரை பின்பற்றியே ஹூவர் இதனை அறிமுகம் செய்துள்ளது என வாதிட்டனர்.

ஹூவரின் சட்ட குழு இதை மறுத்து 1980ஆம் ஆண்டு டைசன் நிறுவனம் பதிந்துள்ள காப்புரிமையையும் தடை செய்யக் கோரினர். டைசன் சட்ட குழு 1995 ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்ட Gerber Garment Technology v. Lectra Systems வழக்கை நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டினர். இதில் நீதிமன்றம் Gerber நிறுவனத்தின் காப்புரிமை உரிமையை உறுதி செய்திருந்தது. இந்த வழக்கைப் பின்பற்றி பிரித்தானிய நீதிமன்றம், டைசன் நிறுவனத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. ஹூவர் நிறுவனத்தின் Hoover Triple Vortex என்ற வேக்கூம் கிளினரை விற்கவும் தடை விதித்தது.

இந்த வழக்கு நடக்கும்போது டைசனின் காப்புரிமை நிறைவடைய ஓராண்டே இருந்தது. காப்புரிமை இருபது ஆண்டுகள் செல்லும். இதனை ஹூவர் நிறுவனம் பயன்படுத்தி காப்புரிமை முடிவுற்றது எனக் கூறியபோது நீதிமன்றம் தடை வழங்கியதிலிருந்து காப்புரிமை முடிவுற்றாலும் ஓராண்டிற்குத் தடை செல்லும் என்றது. இன்றைக்குப் பிரிட்டனில் புகழ்பெற்ற வேக்கூம் கிளினர் நிறுவனமாக டைசன் நிறுவனம் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விசித்தர வழக்குகள் – பகுதி 10”

அதிகம் படித்தது