மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விண் வெளியில் விளம்பரப் பலகைகள்

இராமியா

Mar 2, 2019

siragu vilambara palagai1

புதுப் பணக்காரர்களும், புதிதாக மதம் மாறியவர்களும் தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் அதீத அவசரத்தையும், நிதானம் இன்மையையும் காட்டுவது இயல்பு. இதேபோல் சமதர்ம சமூகத்தில் இருந்து முதலாளித்துவ முறைக்கு மாறிய இரஷ்யர்கள் முதலாளித்துவ விளம்பர முறையில் நிதானமற்ற ஒரு புதிய உத்தியைப் புகுத்த முனைந்து இருக்கிறார்கள். தொடங்கு ஏவுகலன் (StartRocket) என்ற இரஷ்ய நாட்டுத் தனியார் நிறுவனம் வணிக விளம்பரம் செய்வதற்காகச் செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவும் திட்டம் ஒன்றை வகுத்து உள்ளது. இதைப்பற்றி அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விளாட்சிட்னிகோவ் (Vlad Sitnikov) 2021ஆம் ஆண்டுக்குள் 200 சின்னஞ்சிறிய செயற்கைக் கோள்களை விளம்பரம் செய்வதற்காக விண்ணில் ஏவ திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவித்து உள்ளார். இக்கோள்கள் பூமியில் இருந்து 500 கி.மீ. தொலைவில் நிறுத்தப்படும் என்றும், இவை வணிக நிறுவனங்களின் விளம்பரப் பலகைகளாக இருக்கும் என்றும், இரவு நேரங்களில் ஒரு விளம்பரத்தை ஆறு நிமிடங்கள் வரை மிளிர வைக்கலாம் என்றும் திட்டமிட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம் விளம்பர உத்தியை விண்வெளிக்குக் கொண்டுசெல்ல இரஷ்யாவின் தனியார் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு விளம்பரங்களை விண்வெளிக்குக் கொண்டு செல்வதால் விளம்பரச் செலவுகள் கூடி, பண்டங்களின் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.

இருந்தாலும் ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி அக்கறை கொள்ளாத முதலாளித்துவ உற்பத்தி முறையில் இவ்விலை உயர்வையும் மீறி இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

விண்வெளிப் பலகைத் திட்டம் செயல்பட்டால் இப்படி வானம் இப்படி இருக்கும்

இந்நடைமுறைகளால் மனித இனத்திற்கு மட்டும் அல்ல; எந்த உயிரினத்திற்கும் எந்த விதமான பயனும் இல்லை. அதுமட்டும் அல்ல; பூமியின் இயற்கை வளங்கள் வீணாக உறிஞ்சப்பட்டு, புவி வெப்ப உயர்வும் சூழ்நிலைக்கேடும் அதிகரிக்கும்.

இப்படிப்பட்ட விண்வெளி விளம்பரப் பலகைகள் விண்வெளி ஆய்வுக்கு இடையூறாக இருக்கும் என்றும், ஆகவே இத்திட்டத்தை அனுமதிக்கக்கூடாது என்றும் விண்வெளி வீரர்களும், அறிவியலாளர்களும் கூறி உள்ளனர்.

தனியார் நிறுவனம் ஒன்று இதுபோன்ற ஆபத்தான வழியில் அறிவியலைப் பயன்படுத்த முனைந்து உள்ள நிலையில், விண் ஆராய்ச்சி பற்றிய சட்டங்களை மறு ஆய்வு செய்யவேண்டும் என்று பிரிட்டனில் உள்ள நோர்த்தும் பிரியா (Northumbria) பல்கலைக்கழகத்தின் விண்வெளிச் சட்டப் பேராசிரியர் (Professor of Space Law) கிருஸ்டபர்நியூமேன் (Christoher Newman) கூறி உள்ளார்.

விண்வெளியில் விளம்பரப் பலகைகளை நிறுவுவது வீணான முயற்சி என்றும், பெரும் செலவுகளைத் தேவை இன்றிச் செய்வதாகும் என்றும், வானத்தின் இயற்கை அழகைக் கெடுத்துவிடும் என்றும் பிரிட்டிஷ் அரசின் வானவியல் கழகத்தின் (Britain’s Royal Astronomical Society) துணைச்செயல் இயக்குநர் (Deputy Executive Director) இராபர்ட்மாசே (Robert Massey) 31.1.2019 அன்று லண்டனில் கூறினார்.

முதலாளித்துவ சமூக அமைப்பில் அதிகாரத்தைக் கைப்பற்றவும் நிலைநிறுத்திக் கொள்ளவும் ஆசைப்படும் மனிதர்களுக்கு விண்வெளி விளம்பரப் பலகை போன்ற விபரீத எண்ணங்கள்தான் தோன்றும். அதனால் மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் அதிகரிப்பதைப் பற்றியோ, இப்புவி அழிவுப் பாதையில் இட்டுச் செல்லப்படுவதைப் பற்றியோ அவர்களுக்கு அக்கறை தோன்றாது.

அறிவியலாளர்கள் இதுபோன்ற எண்ணங்களைக் கடுமையாக எதிர்ககவே செய்கின்றனர். ஆனால் அவர்களால் அரசியல் முடிவுகளை எடுக்க முடியாது. ஆகவே மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து அறிவியலாளர்களின் எண்ணத்தைத்தான் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஆதிக்கவர்க்கத்தினருக்கு அழுத்தம் தரவேண்டும். தேவை ஏற்படின் ஆதிக்க வர்க்கத்தை முற்றிலும் ஒழித்துக் கட்டவும் தயங்கக் கூடாது.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விண் வெளியில் விளம்பரப் பலகைகள்”

அதிகம் படித்தது