சனவரி 16, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

வினை

முனைவர். ந. அரவிந்த்

Sep 19, 2020

 

Siragu ovvoru nodiyilum

நம் எண்ணங்களும் செயல்களுமே நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு நாணயத்திற்கும் இரு பக்கங்கள் இருப்பதைப் போல் ஒவ்வொரு மனிதனுக்கும் எண்ணங்கள் மற்றும் செயல்கள் என இரு பண்புகள் உள்ளன.

எண்ணங்கள் என்பது அகம் சம்பந்தப்பட்டது. சில சமயத்தில் மனிதர்களின் எண்ணங்கள் வெளியே தெரியாது. ஆனால், செயல்கள் வெளியே காட்டிக் கொடுத்துவிடும். எண்ணங்களை பிற மனிதர்களிடம் மறைக்க முடியும். அதே சமயம், நம்முடைய செயல்களை மறைக்க முடியாது. செயல்களின் மற்றொரு பெயர் வினை.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்; திணை விதைத்தவன் திணை அறுப்பான் என்பது தமிழ் பழமொழி. இதற்கு அர்த்தம், நல்ல செயல்களைச் செய்பவனுக்கு நல்லதே நடக்கும். தீய செயல்களை செய்பவனுக்கு தீயதே நடக்கும். இதற்கு உதாரணமாக, நம் முன்னோர்கள் வினையை திணை என்ற ஒரு தானியத்தோடு ஒப்பிட்டுள்ளனர்.

ஒரு தமிழ் படத்தில் சூரி, “தென்னை மரத்தில் தேங்காய் காய்க்காமல் ஆப்பிளும், ஆரஞ்சுமா காய்க்கும்” என்பார். இது சிரிக்கமட்டுமல்ல, உண்மையான மற்றும் சிந்திக்க வேண்டிய விசயமும்கூட. சிலருக்கு, தான் செய்யும் செயலிற்கு பதில் உடனே கிடைக்கும். சிலருக்கு தாமதமாகலாம். ஆனால் திரும்ப வந்தே தீரும். அதனை மனிதனால் தடுக்க முடியாது.

நல்லதோ, கெட்டதோ, அவனவன் செயலுக்கு தகுந்த பலன் அவனவனுக்கு கிடைத்தே தீரும். இதுவே நியதி. இது நேராகவோ அல்லது மறைமுகமாகவோ கிடைக்கும். அதனை, மற்ற மனிதர்களால் உணர்ந்து கொள்ள முடியாது. உதாரணமாக,

ஒருவன் வறுமையிலும் மற்றவர்களுக்கு உதவி செய்கிறான் என்றால் அவனை விட்டு வறுமை வேண்டுமானால் நீங்காமல் இருக்கலாம் ஆனால், அவன் உள் மனதில் மகிழ்ச்சியும் சமாதானமும் கூடிக்கொண்டே போகும் இதனை வெளியிலிருந்து பார்ப்பவர்கள், இவ்வளவு நல்லது செய்தும் இவன் கஷ்டப்படுகிறானே?என்று சொல்வார்கள். ஆனால், உண்மை அதுவல்ல, மகிழ்ச்சியையும், சமாதானத்தையும் விட ஒருவரும் இப்புவியில் வேறு எதுவும் இல்லை.

இறைவன் தந்த ஆகமத்திலும் வேதத்திலும் கூட, இறைமகன் ‘நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும்’ என்றுகூறியுள்ளார்.

இது இயற்கையாகவே கூட நடக்கும். எடுத்துக்காட்டாக, ஒருவனுக்கு உழைக்காமல் ஏதோ ஒரு வழியில் செல்வம் சேர்ந்தாலும், அச்செல்வமானது மற்றொரு வழியில் வந்த வேகத்திலே போய்விடும். சிறிது சிறிதாக சேர்ந்தாலும் நேர்மையாக சம்பாதித்த பணம் நிலைத்து நிற்கும்.

இதற்கு மற்றொரு சுவாரசியமான உதாரணத்தையும் கூறலாம். ஜீலை மாதம், 2019-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை மட்டைப்பந்து விளையாட்டு இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. ஆட்டம் சமனில் முடிவடைந்த போதும் உலகக்கோப்பை விதிகளின்படி இங்கிலாந்து கோப்பையை வென்றது, நியூசிலாந்து ஏமாற்றமடைந்தது.

உலகக்கோப்பை நடந்த அடுத்த இரண்டு மாதங்களான, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 2019-க்கான ஆஷஸ் தொடர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றது. மொத்தம் 5ஆட்டங்கள் கொண்ட இத்தொடரில், மழை காரணமாக ஒரு போட்டி கைவிடப்பட்ட நிலையில், இரு அணிகளும் 2 – 2என்ற கணக்கில் வெற்றி பெற்றன. ஆஷஸ் தொடர் சமனில் முடிவடைந்த போதிலும் ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இங்கிலாந்து ஏமாற்றமடைந்தது. இதற்குக் காரணம், தொடர் சமனில் முடிந்தால், இதற்கு முந்தைய தொடரை வென்ற அணி கோப்பையை தக்கவைக்கும் என்ற விதியே. இதற்கு முன்னர், 2017–18ஆண்டில், ஆஷஸ் தொடரை வென்ற ஆஸ்திரேலியா இம்முறையும் கோப்பையை தக்கவைத்துக் கொண்டது. இங்கிலாந்து அணிக்கு ஒரு முறை கைகூடிய கோப்பை மறுமுறை கைநழுவியது. இதுதான் வினை பயன்.


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “வினை”

அதிகம் படித்தது