மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

விலையான தாய்மடி(கவிதை)

பாவலர் கருமலைத்தமிழாழன்

Apr 30, 2016

vilayaana thaaimadiஏர்பிடித்தே   உழுதமண்ணாம்   ஆண்டு   தோறும்

எழில்பயிராய்   முப்போகம்   விளைந்த   மண்ணாம்

கார்முகில்கள்   ஒன்றுகூடி   மாதம்   மூன்றாய்

கருணையுடன்   பொழிந்தமழை   நீராய்த்   தேங்கி

ஆர்க்கின்ற   கடல்போல     ஏரி   கேணி

அனைத்திலுமே   வழிந்துவந்து   செழித்த   மண்ணாம்

ஊர்மகிழ   உறவெல்லாம்   மகிழ   வீட்டில்

உயர்செல்வம்   நிறைந்திடவே   கொடுத்த   மண்ணாம் !

 

ஆண்டுதோறும்   பெய்கின்ற   மழையும்   குன்ற

ஆற்றினிலே   வரும்நீரும்   கழிவாய்   மாற

தோண்டிவைத்த   குளம்வற்ற   கிணறு   காய

தொன்மையான   ஏரியெல்லாம்   பட்டா   வாக

வேண்டியநீர்   பாயாமல்   பயிர்கள்   மாய

வேலைக்கு   வருவதற்கும்   ஆட்க   ளின்றி

மாண்பாகத்   திகழ்ந்தநிலம்   மானம்   போன

மனிதனவன்   நிலையாக   ஆன   தின்று !

 

நெல்நட்டான்   விற்பதற்கு   விலையோ   இல்லை

நேர்வந்து   கேட்பதற்கும்   யாரும்   இல்லை

கொள்நட்டான்   எள்நட்டான்   சோளம்   நட்டான்

கொள்முதல்தான்   போனதன்றி   வருவாய்   இல்லை

கல்நட்டான்   எல்லைகளை   வகுத்து   நன்றாய்

காண்கின்ற   வகையினிலே   மனைகள்   செய்தான்

வல்லூறு   குஞ்சுகளைக்   கொத்தல்   போன்று

வந்துவிலை   கொடுத்திட்டார்   தாயின் மடிக்கே !


பாவலர் கருமலைத்தமிழாழன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “விலையான தாய்மடி(கவிதை)”

அதிகம் படித்தது