ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

“விழித்தெழுக என் தேசம்” – நூல் மதிப்புரை

தேமொழி

Nov 24, 2018

siragu vizhithezhuka en desam1

‘விழித்தெழுக என் தேசம்’ என்ற உணர்ச்சிகரமான முழக்கத்தைத் தலைப்பாகக் கொண்டு தமிழாக்கம் செய்யப்பட்டக் கவிதைகளையும், தனது எண்ணத்தில் தோன்றிய கருத்துகளின் வெளிப்பாடாக எழுதப்பட்ட கவிதைகளையும் ஒரு கவிதைத் தொகுப்பாக அளித்துள்ளார் கவிஞர் சி. ஜெயபாரதன் அவர்கள். இவர் அணுமின்சக்தித் துறையில் பணியாற்றிய பொறியியல் வல்லுநர் என்பதும், வானவியல், அண்டவெளிப் பயணக்கட்டுரைகள், அறிவியல் அறிஞர்கள் குறித்து அதிகம் எழுதும் அறிவியலாளர் என்பதுடன் அவர் கவிதைகள், நாடகங்கள், கதைகள் எனப் பிற படைப்புகளையும் வழங்கியவர் என்பதை இந்நாளில் பலர் அறிவர். மேலும் இவர் அறிவியல் கருத்துக்களை கவிதை வழி காட்டப்படுவதில் முன்னணியில் இருக்கும் அறிவியல் கவிஞரும் ஆவார். ஏன்! சொல்லப்போனால், திரு. ஜெயபாரதன் அவரது அறிவியல் கட்டுரைகளையே கவிதைகளுடன்தான் தொடக்குவார்.

இக்கவிதை நூலில் படிக்கும் முன்னரே இதில் இடம் பெற்றுள்ள கவிதைகள் சிலவற்றை அவை இணைய இதழ்களில் வெளியானபொழுதே நான் படித்த நினைவும் உண்டு. அவரது பிற அறிவியல் நூல்களில் அறிவியல் கவிதைகளை படித்த என் எதிர்பார்ப்பில், நான் எதிர்பார்த்த அளவில் அறிவியல் குறித்த கவிதைகள் இந்நூலில் இடம் பெறவில்லை என்பதில் எனக்குச் சற்று ஏமாற்றமே. திரு. ஜெயபாரதனின் படைப்புகளைக் கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து படித்து வந்திருக்கும் நான் அவரது கருத்துகளும் சிந்தனையின் வெளிப்பாடும் பெரும்பாலும் அறிவியல், இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பதில் அக்கறை, சமூக அக்கறை, பெண்ணியம், சமகால நிகழ்வுகள் குறித்த உணர்வுகளின் வெளிப்பாடு, வாழ்வு குறித்த தத்துவக் கருத்துகள், வாழுமிடம், தாய்நாடு, தாய்மொழி மீது கொண்ட பற்று ஆகியவற்றைச் சுற்றிச் சுழன்று வருவதையே கவனித்து வந்துள்ளேன். இந்நூலில் உள்ள கவிதைகளின் தொகுப்பும் அச்சிந்தனைகளின் பல பரிமாணங்களைத்தான் தொகுத்து வழங்கியுள்ளது.

இத்தகையப் பரிமாணங்களைக் கொண்ட பிறமொழிக் கவிஞர்களின் கவிதைகளும் திரு. ஜெயபாரதன் அவர்களைக் கவர்ந்ததால் அவர் அவற்றைத் தமிழாக்கம் செய்வதற்கு விரும்பியுள்ளார் என்பதும் தெரிகிறது. இந்தக் கவிதை நூலில் ஷேக்ஸ்பியர், உமர் கயாம், தாகூர், வால்ட் விட்மன், கலீல் கிப்ரான், எலிசபெத் பிரௌனிங், ஜெஃப்ரி விட்னி, பீட்டில்ஸ் – ஜான் லென்னன், ஜெஃப்ரி குளூகர் போன்றோரின் கவிதைகளில் அவர் கருத்தைக் கவர்ந்த கவிதைகள் சிலவும் தமிழாக்கம் செய்யப்பட்டு திரு. ஜெயபாரதன் அவர்களின் கவிதைகளாக அவரது குரலில் வெளிப்பட்டுள்ளன.

“மொழிபெயர்ப்பு என்பது சொல்லுக்குச் சொல் மொழிபெயர்ப்பதன்று. கருத்தை உள்வாங்கிக்கொண்டு, அதன் சாரத்தை நம் மொழியில், நம் வழக்குக்கேற்ப எழுதுதலே! மொழிபெயர்ப்பு என்பது கண்டிப்பாக ஒரு கலை. படிப்பவர்கள் அதை மொழிபெயர்ப்பு என உணரா வண்ணம் எழுதுவதே அக்கலையின் உச்சம்” என்று தமிழ்நாடு அரசால் 2016ஆம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்பட்ட நாகலட்சுமி சண்முகம் கூறுவார். திரு. ஜெயபாரதன் அந்த வழியில் வெற்றி பெற்றுள்ளார் என்றே கருதுகிறேன்.

பிற கவிஞர்களின் கருத்துக்களை அவர் மூலம் அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி என்றாலும், என்னைக் கவர்ந்தவை என நான் சொல்ல விரும்பினால், அவை அவரது எண்ணங்களின் வெளிப்பாடாக அமையும் அவரது ஆக்கங்களையே. அதில்தான் அவரை என்னால் அவரை அடையாளம் காண முடிகிறது.

- “வாழும் போது எவராலும் வணங்கப் படாது, செத்த பிறகு தெய்வமாகிறாள்” என்று தாய்மார்களின் நிலையை “எங்கள் தாய்” பாடலில் நொந்து கொள்வது;

- பெண்ணின் வாழ்வில், “கலைஞன் ஒரு கருடன்! காதலன் ஒரு திருடன்! கணவன் ஒரு குருடன்!” என்று இவர்கள் தங்கள் பங்கிற்கு அவளை அணுகும் முறையைக் குறித்து வெளியிடும் விமர்சனம்;

- தேனிலவுக்குப் பின்வந்த காலத்தை தேய்பிறைக் காலம் என்று குறிப்பிடுவது;

- “நயாகரா நீர்வீழ்ச்சி, நாணயப் படக்காட்சி! உயிரில்லை! உணர்வில்லை!” என்று கூறி மிகப்பெரிய நயாகரா அருவியையே கண்டு மயங்காமல் குற்றால அருவியுடன் அதனை ஒப்பிட்டு, குற்றாலத்தின் பெருமை கூறி அதன் மீது அவர் காட்டும் பற்று;

- “முற்காலம், பிற்காலம், தற்காலம் பின்னிய முக்காலக் குதிரை! முன்னே பாயும்! பின்னே பாயாது!” என்று காலத்தைக் குதிரையுடன் உருவகப்படுத்தி வெளியிடும் தத்துவக் கருத்து;

- இறைவன் எங்குள்ளான்? என்று கேட்டு, மெய்வருந்திப் பணிசெய்யும் உழைப்பாளியிடம் இறைவனைக் காணலாம் என்று கூறும் நயம்;

- “சேயை உண்டாக்கி தாயிக்குத் தப்ப முடியாத நித்தியப் பாச விலங்கு!” போட்டு வாழ்க்கைச் சிறையில் சிறைக்கைதிகளாய் அவர்களை அடைத்துவிடும் வாழ்வின் நிலை குறித்த சிந்தனை;

- “அழகினைக் கண்டால், உளம்போய் அடிமை ஆகுதடி!…. முற்றுகை செய்யுதடி துணைக் கோளாய்” என்ற அறிவியல் கருத்துடன் அழகின் இரசிப்பில் கலந்துவிடும் நேர்த்தி;

- “சூடு காலம் வருகுது! புவிக்குக் கேடு காலம் வருகுது! நாடு, நகரம், வீடு, மக்கள் நாசமாக்கப் போகுது!” என்று குடுகுடுப்பைக்காரன் பாணியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குக் குரல் கொடுப்பது;

- “மதவெறியன் மடி வெடியைத் தூண்டி விட்டு, மாண்டார் அப்பாவி மக்கள் ஆண்டு தோறும்! ஏன், ஏன், ஏன் என்றென்னைத் துளைக்கின்றன ஏழாயிரம் வினாக்கள்! விடை வேண்டும் எனக்கு, போதி மரம் எங்கே?” என்று வருந்தி விடைதேட விழையும் சமூக அக்கறை;

ஆகியவற்றில் எனப் பற்பல பரிமாணங்களில் திரு. ஜெயபாரதன் என்ற கவிஞரின் உள்ளத்தையும், கவிதைகள் மூலம் உலகிற்கு அவர் அறிவுறுத்த விரும்பும் செய்திகளையும் நம்மால் அடையாளம் காண முடிகிறது. மேலதிகத் தகவலாக அவர் தன்னைப் பற்றிக் குறிப்பிடாவிட்டாலும் கூட, அவரை மிகவும் கவர்ந்தவர் மகாகவி பாரதியார் என்பதையும் அவரது சொற்தேர்வுகள் நமக்கு அறியத் தருகின்றன.

திரு. ஜெயபாரதன் அவர்களின் தொடர் இலக்கியப் பணிகளில் ஒன்றாக, கவிதை எழுதுவதிலும் அவர் காட்டும் ஆற்றலை நாம் அறிந்து கொள்ள வழிவகுக்கிறது இந்த நூல். மொத்தத்தில் கவிதை ஆர்வலர்கள் படித்துச் சுவைக்க வேண்டிய வகையில் சிந்தனைக்கு விருந்து படைத்துள்ளார் திரு. ஜெயபாரதன்.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- ““விழித்தெழுக என் தேசம்” – நூல் மதிப்புரை”

அதிகம் படித்தது