மே 21, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

விஸ்வரூபம் எடுக்கும் விஸ்வரூபம்

காசி விசுவநாதன்

Feb 1, 2013

விஸ்வரூபம் – வெளிவருவதற்கு முன்னரே எடுத்திருக்கும் விஸ்வரூபம், நிச்சயமாக பரமக்குடி நாயகனுக்கு மெத்த மகிழ்ச்சியைத்தான் தரும். கரும்பு தின்னக் கூலியா ? ஒவ்வொரு ஊடக முதலாளிகளையும் சந்தித்து விளம்பரம் செய்து போணியாக்கப்பட வேண்டிய பொருளை வருவதற்கு முன்னரே சல்லிக் காசு செலவில்லாமல் செய்து காட்டிய சரித்திர நாயகன். எதிர்ப்புகள் எழுந்த ஆரவாரத்தில் அவரது பரம(க்குடி) ரசிக சிகாமணிகள் எல்லாம் இணையத்திலும், சமூக வலைதளத்திலும் ஒப்பாரி வைக்காத குறையாக,  ” ஞானக் கலைஞனே…!!! நீ இந்த மானம் கெட்ட தமிழ் நாட்டில் பிறந்தது தான் தவறு, பார்ப்பனராகப் பிறந்தது அல்ல ” என்று பொறி பறக்க கிறுக்கத்தொடங்கினர். ஒரு பக்கம், அவர் ஒரு குறிப்பிட்ட மதத்தை தீவிரவாதியாக சித்தரித்து சிறுமைப்படுத்துகிறார் என்றும் இந்தப்படம் வெளிவரத் தடை வேண்டும் என்றும் கோருவதும், உடனே ரசிக சிகா மணிகள் இது இசுலாமிய அரசியல், அவர்கள் அப்படித்தான் கூச்சலிடுவார்கள், இந்த மதத்தினர் இப்படித்தான் பிற்போக்கானவர்கள். உள்ளதைச் சொன்னால் ஏன் வலிக்கிறது ? அவர்கள் மதத்தில் அது ஓட்டை, இது ஓட்டை, இது பிற்போக்கு, அது கண் மூடித்தனம் என்று வலைத்தளங்கள் எல்லாம் விவாத மேடைகள் அரங்கேறி சாதிவாரித் தமிழர்கள் எல்லாம் தங்கள் சனாதனச் சாக்கடையை மறந்து விட்டு, பரமக்குடி நாயகன் புண்ணியத்தில் சிறிது நேரம் மனதளவில் இந்தியனாகவும், சாதிகள் கடந்த இந்துவாகவும் உருமாறி வேதம் ஓத ஆரம்பித்துவிட்டனர்.

இரு தரப்பிற்கும் பொதுவில் சில கேள்விகள் வைத்தால் ;

படத்தைப் பார்த்துவிட்டீர்களா ?

திரைப்பட தரச் சான்று எப்படித் தந்தார்கள் ?

இப்படிப்பட்ட கேள்விகளுக்கு வரிசையாகவே பதில் காண்போம்.

1.படத்தைப் பார்த்துவிட்டீர்களா?

பதில் ; இல்லை. சில அமைப்பினருக்கு மட்டுமே காட்டப்பட்டது.

வலைதளத்தில் பலரும் கதை தெரியாமலேயே கதைப்பதும், பார்த்தவர்களும், இது இதுவரை சித்தரிக்கப்படாத வகையில் கீழ்த்தரமாக காட்டப்பட்டுள்ளது என்பதும், இது வெளி வந்தால் சமுதாய ஒத்திசைவை சீர் குலைக்கும் என்பதனையும் வேதனையுடன் தெரிவித்திருப்பதும் சமூக நல்லெண்ணம் கொண்டவர்கள் மதம் கடந்து சிந்திக்க வேண்டிய ஒன்று. ஆனால் பரமக்குடி நாயகனோ உடனடியாக கலாச்சார தீவிரவாதிகளை நான் எதிர் கொள்வேன் என்று அறிக்கை விடுவது நாம் அனைவருமே அச்சம் கொள்வது போல் திட்டமிட்டு கட்டம் கட்டப்படும் செயல் திட்டம் போல் தான் உள்ளது. இதற்கு தொலைக்காட்சி விளம்பரத்தை வேடிக்கை பார்ப்பது போல் நாம் இருத்தல் கூடாது. இது இசுலாமிய சமுதாயத்திற்கு மட்டுமே வந்த சோதனையல்ல. இது பரமக்குடி நாயகனுக்கு மட்டுமே வந்த சவால் அல்ல. ஒட்டு மொத்த தமிழ்ச்சமுதாயத்திற்கும் விடுக்கப்பட்ட பரி சோதனை. இன்று சமூக வலைதளத்தில் நடக்கும் விவாதங்கள் கலை சார்ந்ததாவோ அல்லது கருத்தியல் சார்ந்ததாவோ அல்ல. இது நாட்டுப்பற்று இருக்கிறதா ? கருத்துச் சுதந்திரம் இருக்கிறதா ? கலைஞர்களுக்கு கருத்துரிமை இருக்கிறதா ? நீ இந்தியனாக இருந்தால் அப்படத்தை ஆதரிக்க வேண்டும். இதற்கு மாற்றுக் கருத்து வேண்டாம், இருக்ககூடாது. இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, கலாச்சார தீவிரவாதிகளை எதிர்கொள்வேன் என்ற ஒரு அறிக்கையில் இருக்கும் உள் நோக்கம் பற்றி எந்த ஒரு குடிமகனும் எதிர் கேள்வி கேட்கவே இல்லை. அப்படியானால் இப்படிப்பட்ட கலைஞன் எப்படிப்பட்ட கலை வடிவத்தை செய்திருப்பான் ? சிந்தனைக்கு இடமே இல்லாத சமூகக்கட்டமைப்பில், ஏற்கனவே தீவிரவாதி யார் என்று வரையறை செய்துவிட்டு இது தான் தீர்ப்பு என்பதனை அறிவார்ந்த சமூகம் எப்படி ஏற்கும் ???

இது மட்டுமா ? இப்படிப்பட்ட கேள்விகள் சிந்தனைகளை விடுத்து, சனாதனச் சாக்கடையில் இருக்கும் தமிழ் இனம் தன்னை சாதிவாரியாக சிந்திப்பதை மறந்து தாற்காலிகமாக, நாட்டு நலனுக்காய் மதம் கொண்டு மதவாரியாக பட்டிமன்றம் நடத்தி உன் வீட்டில் என்ன ஓட்டை? என் வீட்டில் என்ன ஓட்டை ? என்று அணி திரள்வதுதான் விஸ்வரூபத்தின் முழு முதல் வெற்றி.

ஒரு திரைப்படக் கலைஞனாக கமலஹாசன் என்ற நடிகர் தனது தோற்றுவாய் காலம் தொட்டு உள் நோக்கம் கொண்ட ஒரு பிற்போக்காளர் தான். அவர் உடுத்தியிருக்கும் பகுத்தறிவுக் கவசமும், திராவிட வேசமும் எளிய ரசிகர்களையும், ஏராளமான முட்டாள் தமிழர்களையும் வேண்டுமானால் மயக்கலாம். விவரம் புரிந்தவர்களுக்குத் தெரியும் மேற்படி கவச குண்டலங்களும், திராவிட வேசங்களும் தமிழகத்தின் எல்லைக்குப் பின் அவருக்குத் தேவையே இல்லை என்று. அங்கு நிராயுதபானியாகவே ஆனால் சகல சனாதன பரிவார சேனைகளும் அவருக்கு மெய்க்காவலர்கள் என்பதனை கிணற்றுத்தவளையான தமிழனுக்குப் புரிந்திருக்க வாய்ப்பில்லை . ஒரே நேரத்தில் சகல ஜீவராசிகளுக்கும், சகல கட்சிக்காரர்களுக்கும், இரு துருவ கருத்தியல் வாதிகளுக்கும் புரியும் படியாக ஒரே உட்கருத்தை இரட்டை வடிவமாகத் தந்து குழப்பி, குழம்பிய நிலையிலேயே தனது சனாதனச்  சரட்டை நம் உடல் மட்டுமின்றி உள்ளத்திலும் அத்தாரு போல் விஷம் பூசி விடும் வித்தைக்கார கூத்தாடி.

அதனால் தானே அவரால் நம்மிடம் நம்மையே கருவறுத்து நாயகனாக காட்சியளிக்க முடிகிறது ?? இது தெரிந்தவர்களுக்கு ஹே ராம் என்ற படத்திலும் சரி, தசாவதாரம் எடுத்த போதும் சரி விஷ வித்து வேரோடியது மட்டுமல்ல புரையோடியும் போனது என்று. ஆனால் அன்று ஆழமாய்ப்புரையோடியது இன்று எத்தனித்து நமக்கு முன்னே பூதமாய் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. விளைவு சாதி வாரித் தமிழன் ஒன்றிணையாமல் மதவாரியாகப் பிரிந்து சாகசக் கூத்தாடிக்கு விளம்பரம் செய்கின்றனர், ஓரணியில் நின்று நீதி கோராமல்.

 திரைப்பட தரச் சான்று எப்படித் தந்தார்கள்

இப்படியொரு சிந்தனைப்  பூர்வமான கேள்வியை இரவல் வாங்கிய மூளை உள்ள சிந்தனையாளர்கள், ரசிகர்கள் நம்மிடம் கேட்டுத் திகைக்க வைக்கின்றனர். சரி, சென்சார் போர்டின் லட்சணம் நம் தமிழ் நாட்டில் எப்படியிருக்கும் ??? முதலில் இதனைக் காண்போம்.

1970களின் பிற்பகுதியில் அபூர்வ ராகங்கள், அவர்கள், சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, நூல் வேலி இப்படியாக இன்னும் சில திரைப்படங்கள்.இவையெல்லாம் போதும் குறிப்பாக தமிழ் நாட்டில் சென்சார் போர்டு எனப்படும் திரைப்படத் தகுதிச் சான்றிதழ் வழங்கும் அமைப்பில் எப்படிப்பட்டவர்கள் இருந்தார்கள், அதன் லட்சணமும் செயல்பாடும் என்ன என்பதற்கு சான்று.

தமிழர் பண்பாட்டை, அதன் ஆணி வேரை, அதன் கரு மையத்தையே அணுகுண்டு வைத்துப்பிளந்த திரைப்படங்கள் தான் மேற்படி பட்டியலில் சொல்லப்பட்ட திரைக்காவியங்கள். இந்தப்படங்களையும் அன்று எதிர்ப்பில்லாமல், மக்கள் மனதில் ஊடுருவி விஷம் விதைத்த தாதா சாஹேப்களின் ஜேஷ்ட புத்திரர்களும், அத்யந்த வாரிசுகளும் தான் இன்று விஸ்வரூபம் எடுத்து நம்மை ரட்சிக்கும் பூதமாகக் காட்சி தருகின்றனர்.

அன்று, தனது காதலன், தன் தாயுடன் உறவு கொள்வதாகக் காட்டி, மகனுக்காக தாயை மனம் பேசுவதும், மகளைத் திருமணம் செய்ய தகப்பன் காத்திருப்பதுமாக பூடகமாய் கதையமைத்து நம் சிந்தனையைக் களவாடிக் கற்பழித்த தமிழ்த் திரையுலகின் தாதாக்களை, நாம் கிளர்ந்தெழுந்து, ஏன் எங்கள் பண்பாட்டைச் சிதைக்கின்றாய் ??? என்று அன்று உள்ள இலக்கியவாதிகள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் யாருமே கேள்வி கேட்கவில்லையே. வீட்டில் அடைக்கலமாய் வயது வந்த மகள், அனாதையை, ரகசியமாய் ருசிபார்த்து தங்களுக்குள் இணக்கமாய் நூல்வேலியிட்டு சமரசம் செய்யும் சமுதாயத்தைத் தானே இந்த நாலாம் தர தாதாக்கள் செய்தனர். கேள்விகேட்டோமா ?? இன்று வரை இல்லையே ??

“அபூர்வ ராகங்களை ” நூல் வேலியில்” கோர்த்து ” சில நேரங்களில் சில மனிதர்கள் ” என்று பூடகமாய் ” அவர்கள் ” நீங்கள் அல்ல, இது ” புதுப் புது அர்த்தங்கள் ” என்று நம்மை சோரம் போவதும் வாழ்வில் தவறு இல்லை, எல்லாம் வாழ்வில் ஒரு வித ராக மாலிகா தான் என்று சந்திலே  ” சிந்து பைரவி ” பாடும் தமிழ்த்திரையுலக தாதாக்களை நாமும் இன்று வரை இயக்குனர் இமயங்களாகப்பார்த்து பேதலித்து நின்றதனால் தான் அவர்கள் ” தாதா சாஹேப் ” களாக வாழ் நாள் சாதனை செய்து இன்று நச்சுப்பாம்பு விஷம் கக்க விஸ்வரூபம் எடுக்கின்றது. பண்பாட்டுச் சீரழிவைத் தட்டிக் கேட்க ஒவ்வொருவரும் தங்களை மனிதனாக அடையாளம் கண்டு வந்தாலே போதும், தீவிரவாதிகள் யார் என்று தெரிந்து விடும். அரை வேக்காட்டு நடிகர் பார்த்திபன் சொல்வது போல், பாலச்சந்தர் எக்கச் சக்கமாய் இருபது வருடங்களுக்கு முன்னரே தீர்க்க தரிசனம்செய்து படம் எடுத்தவர் அல்ல. அவர் தீர்க்கமாய் பிற்காலச் சமுதாயத்தைக் கட்டமைக்க முன் வடிவம் செய்த கற்பழிப்புக் கயமைதான் மேற்படிப் படங்கள். இதனைக் கூட உணர முடியாத, முன்னெடுத்துச் சென்று உரைக்க முடியாத ஒரு அங்ககீனமான, முடமான, மழுங்கிய சிந்தனை உள்ள இனமாக நாம் கூர் மழுங்கி உள்ளோம். இது தீயுழ் தானே…!!!

சிந்திப்போம்…. சிலிர்த்தெளுவோம்…..!!!!!! 


காசி விசுவநாதன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “விஸ்வரூபம் எடுக்கும் விஸ்வரூபம்”
 1. soothiran says:

  ஹிந்துக்கள் என்று ஒரு பட்டியல் தருகிறீர்களே… அதில் ஒடுக்கப்பட்டவர்களும் கணக்கிடப்பட்டார்களா ?
  ஈழத்தில் கொத்தணி குண்டுகளுக்கு களப்பலியானவர்களில் ஹிந்துக்களை மட்டுமே கணக்கிட்டிருந்தால் கூட சில லட்சங்கள் தேறும்.
  பெயரில் தமிழும், பெயரளவில் தமிழும் இருப்பதால் தான் நாம் பிணம் திண்ணிகளாய் வாழ்கின்றோம்.

 2. kondrai vendhan says:

  கட்டுரையின் எடுப்பும் தொடுப்பும் நடப்பின் நிகழ்வு சொல்ல, முடிவு இக பரம் உணர்ந்த இமய சிகரஙளின் உச்சி தொட்ட இடம் மன்னிக்க முடியாத குற்றம் அன்றோ ? கட்டுரையின் புதிய வடிவம் தீப்பொறி இல்லாமல் அதே சமயம் நமத்துப்போகாமல், அனல் அற்று கனல் இன்றி சனல் இல்லாமல் இறுதிவரை கட்டி வைப்பது அருமை.

 3. கிராமத்தான் says:

  அருமையான விழிப்புணர்வை ஊட்டும் ஆய்வு.
  வள்ளி நாயகத்திற்கு பாராட்டுக்கள்.

 4. Tamilan says:

  Have you seen this film? i have seen this film and it didnt offend any community.. For our Tamil muslim brethern some audio can be muted that kamal too agreed..

  You have told here about Heyram and its full of posion? Have you ever heard of Naohkali Genocide? 5000 hindus were slaughtered by muslims in that massacre before partition? Thats what kamal depicted in that movie in first few scenes!! He will show that how Hindu right wing associatons brain wash and try to kill gandhi..Finally in end film hero will know who is gandhi!!

  Please research before writing any article.. Artists are also human beings, there are few artists like kamalhassan who with guts took risk by depicting controversial things boldly.. You can criticize easily in words but person who took this to screen knows what are difficulties!!

  முதலில் யாரையும் புண்படுத்தும்படி எழுததிர்கள்.. இது தீபொறி திருமுருகன் கூட்டம் இல்லை. உங்கள் அனல் பறக்கும் எழுத்துக்கு யாரும் whistle போட மாட்டார்கள்.. இதழியல்(Journalism) தராதரம் தெரிந்து எழுதுகள்.. வாழ்த்துகள்!!

அதிகம் படித்தது